search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி: நடந்து வரும் பக்தர்களுக்கு சோதனை முறையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் திவ்ய தரிசன டோக்கன்கள்
    X

    திருப்பதி: நடந்து வரும் பக்தர்களுக்கு சோதனை முறையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் திவ்ய தரிசன டோக்கன்கள்

    • கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.
    • பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 15-ந்தேதி வரை கோடை விடுமுறை வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி, சுற்றுலா தரிசன ஒதுக்கீடு, உற்சவள் சேவைகள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வி.ஐ.பி.கள் இந்த மூன்று மாதங்களில் பரிந்துரை கடிதங்களை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் சாதாரணப் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவான தரிசனம் பெறலாம்.

    அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் திவ்ய தரிசன டோக்கன்கள் வினியோகம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் தொடங்கப்படும்.

    அதில், அலிபிரி நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு 5 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்களும் வழங்கப்படும்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்கக்கூடிய 7 ஆயிரத்து 500 விடுதி அறைகள் உள்ளன. அவற்றில் 85 சதவீத அறைகள் பொதுப் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறைகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2, 4 (பி.ஏ.சி), வைகுண்டம் காம்ப்ளக்ஸ், தரிசன கவுண்ட்டர்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

    அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஜலப்பிரசாத கேந்திரங்கள் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். திருமலை முழுவதும் தூய்மையாக வைக்கப்படும்.

    கல்யாணக் கட்டாக்கள் மற்றும் மினி கல்யாணக் கட்டாக்கள் 24 மணி நேரமும் செயல்படும். கோடை வெயிலில் பக்தர்கள் கால்கள் சுடாத வகையில் தரையில் கூல் பெயிண்ட் அடிக்கப்படும்.

    பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டுகள் கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்படும். கோடைக் காலத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு சீராக தரிசன நடைமுறையை உறுதி செய்ய மேற்பார்வைப் பணிகளுக்காக மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி, போக்குவரத்துப் பிரச்சினை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வார்கள். பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் சேவை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது கோவில் துணை அதிகாரிகள் ரமேஷ்பாபு, ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×