என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஏரியில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது
    • கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரில் உள்ள பாப்பேரியில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை எடுத்தனர். பிறந்து சில நாட்களே ஆன அந்த பெண் குழந்தையின் தலை, கல்லால் நசுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாரோ, குழந்தையை கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்.
    • திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 57). அரியலூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அவர் அங்கேயே குடியேறினார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் என்ஜினீயராகவும் உள்ளனர். அரசு அதிகாரியான இவர் திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    ஏற்கனவே தன்ராஜ் கடலூர், சென்னை, கோவை, கரூர் ஆகிய ஊர்களில் வேலை பார்த்துள்ளார். தற்போது தஞ்சையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக அரியலூர்-திருச்சி மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் காலனியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்ட பங்களா, அரியலூர் புறவழிச்சாலையில் திருமண மண்டபம், மினரல் வாட்டர் நிறுவனம் மற்றும் அரியலூர் கலெக்டர் பங்களா எதிரில் மிகப்பெரிய ஸ்கேன் சென்டர் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் தன்ராஜ் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. மேலும் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல கோடி மதிப்பிலான சொத்துக்களை தொடர்ந்து தன்ராஜ் வாங்கி குவித்து வருவதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் இன்று காலை அரியலூர் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    வீட்டின் நுழைவு வாயில் கேட்டை பூட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார், அடுத்த வினாடி வீட்டில் இருந்தவர்களிடம் உள்ள செல்போன்களை கைப்பற்றினர். மேலும் தொலைபேசி இணைப்பையும் அதிரடியாக துண்டித்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே வரவும், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

    இதையடுத்து வீட்டின் ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகைகளை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து தன்ராஜூக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், மினரல் வாட்டர் கம்பெனி, திருமண மண்டபங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். குறுகிய காலத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை குவிக்க அவருக்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதி யார், தன்ராஜூக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அதிகாரிகள் யார், யார் என்ற பட்டியலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அரியலூரில் இன்று நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின்னர் மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி திருப்பலி செய்து திருத்தேரை மந்திரித்தார். தேரில் அன்னம்மாள் சொரூபத்தை வைத்து பவனி நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு திருப்பலியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 குழந்தைகள் உள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேப்பங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி ஆசைவள்ளி (வயது 32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆசைவள்ளி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆசைவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே நாளில் 30,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது

    அரியலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் 30,201 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்
    • படுகாயம் அடைந்த நண்பருக்கு தீவிர சிகிச்சை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனதூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 18), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் உதயகுமார். இவர்கள் 2 பேரும் மதனத்தூரில் இருந்து தா.பழூர் நோக்கி மொபட்டில் சென்றனர். அப்போது அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (30) என்பவர் காரைக்குறிச்சியிலிருந்து அண்ணங்காரம்பேட்டைக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். தா.பழூர் செல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன்தாஸ், உதயகுமார் ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தார். பின்னர் உதயகுமார் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    இணைய வழி பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களை ஒருங்கிணைத்து மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்காகவும், பயனுள்ள வழிமுறையினை வழங்குவதற்காகவும், இந்திய அரசு இணைய வழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. இதில் நிர்பயா நிதி திட்டத்தில் அனைத்து வகையான இணைய வழி குற்றங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகப்பில் பதிவாகும் அனைத்து தகவல்களும் இணைய வழி மூலமாக சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அனுப்பப்படும். இணையவழி குற்றங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் சமூக வலைதளங்களை பின்பற்றியும் பயன் பெறலாம். மேலும் டுவிட்டர்-https://twitter.com/Cyberdost, பேஸ்புக்-https://www.facebook.com/CyberDost14C, இன்ஸ்டாகிராம்-https://www.instagram.com/cyberdosti4c, டெலகிராம்-https://t.me/cyberdosti4cஆகிய இணைய வழி பாதுகாப்பு குறித்த வழிவகைகளையும் பரப்பிட பங்களிக்கலாம். கட்டணமில்லா தேசிய உதவி எண்ணான 1930-ல் தெரிவித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
    • சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகளாக கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதலுக்கான விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ இணையதள முகவரியிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழை பூர்த்தி செய்து, அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை தர ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
    • மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டப்பட்டது.

    அரியலூர் :

    உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூரில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

    அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, அவர் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தன் புகைப்படம் எடுக்கும் அமைப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டினார்.

    மேலும், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரையப்பட்ட செஸ் விளையாட்டு அமைப்பை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.

    அரியலூர் :

    மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அமைப்புச்சார தொழிலாளர்கள் பிரிவு மாநிலச் செயலர் மாரியப்பன்குமார், அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சி.சந்திரசேகரன், மாநில பொறுப்பாளர் இல.கண்ணன், நகர தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்
    • லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கும்பகோணம் -விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் தா பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சிலால் கிராமத்தில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று வந்தது. உடனே போலீசார் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    லாரியின் உள்ளே துணி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து, அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் உள்ளே இருந்த துணி மூட்டைகளை அகற்றிய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது வந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது பற்றி தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர் கற்றல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கல்வித்தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் காலை 7மணி முதல 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    அரியலூர் :

    மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர் கற்றல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்விணையதளத்தில் மத்திய மாநில அரசு பணிகள் மற்றும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆத்துடன் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் காலை 7மணி முதல 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐ.பி.பி.எஸ். தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார் ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 27.07.2022 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட இருக்கிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளலாம்.

    எனவே அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×