என் மலர்
அரியலூர்
- நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணகெதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடையாா்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தச் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் சுங்கச்சாவடி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அன்றாட தேவைக்காகவும், விவசாயப் பயன்பாட்டுக்காகவும் சுமைஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனா். தினமும் சுங்கச் சாவடியை கடந்து வயல்பகுதிக்கு செல்லும் போதெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இச்சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.
- அரியலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- செந்துறை, நடுவலூர், தேளூரிலும் மின்தடை
அரியலூர்:
அரியலூர், செந்துறை, நடுவலூர், தேளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்தை சேர்ந்த அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.
தேளூர் துணை மின் நிலையத்தை சேர்ந்த வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை.
நடுவலூர் துணைமின் நிலையத்தை சேர்ந்த சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி.
செந்துறை துணை மின் நிலையத்தை சேர்ந்த ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்ல பாங்கி தெரிவித்துள்ளார்.
- தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மகன் வெளிநாட்டுக்கு சென்றதால்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேல கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவரது ஒரே மகன் வல்லரசை பிழைப்புக்காக தாய்லாந்து நாட்டிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- ரூ.129 கோடியில் 4 வழி சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
- மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ளது.
அரியலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படிமுதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டு 2021-22 ல் சுமார் 255.02 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையை ரூ.129 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி இன்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இச்சாலை மேம்பாடு செய்யும் வழித்தடத்தில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், ராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ளது.
இச்சாலையில் 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் 38 சிறுபாலங்கள் புதியதாக கட்டப்படவுள்ளன. சாலையின் இரு மருங்கிலும் 3400 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாக அமையும். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.129 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியானது 21 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்பு ஏற்றுச்செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தெரிவித்தார்.
- ரூ.10 கோடியில் பொய்யூர் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகள் நடந்து வருகிறது
- கண்காணிப்பாளர் ரமேஷ்சந்த் மீனா பார்வையிட்டு ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அமிர்தகுளம் இயக்கத்தின் கீழ் பிரதமர் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்ட ரூ.7.26 லட்சம் மதிப்பீட்டில் சடையப்ப படையாச்சி ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் பணியினையும், மேலக்கருப்பூர்-பொய்யூரில் மருதையாறு ஆற்றில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார்.
அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புறம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருசுக்குட்டை மேம்பாட்டு பணியினையும், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சின்னப்பட்டாக்காடு ஏரியில் வேளாண் பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ரூ.30,900 மதிப்பீட்டில் வண்ணாங்குளம் தூர் வாரப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகளில் முழுப் பணிகளையும் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே விரைவில் முடித்து, மழைநீர் தங்குதடையின்றி செல்லவும், இருசுக்குட்டையினை மழைக்காலத்திற்கு முன்பாவே தூர் வாரி மேம்படுத்தவும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சரியான நேரத்தில் தரமாக செய்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுடன், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு விடுபடாமல் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருவெங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை நீக்கும் வகையில் 2025-க்குள் அனைவருக்கும் எண்ணும் எழுத்தறிவையும் கொடுக்கும் வகையில் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் 8 வயதிற்குட்பட்ட 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களை கற்பிக்கும் வகையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் 539 பள்ளிகளில் 762 ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் முழுமையாக வெற்றி பெற ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள பாடங்கள் குறித்து கேட்டறிந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறனை அவர்கள் திருப்பி ஒப்புவித்தலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறுத் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகள் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து, நடைபெறும் பணிகளை விரைவாக குறித்த நேரத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பட்ட கட்டான் குறிச்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (32). இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று முத்துசாமி அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலின் வெளியே நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த சத்யராஜ் முத்துசாமியை தகாதவார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- சேவை குறைபாடு காரணமாக செல்போன் நிறுவனம் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- செல்போனை சரி செய்து தரவும் இல்லை.
அரியலூர்:
அரியலூர் மின் நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் அரியலூரில் உள்ள தனியார் செல்போன் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் செலுத்தி புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் அந்த செல்போன் வாங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் அதனை கொடுத்தபோது 2 முறையும் தற்காலிகமாக பழுதை நீக்கி கொடுத்துள்ளார்கள். மீண்டும் செல்போனின் பழுது ஏற்பட்டதால் புதிய செல்போனை வழங்குமாறு மோகன் கேட்டு உள்ளார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட விற்பனையாளர் செல்போனை சரி செய்து தரவும் இல்லை. புதிய போன் வழங்கவும் இல்லை.
இதையடுத்து அரியலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த நிறுவனம் மோகனுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக அவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பணம் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு
அரியலூர்:
அரியலூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி அலுவலர் தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கனவே 3 முறை வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் இன்றும் தீர்மானங்கள் வாசிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், நகராட்சி தலைவர் அலுவலகத்திற்கு முறையாக வருவதில்லை என குற்றம் சாட்டினர்.
ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 124 பேர் என கணக்கு காட்டி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் வேலை செய்வதோ 90 பேர் தான். எனவே பணம் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள் மீதமுள்ள பணம் யாருக்கு, எங்கு செல்கிறது என கேள்வி எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சியில் பொது நிதி எவ்வளவு உள்ளது. எந்தெந்த வங்கியில் கணக்கு உள்ளது என கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. பஸ் நிலையத்தில் உள்ள தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் ஏலம் எடுக்காமல் சட்டத்துக்கு புறம்பாக தனிநபர் வசூல் செய்து வருகிறார் என்று கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போதே நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்து முடித்தார். அதன் பின்னர் கூட்டம் முடிந்து விட்டதாக தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் ஆர்.டி.ஓ. சரவணன் அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆய்வாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி நடைபெற உள்ளது
- 24-ந் தேதி தொடங்குகிறது.
அரியலூர்:
மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. மற்றும் யு.பி.எஸ்.சி. போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்டுள்ள நில ஆய்வாளர், வரைவாளர், நில ஆய்வாளர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 24-ந் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது."
- விஷம் குடித்து மூதாட்டி உயிரிழந்தார்
- உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி பவுணம்பாள் (வயது 84). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வயல் காட்டில் இருந்த விஷ செடியை அரைத்து குடித்து மூதாட்டி மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுணம்பாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூழாங்கற்களை லாரியில் கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் பரணி குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணி குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த 2 டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தினார். இதில், விருத்தாச்சலம் தாலுகா கொட்டாரக்குப்பம் பகுதியை சேர்ந்த வீரமணி, பாலக்கொல்லை நரியப்பட்டு பகுதியை சேர்ந்த நாராயணசாமி ஆகியோர் டிப்பர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆழ்துளை கிணறு அமைத்து பைப்புகள் அமைக்கும் பொழுது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் கொட்டும் கூழாங்கற்களை லாரியில் எடுத்து சென்றது தெரிய வந்தது. மேலும் இது சட்டவிரோத செயல் என்பதால் அவர்கள் 2 பேரையும் தா.பழூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
- திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் ஆனந்தகுமார்(வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ஆனந்தகுமாரின் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்."






