என் மலர்
மத்தியப்பிரதேசம்
- சுகோய்-30 நிராஜ்-2000 ரக விமானங்கள் மொரீனா என்ற பகுதியில் விழுந்து நொறுங்கின.
- ராஜஸ்தானிலும் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இன்று அதிகாலை சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.
நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு விமானங்களும் திடீரென்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இரண்டு விமானங்களும் மொரேனா என்ற பகுதியில் கீழே விழுந்தது. இதில் விமானங்கள் முழுவதும் நொறுங்கி தீப்பிடித்தது. விமானங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு வந்தனர். விமானங்கள் நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விமானங்கள் விழுந்து கிடந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விமானங்களின் பாகங்கள் வேறு பகுதியில் விழுந்து கிடக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்திய பாதுகாப்புத்துறை விபத்து நடந்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தது.
விமானங்கள் மோதுவதற்கு முன்பே விமானிகள் இருவரும் தங்களது விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறினர். அவர் களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து மொரேனா மாவட்ட கலெக்டர் அங்கித் அஸ்தானா கூறும்போது, "விமானங்களில் இருந்து வெளியேறிய விமானிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் காயம்அடைந்து உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
மீட்பு பணியில் போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது" என்றார்.
கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜஸ்தானில் மற்றொரு போர் விமானம் விழுந்து நொறுங்கியது. பரத்பூரில் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. உஜ்சைன் என்ற பகுதியில் திறந்த வெளியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணுவத்தினர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த விமானி குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அவர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை தலைமை தளபதி சுனில் சவுகான், விமான படை தளபதி வி.ஆர். சவுத்திரி ஆகியோரிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்களை கேட்டறிந்தார்.
சுகோய்-30 என்ற விமானம் ரஷியாவிடம் இருந்தும், மிராஜ்-2000 என்ற விமானம் பிரான்சிடம் இருந்தும் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, நியூசிலாந்து இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
- இன்றைய போட்டி இந்தூரில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தூர்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.
சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியது. 2-வது ஆட்டத்தில் 108 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணி இன்றைய போட்டியில் வென்று ஆறுதல் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இன்று மோதுவது 116-வது போட்டியாகும். இதுவரை நடந்த 115 ஆட்டத்தில் இந்தியா 57-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி 'டை' ஆனது. இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
- கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது.
- இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது
போபால்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அவமதிக்கப்படுகிறது. ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று?
முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்பட பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- மத்திய பிரதேச முதல் மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணம் என தெரிய வந்தது.
போபால்:
மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனாவர் பகுதியில் இருந்து தர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின், சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
- உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.
- உலக பொருளாதாரத்தில் ஐ.எம்.எப். இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்களின் 7-வது மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா 2014 முதல் சீர்திருத்தம், வெளிப்பாடு சிறப்பான செயல்பாட்டின் பாதையில் உள்ளது. இதன் விளைவாக இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வலிமையான மேக்ரோ பொருளாதார அடிப்படைகளே இதற்கு காரணம். கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டிற்கான வழிமுறைகளை துரிதப்படுத்தி, பல்வேறு தடைகளை இந்த அரசு நீக்கியுள்ளது. மிகவும் முக்கியமான பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி துறைகளில் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
- வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்தான், இந்தியாவின் உண்மையான தூதர்கள்.
- 2021-ம் ஆண்டு அனுப்பியதை விட 12 சதவீதம் அதிகம்.
இந்தூர் :
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு நடந்து வருகிறது. நேற்று அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:-
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்தான், இந்தியாவின் உண்மையான தூதர்கள். அவர்கள் கூடுமானவரை இந்திய தயாரிப்புகளையும், சேவைகளையுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், இந்திய தயாரிப்பு உலகம் முழுவதும் பிரபலம் அடையும்.
இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. அவை சீனாவிலும், ஐரோப்பிய யூனியனிலும் அமைத்ததுபோல், இங்கும் அமைக்க வேண்டும்.
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்தியாவின் சிறிய, பெரிய தொழில் அதிபர்களுடன் பங்குதாரர்களாக சேர வேண்டும். அப்போதுதான், அவர்களின் தொழில் திறனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், மீண்டும் திரும்பி செல்ல மாட்டார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு சென்றதுடன், நல்ல வேலைகளிலும் அமர்ந்தனர்.
அதன்மூலம் இந்தியாவுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு அவர்கள் 100 பில்லியன் டாலரை (ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் கோடி) அனுப்பி வைத்தனர். இது, 2021-ம் ஆண்டு அனுப்பியதை விட 12 சதவீதம் அதிகம்.
தகவல் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியா உலகின் அறிவுசார்மையமாக ஆகி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினர்.
- உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
- ஜி20 தலைமை பதவி மிகப்பெரிய பொறுப்பு என பிரதமர் மோடி கூறினார்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இதில் சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
புலம்பெயர் இந்தியர்களை வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தூதர்களாக நான் பார்க்கிறேன். யோகா, ஆயுர்வேதம், குடிசை தொழில், கைவினை பொருட்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றுக்கும் அவர்கள் தூதர்களாக திகழ்கிறார்கள்.
