என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பிணி பெண்கள் வெயில் காலத்தில் மிகவும் சோர்வடைந்து போவார்கள். காரணம் வெயில் காலத்தில் வியர்வையினால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும்.
    கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக வாந்தி அதிகமாக இருக்கும். தண்ணீர் குடித்தால் கூட சிலருக்கு வாந்தி வரும். குமட்டல் இருந்து கொண்டே இருக்கலாம். சரியாக சாப்பிடப் பிடிக்காது. இதனால் ஆகாரம் உட்கொள்வது குறைந்து போகும். இந்த சமயத்தில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதிலும் கோடையில் இன்னும் சிரமம். வெயிலின் தாக்கம் காரணமாக மிகவும் சோர்வடைந்து போவார்கள். காரணம் வெயில் காலத்தில் வியர்வையினால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும்.

    வெயில் காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. தண்ணீர் தாகம் அதிகம் இருந்தாலும் குமட்டல், வாய்க்கசப்பின் காரணமாக அவர்களுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காது. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    இளநீர், பழச்சாறுகள் நிறைய குடிக்க வேண்டும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடலாம். பழச்சாறுகள் எனும்போது சிலர் குளிர்பானங்கள் வாங்கிக் குடிப்பார்கள். அது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதில் சர்க்கரை அதிகம். இரசாயனப் பொருட்களும் கலந்து இருக்கும். அதனால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்க வேண்டும். வீட்டில் தயாரித்துக் குடிப்பது இன்னும் நல்லது.



    எலுமிச்சம் பழ ஜூஸ் வாய்க்கசப்பு இருப்பவர்களுக்கு இதமாக இருக்கும். எலுமிச்சைச் சாறில் சர்க்கரையுடன், உப்பும் கலந்து அருந்துவது நல்லது. கோடையில் கிடைக்கிறது என்று மாம்பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மாம்பழம் வயிற்றுவலி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஏற்கெனவே நீர்ச்சத்து உடலில் குறைவாக இருக்கும் நேரத்தில் இந்தப் பிரச்சனையும் சேர்ந்து கொண்டால் சிரமப்பட வேண்டியதிருக்கும்.

    வெயில் காலத்தில் ஏற்படும் மற்றொரு பிரச்சினை நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று (Urinary tract infection). இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்கள் தான் குழந்தையின் கண், மூக்கு, இதயம் என எல்லா உடல் உறுப்புகள் வளரும் காலம். அதனால் இந்த சமயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

    சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று தடுக்க வழிகள் :

    1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
    2. எலுமிச்சம் சாற்றில் இருக்கும் அமிலத்திற்குக் கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் எலுமிச்சைச்சாறு குடிப்பது மிக நல்லது.
    3. வேலைக்குப் போகிற பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. வீட்டிலிருக்கும் போதாவது அதிகபட்சமான தண்ணீர் குடிப்பது நல்லது.
    கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்சனைகளில் மூலமும் ஒன்று.
    தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ஒரு கருவை உருவாக்கிப் பிரசவிக்கும் அந்த இயக்கத்தின்போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். எனவே கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்சனைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம்.

    கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும். இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.



    ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு ரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூல நோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.

    எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும்.
    எவ்வளவு வேலைகள் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
    வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே தரப்பட்டுள்ள ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    1. ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ (BMI) அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும்போது, இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உணவுப்பட்டியலைத் தயாரித்து சாப்பிட வேண்டும்.

    2. பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். நடுத்தர வயதுப் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடைகூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    3. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



    4. நடுத்தர வயதுப் பெண்கள், தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், அழகு, ஆரோக்கியம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலே அழகுதான். சரியான வயதில் உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், அழகாகவும் இருக்கலாம்.

    5. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு. இதை `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்கிறார்கள். இதன் காரணமாக முதுகுவலி, எலும்புகள் உடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.

    6. இரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் (Harmone) குறைபாடுகள் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துகொள்ளவேண்டும்.

    7. காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.

