என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசிலை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
    X
    அண்ணாசிலை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    கலவரத்தை தூண்டும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

    குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலவரத்தை தூண்டும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணாசிலை முன்பு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒற்றுமை திடலில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல பா.ஜ.க. கேட்ட அனுமதியை போலீசார் மறுத்ததன் காரணமாக அண்ணாசிலை முன்பு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் வசிக்கும்யாருக்கும் பாதிப்பில்லை என்றும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை சட்ட திருத்தத்தில் சான்றுகள் பரிசோதிக்கப்படும். மேலும் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து கலவரத்தை தூண்டுபவர்களை எதிர்த்து பா.ஜ.க. சார்பிலும், தொடர் போராட்டங்கள் முன்எடுக்கப்படும் என்று பேசினர். இதனையடுத்து பேரணியாக செல்லமுயன்றவர்களை சிறிது தூரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, பொறுப்பாளர்கள் 10 பேர் மாவட்ட கலெக்டர் ரத்னாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கலவரத்தை தூண்டும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீதும், மற்ற இஸ்லாமிய அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என தெரிவித்து இருந்தனர். பா.ஜ.க.வினர் பேரணியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    *அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் தா.பழூர் பிள்ளையார் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தார். தொடர்ந்து லாரிகளையும், லாரி டிரைவர்களான விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கள்ளுந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 39) மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன்(24) ஆகியோரை கைது செய்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    *தா.பழூர் பஸ் நிறுத்தத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    *சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் கடந்த 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கங்தோண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சுகதேவ் என்கிற கமலக்கண்ணன்(38) என்பவர் பாரத பிரதமரை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×