என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமானூர் அருகே டிராக்டரை கடத்தி, வர்ணம் பூசி விற்க முயன்ற 2 பேர் கைது

    திருமானூர் அருகே டிராக்டரை கடத்தி, வர்ணம் பூசி விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த மூக்கப்பிள்ளையின் மகன் ஞானசேகர்(வயது 35). விவசாயி. இணைப்புப் பெட்டியுடன் கூடிய டிராக்டர் வைத்துள்ள இவர், தனது நிலத்திற்கு உழவு பணிகள் மேற்கொள்வதற்காகவும், ஓய்வு நேரத்தில் வாடகைக்கும் அதனை இயக்கி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதியன்று இரவு வழக்கம்போல் வீட்டின் முன் டிராக்டரை நிறுத்தியிருந்தார். மறுநாள் அதிகாலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகர், இது குறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சகாயம்அன்பரசு தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடத்தப்பட்ட டிராக்டரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்த குரு(45), தட்டாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த வீரமணி(27) ஆகியோர் ஞானசேகரின் டிராக்டரை இணைப்பு பெட்டியுடன் சேலத்திற்கு கடத்திச்சென்று, அதற்கு வர்ணம் பூசி, அடையாளத்தை அழித்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் இணைப்பு பெட்டியை, ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்க முயன்றது, தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட டிராக்டரை இணைப்பு பெட்டியுடன் தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும் குரு, வீரமணி ஆகியோரை வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×