    8. 30 வயதைக் கடக்கும் பெண்களின் சரும நிறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். வயது அதிகமாக அதிகமாக தோலில் எண்ணெய்ச்சுரப்பு குறைந்துகொண்டே வரும். அதனால், தோல் வறண்டு போவது, சுருங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கண்களுக்கு அருகிலும், முகத்திலும் (Crow's Feet Area) சுருக்கங்கள் ஏற்படும். தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகிவிடும். வருடத்துக்கு ஒரு முறையாவது தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்துகொள்வது நல்லது.
    பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்துக்கு உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், உணவிலும் கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பலருக்கு முதுகு எலும்பில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடு. தினமும் சேர்க்கப்படும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்தாலே இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    தினமும் ஒரு டம்ளர் பால் மற்றும் உணவில் தயிர் சேர்க்க வேண்டும். உணவில் சோயா பீன்ஸ், ஆரஞ்சு, வெள்ளரிக்காய், பாதாம் போன்றவைகளை தினம் ஒன்றாக சேர்க்க வேண்டும். மேலும், முடிந்த அளவுக்கு அடிக்கடி சீஸ் சேர்ப்பது நல்லது. தினமும் காலை நேரங்களில் மிதமான வெயிலில் நடப்பதும் நல்லது.

    உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது. காபி, டீ போன்ற பானங்களை அதிகமாகக் குடிப்பதால், உடலில் உள்ள கால்சியம் குறையும். குளிர்பானங்கள், கால்சியம் சத்தை அழிக்கும் தன்மைகொண்டவை.

    பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் துரித உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனி ஆகியவை எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகின்றன.



    பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்துக்கு உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், உணவிலும் கவனம் செலுத்தவேண்டும். எலும்பை வலுப்படுத்த, கால்சியத்தோடு புரதச்சத்தும் தேவைப்படுகிறது. அதனால் புரதம், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பாலாடைக் கட்டி, பால் பொருட்கள், கீரை வகைகள், காய்கறிகள், மீன், முட்டை, கோழி, ராகி, கேழ்வரகு, கொள்ளு, பருப்பு வகைகள், பாதாம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகியவற்றில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைவாக உள்ளன. இவற்றில் ஏதேனும் சிலவற்றையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

    பெண்களுக்கு 40 வயது தாண்டியதும் மெனோபாஸ் வந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மூட்டுவலி, முதுகுவலிப் பிரச்சனைகள் வருகின்றன. அந்தச் சமயத்தில், கால்சியம் அதிகம் உள்ள நாட்டுக்கோழி, மீன், இறால், முட்டை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுகளைச் சேர்த்துகொள்ள வேண்டும்.

    உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்!
    பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குறைந்தது ஒரு குழந்தையை பெற்றிருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்களில், அதிக அளவு மன அழுத்தம் தரும் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைவு, விந்தணு ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

    பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.

    கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.

    ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துகொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.

    பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.
    பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

    சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் ஆண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏன் உடல் எடை கூடுகிறது ஏன் தெரியுமா? ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

    இதனால் சும்மா வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும். அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

    அப்படி எந்த ஹார்மோன்கள் உங்கள் உடல் எடை கூட காரணமாகும் என தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.

    பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைதான் ஹைபோதைராய்டிஸம். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை உண்டாகும். தைராய்டு குறைவினால் வளர்சிதை மாற்றம் குறைந்து கொழுப்பு செல்கள் திசுக்களிலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. எதிர்மாறாக தைராய்டு அதிகரித்தால் உடல் எடை மிகவும் குறைந்துவிடும்.

    ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பாலின ஹார்மோன். இது சுரக்கும் வரை பல ஆபத்தான நோய்களிலிருந்து பெண்களை காப்பாற்றும். ஆனால் மெனோபாஸுக்கு பிறகு இது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கலோரிகளை கொழுப்பாக மாறி உடல் பருமனை உண்டாக்கிவிடும்.



    மெனோபாஸ் சமயத்தில் இந்த ஹார்மோனும் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.

    சில பெண்கள் PCOS எனப்படும் கருப்பை நீர்கட்டி பாதிப்பு இருக்கும். அதாவது கருப்பையில் நிறைய நீர்கட்டிகள் உருவாகி, மாதவிலக்கை சீரற்றதாக்கிவிடும். இதனால் உடல் பருமன், முகத்தில் நிறைய முடி ஆகியவை உண்டாகும். இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் அதிகரிப்பதால்தான். இதனால் ஹார்மோன் சீராக இல்லாமல் உடல் பருமனை தந்துவிடும்.

    இன்சுலின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை ஒழுங்குபடுத்த தேவையான ஹார்மோன். அது குறையும்போது அதிக குளுகோஸ் அளவு அதிகரித்து கொழுப்பாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும்.

