என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது
    • மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்க, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது.கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்சியாளர் ஜெய்சங்கர், கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூச்சுப் பயிற்சியினை செய்து காண்பித்தார்.நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகில் ராஜ் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் மற்றும் மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்.

    • இந்தியாவையே உலுக்கிய கோர விபத்து சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார்.
    • அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார்.

    ரெயில் பயணம் என்பது பாதுகாப்பானது. இதில் அரிதாக நடைபெறும் விபத்துகள் சில நேரங்களில் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அதுபோன்ற ரெயில் விபத்துகளில் பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தி நீங்காத சோகத்தை வடுவாக விட்டு சென்ற அரியலூர் ரெயில் விபத்து நினைத்தாலே கண்களை குளமாக்கிவிடும்.

    இந்திய வரலாற்றிலேயே நீங்காத சோகத்தை ஏற்படுத்திய நாள்.

    கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி... கனமழை பெய்து கொண்டிருந்தது. அன்று இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 603) சுமார் 800 பயணிகளுடன் புறப்பட்டது. நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரெயில் கொட்டும் மழையில் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது. அந்த ரெயிலுக்கு முன்பாக, திருவனந்தபுரம், நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றிருந்தன.

    13 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் சொந்த ஊருக்கும், பணி நிமித்தமாக பல்வேறு பகுதிக்கும் செல்வதற்காக முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் அயர்ந்து தூங்கினார்கள்.

    சிலர் தூக்கம் இன்றி கண்விழித்த நிலையில் இருந்தனர். பலருக்கு இதுதான் இறுதிப்பயணம் என்பது கூட அறிந்திராத நிலை.

    ரெயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவு நேரத்தில் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தை அடைந்ததும், ரெயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரெயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது.

    பின்பு 12 பெட்டிகளுடன் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. திருச்சியில் இருந்து 35 மைல் தூரத்தில் அரியலூருக்கும், கல்லகம் என்ற ரெயில் நிலையத்துக்கும் இடையே காவிரியின் கிளை ஆறான "மருதையாறு" என்ற காட்டாறு ஓடுகிறது.

    23-ந்தேதி அதிகாலை 5.30 மணி.... அந்த கோர சம்பவம் நடந்த நேரம். ரெயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. கனமழையால் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரெயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் அப்போது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

    அபாயகரமான சூழலில் இந்த பாலத்தை கடந்துதான் ரெயில் செல்ல வேண்டும் என்ற நிலை. போதிய வெளிச்சம் இல்லாததால், ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர் துரைசாமி, பயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை.

    வெள்ளத்தால், பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரெயில் என்ஜின் பாலத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரெயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில், பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், நிலைகுலைந்த ரெயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    அய்யகோ... என்ற அலறல் சத்தம்.... என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. அந்த அபாயக்குரல்களும் கூட தண்ணீரில் கரைந்து போயின...

    ரெயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. அதிலும், என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால், அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

    கல் நெஞ்சையும் பதற வைக்கும் இந்த கோர சம்பவத்தில் சுமார் 250 பேர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். விடிந்தும் விடியாத நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மக்கள் கூடினர். எங்கும் மரண ஓலம்... மழை நீரைவிட மக்கள் கண்ணீர் வெள்ளமானது.


    தகவல் கிடைத்து மீட்புக் குழுவினர் வந்தனர். 2 நாள் கடும் போராட்டத்திற்கு பிறகும் 150 உடல்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஆற்றங்கரையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டது. அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.

    இந்தியாவையே உலுக்கிய இந்த கோர விபத்து சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார்.

    ரெயில்வே துறை மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். இந்த ரெயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ரெயில் விபத்தின்போது, கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

    உயிர் தப்பியவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக ஜன்னல் ஜன்னலாகத் தாவி ரெயில் பெட்டியின் கடைசிப் பகுதிக்கு வந்தார்கள். ஆற்றில் வெள்ளத்தின் சீற்றம் படிப்படியாகத் தணிய சுமார் 4 மணி நேரம் ஆனது. வெள்ளம் அடங்கி ஆற்றின் இரு கரைகளுக்குள் ஒடுங்கி ஆறு பழையபடி ஓடத் தொடங்கியபோது ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சொருகியிருந்த உடல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. நீர்மட்டத்துக்கு மேலே வருவதும் பிறகு நீரில் மூழ்குவதும், நீரில் அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்படுவதுமாக இருந்தன. மீட்கப்பட்டவர்கள் வேறு ரெயில் மூலம் புறப்பட்டனர். விபத்தில் உற்றார் உறவினரை இழந்தவர்களின் சோகக் குரல்களும் சூழ அந்த இடமே பெரும் அழுகுரலாகவே கேட்டன.

    அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார். டெல்லியில் மத்திய ரெயில்வே உதவி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன் பதவி வகித்தார். விபத்து செய்தி கிடைத்தவுடன் ஓ.வி.அழகேசன் அரியலூர் வந்தார். ஆற்றில் ரெயில் கவிழ்ந்து கிடந்ததையும், ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்ததையும் பார்த்து அழகேசன் கண்ணீர் விட்டார். அங்கேயே அவர் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் வரையில் நின்றிருந்து பிணங்கள் மீட்கப்படுவதை பார்வையிட்டார்.

