என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.
    அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

    பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

    * ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

    * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

    * 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.
    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?
    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய ட்ரெண்ட் என்று சொல்லலாம்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    மிகச் சமீபத்திய பிளவுஸ் டிரெண்ட் என்று பட்டன் ரோ பேக் மாடலைச் சொல்லலாம். இவை பட்டு சேலைகளுக்கு அணிந்து கொள்ள சூட்டானவையாகும். இந்த பிளவுஸ்களில் க்ளோஸ் நெக் வைத்து, முதுகுப்புறம் பட்டன்களைத் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ தைக்கிறார்கள். ப்ளவுஸ் நிறத்திற்கு கான்ட்ராஸ்டாக பட்டன்களை வைப்பது இன்னும் அழகைக் கூட்டுகின்றது.

    ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்காக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆஃப் ஹோல்டர் பிளவுஸ் டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும். அம்மா, பாட்டியின் பட்டுப் புடவைகளை இதுபோன்ற பிளவுஸ்களுடன் போடும்பொழுது மிகவும் மாடர்னான தோற்றத்தையே தரும்.

    மக்காம் வேலைப்பாடுகளுடன் முக்கால் கை வரை வைத்துத் தைக்கப்படும் இவ்வகை பிளவுஸ்களையே தென்னிந்திய மணப்பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

    ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் டிசைன்களை அனைவருமே பட்டுச் சேலைகளுடன் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாடல் பிளவுஸ்கள் மறுபடியும் இன்றைய டிரெண்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    அதேபோல் ப்ரோகேட் பிளவுஸ்களை எந்தச் சேலையுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பலவித நிறங்களை ஒரே பிளவுஸில் இருப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தோ அல்லது பல சேலைகளுக்கு ஒரே பிளவுஸை அணிந்து கொள்ளவோ வாய்ப்புகளை அதிகமாக வழங்குகிறது. இவற்றின் ரிச்சான லுக்கானது அனைத்து பெண்களின் வாட்ரோப்களிலும் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

    நெட் துணிகளை பிளவுஸ்களின் கைப் பகுதிக்கு மட்டும் வைத்து தைக்க டிசைன் மாறி இப்பொழுது முதுகுப்புரம் முழுவதும் வைத்துத்தைத்து அதில் பேட்ச் வொர்க் அல்லது சிக்கி, குந்தன் வேலைப்பாடுகளுடன் தைத்து அணிவது இப்பொழுது டிரெண்ட் என்று சொல்லலாம்.

    முக்கால் கை வைத்து ஹை நெக்குடன் தைக்கப்படும் பிளவுஸ்களை டிசைனர் சேலைகளுடன் அணியும் போது அவை கூடுதல் கம்பீரத்தை தருகின்றது.

    நார்மல் ஷர்ட்டுகளின் மாடல்களில் பிளவுஸ்களை அணிந்து கொள்வது இன்றைய டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக உள்ளது.

    ஹை நெக் முக்கால் கை வைத்து முழுக்கழுத்தும் நகை அணிந்தது போல தங்க நிற நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும் பிளவுஸ்களை பிளெயின் சேலைகளுடன் அணிந்தால் ஒரு சின்ன நகையைக் கூட அணிய வேண்டிய அவசியமில்லை.

    பட்டர்ஃபிளை கட் பேக் நெக் பிளவுஸ்கள் ஒரு தனித்துவமான பாணியில் பூசிய உடல் வாகுடன் இருக்கும் பெண்கள் அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இவ்வகை பிளவுஸ்கள் டிசைனர் சேலைகளுடன் அணிய ஏற்றவை.

    சோளி ஸ்டைல் ஃபேஷன் பிளவுஸ்களில் பின்புறம் முடிந்து கொள்வது போல் வந்திருக்கும் மாடலும் இன்றைய டிரெண்ட் எனலாம்.

    ஒரு ஷோல்டர் மாடல், ட்யூப் ஸ்டைல் மாடல், க்நாட்டட் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல் என பிளவுஸ்களை விதவிதமாகத் தைத்து அணிவதிலும், தைத்த பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிவதிலும் இன்றைய இளைம் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையிலும் பிளவுஸ்களுக்குச் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள்.
    உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
    முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் தான் இணைகின்றன. தற்போது பாத வெடிப்பு பலர் சந்திக்கும் பிரச்சனையாகும். இது அழகை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

    காரணம்

    உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும் போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    தீர்வுகள்

    மருதாணி

    பாத வெடிப்புக்களை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிது துண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்பதனப்பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.

