என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஊரடங்கால் தவித்த முதியவர்களுக்கு உதவிய போலீசாரை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    செந்துறை:

    தமிழகம் முழுவதும் நேற்று எந்த வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை அறியாமல் முதியவர்கள் சிலர் செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து இருந்தனர்.

    இதனை கண்ட கொரோனா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் ஊரடங்கு தெரியாமல் வந்து பேருந்துக்காக காத்து இருப்பதாகவும் உணவு இன்றி தவிப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உத்தரவின்பேரில் செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் உணவு கொடுத்து அவர்களிடம் விசாரித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இந்த சமூக சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி அமுதா(வயது 40). கூலிதொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அமுதா, அவரது கணவர் சேகர் 2 பேரும் கூலிவேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.1,000 திருடுபோய் இருப்பது தெரிந்தது.

    பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஊரடங்கு நேரத்தில் மீன்பிடி திருவிழா நடத்திய கிராம மக்களை போலீசார் கலைந்துபோக செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திற்கு அருகே கரைவெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் 1999-க்கு பிறகு கரைவெட்டி ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை மீன் பிடிக்கும் உரிமையை கிராம மக்களில் ஒருவருக்கு ஏலம் விட்டு கரைவெட்டி ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்த உடன் மீன் வளத்துறை வெளியேறியது.

    பின்னர் இந்த ஏரியில் மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டது. கரைவெட்டி ஏரியில் ஆண்டுதோறும் ஏரியில் மக்கள் தண்ணீர் குறையும் போது மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஏரியில் நீர் வற்றும் நேரத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழாவை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்தனர்.

    இந்நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் வற்றி குறைந்த அளவே இருப்பதால் மீன்கள் அதிகளவில் செத்து மிதக்க ஆரம்பித்து துர்நாற்றமடிக்க ஆரம்பித்தது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஏரியில் உள்ள தண்ணீர் முழுக்க வற்றி மீன்கள் அனைத்தும் உயிரிழந்து விடும் என்பதால்

    வீணாகபோகின்ற மீன்களை நாங்கள் பிடித்துக்கொள்கிறோம் என்று கூறி சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று ஊரடங்கு நேரத்தில் ஏரியில் இறங்கி மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஊரடங்கு நேரத்தில் பலர் ஒன்று கூட கூடாது என கூறி மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்ட கிராம மக்களை கலைந்து போக செய்தனர். இருந்தபோதிலும் கொரோனாவை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் மீனை பிடிப்பதிலேயே கிராம மக்கள் கவனமாக இருந்தனர்.
    மீன்சுருட்டி அருகே தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கீழவீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் மனைவி வனிதா(வயது 35). தனது வீட்டின் அருகில் இருந்த ஜல்லிக்கற்களை அவருடைய மாமனார் எடுத்து வந்தபோது, அவருடைய உறவினர்கள் எப்படி நீங்கள் அதனை எடுக்கலாம் என்று கேட்டு திட்டி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உங்களை கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று கூறி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து வனிதா கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வளையாபதி மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மனைவி ஜெயந்தி(39), பாலகிருஷ்ணன்(34), சின்னதுரை(68), அவருடைய மனைவி பானுமதி(60) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வாலாஜாநகரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அரசு கொறடா , கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் கொண்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து வாலாஜாநகரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் வழங்கினர்.

    இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, தாசில்தார் சந்திரசேகரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) சாவித்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து வைக்காத தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 70) விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடிய வில்லை.

    இதில் 3-வது மகன் கலியமூர்த்தி(36) வெல்டிங் வேலை செய்து வருகிறார். திருமணமாகாத விரக்தியால் கலியமூர்த்தி வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவ்வப்போது குடி போதைக்கு செலவு செய்து விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தை சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியமூர்த்தி வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது திண்ணையில் தூங்கி கொண் டிருந்த சக்கரவர்த்தியை எழுப்பி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி யோடினார்.

    இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கலியமூர்த்தியை நேற்று கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

    தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது.
    தா.பழூர்:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.

    இதனால் தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது. தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தா.பழூர் கடை வீதியில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்து அபராதம் விதித்தது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்ட சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோதனைச்சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் போலீசாரிடம் முககவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவைகள் இருப்பில் உள்ளனவா?, வாகனங்களின் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    சோதனை சாவடிகளில் முறையான ஆய்வுக்குப்பின் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் தலைக்கவசத்துடன், முககவசம் அணிந்து வருமாறு உத்தரவிட்டார்.

    இ-பாஸ் கிடைக்காததால் பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி ராஜகுமாரி(வயது 48). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு டயாலிசிஸ் மையத்தில் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    15 நாட்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இ-பாஸ் பெற்று தஞ்சாவூர் சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று திரும்பினார். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபின் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் ஒரே மண்டலத்துக்குள் அமைந்த நிலையில் சிகிச்சைக்கு சென்று வருவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. மீண்டும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை அறிவிக்கப்பட்ட பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

    கடந்த 25-ந் தேதி முதல் சிகிச்சைக்கு செல்ல இ-பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார். ஆனால் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் ராஜகுமாரியின் இ-பாஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதனால் அவர் சிகிச்சைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமாகி வரும் நிலையில் அதிகாரிகள் இதற்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கொரோனோ வைரஸ் கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ், கலெக்டர் ரத்னா, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு தலைமை கொறடா பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி வரை மாவட்டத்தில் 384 பேருக்கு நேரடி தொற்றாகவும், 70 பேருக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 392 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். எந்தவொரு அறிகுறிகள் இருந்தாலோ பொதுமக்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 28 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 585 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) இளவரசன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருமானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் சித்திரவேல்(வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிட கரையில் உள்ள அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளை கொள்ளிட ஆற்றின் கரையிலேயே நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திருடுபோன சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரிக்கையில், அவர் அரியலூர் மாவட்டம், ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீரை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ளது பெரிய ஏரி. 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த ஏரி ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது ஆய்வுக்கு வந்த முந்தைய அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய் ஏரியை தூர்வாரினால் மட்டும் தண்ணீர் வந்து விடாது. ஏரிக்கு வரும் நீர்வரத்து வாரிகளை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் நீர்வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கூறினார்.

    முந்தைய அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அதன் ஒரு பகுதியாக பெரிய ஏரியின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து வாரிகளை சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீர் என இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாய பகுதிகளில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது. அப்போது பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்த பொக்லைன் எந்திரங்கள் வாய்க்காலில் திருத்தபட்டு இருந்தது. பெருக்கெடுத்து ஓடி வந்த மழைநீரில் பொக்லைன் எந்திரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஊழியர்கள் பெரும் போராட்டத்திற்கு இடையே பொக்லைன் எந்திரத்தை மீட்டனர்.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நீர் வழித்தடத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடி செந்துறை பெரிய ஏரிக்கு வந்ததை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அனைத்து இடங்களிலும் உள்ள நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×