என் மலர்
தெலுங்கானா
- ஆண் குழந்தையின் தாய் யாரென்று தெரியாததால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை.
- ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றனர். குழந்தைகளின் தாய்மார்களும் ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மாஞ்செரி அரசு ஆஸ்பத்திரியில் பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 27-ந்தேதி இரவு இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன.
அவசரக்கதியில் குழந்தைகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.
அப்போது யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர். மேலும் சிகிச்சை முடிந்ததும் எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் திணறினர்.
இது பற்றி குழந்தைகளின் தாயாரிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக 2 தாய்மார்களையும் அழைத்து உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என கேட்டுள்ளனர்.
அப்போது 2 தாய்மார்களும் தங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கவே இல்லை என உறுதியாக கூறினர்.
இதனால் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 குழந்தையையும் மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆண் குழந்தையின் தாய் யார் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
ஆண் குழந்தையின் தாய் யாரென்று தெரியாததால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை.
ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றனர். குழந்தைகளின் தாய்மார்களும் ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும்.
- மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.
பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும்.
- சாதாரண மனிதர்கள், காவல் துறையினரை நண்பராக கருத வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின் போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும்.

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும். அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நாம் ‘டெல்டா’ என்ற மிக மோசமான கொரோனா அலையையே பார்த்து விட்டோம்.
- சீனாவில் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை.
ஐதராபாத்:
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொதுவாக உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் கவலை அளிக்கக்கூடியவைதான். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்படும். தடுப்பூசி போட்டவர்களை தாக்கும். ஒமைக்ரானால் தாக்கப்பட்டவர்களை கூட தாக்கும்.
நாம் 'டெல்டா' என்ற மிக மோசமான கொரோனா அலையையே பார்த்து விட்டோம். உடனே தடுப்பூசி போடும் பணியை தொடங்கினோம். 'ஒமைக்ரான்' வந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம்.
இப்போது வந்துள்ள பி.எப்.7 என்ற புதியவகை கொரோனா, டெல்டா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளோம். மற்ற வைரஸ்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நாம் ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று விட்டோம். எனவே, இப்போது சீனாவில் ஏற்படுத்தியது போல், இந்தியாவில் பி.எப்.7 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. எல்லா வழிகளிலும் நாம் வேறு பட்டவர்கள்.
சீனாவில் 'பூஜ்ய கொரோனா' கொள்கையை பின்பற்றியதுதான் தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம். அங்கு தடுப்பூசி குறைவான அளவுக்கு போட்டிருப்பது நோயின் தீவிரத்தை அதிகரித்து விட்டது.
இந்தியாவில் வயதானவர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். ஆனால் சீனாவில் அப்படி தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை.
இந்தியாவில் கொரோனா அலை வரும் என்றோ, வராது என்றோ தற்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உடனே அலை வரும் என்பதற்கான பீதியான அறிகுறி தெரியவில்லை. அதே சமயத்தில், இந்தியாவில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, சிகிச்சை போன்ற கட்டமைப்பு வசதிகள் தாராளமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
- ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேம்பாடு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார்.
27ந்தேதி ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுவார். மேலும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார்.
28ந்தேதி அன்று, பத்ராசலம் சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத வழங்கும் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
- சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதராபாத் பகுதியில் ரகுநாதன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். ரகுநாதன் டீக்கடைக்கு 3 வாலிபர்கள் டிப் டாப் உடை அணிந்து வந்தனர். அவர்கள் 3 பேரும் டீ குடித்தனர்.
பின்னர் அதில் இருந்த வாலிபர் ஒருவர் 2 ஆயிரத்தை ரகுநாதனிடம் கொடுத்தார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.2 ஆயிரத்திற்கு சில்லறை இல்லை என்றார். ரூ. 30 மட்டும் தர வேண்டும் என கூறினார்.
சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
மற்றொரு வாலிபர் கத்தியை எடுத்து ரகுநாதனின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.
இது குறித்து ரகுநாதன் சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இது சம்பந்தமாக சைதராபாத் உசேன் அஷலம் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான், யான் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 30 ரூபாய் "டீ" க்காக துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2வது தளத்திலிருந்து பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை இளம்பெண் ஒருவர் திடீரென கீழே வீசினார்.
- போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்திய போது குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் குழந்தையை வீசவில்லை என்பது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷாய் குடாபகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
நேற்று மதியம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்திலிருந்து பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை இளம்பெண் ஒருவர் திடீரென கீழே வீசினார். கீழே வீசப்பட்ட குழந்தையின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்து குடியிருப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்திய போது குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் குழந்தையை வீசவில்லை என தெரிவித்தனர். அப்படியானால் வேறு எங்கேயோ குழந்தையை பெற்ற பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார், தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றாரா? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை கடிதத்தில் தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
- பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும், அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் ஐ.ஐ.ஐ.டி பாசார் என அழைக்கப்படும், ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுபிரசாத் என்ற மாணவர் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்துள்ளார்.
