என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் செட்டி ஏரி பூங்கா பகுதியில் போதையில் விழுந்து கிடக்கும் மதுப்பிரியர்களால், அந்த வழியாக செல்லும் பெண்கள் சிரமமடைகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் நகரின் மையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை, போலீஸ் குடியிருப்பு, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் காலை, மாலை இருவேளையும் வந்து செல்கின்றனர்.

    அதன் நுழைவு வாயிலின் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன் மது குடிக்க வருபவர்கள், மதுபாட்டில்களை வாங்குகின்றனர். ஆனால் மது குடிப்பதற்கு பார் வசதி இல்லாததால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து செட்டி ஏரி பூங்கா வரை உள்ள இடங்களில் மது அருந்துகின்றனர். போதை அதிகமானதும் செட்டி ஏரி பூங்காவிலும், வாரச்சந்தை நடைபெறும் கட்டிடப் பகுதியிலும் அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடக்கின்றனர்.

    அந்த வழியாகத்தான் மாலை நேரங்களில் பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு செல்கின்றனர். அரைகுறை ஆடையுடன் போதையில் கிடப்பவர்களால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே நுழைவு வாயிலிலேயே கட்டணம் வசூலிக்கும் அறையை அமைத்து, வேறு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுக்க வேண்டும். மேலும் வாரச்சந்தை கட்டிடம் கடந்த இரண்டு மாதங்களாக மூடிக்கிடக்கிறது.

    அங்கு பகலில் மது அருந்துவது, சூதாடுவது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனை போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் தினசரி பார்த்து செல்கின்றனர். ஆனால் யாரும் அவர்களை கண்டிப்பதில்லை. மது அருந்தி செல்பவர்கள் காலி பாட்டில்களை உடைத்து போட்டு விடுவதால் நடைபயிற்சி செல்பவர்களின் கால்களில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தத்தனூர் பொட்டக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 95 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 25 பேரும் என நேற்று மொத்தம் 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே செம்மண் கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் த.சோழங்குறிச்சி சாலையில் உள்ள சின்ன வட்ட குளம் ஏரியில் செம்மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அவர், டிப்பர் லாரியில் செம்மண் கடத்திய நபர்களை பிடித்து, லாரியுடன் உடையார்பாளையம் போலீசில் ஒப்படைத்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தத்தனூர்மேலூர் மேல கொட்டாய் தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பா(வயது 45), ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மண் கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஜெயங்கொண்டத்தில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த, வங்கியில் நகையை அடகு வைத்து பெற்ற பணமான 86 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் தீபா(வயது 20). இவர் குடும்ப செலவிற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.86 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அந்த பணத்தை கைப்பையில் வைத்து, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்து பூட்டி விட்டு துணி வாங்குவதற்காக பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு ஸ்கூட்டரை கடையின் முன்பு நிறுத்திவிட்டு, அவர் கடைக்குள் சென்றார்.

    இந்நிலையில் வங்கியில் இருந்து அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த தீபாவின் ஸ்கூட்டர் இருக்கையை கைத்தாங்கலாக தூக்கி, அதில் இருந்த ரூ.86 ஆயிரத்தை கைப்பையோடு திருடிச்சென்றனர். இந்நிலையில் கடையில் இருந்து வெளியே வந்த தீபா, வாங்கிய துணிக்கு பணம் கொடுப்பதற்காக வாகனத்தின் இருக்கை பகுதியை திறந்து பார்த்தபோது, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து ஜவுளிக்கடையின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டர் இருக்கையை தூக்கி பணத்தை திருடியதும், அவர் பணம் திருடுவதை மறைக்கும் வகையில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் நின்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தீபா கொடுத்த புகாரின்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, பணத்தை திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமானூர் அருகே டிராக்டரை கடத்தி, வர்ணம் பூசி விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த மூக்கப்பிள்ளையின் மகன் ஞானசேகர்(வயது 35). விவசாயி. இணைப்புப் பெட்டியுடன் கூடிய டிராக்டர் வைத்துள்ள இவர், தனது நிலத்திற்கு உழவு பணிகள் மேற்கொள்வதற்காகவும், ஓய்வு நேரத்தில் வாடகைக்கும் அதனை இயக்கி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதியன்று இரவு வழக்கம்போல் வீட்டின் முன் டிராக்டரை நிறுத்தியிருந்தார். மறுநாள் அதிகாலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகர், இது குறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சகாயம்அன்பரசு தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடத்தப்பட்ட டிராக்டரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த குரு(45), தட்டாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த வீரமணி(27) ஆகியோர் ஞானசேகரின் டிராக்டரை இணைப்பு பெட்டியுடன் சேலத்திற்கு கடத்திச்சென்று, அதற்கு வர்ணம் பூசி, அடையாளத்தை அழித்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் இணைப்பு பெட்டியை, ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்க முயன்றது, தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட டிராக்டரை இணைப்பு பெட்டியுடன் தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும் குரு, வீரமணி ஆகியோரை வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள 45 அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், விவசாயிகள் உழைத்து உற்பத்தி செய்த உணவு பொருளை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் சேகர்(வயது 34), பிரபாகரன் (32), மாதவன். இவர்கள் 3 பேரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் இருந்து சாக்குகளில் மணல் அள்ளி, மோட்டார் சைக்கிளில் குழவடையான் கிராமத்திற்கு கடத்தி வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து வேம்பகுடி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா (51) கொடுத்த புகாரின்பேரில், 3 பேர் மீதும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து சேகர், பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிமெண்டு சாக்குகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சேகர், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து, மணல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய மாதவனை தேடி வருகிறார்.

