என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் பலருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் அதில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும் கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அக்கிராமத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

    செந்துறை தாசில்தார் குமரய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சென்னை அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் இருந்து வந்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 23) என்கிற இளம்பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் இளம்பெண் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் இளம்பெண் பலியான சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஜெயங்கொண்டத்தில் பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நேரக்காப்பாளர் காயமடைந்தார். வாகன கண்ணாடிகள் உடைந்தன.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் திருச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் புறநகர் போலீஸ் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகம் அமைந்துள்ளது.

    இந்த அலுவலகத்தின் முகப்பு பகுதியில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் நேற்று திடீரென பெயர்ந்து விழுந்தன. அப்போது அந்த பகுதியில் பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தனியார் நேரக் காப்பாளரான அற்புதம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் காப்பாளருடைய இருசக்கர வாகனத்தில் கண்ணாடிகள் உடைந்தன.

    இந்த பஸ் நிலையமானது கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு டீக்கடை மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, எண்ணெய் சட்டியில் விழுந்ததில், பலகாரம் செய்யும் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியது. மற்றொரு கடையில் சிமெண்டு பூச்சுகள் விழுந்தபோது, உள்ளே ஆட்கள் இல்லாததால் விபரீதம் ஏற்படவில்லை. மற்றொரு கடையிலும் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

    இதேபோல் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து, பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவரின் தலையில் விழுந்ததில், அவர் பலத்த காயம் அடைந்தார். கடை உரிமையாளரும் காயமடைந்தார். ெதாடர்ந்து ஒவ்வொரு கடையாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தநிலையில், நேற்று விசாரணை அலுவலக மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டிடத்தின் அனைத்து பகுதியிலும் கண்காணித்து, பெரும் விபத்து ஏற்படும் முன்பாகவே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் பழைய கட்டிடமாக இருப்பதால், இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    வி.கைகாட்டி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ்(வயது 43). இவர் சென்னை கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 35). இவர், தனது தாய் வீடு உள்ள சிறுவளூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் ரெட்டிபாளையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்ற சித்ரா, தனது கணக்கில் பணம் செலுத்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வங்கி முன்பு சாலையில் சித்ரா நடந்து சென்றபோது அவருக்கு எதிரே அரியலூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர்.

    அதில் பின்னால் ஹெல்மெட் அணிந்து அமர்ந்திருந்த நபர், சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை திடீரென பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், நடந்த சம்பவம் குறித்து சித்ராவிடம் கேட்டறிந்தனர். மேலும் இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    பட்டப்பகலில் வங்கி முன்பு பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பஸ் நிலையத்தில் ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைவீதி மற்றும் பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது பஸ் நிலையத்தில் ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜெயக்குமார்(வயது 32) மீது வழக்குப்பதிந்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மற்றொரு வீட்டில் வெள்ளிப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து என்ற காளிதாசன் (வயது 55). இவர் முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை அப்பகுதியில் மழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு வரண்டாவில் தனது மகள்களுடன், காளிதாசன் தூங்கியதாக தெரிகிறது. அதிகாலை 5 மணியளவில் காளிதாசன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் ஆரம், ஒரு ஜோடி தங்கத்தோடு, ஜிமிக்கிகள், காது மாட்டல்கள் என மொத்தம் 10 பவுன் நகைகளும், ரூ.65 ஆயிரமும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வெளியில் வந்து பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது, அந்த கதவு கடப்பாரையால் நெம்பி திறக்கப்பட்டிருந்ததும், அந்த வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது, தெரியவந்தது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜதுரை ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர் சத்யராஜ் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தார். மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் ‘டெய்சி’ திருட்டு நடந்த வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று திரும்பியது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    மேலும் அதே கிராமத்தில் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள ஜோதி(52) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால், அதே சாலையில் உள்ள சாமிநாதன் மகன் தியாகராஜன் (35) என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தா.பழூர் அருகே வேலி அமைத்த தகராறில் முதியவரை தாக்கியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 62). இவருக்கு சொந்தமான நிலத்திற்கு கள்ளிவேலியை அகற்றி விட்டு கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தங்கராசு நிலத்திற்கு அருகில், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது.

