என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர், செந்துறை வழியாக கோட்டைக்காடு கிராமத்திற்கு கூடுதலாக பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் அப்பகுதி மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம், மிகப் பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது, அரியலூர் தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, மாவட்ட கோர்ட், உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது.

    அரியலூர், கடலூர், மாவட்டத்துடன் இணைப்பது கோட்டைக்காடு என்ற கிராமம்தான். இந்த ஊர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ளது.

    இந்த ஊருக்கு அரியலூரில் இருந்து ஒரு பேருந்து தான் இது நாள் வரை சென்று வருகின்றது. அந்த பேருந்து பழுதாகி விட்டால் வேறு பேருந்து வசதி இல்லாமல் 25 கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் அரியலூர், செந்துறை வழியாக கோட்டைக்காடு கிராமத்திற்கு கூடுதலாக பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    அரியலூரில் இருந்து பழனி, மதுரை, கோவை, திருப்பூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், அரியலூர் - திருவையாறு வழியாக கும்பகோணத்திற்கு கூடுதல் பேருந்து வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

    அரியலூரில் இருந்து திருமானூர், திருமழபாடி, செந்துறை, உடையார்பாளையம், டால்மியாபுரம் ஆகிய ஊர்களுக்கு நகரப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிசைமாற்று வாரிய வீட்டுவசதிவாரியம் சார்பில் ரூ. 49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 576 அடுக்குமாடிகுடியிருப்பு வீடுகளை தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
    • இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது.

    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கீழப்பழுவூர் குடிசைமாற்று வாரிய வீட்டுவசதிவாரியம் சார்பில் 49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 576 அடுக்குமாடிகுடியிருப்பு வீடுகளைதேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்பி திருமாவளவன், மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினர்.

    இத்திட்டத்தின்கீழ் கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 576 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்டது.

    குடியிருப்புகளில் ஒவ்வொரு குடியிருப்பும் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து குடியிருப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, ஆழ்துளாய் கிணறுகள், 3 கீழ்நிலை தண்ணீர் தொட்டிகளுடன், கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட பகுதியில் மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக், நடைபாதை ஆகிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள்வீடற்ற, அரியலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் தளஆய்வு செய்து, 576 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் யூனியன் சேர்மன் சுமதி, வாலாஜா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையரசன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இளம்பரிதி, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
    • அரியலூர் மாவட்டத்தில் 14 வயதிற்கட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18-வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் 14 வயதிற்கட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18-வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இச்சட்டத்தினை மீறுவோருக்கு அதிகபட்சமாக ரூ.50,000/- அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ௧௪ வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்றிட ஏற்பாடு செய்வது அனைவரின் கடமையாகும்.

    அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் விமலா, தொழிலாளர் ஆய்வாளர்கள் தேவேந்திரன், சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
    • காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    அரியலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 36).

    இவர் ஆண்டிமடம் பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து செந்துறை நோக்கி சென்றுள்ளார்.

    அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கார் ஒன்று ஜெயங்கொண்டம் நோக்கி வந்தது.

    அப்போது காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரவிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
    • கொலையில் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் உறுதியானது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அருங்கால் கிராமம். குறைந்த அளவே விவசாயம் செய்து வரும் இந்த ஊரில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அருங்கால் பகுதியை சேர்ந்த சிலர் ஆடு, மாடு மேய்ப்பதற்காக சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ரெங்கராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது.

    உடனடியாக இதுகுறித்து அவர்கள் கீழப்பழூவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அதனை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடல் மிகவும் அழுகியிருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொலையுண்ட பெண் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், அவரை யார் கொலை செய்து கிணற்றில் வீசியது என முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

    அதேபோல் அவரது கொலையில் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. அதில் முக்கிய நபரான அருங்கால் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதும் தெரிந்தது. இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

    அதேபோல் அருங்கால் கிராமத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு மூக்குத்தியை பரிசாக அளித்த செல்வி, அவர்களிடம் ஒரு சாக்குமூட்டையை கிணற்றில் வீச வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த 2 பெண்களும் சேர்ந்து சாக்கு மூட்டையில் உடலை கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கரூரில் கைது செய்யப்பட்ட செல்வியை போலீசார் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அதில் கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அரியலூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு விளை நிலங்கள் கொடுத்தது போக எஞ்சியுள்ள நிலங்களில் சிறு, குறு தொழிற்சாலைகளை தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.

    காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும், அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும்.

    அரியலூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர்காக்கும் உயரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

    அரியலூரில் சுரங்கம் தொடர்பான கல்வி முறையை தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டுக்கு அக்கட்சி நிர்வாகி கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா.உலகநாதன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை, மக்களுக்குரிய பிரச்னைகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தார். மாநாட்டில், 17 பேர் கொண்டு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


    • அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 14 ஆவது ஊதிய உயர்வு, 25 சதவீதம் ஊதிய உயர்வு என பல செயலாற்ற முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திய தி.மு.க. மற்றும்

    அதன் தோழமை கட்சிகளின் தொழிற் சங்கங்கள், தற்போது திமுக ஆட்சியில் கடந்த 12.5.2022 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது 25 சதவீத ஊதிய உயர்விற்கு பதிலாக 8 சதவீத ஊதிய உயர்வு கேட்டு பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

    இதற்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத்திற்காக ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிக்சட் பேட்டா நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பழைய பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களால் வாக்குறுதிகள் அளிக்க மட்டுமே தெரியுமே தவிர அதனை செயல்படுத்த முடியாது. அவைகள் ஓட்டுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது நடந்தது என்ன என்பது குறித்து விளக்கினார்.

    தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாருமான ஆர்.டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம்,

    மாவட்ட துணை செயலாளர் தங்கமுத்து, மகளிர் அணி இளைஞரணி சிவசங்கர், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பாலு, வடிவழகன், அசோகன், மருதமுத்து, தா.பழுர் யூனியன் சேர்மன் மகாலட்சுமி அண்ணா தொழிற்சங்க பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்


    • தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது.
    • வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது.

    வழக்குகளில் தீர்வு கண்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனே வழங்கப்படும். நீதிமன்றத்தில் நிலுவை இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்.

    இப்படிப்பட்ட உன்னதமான வாய்ப்பை பொதுமக்களும் வழக்காடிகளும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
    • மானியத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனிகுறிச்சி, சுத்தமல்லி, காடுவெட்டான் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க போர்டு திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை தாங்கி சங்க போர்டுகளை திறந்து வைத்து தமிழக அரசின் கலைஞர் கிராமத் திட்டம், தரிசு நில மேம்பாட்டு இயக்கம் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலமாக கிடைக்கின்ற மானியத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வேளாண், தோட்டக்கலை மற்றும் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக கிராமம் தோறும் சென்று வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் தா.பழூர் ஒன்றிய தலைவர் அனி குறிச்சி சாமிதுரை, சுத்தமல்லி பழனிச்சாமி,

    சாமிதுரை, ராஜமாணிக்கம், அய்யப்பன்,தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட வாலிபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று தனித்தனியாகவும், கூட்டாகவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமரன் (வயது 22), மன்மதராஜா (22). இருவரும் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அடைய நினைத்த கமரன், மன்மதராஜா இருவரும் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட அவர்கள் சிறுமியை வீட்டுக்கு பின்புறம் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். பின்னர் சிறுமியை இருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வலியால் அலறித்துடித்துள்ளார். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குபதிந்து கமரன், மன்மதராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    • சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அரியலூர்:

    ஆண்டிமடம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்புராஜ்(வயது 28) என்பவர் 100 மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவர் கொண்டு சென்ற மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×