என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • விரக்தி அடைந்த அனிப் கான் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் தம்பல்லப்பள்ளி மண்டலம், பட்டன்ரெட்டியை சேர்ந்தவர் அனிப்கான் (வயது 39) சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார்.

    விசா காலாவதியான பிறகும் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருந்தார். இவர் ரியாத் நகரில் தெரிந்த நபர் ஒருவரின் பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

    அதோடு சரியான வேலை இல்லாததால் தாய்லாந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்தார். அனிப் கானுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் லாட்டரியில் பணம் விழவில்லை. வருமானத்திற்கு உரிய வேலையும் இல்லாமல் லாட்டரியிலும் பணம் விழாததால் அனிப் கானிடம் இருந்த பணம் முழுவதும் செலவானது.

    இதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த அனிப் கான் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனிப் கானின் பிணத்தை மீட்டனர்.

    தனது பெயருக்கு பதிலாக தெரிந்த நபரின் பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததால், அந்த நபர் இறந்துவிட்டதாக போலீசார் கருதினர். விசாரணையில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனால் இறந்தவரின் முகவரியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டில் ஒரு இலக்கம் தவறாக இருந்ததால், முகவரியை அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. செல்போனில் இருந்த எண்களை தொடர்பு கொண்டு பேசியபோது, அனிப் கான் சகோதரர் என்று ஒருவர் பேசினார்.

    7 மாதங்களுக்குப் பிறகு இறந்தவரின் முகவரி தெரிந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் அனிப் கானின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

    • துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆக உள்ளார்.

    இவரது உதவியாளராக இருப்பவர் பாரத் குமார் யாதவ். இவர் கடப்பா மாவட்டத்தில் சூதாட்டம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் பணம் வசூல் செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமண செலவுக்காகபாரத் குமாரிடம் பணம் வாங்கி உள்ளார். திலிப் குமார் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு திலிப் குமார் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி தருவது தொடர்பாக அதிரடி மகபூப் பாஷா என்பவர் முன்னிலையில் திலீப் குமாரும் பாரத்குமாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பாரத் குமார் வீட்டிற்கு சென்று துப்பாக்கி எடுத்து வந்து திலீப்குமார் மற்றும் மகபூப் பாஷாவை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் திலீப் குமார் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    மகபூப் பாஷாவுக்கு கை மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாரத் குமார் யாதவை கைது செய்தனர்.

    பாரத் குமார் அவினாஷ் எம்.பி யின் உதவியாளராக இருந்ததால் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது லைசன்ஸ் வாங்கிக் கொடுத்தது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர்.
    • குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டி பள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா.

    இவரது உறவினர்கள் வேலூர் மாவட்டம் அரவட்லா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், அவரது மகள் பவ்யா (16), மணிமேகலை மற்றும் அவரது மகள் மவுனிகா (8), கதிரப்பா மகள் கவுதமி (13) மற்றும் உறவினர்கள் நேற்று காலை பைரெட்டி பள்ளி அருகே உள்ள நிகி தேவாடி காலபைரவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    தற்போது கால பைரவர் கோவில் அருகே உள்ள காட்டேரம்மா கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகில் குளம் ஒன்று உள்ளது. கதிரப்பா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமிகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்த சிலர் குளத்தில் இறங்கி சிறுமிகளை தேடிய போது நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகளின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.

    இது குறித்து பைரெட்டி பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.
    • பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 15-ந்தேதி வரை கோடை விடுமுறை வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி, சுற்றுலா தரிசன ஒதுக்கீடு, உற்சவள் சேவைகள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வி.ஐ.பி.கள் இந்த மூன்று மாதங்களில் பரிந்துரை கடிதங்களை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் சாதாரணப் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவான தரிசனம் பெறலாம்.

    அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் திவ்ய தரிசன டோக்கன்கள் வினியோகம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் தொடங்கப்படும்.

    அதில், அலிபிரி நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்களும் வழங்கப்படும்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்கக்கூடிய 7 ஆயிரத்து 500 விடுதி அறைகள் உள்ளன. அவற்றில் 85 சதவீத அறைகள் பொதுப் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறைகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2, 4 (பி.ஏ.சி), வைகுண்டம் காம்ப்ளக்ஸ், தரிசன கவுண்ட்டர்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

    அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஜலப்பிரசாத கேந்திரங்கள் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். திருமலை முழுவதும் தூய்மையாக வைக்கப்படும்.

    கல்யாணக் கட்டாக்கள் மற்றும் மினி கல்யாணக் கட்டாக்கள் 24 மணி நேரமும் செயல்படும். கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.

    பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டுகள் கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்படும். கோடைக் காலத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு சீராக தரிசன நடைமுறையை உறுதி செய்ய மேற்பார்வைப் பணிகளுக்காக மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி, போக்குவரத்துப் பிரச்சினை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வார்கள். பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது கோவில் துணை அதிகாரிகள் ரமேஷ்பாபு, ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.
    • ஒரே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்க்கான ரூ 300 டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 6 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    ஒரே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது. தொடர்ந்து முன்பதிவு செய்துகொண்டே இருந்தனர்.

    தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்திற்குள் 6 லட்சம் டிக்கட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

    • ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர்.
    • குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது.

    திருப்பதி:

    வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகைகளால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உலகம் முழுவதும் சுத்தமான காற்று கிடைப்பது அரிய பொருளாக மாறி வருகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிக மாசு ஏற்படுகிறது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களின் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. காற்று மாசுபாடு குறைந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் மேம்பட்டுள்ளது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது. ஆஸ்துமா ஆபத்து அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

    உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர். குழந்தை பருவத்தில் அதிக அளவு காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு முதிர்ந்த வயதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    2002-04-ம் ஆண்டை விட 2016-19 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நல்ல காற்றின் தரம் உள்ள பகுதிகளில் இளைஞர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மாசு பாதிப்பை சிறிதளவாவது குறைக்க முடிந்தாலும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    • ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.
    • 297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் தொடர்புடைய கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டு வஸ்திரங்கள் முதல் ஏராளமான பொருட்கள் வழங்குகின்றனர்.

    இந்த வஸ்திரங்கள் வரும் ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.

    இதில் ஆர்ட் சில்க், பாலியஸ்டர், வேட்டிகள், நைலான், நைலக்ஸ் புடவைகள், ஆப் புடவைகள், துணி பிட்டுகள், ஜாக்கெட் துண்டுகள், லுங்கிகள், சால்வை, பெட் ஷீட்கள், தலையணை கவர்கள், பஞ்சாபி ஆடை பொருட்கள், கம்பளங்கள், போர்வைகள், திரைச்சீலைகள், கர்ப்பக்கிரஹ துணிகள், ஸ்ரீவாரி குடைகள் ஏலம் விட பட உள்ளது.

    இது குறித்த விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் அலுவலகத்தை 0877-2264429 அல்லது திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

    https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்குவாரியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், வினுகொண்டா மண்டலம், திம்மய்ய பாலம் பகுதியில் வெங்கட்ராவ் என்பவருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி உள்ளது.

    இந்த கல்குவாரியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கல்குவாரியை வெடி வைத்து தகர்ப்பதற்காக தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பாறையில் ஏற்பட்டிருந்த வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் பலராம் (வயது 31) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த டாங்கோ (19), சாமு, மாங்குடு ஆகிய 3 பேரை தொழிலாளர்கள் மீட்டு வெனுகொண்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாங்கோ பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெனுகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காரின் நம்பர் பிளேட்டை மாற்றி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    • கொள்ளை கும்பலிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    சித்தூர் மாவட்டத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    கடந்த டிசம்பர் மாதம் எஸ்.ஆர்.புரத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் நிறுத்தி இருந்த காரை திருடிக் கொண்டு சென்றனர். காரின் நம்பர் பிளேட்டை மாற்றி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலமனேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது காரில் இருந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர். கொள்ளை கும்பலை பிடிக்க சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த் ரெட்டி உத்தரவிட்டார்.

    பலமனேரு டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 1.80 கிலோ தங்க நகைகள், 6.50 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 3 கார்கள், 6 பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் (35), அவரது மைத்துனர் சுதாகர் (33), அரவிந்த் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்திர பிரகாஷ் (33), திருவண்ணாமலையை சேர்ந்த கலைச்செல்வன் (37), சிவன் (45), குப்பத்தை சேர்ந்த சின்னசாமி (57) என தெரிய வந்தது.

    சிவன் மீது 5 கொலை வழக்குகளும், மற்றவர்களின் மீது தமிழகத்தில் 20 முதல் 50 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சித்தூர் மாவட்டத்தில் மற்றும் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைர நகைகளை திருடி உள்ளனர். அதனை விற்ற பணத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் நிலங்களை வாங்கி உள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஈரோடு போலீசில் ஒப்படைத்தனர்.

    கொள்ளை கும்பலிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • ஏப்ரல் மாதத்திற்காக டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
    • பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கை கோள்கள் மட்டுமல்லாமல், வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

    இஸ்ரோ நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்.-மார்க்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் மார்க் 3 ராக்கெட் 640 டன் எடை மற்றும் 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட் இதுவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 இணைய சேவை செயற்கை கோள்களை விண்ணில் ஏவ அந்த நிறுவனம், இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் சுமார் ரூ. 1000 கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

    2-வது கட்டமாக மீதமுள்ள 36 செயற்கை கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன. தீப்பிழப்புடன் கரும்புகையை கக்கியபடி 36 இணைய தள சேவை செயற்கை கோள்களை சுமந்துகொண்டு எல்.வி.எம்.-மார்க்3 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த செயற்கைகோள்கள் மொத்தம் 5,805 கிலோ எடை கொண்டவை. ஒவ்வொரு செயற்கைகோளும் 150 கிலோ எடை கொண்டது.

    பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் தடையில்லா பிராட்பேண்ட் இணைய தள சேவையை வழங்கும்.

    ×