என் மலர்
அரியலூர்
வி.கைகாட்டி அருகே பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை வாலிபர் பறித்துச்சென்றார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் காவனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(வயது 47). விவசாயி. இவர் நேற்று காத்தான்குடிகாடு அருகே அரிசி ஆலைக்கு சென்றார். அங்கு கடலை ஆட்டிவிட்டு கடலை புண்ணாக்கு, எண்ணெயோடு மதியம் வீட்டிற்கு நடந்து வந்தார்.
அப்போது எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். தமிழ்ச்செல்வியை தாண்டிச்சென்ற அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தமிழச்செல்வியின் பின்பக்கமாக சென்று, அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி சுதாரிப்பதற்குள், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, தமிழ்ச்செல்வியிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து, தாலிச்சங்கிலியை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் மொத்தம் 1,035 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில், பொதுமக்களுக்கு தத்தனூர் பொட்டக்கொள்ளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 45 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15 பேரும் என நேற்று மொத்தம் 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை உடையார்பாளையம் பகுதியில் மொத்தம் 1,035 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். புதிதாக 59 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65, 64, 59 வயதுடைய ஆண்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 41 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 609 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 363 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 3,175 பேருக்கு போடப்பட்டுள்ளது.
செந்துறை அருகே கோவிலில் ஆலயமணி-பொருட்கள் திருட்டு போயின. மற்றொரு சம்பவத்தில் வெல்டிங் பட்டறையில் எந்திரங்களை மர்ம நபர்கள் தூக்கிச்சென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் பாட்டையப்பா கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக பரமசிவம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் கோவிலை திறப்பதற்காக வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பரமசிவம், உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் வைக்கப்பட்டிருந்த 2 குத்துவிளக்குகள், ஆலயமணி, தீபம் ஏற்றும் வெள்ளித்தட்டு உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 20-க்கும் மேற்பட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு என்ற தனவேல். இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் பட்டறையை திறப்பதற்காக வந்தபோது பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பட்டறைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த வெல்டிங் எந்திரம், வெல்டிங் ராடு உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.14 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மூர்த்தியான் தெற்கு தெருவை சேர்ந்த பால்ராஜின் மகன் செபஸ்டின் விஜய் (வயது 35). இவரது மனைவி ஜெனிபர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெனிபர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஜெனிபரின் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு சென்னையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த செபஸ்டின் விஜய் கடந்த 22-ந் தேதியன்று இரவு மதுவில் எலி பசையை(விஷம்) கலந்து குடித்து விட்டார். அவரை மீட்ட உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெனிபர், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவரது வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குடத்தை வெட்டி பூந்தொட்டி போன்று மாற்றி, அதில் ஒரு கஞ்சா செடியை வைத்து வீரமணி வளர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்தது, தெரியவந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த செடி, 4 மாதமாக வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கண்ணன் (50) என்பவர் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவரது வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குடத்தை வெட்டி பூந்தொட்டி போன்று மாற்றி, அதில் ஒரு கஞ்சா செடியை வைத்து வீரமணி வளர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்தது, தெரியவந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த செடி, 4 மாதமாக வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கண்ணன் (50) என்பவர் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.
தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான். அவனது உடலை பிரேத பரிசோதனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி பூபதி. இந்த தம்பதிக்கு பிரகாஷ் (வயது 7), செந்தில் (6) ஆகிய 2 மகன்கள். தம்பதி, நேற்று காலை காட்டுபிள்ளையார் கோவில் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள குட்டையில் பிரகாஷ் மற்றும் செந்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத வகையில் சிறுவன் செந்தில் குட்டை தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த பிரகாஷ், அபய குரல் எழுப்பி பெற்றோரை அழைத்தான். உடனே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த சிகாமணி, பூபதி மற்றும் அருகில் உள்ள வயல்களில் வேலை செய்த சிலரும் ஓடிவந்து குட்டையில் இறங்கி செந்திலை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு செந்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் உடலை எடுத்துச் சென்றால் மீண்டும் ஒப்படைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறுவனின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் போலீசார் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரை சிறுவனின் உடலை ஒப்படைக்க கிராம மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை முடிந்து நிச்சயமாக சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததன்பேரில் இரவு 10 மணி அளவில் சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிறுவனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கீழநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த தேவகி(வயது 55) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேவகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 29). விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(25). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட குடும்ப தகராறையடுத்து தமிழ்ச்செல்வி, கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு வருமாறு புஷ்பராஜ் அழைத்துள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புஷ்பராஜ், தனது வீட்டில் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்பராஜ் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் புஷ்பராஜின் தந்தை பூராசாமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உடையார்பாளையத்தில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கடாரங்கொண்டன் கிராமத்தை சேர்ந்த கெங்காசலத்தின் மகன் வேல்முருகன்(வயது 35). லாரி டிரைவரான இவரும், கிளீனரான அதே பகுதியை சேர்ந்த பிரகாசும் கடந்த 19-ந் தேதி கரூரில் இருந்து லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்தனர். நள்ளிரவில் அசதியாக இருந்ததால் 2 பேரும் உடையார்பாளையத்தில் லாரியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு தூங்கியுள்ளனர். அப்போது லாரியை யாரோ தட்டிய சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது 2 மர்மநபர்கள் சேர்ந்து வேல்முருகனின் சட்டை பையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில், வேல்முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று உடையார்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அப்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள், ஜெயங்கொண்டம் கீழகுடியிருப்பை சேர்ந்த மணிகண்டனின் மகன் அருண்(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், டிரைவர் வேல்முருகனிடம் செல்போன், பணத்தை பறித்து சென்றது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 27 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 23 பேரும் என நேற்று மொத்தம் 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 80 வயதுடைய மூதாட்டியும், 63, 47 வயதுடைய ஆண்கள் 2 பேரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 76 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 562 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 527 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,833 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 96 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 356 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 285 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்றும் கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 1,065 பேருக்கு போடப்பட்டது. இதனால் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 81,198 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 5,090 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






