என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்பிள்ளைகளை நம்பி வெளியேவிடுங்கள் - கண்ணகி நகர் கார்த்திகாவின் தாய்!
    X

    "பெண்பிள்ளைகளை நம்பி வெளியேவிடுங்கள்" - கண்ணகி நகர் கார்த்திகாவின் தாய்!

    • கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.
    • பெற்றோர்கள் தரும் ஊக்கத்தில்தான் பெண்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.

    கடந்த வாரம் முழுவதும் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துருவ் விக்ரமின் 'பைசன்' படம் கவனம் ஈர்த்தநிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் கபடி வீராங்கனை கார்த்திகா. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனையான கார்த்திகா யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

    கண்ணகி நகர் கார்த்திகா

    சென்னை, கண்ணகி நகரில் பிறந்தவர்தான் கபடி வீராங்கனை கார்த்திகா. தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்துவருகிறார். தாய் சரண்யா தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். வீட்டில் வறுமைநிலை என்றாலும், விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார் கார்த்திகா. தனது நண்பர்களுடன் இணைந்து கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இதில் கபடிமீது அதீத ஆர்வம் எழ, தனது 6ம் வகுப்புமுதல் பள்ளி அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.

    இதில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். கபடி விளையாடுவதற்கு கண்ணகி நகர் பகுதியில் தகுந்த மைதானம் இல்லாவிட்டாலும், வீட்டின் அருகில் இருந்த மணல் மைதானத்தில் தினமும் காலை எழுந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் கார்த்திகா. கார்த்திகாவின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில், அவரை சேர்த்துவிட்டு பயிற்சி பெற ஊக்குவித்தனர். அங்கு தனது பயிற்சி ஆசிரியர் ராஜி மூலம் நன்கு பயிற்சி பெற்ற கார்த்திகா தற்போது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும்விதமாக இந்திய கபடி அணியில் இடம்பெற்று, தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.


    கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாய்

    தங்கப்பதக்கம்

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் கபடி பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்றது. மகளிர் கபடிக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. இதில் இந்தியா 75-21 என்ற புள்ளியில் அபார வெற்றிப்பெற்றது. இதில் இந்திய மகளிர் அணியில் சிறப்பாக விளையாடிய கார்த்திகா தங்கம் வென்றார். அதுபோல ஆடவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷ் தங்கம் வென்றார். தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும் அப்போதே அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து கார்த்திகாவிற்கு பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரை சார்ட்டில் அமரவைத்து மாலை அணிவித்து, மகுடம் சூட்டி, மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    "கண்ணகி நகரை பிராண்ட் ஆக்க வேண்டும்"

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "நான் 8-வது படிக்கும்போதே கண்ணகி நகரில் கபடி விளையாட்டை தொடங்கினேன். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் நான் துணை கேப்டனாக விளையாடினேன். நான் தமிழ்நாடு திரும்பியதும் முதலமைச்சர் என்னை அழைத்து ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். கண்ணகி நகரில் போதிய வசதிகளை செய்து தருவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளனர். எனக்கு வீடு கட்டி தருவதாகவும், அரசு வேலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு இப்படியான உதவி செய்வதால் நிறைய பேர் விளையாட்டு துறைக்கு வர ஆர்வம் காட்டுவார்கள். என்னுடைய பயிற்சியாளர் (coach) எனக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தார். அவருக்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர் போல அனைவருக்கும் ஒருவர் துணை இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்" என தெரிவித்தார்.

    "பெண்களை நம்பி வெளியே அனுப்புங்கள்"

    மகளின் வெற்றி தொடர்பாக பேசிய கார்த்திகாவின் தாய், "பயிற்சியாளர் ராஜிக்கு நாங்கள் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளார். 6வது படிக்கும்போது கார்த்திகாவை கபடியில் சேர்த்துவிட்டோம். இங்கு சரியான மைதானம் இல்லை. அரசு ஒரு கபடி மைதானம் கட்டித்தரவேண்டும். பெண்குழந்தைகளை நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்கள் அதிகம் வெளியே வரவேண்டும். பெற்றோர் அவர்கள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் வைக்கும் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன்கிடைக்கும். பெற்றோர் தரும் ஊக்கத்தில்தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது". என தெரிவித்தார்.

    Next Story
    ×