search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 கோடியில் பொய்யூர் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகள்
    X

    ரூ.10 கோடியில் பொய்யூர் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகள்

    • ரூ.10 கோடியில் பொய்யூர் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகள் நடந்து வருகிறது
    • கண்காணிப்பாளர் ரமேஷ்சந்த் மீனா பார்வையிட்டு ஆய்வு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அமிர்தகுளம் இயக்கத்தின் கீழ் பிரதமர் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்ட ரூ.7.26 லட்சம் மதிப்பீட்டில் சடையப்ப படையாச்சி ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் பணியினையும், மேலக்கருப்பூர்-பொய்யூரில் மருதையாறு ஆற்றில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார்.

    அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புறம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருசுக்குட்டை மேம்பாட்டு பணியினையும், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சின்னப்பட்டாக்காடு ஏரியில் வேளாண் பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ரூ.30,900 மதிப்பீட்டில் வண்ணாங்குளம் தூர் வாரப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகளில் முழுப் பணிகளையும் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே விரைவில் முடித்து, மழைநீர் தங்குதடையின்றி செல்லவும், இருசுக்குட்டையினை மழைக்காலத்திற்கு முன்பாவே தூர் வாரி மேம்படுத்தவும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சரியான நேரத்தில் தரமாக செய்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுடன், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு விடுபடாமல் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருவெங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை நீக்கும் வகையில் 2025-க்குள் அனைவருக்கும் எண்ணும் எழுத்தறிவையும் கொடுக்கும் வகையில் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் 8 வயதிற்குட்பட்ட 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களை கற்பிக்கும் வகையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் 539 பள்ளிகளில் 762 ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் முழுமையாக வெற்றி பெற ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள பாடங்கள் குறித்து கேட்டறிந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறனை அவர்கள் திருப்பி ஒப்புவித்தலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறுத் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகள் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து, நடைபெறும் பணிகளை விரைவாக குறித்த நேரத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×