இவர் ரங்காரெட்டி மாவட்ட பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில், திடீரென அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும். அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது. இதனால், கட்டாயத்தின் அடிப்படையில் திரும்ப, திரும்ப ஒன்றை செய்யும் நிலையில் அவர் காணப்படுவார்.
இதுபற்றி நிர்மல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சல்லா பிரவீன் குமார் இன்று கூறும்போது, ஐ.ஐ.ஐ.டி. பசாரில் பானுபிரசாத் என்ற மாணவர் விடுதியில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனநிலை பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்பு, கல்லூரி நிர்வாகம் அவருக்கு 2 முறை கவுன்சிலிங் அளித்து உள்ளது. ஏனெனில் அவர் மனரீதியாக குழப்பத்தில் இருந்து உள்ளார். ஆனால், நேற்றிரவு அவர் தற்கொலை செய்து உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.
- மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும்.
- இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியராகவும், இதனை தொடர்ந்து, விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள காரணத்தினால் கணவரின் ஒத்துழைப்போடு இவர் கோகோ, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இதனால் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்று விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார். இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2020-ம் ஆண்டு பெண் போலீசாக பணியில் இணைந்தார்.
இவர் தற்போது தெலுங்கானா மாநிலம், முலுகு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தாயைப் போலவே தானும் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டுமென நாகமணியின் மகள் திரிலோகினியும் பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, போலீஸாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடந்தது.
இதற்கு தாயும், மகளும் ஒன்றாக விண்ணப்பித்தனர். பல நூற்றுக்கணக்கானோருடன் தாயும், மகளும் போட்டி போட்டுக் கொண்டு இதில் பங்கேற்றனர். இதனை அறிந்த பலர் ஆச்சரியப்பட்டனர். இருவரும், உடல் தகுதியில் தேர்வாகிவிட்டனர். நீளம் தாண்டுதல், 800மீ ஓட்டப் பந்தயத்தில் இருவரும் தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
அடுத்ததாக எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதுகுறித்து நாகமணி கூறும் போது, இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். மகளுடனே போட்டி போடும் நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
மகளுக்கும் போலீஸ் சீருடையை அணிவித்து பணியாற்ற செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாகும். இருவரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கை உள்ளது. எவ்வளவு இருந்தாலும் அவள் எனக்கு போட்டியாளர்தான்" என கூறி சிரித்தார்.
இவர்களில் யார் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்கள்? அல்லது இருவருமே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்குத் தேர்வாகி விடுவார்களா? என அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, போலீசாரும் அவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானா மாநிலத்துக்கு 26ம் தேதி வருகிறார்.
- ஐந்து நாள் பயணம் செய்யும் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஐதராபாத்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் 26-ம் தேதி வருகிறார்.
ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தெரிவித்தார்.
- நாம் சொந்தமாக வாங்கிய கார், பைக், பஸ் உள்ளிட்ட வாகனங்களை கோவிலுக்கு கொண்டு சென்று வாகன பூஜை போடுவது வழக்கம்.
- திடீரென ஹெலிகாப்டர் ஒன்று கோவில் வளாகத்தில் நிற்பதை கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் போயனப்பள்ளி சீனிவாச ராவ். இவர் பிரதிமா உள்கட்டமைப்பு குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சீனிவாச ராவ் புதிய ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கினார்.
நாம் சொந்தமாக வாங்கிய கார், பைக், பஸ் உள்ளிட்ட வாகனங்களை கோவிலுக்கு கொண்டு சென்று வாகன பூஜை போடுவது வழக்கம்.
இதேபோல் சீனிவாச ராவ் தான் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு பூஜை செய்ய ஐதராபாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள யாதகிரி லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு ஹெலிகாப்டரை கொண்டு சென்றார். கோவில் வளாகம் முன்பு ஹெலிகாப்டரை நிறுத்தினார்.
திடீரென ஹெலிகாப்டர் ஒன்று கோவில் வளாகத்தில் நிற்பதை கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஹெலிகாப்டரை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து கோவில் பூசாரிகள் வந்து ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை செய்தனர்.
புதியதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு கோவிலில் வைத்து பூஜை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
- இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் செல்போன் விழுந்துவிட்டது.
- செல்போனை எடுக்க முயற்சித்தபோது பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார்.
நிஜாமாபாத்:
தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் ரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவர் நேற்று முன்தினம் மாலை, முயல்களை பிடிப்பதற்காக மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். பாறைகளுக்கு நடுவே தூங்கும் முயல்களைப் பிடிப்பதற்காக ஒரு இடத்தை எட்டி பார்க்கையில், அவரது செல்போன் தவறி இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் விழுந்துவிட்டது.
சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த ராஜூ, பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாறை இடுக்கில் சிக்கியிருந்த போது ராஜுவுக்கு அவரது உறவினரான அசோக் அவருக்கு உணவு அளித்து தைரியம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மீட்பு பணியின்போது அதிகாரிகள் ராஜுவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளை வழங்கினர்.
சுமார் 48 மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு இன்று பிற்பகல் ராஜூவை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவர் காமாரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