    எலுமிச்சை சாறு

    இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

    மஞ்சள்

    பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

    மசாஜ்

    பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
    இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடிய குர்தீஸ் எனப்படும் மேல்சட்டைகள் அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. பல்வேறு ரகங்களில் உருவாகும் குர்தீஸ்கள் தற்போது புதுமையும், நவீனமும் கலந்தவாறு டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை ஒரு நாள் முழுவதும் அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாகவும், பலரும் பார்த்து வியக்கும் மேம்பட்ட தையல் அமைப்புகளை உள்ளடக்கியவாறு தைக்கப்படுகின்றன. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் செல்வதற்கு ஏற்ற ஆடையாக திகழ்வதுடன், வெளியூர் மற்றும் சுற்றுலா பயண்களிலும் அணிய ஏற்றதாக உள்ளது. இளவயது பெண்கள் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளுக்கு அணிந்து செல்ல ஏதுவான ஆடையாகவும் திகழ்கிறது.

    விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்

    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.

    அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்

    டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.

    அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.

    இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.

    ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்

    அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.

    டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

    இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

    முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

    கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.

    முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
    முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும்  தரக்கூடியது.

    வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து பேஸ் பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

    செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம்  கிடைக்கும்.

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

    வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான்.
    தரமற்ற அழகு சாதன பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.

    முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான்.

    பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்த சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

    மேலும் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம், என்றும் கூறுகிறார்கள்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்கும்போது உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.
    தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
    சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெறுவதற்காக பலவித அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய கால வெளிப்புற அழகை மட்டுமே வழங்கும் தன்மை கொண்டவையாகும். தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம் :

    * 1 ஆப்பிள், அரை பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித்துண்டு போன்றவைற்றை சேர்த்து அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும்காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.

    * 3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

    * 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.

    * 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

    * வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.
    இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.
    இளம் வயது பெண்கள் விரும்பி அணியும் ஸ்நீக்கர்ஸ் என்ற ஷுக்கள் இப்போது வண்ணமயமான மலர்கள் பதியப்பட்டவாறு வருகின்றன. கேஸ்வலாக அன்றாடம் அணிய ஏற்ற புத்தம் புதிய வடிவமைப்பில் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளன. அணிகின்ற ஆடைகளுக்கு ஏற்றவாறு விதவிதமான பல வண்ண பூக்கள் பதியப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது கண்கவர் வடிவில் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    இந்த பூ வேலைப்பாடு ஸ்நீக்கர் என்பது லோ-டாப் மற்றும் ஹை-டாப் என்ற இருவகை பிரிவுகளிலும் கிடைக்கின்றன. அதுபோல் லேஸ் வைக்கப்பட்டும், லேஸ் இல்லாத கட்-ஷுவை போன்றும் புதிய புளோரல் ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளது.

    பூ வேலைப்பாடு என்பது எம்பிராய்டு செய்யப்பட்டும், வண்ண பூச்சு செய்யப்பட்டவாறும் கிடைக்கின்றன. இதில் பூக்கள் என்பது பளிச்சென தெரிகின்றவாறு அடர்த்தியான வண்ணங்களிலும், மென்மையான வண்ணங்களிலும் பலதரப்பட்ட வகையில் கிடைக்கின்றன. இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.

    உறுதியான துணிகளின் மீது எம்பிராய்டரி மற்றும் வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட இந்த ஸ்நீக்கர் என்பது வெகு நாட்கள் ஆனாலும் அதன் புதுமையும், பொலிவும் மாறாது இருக்கும்படி உறுதியான தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    லெதர் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்

    பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது உறுதியான லெதர் மூலம் உருவாகியுள்ளன. அதாவது டிரிப்ட்வுட் லெதர், பாப்ராய்ஸ் லெதர், டெனிம் லெதர், பன்ச் கோரல் லெதர் போன்றவை மூலம் உறுதியான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டெனிம் லெதர் என்றால் அதனை சுலபமாக துவைத்து கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

    எடை குறைந்த ஸ்நீக்கர்ஸ்

    அதிக எடையின்றி இலகுவாக அணிய ஏற்றது என்பதால் பெண்களின் விருப்பமான ஸ்நீக்கர்ஸ் ஆக உள்ளது. மேலும் அணிவதற்கு சுலபமான ஷு என்பதாலும் உடனுக்குடன் கழட்டி அணிய ஏற்றது என்பதாலும் கல்லுரி மற்றும் அலுவலக பெண்களின் விருப்ப தேர்வாக உள்ளது.

