என் மலர்
இந்தியா

கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி- சாமி கும்பிட சென்றபோது பரிதாபம்
- 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர்.
- குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டி பள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா.
இவரது உறவினர்கள் வேலூர் மாவட்டம் அரவட்லா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், அவரது மகள் பவ்யா (16), மணிமேகலை மற்றும் அவரது மகள் மவுனிகா (8), கதிரப்பா மகள் கவுதமி (13) மற்றும் உறவினர்கள் நேற்று காலை பைரெட்டி பள்ளி அருகே உள்ள நிகி தேவாடி காலபைரவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
தற்போது கால பைரவர் கோவில் அருகே உள்ள காட்டேரம்மா கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகில் குளம் ஒன்று உள்ளது. கதிரப்பா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.
அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமிகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்த சிலர் குளத்தில் இறங்கி சிறுமிகளை தேடிய போது நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகளின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.
இது குறித்து பைரெட்டி பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.