நாடு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய 25 ஆண்டுகால பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்தப் பயணத்தில் புலம்பெயர் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தியாவின் உலகளாவிய பார்வையும், உலக வரிசையில் அதன் முக்கிய பங்கும் உங்களால் மேலும் வலுப்படுத்தப்படும். இந்தியா அறிவுசார் மையமாக மட்டுமின்றி, திறமையின் தலைநகராகவும் மாறும் திறன் படைத்தது. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உளளனர்.
புலம்பெயர் இந்தியர்கள் தாங்கள் குடியேறிய நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதுபற்றி இந்திய பல்கலைக்கழகங்கள் ஆவணங்களையும், ஒலி, ஒளிக்காட்சிகளையும் தயாரிக்க வேண்டும்.
ஜி 20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு. இந்தியாவை பற்றி உலகத்துக்கு சொல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று இந்தியாவின் குரலுக்கும், வார்த்தைகளுக்கும் உலக அரங்கில் மாறுபட்ட முக்கியத்துவம் உள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவின் சக்தி இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.
உள்நாட்டிலேயே நாம் கொரோனா தடுப்பூசி தயாரித்து 220 கோடி தடுப்பூசிகளை இலவசமாக போட்டுள்ளோம். பொருளாதாரத்தில் 5-வது இடத்தையும், அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளில் 3-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.
இந்தியா என்ன செய்கிறது, எப்படி செய்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் பார்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வேகமான வளர்ச்சியும், சாதனைகளும் அசாதாரணமானவை. முன் எப்போதும் இல்லாதவை.
உலகில் நடந்த மின்னணு பணப்பரிமாற்றங்களில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. அதிநவீன விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரே நேரத்தில் 100 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளது என தெரிவித்தார்.
- மத்தியபிரதேசத்தின் இந்தூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடு தொடங்கியது
- இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சூரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு வந்துள்ள சுரிநாம் அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி, கயானா அதிபர் முகமது இம்ரான் அலி ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்தோகியுடனான பேச்சுவார்த்தையின்போது பரஸ்பர நலன்சார்ந்த ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மின்னணு தொழில்நுட்பம், திறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார். சுரிநாம் நாட்டின் கடன்களை மறுசீரமைத்ததற்காக இந்தியாவுக்கு சந்தோகி பாராட்டு தெரிவித்தார்.
இதேபோல், கயானா அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மருந்தியல் பொருட்கள், ஆரோக்கியம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். இருநாட்டு மக்களிடையிலான 180 ஆண்டுகால நட்புறவை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
- 4 ஆண்டுகளுக்கு ஒருதடவை நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
- மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.
போபால் :
மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒருதடவை நாடு முழுவதும் புலிகளை கணக்கெடுத்து வருகிறது. அந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில், புலிகள் அதிகமாக உள்ள மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. புலிகள் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ள கர்நாடகாவில் 15 புலிகள் இறந்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்தன. சிறிய வித்தியாசத்தில், நாட்டின் 'புலிகள் மாநிலம்' என்ற அந்தஸ்தை மத்தியபிரதேசம் தக்க வைத்துக்கொண்டது.
ஆனால், கர்நாடகாவை விட இருமடங்குக்கு அதிகமான புலிகள் இறந்திருப்பதால், புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை மத்தியபிரதேசம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அதை கைப்பற்றுகிறது. மத்தியபிரதேசத்தில் அதிகமான புலிகள் இறந்திருப்பது மர்மமாக இருப்பதாக அம்மாநில வனத்துறை கூறியுள்ளது.
- சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து.
- விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த விமானி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த மற்றொரு பயிற்சி விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார்.
மேலும் அவர், "இந்த விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
- மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
- கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்துவிட்டதாக மனுவில் கூறி உள்ளார்
போபால்:
மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் காந்து, கான்டிலால் பீல் (வயது 35). இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். சகோதரரின் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வேறு ஒரு நபரிடம் விட்டுச் சென்று, அந்த நபர் 6 மாதமாக தன்னை சீரழித்தாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்துவை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
சுமார் 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரை நீதிமன்றம் விடுதலை செயத்து. இதையடுத்து போலி குற்றச்சாட்டில் தன்னை சுமார் 2 ஆண்டுகள் சிறையில் அடைத்ததற்காக, 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சிறைவாசத்தால் அவரது குடும்பம் பசி பட்டினியால் வாடியதாகவும், சிறையில் துன்பமும் மன வேதனையும் அடைந்ததாகவும் மனுவில் கூறி உள்ளார். மனித உயிர் விலை மதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகள், கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல், வழக்கு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரூ.10,006 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இந்த வழக்கு 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
- ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான்.
- போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு நண்பர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரதான சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆயுஷ் ஹாரன் அடித்து, முன்னால் நின்றுகொண்டிருந்த சிறுவர்களிடம் வழிவிடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் ஆயுஷின் பைக்கை பின்தொடர்ந்து துரத்தினர். ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இந்த கத்திக்குத்து தொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






