என் மலர்
அரியலூர்
- வாகன உரிமையாளருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.30 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
அரியலூர்:
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்து வருபவர் சம்பத் மகன் முருகன் (வயது42). கடந்த 2014 ஆம் ஆண்டு வாங்கிய புதிய காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 15,860 செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில், கடந்த 2015 ஜூன் முதல் வாரத்தில் வீட்டின் முன்பாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போய்விட்டது. ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து தமது காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளித்துள்ளார் முருகன். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க 8 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம் புகார் தாரருக்கு இழப்பீட்டு தொகையை தர மறுத்துவிட்டது.இதையடுத்து முருகன், தமக்கு காப்பீட்டுத் தொகை ரூ.3.20 லட்சமும், அந்நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் கேட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இதனை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், வாகனம் காணாமல் போன பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ஏற்பட்ட கால தாமதத்தை காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது. எனவே புகார்தாரர் தமது வாகனத்தை ரூ.4 லட்சத்துக்கு காப்பீடு செய்து 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால் சட்டப்படியான பிடித்தங்களாக 20 சதவீத தொகையை கழித்துக் கொண்டு ரூ 3.20 லட்சத்தை வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை புகார்தாரருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழை அரும்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- அரியலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- 8,707 உறுப்பினர்களுக்கு ரூ.28.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினர்
அரியலூர்:
திருச்சியில் நடைபெற்ற விழாவில், மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 8,707 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, 617 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,707 உறுப்பினர்களுக்கு ரூ.28.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் திறன் பயிற்சி முடித்த 24 பேருக்கு இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவுக்கு அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக திருச்சியில் நடைபெற்ற விழாவின் காணொலி காட்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பட்டன.
- கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- இதில் சுமார் 430 மாடுகள், 680 ஆடுகள், 13 வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சைகள் அளித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கற்கை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் செல்வம், செந்தில், பாலமுருகன், மேகநாதன், ஆனந்தநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 430 மாடுகள், 680 ஆடுகள், 13 வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர்.
- விஷம் தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவர் வீட்டிலேயே கொள்ளு பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். மேலும் இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்றார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்
அரியலூர்:
மஞ்சப்பை விருதுகள் பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிகநிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு(சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க அடுத்த வருடம் மே 1ந் தேதி கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
- கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டது
அரியலூர்:
உலக சுற்றுலா தினத்தையொட்டி அரியலூரில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே சுற்றுலா சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், இளநிலை பயிற்சி அலுவலர் ரவி மற்றும் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- விதவை பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்தது யார்? எத்தனைபேர் சேர்ந்து கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலுார்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி(வயது40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் சில மாதங்களில் இறந்து விட்டார். இதனையடுத்து 2வதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில் ரூ.11 லட்சம் ஜீவனாம்சம் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமகிருஷ்ணன் குடும்பத்தினரிடமிருந்து ராசாத்தி ஜீவனாம்சமாக ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராசாத்தி ஜீவனாம்சம் வழக்கு தொடர அவரின் முதல் கணவர் முனியப்பனின் தம்பி மனைவி உதவியாக இருந்ததாகவும், அந்த வகையில் அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகி உள்ளது எனக்கூறி அவர் அந்த பணத்தை ராசாத்தியிடம் கேட்டுள்ளார். பணம் தர ராசாத்தி மறுத்தநிலையில், இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ராசாத்தி கோவில்எசனை- வெங்கனூர் சாலையில் வெங்கனூர் சுடுகாடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலைக்கான காரணம் என்ன? ராசாத்தியை கொலை செய்தது யார்? எத்தனைபேர் சேர்ந்து கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணக்கப்பிள்ளை மகன் மகேந்திரன் (வயது 33). இவர் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ந் தேதி மாலை மகேந்திரன் தனது வீட்டின் முன்பு கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனி, மணிகண்டன், பன்னீர், சத்யராஜ், ராஜேஷ் ஆகிய 5 பேரும் முன்விரோத காரணமாக மகேந்திரனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மகேந்திரன் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
- கடன் பெற விரும்புவோர் வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது. தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வருகிற 4ந் தேதி அன்று அரியலூர் ஜிம்மா மசூதியில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாலை 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெற உள்ளது. வருகிற 10ந் தேதி அன்று மணப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 20ந் தேதி அன்று கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரையும், தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. மேலும் கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டார், சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்டதொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் சிலையை தமிழகத்தில் நிறுவி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என சீமான் பேசினார்
- தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல குக்கு முதன்முதலாக அறி–வித்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் ஆவார்
அரியலூர்:
அரியலூரில் தமிழ்த் தேசியக் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ம.சோ.விக்டர் தொகுத்து வழங்கிய பிரான்சிசு ஓயிட் எல்லீசின் யாப்பிலக்கண விளக்கவுரை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் கலெக்டராக பணியாற்றிய பிரான் சிசு ஒயிட் எல்லிசு என்ற ஆங்கிலேயரைப் பற்றி, தமிழ்நாட்டில் அறிந்திருப்ப–வர்கள் ஒரு சிலரே. 1809ம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின்ஆட்சித் தலைவராகப் பணி–யாற்றியவர் தான் எல்லி–சுப் பெருமகனார். தமிழில் மட்டுமல்லாது, தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அதன் விளை–வாக தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல–குக்கு முதன்முதலாக அறி–வித்தவர். மிகக்குறுகிய ஆண்டுக–ளில் தமிழைக் கற்று தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆய்வு செய்து விளக்கவுரை–யையும் பதிவு செய்தவர். தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் தொன்னூல் விளக்கம் போன்ற நூல்களை முழுவ–துமாகக் கற்று உள்வாங்கிக் கொண்டவர். மிக குறுகிய தன் வாழ்நாளில், ஏராளமான தமிழ் ஒலைச் சுவடிகளை சென்னைக் கோட்டையில் சேர்த்து வைத்து அங்கு அச்சுக்கூடம் ஒன்றையும் அங்கு நிறுவியவர். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, தேம்பாவணி, திருக்காவலூர், கலம்பகம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரை எழுதியவர். திருவள்ளுவரின் ஓலைச் சுவடி–களை எடுத்து அதனை முதன் முதலில் அச்சு வடி–வில் கொண்டு வந்தவர் எல்லீசு ஆவார். அவ்வாறு பன்முகத்திறமை–களைக் கொண்டிருந்த எல்லிசு தனது 41வது வய–தில் ராமநாதபுரத்தில் மறைந்தார். தமிழ்ப் பகைவர்கள் அவருக்கு உண–வில் விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறப்ப–டு–கிறது. 10 ஆண்டு–களே பணி–யிலிருந்த எல்லிசு தமிழ் மகனாக வாழ்ந்தி–ருந்தார். அர–சாங்கக் கோப்புகளில் கூட, எல்லீசன் என்று தமிழிலேயே கையொப்பமிட்டார். திரா–விடம் என்ற சொல்லை எல்லிசு தன் பதிவுகளில் பயன்படுத்தவே இல்லை. பிராமணர்கள் வழியில் கால்டுவெல் திராவிடம், திராவிடர் என்ற சொற்களை அறிமுகம் செய்து, தமிழர் வரலாற்றில் குழப்பத்தைத் தோற்றுவித்து விட்டார். எல்லிசின் அரிய ஆய்வுகள், மறைக்கப்பட்டன, மறுக்கப்பட்டன. தமிழை, தமிழரை அடிமைப்படுத்த நினைத்த தமிழ்ப் பகைவர்கள், கால்டுவெல்லைத் தூக்கி நிறுத்தி விளம்பரம் செய்தனர். எல்லீசு காலத்துக்குப் பின்னர், ஜி.யூ. போப் பையர் எல்லிசின் பதி–வுகள் சிலவற்றையும் பல ஓலைச் சுவடிகளையும் தன்னுடன் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று, லண்டன் அருங்காட்சியகத்தில் சேர்த்தார். அவை, இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் எல்லிசு தம் கைப்பட எழுதிய குறிப்புகள், 153 பக்கங்களில் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. கறுப்பு மையி–னால் பழைய ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் விளக்கவு–ரைகளோடு அக்குறிப்பு–கள் உள்ளன. அக்குறிப்புகள் இரண்டு பகுதிகளாக உள்ளன. இரண்டு பகுதிகளிலும் தமிழ்ச் செய்யுள் அமைப்பு முறை–களை எல்லீசு விளக்கி–யுள்ளார். நேர்அசை, நிரையசை, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்றவாறு, அவர் செய்யுட்களை ஆய்வு செய்துள்ளார். யாப்பிலக்கணத்தை முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது அவருடைய விளக்க–வுரை–களால் தெளிவாகி–ன்றன. இன்று, தமிழைப் படித்த–வர்களுக்கும் கிட்டாத, செய்யுள் இலக்கணப் புலமை எல்லீசுக்கு இருந்ததை அவருடைய விளக்கவுரைகள் கூறுகின்றன. உச்சத்தில் வைத்துப் பாராட்டப்ப வேண்டியவர் எவ்வாறு மறக்கப்பட்டார். எனவே தமிழகத்தில் பிரான்சிசு ஒயிட் எல்லீசு சிலையை நிறுவி, தமிழக அரசு அவருக்கு ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி–னார்.
- போட்டியில் அரியலூர் மாணவர்கள் 1023 பங்கேற்றனர்
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்
அரியலூர்:
அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி நடைபெற்றது. அரியலுார் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், திருமானுார் ஆகிய 6 வட்டாரங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 353 அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு, 9-10, 11-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் 20 ஆயிரத்து 42 மாணவர்களும், வட்டார அளவில் 4 ஆயிரத்து 991 மாணவர்களும், மாவட்ட அளவில் ஆயிரத்து 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறும்போது:- இதுபோன்ற கலைத்திருவிழாப் போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிப்படுத்தி அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது என்று அவர் கூறினார்.
- அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் தொடங்க முன்வர வேண்டும் என இளைஞர்களுக்கு குறைதீர் ஆணைய நீதிபதி அழைப்பு விடுத்தார்
- நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் வழக்கு தாக்கல் செய்த 90 நாள்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
அரியலூர்:
அரியலூரில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினக் கருத்தரங்கில் அரியலூர் ஆணையத்தின் நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடி வருகிறோம். இதனை கொண்டாடும் போது கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் கருத்துக்களைப் பற்றியும் செய்திகள் வெளியிடுவதன் மூலம் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் செய்தி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. அரியலூரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆணையம் தொடங்கப்பட்ட மே 2018 முதல் கடந்த ஜூன் 2022ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் 86. ஆனால் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை அதாவது ஆறு மாதங்களில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 250 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது போல வழக்கு தாக்கல் செய்த 90 நாள்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரியலூர் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்மாதிரி மாவட்டமாக மாற்றிட மாவட்டத்திலுள்ள இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களை தொடங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