    தாமரைக்குளம் அருகே ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விவசாயிகளின் வாழ்க்கை சிறக்கவும், இரட்டிப்பு லாபம் கிடைக்கவும் ஏரிகளிலும், குளங்களிலும் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்து, முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கான விதிகள் எளிமையாக்கப்பட வேண்டும். வண்டல் மண் எடுப்பதால் விவசாய நிலங்கள் செழுமை அடையும். ஏரிகளிலும், குளங்களிலும் அதிக அளவு நீரை சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பெருகும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பரமசிவம், செழியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
    தா.பழூர் அருகே திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்த தாய் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அல்லிபாப்பா(வயது 42). இவர்களுடைய மகளை, அதே பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் வீரபாண்டியன்(36) திருமணம் செய்து கொள்ள, கடந்த நான்கு ஆண்டுகளாக பெண் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அல்லிபாப்பா- ராஜேந்திரன் தம்பதி, பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை வயலுக்கு சென்றுவிட்டு பண்டாரத்தார் காடு அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த அல்லிபாப்பாவை, வீரபாண்டியன் தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, அல்லிபாப்பாவை மீட்டனர். இைதயடுத்து அவர் சிகிச் ைசக்காக ெஜயங்ெகாண்டம் அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். தனக்கு பெண் கொடுக்காவிட்டால் கொல்லாமல் விடமாட்டேன் என்று வீரபாண்டியன் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில், அல்லிபாப்பா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து, வீரபாண்டியனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    செந்துறை அருகே மனைவியை சுலுக்கியால் குத்தி விட்டு தூக்குப் போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவரது மனைவி சல்பா (37). இவர்களுக்கு பரத் என்கிற மகனும், பிரியதர்ஷினி என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டிலேயே ஓட்டல் நடத்தி வந்தனர். கடன் பிரச்சினை காரணமாக அதனை மூடி விட்டனர்.

    இந்தநிலையில், கடன் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தில் வெளியே சென்ற கண்ணன், விஷத்தை குடித்து விட்டு வீ்ட்டிற்கு வந்தார்.

    பின்னர், எலியை குத்த பயன்படுத்தப்படும்‌ சுலுக்கியால் மனைவியின் கழுத்தின் பின்பக்கம் குத்தினார். இதில், படுகாயம் அடைந்த அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் சல்பாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்தநிலையில் மனைவியை தாக்கிவிட்டு மீண்டும் வெளியே சென்ற கண்ணன், அங்குள்ள முந்திரி மரத்தில் தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம் வட்டாரத்தில் நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் 395 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார சமுதாய சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இடையக்குறிச்சி, மருதூர், வரதராஜன்பேட்டை, வாரியங்காவல், அணிகுதிச்சான் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் வாயிலாக தினமும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை குழுவினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதன்படி கவரப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 83 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 பேருக்கும் என மொத்தம் 150 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆண்டிமடம் வட்டாரத்தில் நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் 395 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் மது விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் பொன்நகர், சூரியமணல், கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது பொன்நகரைச் சேர்ந்த விஜயன், கீழத்தெருவை சார்ந்த லட்சுமணன், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், ராஜாராமன் ஆகியோர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×