என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கொலை மிரட்டல் எல்லாம் வரும் - பிரேத பரிசோதனை மருத்துவர் நிவ்யாழினி!
    X

    "கொலை மிரட்டல் எல்லாம் வரும்" - பிரேத பரிசோதனை மருத்துவர் நிவ்யாழினி!

    • பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.

    விபத்து, இரத்தம், கொலை, தற்கொலை... இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள், ஆண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனநிலையையுமே சற்று பாதிக்கும். அதிலும் சில பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்... இதுபோன்ற சம்பவங்களை கடந்துவர மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் ஆராய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுபோன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும் சூழலில், தடயவியல் பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணராக தைரியத்துடன் பணியாற்றிவரும் இளம்பெண் மருத்துவரான நிவ்யாழினி, அண்மையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

    அதில் பிரேத பரிசோதனை செய்யும் போது தாங்கள் எதிர்கொள்ளும் தயக்கங்கள், அருவருப்பு, முக சுளிப்புகள், பிரேத பரிசோதனையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், கொலையுண்டவருக்கு எதிர்தரப்பிலிருந்து வரும் கொலைமிரட்டல்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் நிவ்யாழினி. தனக்கு இதுவரை கொலைமிரட்டல்கள் எதுவும் வந்ததில்லை எனவும், ஆனால் தன்னுடன் பணியாற்றிய சிலருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை தகவலை மாற்ற சொல்லி கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொலைக்கும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள், சந்தேக மரண வழக்குகளில் அவை கொலை என எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்தார். மேலும் 8 மாத குழந்தை ஒன்றின் கொலை பற்றியும் பேசியிருந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு முன், உடல்களை எப்படி கையாள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.


    நிகழ்ச்சி ஒன்றில் நிவ்யாழினி

    பிரேத பரிசோதனை என்றால்? என்ன செய்வீர்கள்?

    தற்கொலை செய்து உயிரிழந்த உடல் ஒன்று வருகிறது என்றால், முதலில் ஃபோட்டோ எடுப்போம். அனைத்து பக்கங்களில் இருந்தும் எடுப்போம். முதலில் ஆடையுடனும், பின்னர் ஆடைகளை நீக்கிவிட்டும் அந்த புகைப்படங்களை எடுப்போம். பின்னர் கழுத்தில் மார்க் இருக்கிறது என்றால் அதனை ஆராய்வோம். உடல் உறுப்புகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஆராய்வோம். எப்படி என்றால், கழுத்திலிருந்து தொப்புளுக்கு முன்புவரை கத்தியால் கிழித்து, உறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுப்போம். பின்னர் அந்த உறுப்புகளை கழுவி, அதனை வெட்டி ஆராய்ச்சி செய்வோம். இதயம், நுரையீரல், கிட்னி என அனைத்து உறுப்புகளையும் ஆராய்வோம். பின்னர் அந்த உறுப்புகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு, உடலுக்குள் வைத்து தைத்து, உடலை முழுமையாக கொடுத்துவிடுவோம். உறுப்புகளை ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரின் இறப்பு இயற்கையானதா? கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிப்போம்.

    முதல்முதலில் நீங்கள் பார்த்த கேஸ் எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

    நான் முதலில் பார்த்த கேஸ், ஹேங்கிங்தான். முதல் அனுபவம் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதிலும், ஸ்மெல்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. வயிற்று பகுதியை ஆராயும்போது, அவர் இறுதியாக என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள, அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. அது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலல்லவா... தைரியமாக அனைத்தையும் பழகிக்கொண்டேன். ஒரு விஷயத்தை நான் இங்கு உங்களிடம் சொல்கிறேன், பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு நாங்கள் க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம். அதனால், நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.

    எப்படி இவ்வளவு தைரியம்?

    நான் ஏற்கனவே சொன்னதைப்போல ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. கொலையானவர்களின் உறவினர்கள் அழும்போது அதனை பார்க்கும்போது கவலையாக இருக்கும். முதலில் எல்லாம், யுவனின் ஒரு பாடலை கேட்டுவிட்டுதான் நான் உடல்களை பரிசோனை செய்ய அறைக்குள் செல்வேன். இப்போது நிறைய கேஸ்களை பார்த்துவிட்டேன்.

    இந்த துறைக்கு செல்ல குடும்பத்தினர் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?

    பொதுவாக எல்லாவற்றுக்குமே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதனை சரியாக செய்து நம்மை நிரூபிக்க வேண்டும். இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெண்கள் மிகவும் திறமையாக செயலாற்றுகிறார்கள். பெண்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.

    Next Story
    ×