என் மலர்tooltip icon

    அரியலூர்

    • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்து ரூ.6,200-ஐ பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீசாருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பழைய தெருவை சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகன் பாரி(வயது 23), தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.6,200-ஐ பறிமுதல் செய்தனர்.

    • கடன் பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி வனிதா(வயது35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வனிதா அவரது தந்தை கலியபெருமாளிடம் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கு கடன் தொல்லை அதிகம் இருப்பதால் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கலியபெருமாள் மருமகனிடம் இது குறித்து பேசியுள்ளார்.

    பின்னர் காலை வனிதா வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு சிவலிங்கம் அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் வனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ள சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கேபிள் கட்டணம் உயரவுள்ளது. எனவே, கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    • அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டது
    • விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1895 மெ.டன் யூரியா, 1231 மெ.டன் டி.ஏ.பி 444 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2118 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.

    இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 260 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 692 மெ.டன் என கூடுதலாக 952 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 23.5 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் (அ) தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை செல்போன் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகும்.

    மேலும், வேளாண் அறிவியல் நிலையம் சோழமாதேவி மூலம் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் விவசா யிகளால் எழுப்பப்பட்டது.

    இதில் துறைவாரியாக சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வழங்கினார். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள், விவசா யிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெவுள்ளது
    • குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28ந் தேதி நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28ந் தேதி மாலை அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) கலைச்செல்வன் கலந்து கொண்டு 52 பேருக்கு பணி நியமனத்துக்கான சான்றிதழை வழங்கி மேலும் பேசியது: வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசின் நோக்கமாகும். அதன்படி மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    சி.என்.சிஆப்ரேட்டர், டெய்லரிங், சூப்பர்வைசர், மென்பொருள் பொறியாளர், மொபைல் அசம்பளர் போன்ற 910க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வுசெய்தனர். முகாமில் 293 பேர் கலந்து கொண்டதில் 52 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடியும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என்றார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வினோத் குமார் , மணிமாறன், உதவியாளர் ராஜா, கணபதி மற்றும் அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.


    • அரியலூர் மாவட்டத்தில் 12,768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு வங்கி கடன் ஒப்புதல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியோடு மற்ற வங்கிகளும் இணைந்து முதல் 3 வாரத்தில் 12 ஆயிரத்து 768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி மதிப்பில் முன்னூரிமை துறை கடனாக வழங்கி உள்ளது.

    இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் 12 ஆயிரத்து 498 பயனாளிகளுக்கு ரூ.137.54 கோடியும், மாவட்ட தொழில் மையம் திட்டங்களில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.34.06 லட்சமும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.35.54 லட்சமும் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.10 லட்சமும், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.54.38 லட்சமும், 91 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.13 கோடியும், பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சமும், முத்ரா திட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.77.15 லட்சமும், 22 பயனாளிகளுக்கு கல்வி கடன் ரூ.95 லட்சமும், 18 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன் ரூ.3.69 கோடியும் மற்றும் இதர கடன்களாக 23 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடியும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் பரிமளா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட், ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி அலுவலர் வெங்கடேசன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டனர்.

    • பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
    • அரியலூர் மாவட்ட நீதிபதி உத்தரவு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததை சார்ந்தவர் பரமசிவம் (வயது 71). இவர் 14.4.2015 அன்று மதியம் வீட்டில் இருந்தபோது இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சென்று வீட்டை காலி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பரமசிவம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, தீர்ப்பு வரட்டும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பரமசிவத்தை தாக்கியுள்ளனர். சண்டையை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் உருட்டுகட்டை மற்றும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தி யுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரனை அதிகாரியான குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா செயல்பட்டார். ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டிலிருந்து மேல் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட கோர்ட்டிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரனை முடிவடைந்தது.

    இதற்கிடையே விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் கலா தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை 6.3.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

    • தையற்கலை தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • ஓய்வூதியம் 3000 உயர்த்த தீர்மானிக்கபட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டம் அருகே மீன் சுருட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க சார்பில் மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக விசன் ரவி, செயலாளராக தேவேந்திரன், பொருளாளராக கண்ணன் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.

    உடன் மாநில பொறுப்புத் தலைவர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தனி நல வாரியம் வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் 3000 ஆக உயர்த்தி தர வேண்டும், வருகின்ற 27ம் தேதி தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு கிளைகள் தோறும் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ராஜா பெரியசாமி நன்றி கூறினார்.


    • திருமானூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம் நடைபெற்றது
    • கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி:

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுர் பழைய பஸ்நிலையத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்ததை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுறுத்தலின் படி திருமானூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும், கீழப்பழுர் நகரக் கழகத்தின் சார்பாகவும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஒன்றிய கழக அவைத் தலைவர் சக்திவேல், தனசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் கமலக்கண்ணன், இலந்தை தேவர், ஒன்றிய முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஹனிபா, அம்மா பேரவை சீராளன், கீழைக்கழக பிரதிநிதி ரவி, ராஜேஸ்வரி, மலர்விழி நல்லதம்பி, கூட்டுரவு சங்க தலைவர் பூம்புகார், பாண்டியன், அம்மா பேரவை நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொன்டனர்.


    • தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தொன்மையான தமிழை பாதுகாக்க வேண்டும் என்று நந்தலாலா தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,தொன்மையான தமிழில் எழுத, பேச மாணவர்கள் முன்வரவேண்டும்.

    எங்கெங்கோ பிறந்த பலரும் தமிழை கற்றுக்கொண்டு தமிழுக்காக கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வாழ்ந்து தமிழை கற்று தேம்பாவனி எனும் நூலை எழுதினார். அதேபோல், திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால் திருக்குறளின் அருமை உலகறிந்தது.

    இந்தியா பல்வேறு மாநிலங்களை கொண்டிருந்தாலும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல முக்கிய காரணங்கள் இலவச கல்வி, சமூகநீதியை கடைபிடித்தல், மொழிக்கொள்கையை பின்பற்றுதல் ஆகும்.மாணவர்கள் மொழியின் வளத்தை தெரிந்து கொள்ள இலங்கணங்களை கற்றறிய வேண்டும். எனவே, மாணவர்கள் பழமையான தமிழ் மொழியை நன்கு படிக்க வேண்டும். எழுத வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவர் யாழனி , மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


    • முதியோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • முகாம் கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மூத்த குடிமக்களுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான மகாலட்சுமி தலைமை வகித்து பேசினார்.

    முகாமுக்கு அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் அழகேசன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞரும் , சட்ட ஆலோசகருமான பகுத்தறிவாளன் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேசினர்.முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கிராம நல சங்க வளாக நிர்வாகி ராஜா வரவேற்றார்.

    கோவிந்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகலாட்சுமி தொடக்கி வைத்து, மாணவ மாணவியர்கள் படிக்கும் போது நல்ல பழக்க வழக்கங்களை கையாள வேண்டும்.

    போதை பொருள்கள் மற்றும் போதை தரும் வஸ்த்துக்களை உபயோகப்படுத்தக்கூடாது .போதைப் பொருள்களை விநியோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமை செய்யும் என்றார்.பள்ளி தலைமையாசிரியர் அய்யம்பெருமாள் வரவேற்றார்.




    ×