என் மலர்
பீகார்
- மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியுடன் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) வினோத் குமார் சிங் மற்றும் பிற அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்தைச் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வாரம் அரையிறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். இவருடன் 5ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரனும் சென்றுள்ளார்.
மாணவி தேர்வு எழுத வகுப்பறைக்குள் சென்ற பிறகு, 5ம் வகுப்பு மாணவன் தனது சகோதரிக்கு உதவுவதற்காக துண்டு சீட்டில் கேள்விக்கான பதில்களை குறிப்புகளாக எழுதி தூக்கி எறிந்துள்ளான்.
இதில், அந்த துண்டு சீட்டு தவறுதலாக சகோதரியின் அருகில் இருந்த மற்றொரு மாணவி மீது விழுந்துள்ளது. அந்த மாணவி, தன் மீது காதல் கடிதம்தான் வீசியுள்ளான் என்று நினைத்து இதுகுறித்து தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அண்ணன் தனது சக நண்பர்களை அழைத்துக் கொண்டு 5-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக அடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் பயந்துப்போன 6ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது சகோதரனை அடித்து இழுத்துச் சென்றது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாணவனை குடும்பத்தினர் தேடி வந்தனர். மேலும் பேலீசிடமும் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மஹத்பானியா ஹால்ட் ஸ்டேஷன் ரெயில் தண்டவாளத்தின் அருகே கை மற்றும் உடல் பாகங்கள் புதைந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல் பாகங்களை தோண்டி எடுத்தனர். பின்னர், மாணவனின் குடும்பத்தினரை வரவழைத்து அடையாளம் காண வைத்தனர். மாணவன் அணிந்திருந்த சட்டையை அடையாளம் கண்டுக்கொண்ட குடும்பத்தினர், இது காணாமல் போன தங்களது பிள்ளைதான் என்று உறுதி செய்தனர்.
இந்நிலையில், மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியுடன் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) வினோத் குமார் சிங் மற்றும் பிற அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்தைச் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் அண்ணன் உள்பட அனைவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காதல் கடிதம் என்ற தவறான புரிதலால், 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
- இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை.
- பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால், அவர்கள் பணக்காரர்கள் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், "ஆத்மா மற்றும் பரமாத்மா என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்பினால் அது தெய்வம். இல்லை என்றால் அது வெறும் கற்சிலை. கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தர்க்கரீதியான முடிவு, நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
பஜ்ரங்பாலி (ஆஞ்சநேயர்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் வலிமையை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும்" என்று கூறினார்.
பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.
- அப்போது பேசிய அவர், நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் இன்னும் தொடர்பில் உள்ளார் என்றார்.
பாட்னா:
பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.
இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை.
தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.
- இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் நீந்திச் சென்று உயிர் தப்பிய நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
- நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன்.
- சாமானியர்கள் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை.
பாட்னா :
பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். மீதி வாழ்நாளில், சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.
என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடந்தது. ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போட்டு துன்புறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலில் நிதிஷ் குமார் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.
- நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.
பாட்னா :
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார் உயர்ந்தார்.
ஆனால் அதன் பின்னர் 'ஒரே உறையில் இரு வாள்' பிரச்சினை வெடித்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. அதன் விளைவாக பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்.
தற்போது பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
அதாவது அவர், "பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வுக்காக வேலை செய்து வருகிறார், ஒரு கால கட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை காங்கிரசில் இணைத்து விடுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார்" என்ற தகவலை வெளியிட்டார்.
இது பீகார் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது பீகாரில் 3,500 கி.மீ. தொலைவிலான பாதயாத்திரையை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்து, ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நிதிஷ் குமாருக்கு (வயது 71) வயோதிகம் ஒரு பிரச்சினையாகி வருகிறது. அவர் மாயையில் சிக்கி இருப்பதாக தோன்றுகிறது.
ஒன்றைச் சொல்லிவிட்டு, அவர் முடிக்கும்போது தொடர்பே இல்லாத வேறொன்றுக்கு தாவி விடுகிறார். நான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்வதாக அவர் நம்புகிறார் என்றால், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நான் அவருக்கு எதற்காக நான் ஆலோசனை கூறப்போகிறேன்?
நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.
'டெல்யூஷனல்' (மாயை) என்ற ஆங்கில வார்த்தை, நிதிஷ்குமாருக்கு சரியாக பொருந்துகிறது. அரசியலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அவர் யாரை நம்பவில்லையோ, அவர்களைத்தான் சூழ்ந்து இருக்கிறார். இது அவருக்கு பயத்தை தருகிறது. அந்த நடுக்கத்தில்தான் அவர் அர்த்தமற்று பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
- இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்னா :
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.
அதன்படி காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாதயாத்திரை குறித்து துனது டுவிட்டர் தளத்தில், 'மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
- 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என மாணவி கேள்வி
- எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் பெறவேண்டும்? என அதிகாரி எதிர் கேள்வி கேட்டார்
பாட்னா:
பிகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு, பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கலந்துரையாடலின்போது, குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என அந்த மாணவி கேள்வி எழுப்பினார். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக தலைவரான ஹர்ஜோத் கவுர் பாம்ரா, பதில் அளிக்கையில், கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிகள் மத்தியில் என்ன பேசுகிறோம் என்றுகூட தெரியாமல் முகம்சுளிக்க வைக்கும் வகையில் பேசினார்.
'நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்டும் தரலாம் என்று சொல்வீர்கள். அதற்குப் பிறகு, ஏன் சில அழகான ஷூக்கள் தரக்கூடாது? என்பீர்கள். கடைசியில் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்' என ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது குறுக்கிட்ட மாணவி, மக்கள் போடும் ஓட்டுகள்தானே அரசாங்கத்தை உருவாக்குகின்றன என்று கேட்க, அதற்கும் குதர்க்கமாக பதில் சொன்ன அந்த அதிகாரி, "இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியானால் ஓட்டு போடாதீர்கள். பாகிஸ்தான் போன்று மாறுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் ஓட்டு போடுகிறீர்களா?' என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது கருத்தை திசைதிருப்பும் வகையில் பேச்சை மாற்றினார். 'எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் பெறவேண்டும்? இந்த சிந்தனையே தவறானது. உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்' என கூறுகிறார் பாம்ரா.
இந்த கருத்தரங்கில் பெரும்பாலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்தரங்கில் நடந்த உரையாடல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. எனினும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வதாக பாம்ரா குற்றம்சாட்டி உள்ளார்.
'பெண்கள் உரிமைகள் மற்றும் அதிகாரம் பெறுவதற்காக அதிகமாக குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருத்தி. ஒவ்வொரு மன்றத்திலும் தவறு செய்ததற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர், ஒவ்வொரு மன்றத்திலும் தோற்றுவிட்டதால், இப்போது எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்' என்கிறார் பாம்ரா.
- இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
- மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது.
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.
இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் மருத்துவமனையில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டது.
எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதனை சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் விசாரித்தார்.
பின்னர், வரும் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
- ஆயுதப் படை வீரர்களின் தியாகத்தை நாடு என்றும் மறக்காது.
ஃபதேபூர்:
பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆயுதப் படை வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நாடு என்றும் மறக்காது.
எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு,ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன்.
பாட்னா:
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் அவர் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி குறித்து வியூகம் வகுத்து கொடுக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தொடர்பாக இன்று பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றுவதை நிறுத்திவிட்டேன். மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டு உள்ளேன். பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத், மத்தியபிரதேசம், அல்லது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகாரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
- மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.