    இந்நிலையில் உமாபதி என்பவர் உள்ளிட்ட சிலர், தங்கராசுவை தகாத வார்த்தைகளால் திட்டி கோவில் பக்கத்தில் உள்ள கள்ளி வேலிகளை ஏன் அகற்றுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் பாலுசேகர் (52) என்பவர் தாக்கியதில், தங்கராசுவின் பற்கள் உடைந்து விழுந்ததாகவும், பின்னர் அருகில் இருந்த கட்டையால் தொடர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதை தடுக்க வந்த தங்கராசுவின் மனைவி நாகவள்ளியை உமாபதி உள்ளிட்டோர் தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த தங்கராசு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தங்கராசு தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் 9 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து உமாபதி (67), அண்ணாதுரையின் மகன்கள் கார்த்திகேயன் (36), சுரேஷ் (34) மற்றும் பாலுசேகர் (52), வீரபாண்டியன் (51), பாலமுருகன் (24) பாலகிருஷ்ணன் (45), அருணாச்சலம் (52) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள நடராஜனை தேடி வருகிறார்.

    இதே சம்பவத்தில் பாலமுருகன் (52) கொடுத்த புகாரின்பேரில் தங்கராசு மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி வந்த லாரிகளை மறித்து, டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய பா.ம.க. நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள இடையத்தான்குடி கிராமத்தை சுற்றி பல்வேறு சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்புக் கற்கள் தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த கிராமத்தின் வழியாக சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி வந்த லாரிகளை மறித்து, ‘எங்கள் கிராமம் வழியாக தினமும் சென்று வருவதால், பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறி மிரட்டி லாரிகள் மற்றும் டிரைவர்களை பிடித்து வைத்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளருக்கு, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாரிடம் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழப்பழுவூர் போலீசார், அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள், இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தரும், அரியலூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. ெசயலாளருமான சங்கர்குரு(வயது 32), அதே கிராமத்தை ேசர்ந்த காமராசு (50), அறிவழகன் (33), திருமுருகன் (37), ஆறுமுகம் (32), மகேந்திரன் (28), தர்மராஜ் (33) என்பதும், அவர்கள் டிரைவர்களை மிரட்டி பணம் கேட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய சுதாகர், தனவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள மணகெதி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் அம்பாபூர் ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களும், அம்பாபூர் ஊராட்சியில் 1 வாக்கச்சாவடி மையமும் என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, மணகெதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிகளுக்காக மேற்காணும் வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, என்றார். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    விக்கிரமங்கலம் அருகே தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியன்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 20). நேற்று முன்தினம் இவர், 17 வயது சிறுமிக்கு தாலி கட்ட முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்துச்சென்ற சிறுமி, விஷ செடியை தின்று மயங்கி கிடந்தார். இதைக்கண்டவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்ட முயற்சி செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 35). சம்பவத்தன்று பாலமுருகன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஆனந்தன் என்பவர், செந்தில்குமாருக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மதியம் பிள்ளையார் கோவில் வழியாக சென்றபோது, அங்கு பேசிக்கொண்டிருந்த ஆனந்தன், விஜய், செந்தில்குமார், சரவணன் ஆகியோர் பாலமுருகனை ஆபாசமாக திட்டி, அருகில் இருந்த கட்டை மற்றும் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் போலீசில் ஆனந்தன் கொடுத்த புகாரில், எங்கள் ஊர் ஏரிக்கரை வழியாக சென்றபோது, தன்னை அங்கு பேசிக்கொண்டிருந்த பாலமுருகனும், சுரேசும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்ததாக தெரிகிறது. அதன்பேரில் 2 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தா.பழூர் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 43). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் நேற்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் அனைத்துப் பூட்டுகளும் உடைந்து கிடந்த நிலையில், கதவு திறந்து கிடந்ததாக தெரிகிறது.

    மேலும் வீட்டில் உள்ள மர பீரோ மற்றும் சூட்கேசில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வரும் பன்னீர் (65) நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பன்னீர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ஜெயங்கொண்டம் அருகே கர்ணன் பட பாடலை பாடி அரசு பெண் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில், கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின்பேரில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜெயங்கொண்டத்தில் நகராட்சி ஆணையர் சுபாஷினி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற சுகாதார பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 

    இந்தநிலையில், நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரியும் அலுவலர் சரஸ்வதி(வயது 46) என்பவர், சமீபத்தில் வெளியான பிரபலமடைந்த கண்டா வரச் சொல்லுங்க, என்ற திரைப்படப் பாடலை மாற்றி எழுதி, கண்டா விரட்டியடிங்க... கொரோனாவை கண்டா விரட்டியடிங்க, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்க... முககவசம் அணிந்து கொள்ளுங்க, சமூக இடைவெளியை கடைப்பிடிங்க என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த விழிப்புணர்வு பாடலை பொதுமக்களில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×