    கார்டிசால் அதிகரிக்கும்போது பசி அதிகரிக்கும். தூக்கமின்மையும் உண்டாகும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டது. இதற்கு கார்டிசால் ஹார்மோன் அதிகரிப்பதும் காரணமாகும்.
    பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், சில நோய்கள் பெண்களை மட்டுமே தாக்குகின்றன.
    இன்று (மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை) உலக சிறுநீரக தினம்.

    நம் உடம்பை ஒரு குடும்பமாக கருதினால், அனைத்து உறுப்புகளுக்கும் அம்மா இந்த சிறுநீரகம்தான். அம்மாவுக்குரிய வேறு பல குணாதிசயங்களும் சிறுநீரகங்களுக்கு உண்டு. சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்ல; சிறுநீரகங்களின் சீரிய பணிகள் ரத்த அழுத்தத்தை சமச்சீராக பராமரிப்பது, உடம்பில் தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றையும் சமச்சீராக வைக்க உதவுவதும்தான்.

    ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மூலக்காரணமான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்வதும், மனிதனின் எலும்பு வட்டை ஆரோக்கியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள்தான் என்பது ஆச்சரியமான உண்மை. ஏனெனில் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊக்குவிக்கப்பட்ட வைட்டமின் ‘டி’ சிறுநீரகத்தில் தான் உருவாகிறது.

    உடம்பின் கார, அமில அளவுகளை ரத்தத்திலும், உடல் நீரிலும் சரியான விகிதத்தில் வைத்து பராமரிக்கும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றன. நம் உடம்புக்கு தேவையானதை சேமித்தும், தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணியையும் மேற்கொள்கின்றன. இன்னும் ஏராளமான பணிகளை சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன. ஒன்றுக்கு இரண்டாக சிறுநீரகங்கள் இருப்பதால், ஒன்று பழுதடைந்தால் கூட அதன் வேலையையும் சேர்த்து இன்னொன்று செய்துகொண்டே இருக்கும்.

    சிறுநீரக நோய்கள் ஆண்களை விட பெண்களை தான் அதிகளவு தாக்குகின்றன. பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், சில நோய்கள் பெண்களை மட்டுமே தாக்குகின்றன. அதில் முக்கியமானது சிறுநீர் பாதை தொற்று (யூரினரி இன்பெக்‌ஷன்) நோய் ஆகும். மனமான புதிதில் புதுமணப் பெண்கள் மிகச்சாதாரணமாக இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.



    இதற்கு முதன்மையான காரணம் என்ன தெரியுமா? பெண்ணின் ரகசிய பகுதி ஒரு மெல்லிய சவ்வு போன்ற திரையால் மூடப்பட்டு இருக்கும். இந்த கன்னி சவ்வு எனப்படும் மெல்லிய திரை உடலுறவுவின்போது கிழிக்கப்படும். இதனால், அருகில் உள்ள சிறுநீர் பாதை வழியாக நோய் கிருமிகள் சிறுநீர் பையினுள் நுழைந்துவிடும். அவை அங்கு வளர்ந்து பெருகி வருவதுதான் இந்த நோய்க்கு காரணம்.

    இதுதவிர கருத்தடைக்காக ஜெல்லி, கிரீம்கள், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவோருக்கும் ரொம்ப எளிதாக தொற்று ஏற்படும். முன்னதாக இயற்கையாக போர் வீரர்களாக செயல்படும் நன்மை தரும் பாக்டீரியாக்களை கொன்று அழித்துவிட்டுதான் நோய் கிருமிகள் வளர்கின்றன. மேற்கண்ட உபகரணங்களை பயன்படுத்தும்போது நன்மை தரும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.

    சிறுநீர் பாதை தொற்று வருவதை எப்படி கண்டுபிடிப்பது? என்றால், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, நீர் குத்தல், சிறுநீர் நிறம் மாறி பால் போன்றோ அல்லது சுண்ணாம்பு தண்ணீர் போன்றோ வருதல், சிறுநீரில் ரத்தம் வருதல், சிறுநீரில் அதிகமான துர்நாற்றம் வருதல், குளிர் ஜூரம், முதுகுவலி, அடிவயிற்றில் வலி வருதல் போன்றவற்றில் எது ஏற்பட்டாலும், அது சிறுநீர் பாதை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர் கல்ச்சர் எனும் சிறப்பு சோதனையும் தேவை.

    பள்ளிக்கு செல்லும் இளம்பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் மகளிர், நீரழிவு நோய் கண்ட மகளிர், கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் அனைவருக்குமே சிறுநீர் பாதை தொற்று வரும் வாய்ப்பு ஆண்களை விட அதிகம். இளம்பெண்களுக்கு வரும் சமூக பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இயற்கையான உடல் உபாதைகள் மறுபக்கம். மாதவிடாய், பிரசவம், அபார்ஷன் போன்றவை காரணங்களாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்.



    போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது, மாதவிலக்கின்போது போதிய ஆகாரம் இல்லாமல் இருப்பது, குடும்ப உறவுக்கு பின்னர் பிறப்புறுப்பை தண்ணீர் விட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவையும் சிறுநீர் தொற்று ஏற்பட காரணங்கள் ஆகும். பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொதுஇடங்களில் சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் போனாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.

    ஆண்களுக்கு சிறு வயதிலும், வயதான பிறகும் சிறுநீர் பாதை தொற்று நோய் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு அடிக்கடி வரும் ஜலதோஷம் போல இந்நோய் ஏற்படும். பெண்களுக்கு பேறுகாலத்தின் போது வரும் சிறுநீர் பாதை தொற்றை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் கர்ப்ப காலங்களில் வரும் நீர்தொற்று பல சமயங்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வரும். இது அடிக்கடி வந்தால் கருக்கலைதல் (அபார்ஷன்), குறைப்பிரசவம், ரத்த சோகை நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவை கூட வரலாம்.

    மாதவிலக்கு நின்று 40-க்கும் மேல் மெனோபாஸ் ஆனவர்களுக்கும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இந்த தொற்று வரும். பெண் உறுப்பு பகுதியில் வழக்கமாக சுரக்கும் பசையான திரவம் சுரக்காததால் நீர் எரிச்சலம் வரும். இதை சிறுநீர் பாதை தொற்று என தவறாக நினைத்துக்கொண்டு மருந்து கடைகளில் ஆண்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது. இதற்காக உள்ள பிரத்தியேக ஹார்மோன் கிரீம்களை பெண்ணின் அந்தரங்க பாகங்களில் பூசுவதன் மூலமே இதனை சரிசெய்யலாம். பொதுவாக சிறுநீர் பாதை தொற்று நோயை அலட்சியம் செய்தால் அது விபரீதமாக நிரந்தர சிறுநீர் செயலிழப்பில் கொண்டு போய்விட்டுவிடும்.

    இதை முன்கூட்டியே தடுக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தாகம் தீரும் வரை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சுமார் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இதயம் பலவீனமானவர்கள் ஒரு லிட்டர் மட்டுமே குடிக்க வேண்டும். சுயமருந்துகள், வலி நிவாரணிகள், பெயர் தெரியாத நாட்டு மருந்துகள் என எதையும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். சைவ உணவுகள் நல்லது. அளவான அசைவம் நல்லது. அனைவரும் உணவில் உப்பின் அளவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு நல்லது.

    பேராசிரியர் டாக்டர் சவுந்தரராஜன், சிறுநீரக மருத்துவ நிபுணர்
    பெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்களில் வெள்ளைப்படுவதும் ஒன்று. இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
    பெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்கள் பல உண்டு. அவைகளில் வெள்ளைப்படுவதும் ஒன்று. இந்த நோய் திடீரென ஒரு நாளில் தோன்றுவதல்ல. இது  பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மோசமான நோய். இதை ஆரம்பத்திலேயே இனம் கண்டு குணப்படுத்தாவிட்டால் கடைசியில் பெரும் சிக்கலான நிலைக்கு தள்ளிவிடும்.
     
    இந்த நோய் கருப்பையின் உட்பகுதி சுவரிலிருந்தோ பிறப்பு உறுப்புகளின் சதைப் பகுதிகளிலிருந்தோ வெள்ளையான சளி போன்ற பிசுபிசுப்பான திரவம்  வெளிவருவதை வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது.
     
    நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
     
    பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.
     
    ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.


     
    அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
     
    தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.
     
    சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
     
    அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
     
    அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
     
    இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே  மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
    பெண்களுக்கு 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்சனைக்குரிய விஷயம்.
    பெண்களின் உடலில், 14 நாள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாள் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்சனைக்குரிய விஷயம்.

    அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது போன்றவையும் பிரச்சனைக்குரியவையே. இந்த பிரச்சனைகளைத்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய் என்று குறிப்பிடுகிறார்கள்.

    13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறைய துவங்கும் ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது, கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதை கவனிக்காவிட்டால், பெண்களுக்கு கருத்தரிப்பதில்கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது இதன் மிக முக்கியமான அறிகுறி.பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்த பிரச்சனை உருவாகும்.

    உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம். தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு, மாதவிடாய் பிரச்சனை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும்.



    இதில், ஹைப்போஸ்தைராய்டிம் முக்கியமான ஒரு பிரச்சனை. வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய் சுழற்சி மட்டுமின்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும்.

    புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் அதை வெளிக்காட்டும். பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.

    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன்காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். அதிகமாக ஜங்க் புட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்கு காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும்.

    அலுவல் ரீதியான அழுத்தம் அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்த பிரச்சனை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.

    புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படும். இவர்கள், சரியான உணவு பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது. திடீரென உடல் எடை குறைவது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய் பிரச்சனையை ஏற்படுத்தும்.
    பெண்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு அதிக பாதிப்புகள் வரும் என்று சொல்லப்படுகிறது.
    உணவு விஷயத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. அதற்கேற்ப சாப்பிட வேண்டும். உடல் எடையைப் பராமரிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடலாம்.

    பெண்களுக்கு 35 - 40 வயதுக்கு மேல் உடலில் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அப்போது மட்டும் டயட்டில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை துரித உணவுகள், இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. சமோசா, பர்கர், பீட்சா, ஃப்ரைடு ரைஸ்,  சிக்கன் ரைஸ் போன்றவற்றைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    பொதுவான டயட் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடலமைப்பு, பார்க்கும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு முறை இருக்க வேண்டும். 20 வயதில் என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். 35 - 40 வயதுக்கு மேல் அப்படி ஆகாது. எனவே, அப்போது உணவில் கவனமாக இருக்க வேண்டும்.



    அந்தக் காலத்தில் ஆண்கள் கடினமான வேலைகளையும், பெண்கள் எளிதான வேலைகளையும் செய்துவந்தார்கள். உடல் உழைப்புக்கு ஏற்றவாறுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால், பெண்கள் அளவாகச் சாப்பிட வலியுறுத்தப்பட்டார்கள். அதேசமயம் மாதவிடாய்க் காலங்களில், ஆரோக்கியமான, அதிக அளவு உணவுகளைச்  சாப்பிட்டார்கள். ஆனால், தற்காலச் சூழலுக்கு இது பொருந்தாது. பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பார்த்துவருகிறார்கள். வயது, உயரம், எடை, செய்யும் வேலை இவற்றின் அடிப்படையில்தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

    எண்ணெயில் பொரித்த உணவுகளை, துரித உணவுகளை, பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளைக் கண்டிப்பாக அனைவருமே தவிர்க்க வேண்டும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவை  பெண்களுக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. வயது, உயரம், எடை ஆகியவை ஒரே அளவுள்ள ஆண் -பெண் இருவரையும் ஒப்பிட்டால், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

    பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற பல உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு செயல்பாட்டிலும் இருக்கும். ஹார்மோன், என்சைம் சுரப்பும்கூட ஆண்களைவிட குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் `துரித உணவுகளை உட்கொள்ளும்போது பெண்களை பல நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு’ என்று சொல்லப்படுகிறது.

    ஒரு முறை கூட மாதவிடாய் ஆகாத பருவம் ஆகாத பெண்களும் கருமுட்டை தானம் பெற்று, கணவரின் விந்தணுவை சேர்த்து கருவாக்கி, கருப்பையில் செலுத்தி தாய்மை அடையச் செய்யலாம்.
    முழு வளர்ச்சி அடையாத கர்ப்பப்பை, சினைப்பை இல்லாமல் இருப்பது, கர்ப்பப்பையின் உள் வரி மெல்லியதாக இருப்பது, கரு முட்டையின் தரம் குறைவாக இருப்பது, கர்ப்பப்பை கட்டிகள் போன்ற காரணங்களால் குழந்தையின்மை ஏற்படுகிறது. 20 வயதுக்கு மேல் உள்ள ஒரு சில பெண்களுக்கு கருப்பை வளராமல் இருக்கும்.

    கரு முட்டை, கர்ப்பப்பை சிறியதாக இருக்கும் பெண்களுக்கு சில ஹார்மோன் ஊசிகள், மாத்திரை மூலம் கருத்தரிக்க வைக்கலாம். சினைப்பை வளர்ச்சி இல்லாத பெண்கள் கரு முட்டையை தானமாக பெற்று தாய்மை அடையலாம்.

