என் மலர்
ஆந்திர பிரதேசம்
- தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர்.
- தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவசமாக லட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50-க்கு சிறிய வகை லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
லட்டு தயார் செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனை செய்யப்படும் கவுன்டர்களுக்கு லட்டு எடுத்து செல்லும் பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி இருந்தது.
அதன்படி தினமும் ஒரு ஷிப்டுக்கு 30 ஊழியர்கள் வீதம் 3 ஷிப்ட் முறையில் 90 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 10 முதல் 12 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் லட்டு தயார் செய்யும் இடத்தில் இருந்து கவுன்டர்களுக்கு லட்டுக்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
லட்டுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்டர்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையான அளவு லட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீ வாரி சேவா பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை லட்டு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு லட்டு கொண்டு செல்லும் முறை சரிவர தெரியாததால் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 67,486 பேர் தரிசனம் செய்தனர். 36,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
- பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டம், அனந்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 24 பயணிகளுடன் தனியார் பஸ் அரக்கு என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்தது.
மலைப்பாதையில் பஸ் வளைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
இந்த நிலையில் பஸ் மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சிலிருந்து கீழே இறங்கினர். அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து பயணிகள் விஜயநகரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அனந்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.
- பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திங்கட்கிழமை வரை காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் இன்னும் தரிசனம் கிடைக்காமல் இன்று வரை தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசனத்துக்கு டோக்கன்கள் பெறாதவா்கள் 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அங்கு டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,831 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,443 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
- குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
- நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.
பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.
காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.
இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
- பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார்.
- தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பின்னி வாரி வீதியை சேர்ந்தவர் கன்வர் சிங். இவர் ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா சிங். தம்பதியின் 2-வது மகன் சந்தீப் (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கன்வர் சிங் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்து பிள்ளைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டுகளை வாங்கி வந்தார்.
நேற்று முன் தினம் காலை பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபோது கீதா சிங் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பினார்.
பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார். அப்போது திடீரென சாக்லேட் அவனது தொண்டைக்குள் சிக்கியது.
இதனால் சந்தீப்புக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகிகள் சந்தீப்பை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அதற்குள் சந்தீப்பை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாரங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று (திங்ட்கிழமை) காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி காலை 11.40 மணியில் இருந்து பகல் 11.50 மணி வரை நடக்கிறது.
அதில் லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சானூரில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தை சிரமமின்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் பக்தர்கள் ஓய்வெடுத்ததுப் போக மீதி உள்ள பக்தர்களுக்கு திருச்சானூர் அய்யப்பன் கோவில், ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, புடி ரோடு ஆகிய இடங்களிலும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தேநீர், காபி ஆகியவை வழங்கப்படும். பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரம் அனுப்பி வைக்கப்படும். பட்டு வஸ்திர ஊர்வலம் பாதுகாப்பாக நடத்தப்படும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் வெளியே புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடப்பதால், அதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் ஷெட்டுகளில் இருந்து பக்தர்கள் புஷ்கரணிக்குச் செல்ல சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று புனித நீராட வசதியாக உள்ளே செல்லும் வழி, நீராடி விட்டு புஷ்கரணியில் இருந்து வெளியே போகும் வழி அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 500 போலீசாரும், இதுதவிர திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேவஸ்தான ஊழியர்களுடன் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு சேவைகளை செய்வார்கள். பக்தர்கள் அனைவரும் பொறுமை காத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.
- நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரெயில்வே கோடுர் பகுதியை சேர்ந்தவர் அரி நாராயணா. இவரது மகன் நவதித் (வயது 18).
இவர் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நவதித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகம் இது குறித்து விடுதி வார்டன் காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
- சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.
இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாதயாத்திரை செல்லும் நாரா லோகேஷ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
- பாணியை சந்திரபாபு நாயுடுவின் மகன் பின்பற்றி ஆட்சியைப் பிடிக்க பாதயாத்திரை செல்ல உள்ளதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில எதிர்க் கட்சியாக இருந்து வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் ஆளுங்கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். காய்கறிகள் மளிகை பொருட்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். இவரது பேச்சுக்கு முதலமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ஆட்சியில் நடைபெற்ற வரும் அவலங்கள் குறித்து பொது மக்களிடம் கொண்டு செல்லவும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தவும் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன்படி வரும் ஜனவரி மாதம் 27-ந் தேதி குப்பத்தில் பாதயாத்திரை தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் 400 நாட்கள் 4 ஆயிரம் கி.மீ செல்லும் அவர் மாநில எல்லையான இச்சாபுரத்தில் பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.
பாதயாத்திரை செல்லும் நாரா லோகேஷ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாய் மற்றும் சகோதரி ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று ஆதரவு திரட்டியதால் அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியை சந்திரபாபு நாயுடுவின் மகன் பின்பற்றி ஆட்சியைப் பிடிக்க பாதயாத்திரை செல்ல உள்ளதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
- பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
- ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார்.
- கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரை சேர்ந்தவர் முனிராஜா (வயது 22). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (19). தம்பதிக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார்.
இன்று அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மகன் உயிருடன் இருந்தால்தானே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என ஆத்திரமடைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார்.
முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட சுவாதி அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார்.
இதையடுத்து டாக்டர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர்.
- இதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
- 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
ஸ்ரீஹரிகோட்டா :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று (சனிக்கிழமை) பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன.
ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