    அப்போதைய மத்திய மந்திரிகள் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தார்கள். பெண்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி மண்ணோடு மண்ணாக சகதியில் புதைந்து போனது. அதற்குள் கிடந்த பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசியது. மீட்கமுடியாத துரதிர்ஷ்ட சூழலால் தண்ணீர் ஓரளவுக்கு வடிந்தபின், அந்த இடத்தில் சிதைந்த நிலையில் இருந்த உடல்களுடன் ரெயிலானது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கோர விபத்து நடந்து 67 ஆண்டுகள் கடந்துள்ளன. அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் அந்த சோக வடுவை சுமந்துகொண்டு வாழ்கின்றனர். நெஞ்சை கசக்கிப் பிழியும் இந்த நிகழ்வு வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவாகி விட்டது. இன்றளவும் அந்த நிகழ்வை மனதிலிருந்து நீக்கமுடியாமல், வருடா வருடம் கண்ணீர் சிந்தி அதனை நினைவுகூர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
    • விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடு தல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரி வித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஆண்டிம டம்,ஜெயங்கொண்டம் வட்டா ரங்களில், கார்த்தி கை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலையில் நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வ து மிகவும் முக்கியமா னதாகும்.

    நல்ல தரமான விதைக ளை விவசாயி களுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை தேவையான நடவ டிக்கை களை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது உரிய விற்பனை ரசீது கேட்டுப் பெற வேண்டி யது மிகவும் அவசியமாகும். விற்பனை ரசீது அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    நில கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் விற்ப னை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல மு ளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

    கூடுதல் விலைக்கு விற்றாலோ எடைகுறைவாக விற்றாலோ ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் தங்க ளுக்குத் தேவையான விதை களை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்.

    அரியலூரில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழ புரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் உலக மரபு வார விழா தொடங்கியது.
    • ராஜேந்திர காவியம் என்னு ம் பரிசுகள் நாட கத்தை தமிழ் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேற்றினர்.

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழ புரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் உலக மரபு வார விழா தொடங்கியது.

    இந்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்து றை ,திருச்சி வட்டம் மற்றும் தமிழ்நாடு தமிழக தொல்லி யல் துறையால் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் ஆயிரம் மாலை வெள்ளகுளம் அக்சரா வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் ராஜேந்திர காவியம் என்னு ம் பரிசுகள் நாட கத்தை தமிழ் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேற்றினர்.

    இவ்விழாவில் நேஷனல் கல்வி குழும தாளாளர் சிலம்பு செல்வன், மேலாளர் மனோபாலன், செயலாளர் சங்கரநாராயணன், துணைச் செயலாளர் கண்ணன், பள்ளி முதல்வர் தாமஸ் டைனிட்டி வர்கீஸ் ,பள்ளி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், நெல்லி ஆண்டவர் முதல்வர் முனு ஆதி ,அமிர்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொல்லியல் துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகம், வில்லு ப்பாட்டு, பரதநா ட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • எங்களது வாழ்வாதரமாக உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம் என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    அரியலூர்

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் புதுப்பா ளையம், பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜ நகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது-

    அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை.

    இதுகுறித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் வருகிற 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.

    இந்தக் கூட்டம் மேற்கண்ட கிராமங்களில் நடத்தாமல் சம்மந்தமே இல்லாத இடத்தில் நடத்தப்படுகிறது.

    எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது. மீறி நடத்த முடிவெடுத்தால், உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எங்களது வாழ்வாதரமாக உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம் என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் நவநீத கிருஷ்ணன்(வயது 20). இவர் ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி சிறுமியின் குடும்பத்தார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் நவநீத கிருஷ்ணன் சிறுமிக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே துப்புரவு தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார்
    • பிணத்தை கைப்பற்றி கொலையா? என்று போலீஸ் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பு ஒரு முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை ப ார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பருகம் காலனியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 60) என்பவதும், இவர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்து தற்போது வீட்டில் இருப்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து ே பாலீசார் ,இறந்தவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் ராஜாளி நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை–தீர்க்–கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.

    எனவே மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் செயற்பொறியாளர் அய்யனார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர்,

    பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகனுக்கு வள்ளி தொய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    • அரியலூர் மாவட்ட மைய நுலகத்தில் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது
    • திருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் பேசினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருச்சி மத்திய மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி துணை ஆட்சியர் என்.சக்திவேல் , போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுப் பெற்ற முதுகலை உயிரியல் ஆசிரியை மா.தமிழரசி, சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, வாசகர் வட்டத் தலைவர் கு.மங்கையர்கரசி, மாவட்ட நுலக அலுவலர் ரா.ஆண்டாள், முதன்மை நூலகர் ஜான்பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலைநகர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஞான கார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக பஸ் நிலையம் வழியாக சென்று சன்னதி தெரு வழியாக அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ராஜேந்திரன். இந்துக்களின் பெருமைகளைப் பற்றி பேசினார். பொ துக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தங்களுடைய பயிற்சிகளை செய்தனர். ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகிகள் பேசினர்.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

    ×