    ஒரு முறை கூட மாதவிடாய் ஆகாத பருவம் ஆகாத பெண்களும் கருமுட்டை தானம் பெற்று, கணவரின் விந்தணுவை சேர்த்து கருவாக்கி, கருப்பையில் செலுத்தி தாய்மை அடையச் செய்யலாம். கரு முட்டையின் தரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும் சினை முட்டைகள், அவர்களின் ரத்த தட்டணுக்களை எடுத்து கருப்பைக்குள் செலுத்தி கருமுட்டையின் தரத்தை கூட்டலாம்.

    25-30 வயது உள்ள பெண்களுக்கு புதிதாக வந்துள்ள மருந்தினை 6 மாதம் கொடுத்து நார் திசுக்கட்டிகளை கரைத்து குழந்தைப் பேறு அடையச் செய்யலாம். நார் திசுக் கட்டிகள் பெரியதாக உள்ள பெண்களுக்கு மருந்து கொடுத்து கட்டியின் அளவை குறைக்கலாம். இதற்கு பின் மையோ மெக்டமி (Myomectomy) என்ற அறுவை சிகிச்சையை செய்து மீதமுள்ள கட்டியை அகற்றி விடலாம்.

    மதுரை கருத்தரித்தல் மையம் பொன்னி மருத்துவமனை,
    டாக்டர் யாழினி செல்வராஜ்
    நாராயணபுரம், மதுரை.
    செல்: 94433 68627
    கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது... யாரிடமிருந்து முட்டைகளைப் பெறலாம்? கொடுப்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டை தானம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் குழந்தை தன்னுடைய ரத்தம் என சொல்லிக் கொள்வதையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு கருமுட்டை தானம் சரியான சாய்ஸ்.

    கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது... யாரிடமிருந்து முட்டைகளைப் பெறலாம்? கொடுப்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ‘‘தத்தெடுப்பதை விடவும் கருமுட்டை தானம் மூலமாக குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. கருமுட்டை தானம் மூலம் விரைவில் குழந்தை பெறவும் முடிகிறது. இதில் யாருடைய கருமுட்டை யாருக்கு வைக்கப்படுகிறது என்பதைக் கட்டாயம் சொல்வார்கள். இவர்களுடைய குணங்கள் பிடித்திருக்கிறது... அவரிடமிருந்து பெறுகிற முட்டையை வைத்தால் நன்றாக இருக்கும் என தானம் பெறுவோர் விரும்பினால், அந்த நபரை அவர்கள் அறிந்திருந்தால் அவரிடமிருந்தும் கருமுட்டையை சேகரிக்கலாம்.

    கொடுப்பதா வேண்டாமா என்பது தானம் தருபவரின் சுதந்திரம். தகுதியுள்ள பெண்ணின் கருமுட்டைகள்தான் தானமாகப் பெறப்படும். குழந்தை வேண்டும் என நினைக்கிற பெண்கள் உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள், தோழிகள் என யாரிடமும் கருமுட்டைகளைத் தானமாகப் பெறலாம்.



    வயது முதிர்ந்த பெண்ணிடமிருந்து பெறப்படும் கருமுட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. கருத்தரிக்கும் வாய்ப்பும் கரு நிலைத்திருக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும் என்பதே காரணம். பாரம்பரிய குறைபாடுள்ள குடும்பத்தில் பிறந்தவர்களது கருமுட்டைகளையும் தானமாகப் பெற முடியாது. மருத்துவ ரீதியான பக்கவிளைவுகள், மரபணு குறைபாடுகள் மற்றும் நோய்கள் உள்ளவர்களிடமிருந்தும் கருமுட்டையை தானமாகப் பெற முடியாது. கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள்ளும் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும்.

    கருமுட்டை ஸ்கேன் வழியே சேகரிக்கப்படும். கருமுட்டை உண்டாவதற்காக அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி கொடுக்கப்படும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. தானம் கொடுப்பதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படும். தானம் கொடுத்ததும் 2 மணி நேரத்தில் சகஜமாக வீட்டுக்குத் திரும்பலாம். கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்ணுக்கும் பெறுகிற பெண்ணுக்கும் சில பொருத்தங்கள் பார்ப்பார்கள். தானம் கொடுப்பவர் அதற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.

    கருமுட்டை பெறப்படும் சூழலில் ஹெபடைட்டிஸ் கிருமிகள் இருக்கின்றனவா, ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதெல்லாம் சோதிக்கப்படும். இதற்கான கட்டணங்களை கருமுட்டை தானம் தருகிறவர் கொடுக்க வேண்டாம். பெறுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்... கருமுட்டை தானம் தந்தவர் சட்டரீதியாக குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது.’’
    ×