என் மலர்
மணிப்பூர்
- தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த 2 வாரங்களாக வன்முறைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் மூண்டது. உக்ருல் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வசிக்கும் குகிதேவாய் கிராமத்தில் இரவு தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பழங்குடி சமூக மக்கள் வசித்து வரும் மலை மாவட்டங்களில் மீண்டும் அசாம் ரைபிள் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இந்த போராட்டத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று அதிகாலையில் கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையால் மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
- தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-
'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.
ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
- மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.
புதுடெல்லி:
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூக வலைதள பயன்பாடும் ஒரு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.
இதை தொடர்ந்து மணிப்பூரில், "பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை" ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
- நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
- அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.
'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.
அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-
நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.
பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.
- வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
- தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்ததால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதையொட்டி கடந்த மாதம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2 மாதங்களுக்கு பிறகு பள்ளியில் தங்கள் நண்பர்களை நேரில் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை
- எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதிலும், பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி பேசும்போது ''மணிப்பூரில், நீங்கள் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள். உங்கள் கொள்கைகள், மணிப்பூரை கொலை செய்யவில்லை. மணிப்பூரில் உள்ள இந்தியாவை கொன்று விட்டது. மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேசவிரோதிகள்'' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில் ''மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரியும்.
அவரது தோல்வியால்தான், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்துள்ளன. குழந்தைகள் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் கூட, உள்துறை மந்திரி அமித் ஷா அவருக்கு சிறப்பு சான்றிதழ் வழங்குகிறார். மணிப்பூர் மாநில முதல்வர் நீக்கப்பட வேண்டும் என் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வலியுறுத்துகின்றனர்'' என்றார்.
- 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
- மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இம்பால்:
மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து சுமார் 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். மேலும் கோரிக்கை மனுவை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.
அதோடு இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதோடு கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் வலியுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சுராசந்த்பூரில் பாதுகாப்பு கிடங்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கலவர கும்பலால் எடுத்து செல்லப்பட்ட ஆயுதங்களை மீட்கும் பணிகளில் மணிப்பூர் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இதுவரை பள்ளத்தாக்கில் 1057 ஆயுதங்களும், 14 ஆயிரத்து 201 தோட்டாக்களும், மலை மாவட்டங்களில் 138 ஆயுதங்களும், 121 தோட்டாக்களும் மீட்கப்பட்டு உள்ளன.
பிஷ்னுபூர் 2-வது ராணுவ ஆயுத கிடங்கில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 15 ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் போலீசாரிடம் இருந்து கும்பல் பறித்து சென்ற 4 ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாநிலம் முழுவதும் இதுவரை 1,195 கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடி மருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர 10 ஆயிரம் வீரர்களை கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்த அவர்கள் வடகிழக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வன்முறை சம்பவத்தின் போது 3 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்த தவுபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் போலீஸ் நிலைய பகுதியில் இதுவரை 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிழக்கு மற்றும் மேற்கு இம்பாலில் பகுதிநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது
- தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட நிலையில் ஊரடங்கு தளர்வு நேரம் குறைப்பு
மணிப்பூரில் திடீர்திடீரென்று சில பகுதிகளில் வன்முறைகள் வெடிக்கின்றன. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில பொதுமக்களின் பயனுக்காக காலை ஐந்து மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது.
பிஷ்னுபுர் மாவட்டத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை ஐந்து மணி முதல் காலை 10.30 மணி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
நேற்று ஊரடங்கு தளர்வு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை காலை ஐந்து மணி முதல் மதியம் 3 மணி வரை இரண்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறியதால், மே 3-ந்தேதியில் இருந்து தற்போது வரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் உள்ளார்.
- பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை குக்கி மக்கள் கூட்டணி வாபஸ் பெற்றது.
இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
குக்கி இனத்தவர்களுக்கும், மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.
மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, குக்கி மக்கள் கூட்டணி கட்சி தலைவர் டோங்மங் ஹவோகிப் ஆளுநர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதால், ஆதரவை வாபஸ் பெற்றாலும் மணிப்பூர் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிகிறது.
- வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போராட்டம் நடைபெறும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய கலவர தீ இன்னும் அணையாமல் இன்று வரை கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது.
அம்மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி மற்றும் குகி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் இதுவரை 160 பேர் வரை பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி தான் வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஹரோதெல், சென்ஜம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தது. வன்முறை கும்பல்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பிஷ்ணுபூர் மாவட்டம் உகா தம்பக் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத கும்பல் புகுந்தது. அவர்கள் வீடுகளில் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கியும் துப்பாக்கியாலும் சுட்டு விட்டு ஓடிவிட்டது. இதில் தந்தை- மகன் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்தனர்.
கவுகட்டாவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் குகி சமூகத்தினர் வசித்து வரும் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த வீடுகளை சூறையாடி தீ வைத்தது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி இந்த தீ வைப்பு சம்பவம் எப்படி நடந்தது? என்று தெரியவில்லை. நேற்று 6 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி துப்பாக்கி சூடு, தீ வைப்புகளும் நடந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பிஷ்ணுபூரில் உள்ள பாதுகாப்பு படை ஆயுத கிடங்கிற்கு சென்ற கும்பல் அங்கு வைக்கப்பட்டு இருந்த 298 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள், வெடி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், உடனே சட்டசபையை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரியும் மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 27 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இந்த பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பெரும்பாலான பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போராட்டம் நடைபெறும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதம் தாங்கிய துணை ராணுவ படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- மூன்று மாதங்களுக்குமேல் ஆன நிலையிலும் வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் ஒரு பகுதியில் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்புப்படை செக்போஸ்ட் சூறையாடப்பட்டு, ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதற்கிடையே கடந்த மாதம் வெளியான இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மணிப்பூர் முதல்வருக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம் நடந்தது. அப்போது சட்டசபையை ஆகஸ்ட் 21-ந்தேதி கூட்ட கவர்னர் அனுசுயா உய்கே-வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துன்ளர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஸ்தம்பித்துள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவையில் அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் வருகிற 8-ந்தேதி நடைபெற இருக்கிறது.






