search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரியலூரில் மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    அரியலூர் ஸ்டேட் பேங்க் காலனியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


    அரியலூரில் மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    • பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ்.
    • திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 57). அரியலூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அவர் அங்கேயே குடியேறினார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் என்ஜினீயராகவும் உள்ளனர். அரசு அதிகாரியான இவர் திருச்சி மண்டல நகர்ப்புற வளர்ச்சிக்குழும இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    ஏற்கனவே தன்ராஜ் கடலூர், சென்னை, கோவை, கரூர் ஆகிய ஊர்களில் வேலை பார்த்துள்ளார். தற்போது தஞ்சையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக அரியலூர்-திருச்சி மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் காலனியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்ட பங்களா, அரியலூர் புறவழிச்சாலையில் திருமண மண்டபம், மினரல் வாட்டர் நிறுவனம் மற்றும் அரியலூர் கலெக்டர் பங்களா எதிரில் மிகப்பெரிய ஸ்கேன் சென்டர் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் தன்ராஜ் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. மேலும் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல கோடி மதிப்பிலான சொத்துக்களை தொடர்ந்து தன்ராஜ் வாங்கி குவித்து வருவதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் இன்று காலை அரியலூர் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    வீட்டின் நுழைவு வாயில் கேட்டை பூட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார், அடுத்த வினாடி வீட்டில் இருந்தவர்களிடம் உள்ள செல்போன்களை கைப்பற்றினர். மேலும் தொலைபேசி இணைப்பையும் அதிரடியாக துண்டித்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே வரவும், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

    இதையடுத்து வீட்டின் ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகைகளை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து தன்ராஜூக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், மினரல் வாட்டர் கம்பெனி, திருமண மண்டபங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். குறுகிய காலத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை குவிக்க அவருக்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதி யார், தன்ராஜூக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அதிகாரிகள் யார், யார் என்ற பட்டியலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அரியலூரில் இன்று நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×