என் மலர்
நீங்கள் தேடியது "அரியலூர் பெண் கொலை"
- கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
- கொலையில் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் உறுதியானது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அருங்கால் கிராமம். குறைந்த அளவே விவசாயம் செய்து வரும் இந்த ஊரில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அருங்கால் பகுதியை சேர்ந்த சிலர் ஆடு, மாடு மேய்ப்பதற்காக சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ரெங்கராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது.
உடனடியாக இதுகுறித்து அவர்கள் கீழப்பழூவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியில் கொண்டு வந்தனர்.
பின்னர் அதனை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடல் மிகவும் அழுகியிருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொலையுண்ட பெண் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், அவரை யார் கொலை செய்து கிணற்றில் வீசியது என முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அதேபோல் அவரது கொலையில் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. அதில் முக்கிய நபரான அருங்கால் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதும் தெரிந்தது. இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அதேபோல் அருங்கால் கிராமத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு மூக்குத்தியை பரிசாக அளித்த செல்வி, அவர்களிடம் ஒரு சாக்குமூட்டையை கிணற்றில் வீச வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த 2 பெண்களும் சேர்ந்து சாக்கு மூட்டையில் உடலை கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கரூரில் கைது செய்யப்பட்ட செல்வியை போலீசார் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அதில் கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.