    வண்ணமயமான மலர்கள் மலர்ந்த ஸ்நீக்கர்ஸ்

    வெள்ளை நிற பின்னணியில் வண்ண மலர்கள் தனிப்பட்டு தெரியும் வகையில் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் உள்ளன. அதுபோல் பிங்க் நிற பின்னணியில் வெள்ளை நிற மலர்களம், கருப்பு நிற பின்னணியில் பல வண்ண மலர்கள் அதாவது பச்சை, மஞ்சள், சிகப்பு நிற மலர்கள் பார்க்க பளிச்சிடும் வகையில் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் மென்மையான வண்ண சாயல் கொண்ட பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்-யை தான் விரும்பி அணிகின்றனர். ஏனெனில் எந்த விதமான வண்ண ஆடையாய் இருப்பினும் மென்மை வண்ண ஸ்நீக்கர் பொருத்தமான ஷு-வாக இருக்கும்.

    பிரிண்ட் செய்யப்ப்ட ஸ்நீக்கர்ஸ்

    லெதர் மற்றும் துணியின் மீது அந்த பகுதி மக்கள் விரும்பும் மலர்கள் வளைவுகளாய் அழகுற பிரிண்ட் செய்யப்பட்டு வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர் என்பது உயிரோட்டமான பூ அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் பூவின் அழகு அற்புதமாக வெளிப்படும் பின்னணி வண்ணசாயல் என்பது நீண்ட நாள் மறையாமல் புது பொலிவுடன் காட்சி தருகின்றன. பிரிண்ட் செய்யப்படும் போதும் உலகளாவிய மலர் வடிவம் அனைத்தும் சுலபமாக பிரிண்ட் செய்யப்படுவதால் நவீன யுவதியர் விரும்பும் வடிவில் உள்ளன.

    வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ்

    வானவில்லின் ஏழு வண்ணங்களும் மலர்களாய், வண்ண அச்சுகளாய் உள்ள ஸ்நீக்கர்ஸ் வருகின்றன. இது கேஸ்வல்-ஆக அணிய எற்றது என்பதால் பார்ட்டி மற்றும் பயணங்களின் போது அணிந்து மகிழலாம். நாம் அணியும் பல வண்ண சாயல் ஆடைகளுக்கு ஏற்ற இணைப்பாக இந்த வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ் திகழ்கிறது. பெண்களின் மனதை கவரும் வகையில் புதுமை வடிவமைப்புடன் வந்துள்ள புளோரல் ஸ்நீக்கர்ஸ் என்பது எந்தவிதமான ஆடைக்கும் ஏற்ற இணை. அதாவது பெண்களின் மாடர்ன் டிரஸ் மற்றும் ஜீன்ஸ் போன்றவையுடன் பலோலோ, டியூனிக் போன்ற ஆடைகளுக்கும் ஏற்ற வகையாக உள்ளது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் அணிவதே தற்போதைய டிரெண்ட்.
    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.
    செட்டிநாடு என்பது தனக்கென பல்வேறு வகையான தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது. பல நூறாண்டுகளுக்கு முன்னரே செட்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்று வந்தார்கள் என்பதை வரலாற்று நூல்கள் மூலம் அறியலாம். கடல் கடந்து சென்று வந்த அவர்கள் பல கலாச்சாரங்களை நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வீடுகள் கட்டுமானம், நகைகள் வடிவமைப்பு போன்றவற்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இன்று வரையிலும் செட்டிநாட்டு நகைகள் உறுதி வாய்ந்தவையாகவும், பாரம்பரியம் மிக்கவையாகவும் கருதப்பட்டு அவர்களது திருமண நிகழ்ச்சிகளில் கட்டாயம் அணியப்படுகின்றன. அதில் கழுத்திரு சோடிப்பு திருமாங்கல்யம், கௌரி சங்கம், வைர மாங்கல்யசரம், கெம்ப்பு செட்டுகள், அட்டிகைகள், காப்புகள், காதணிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    செட்டிநாட்டு நகைகளை மத, சடங்கு மற்றும் அலங்கார நகைகளாக வகைப்படுத்துகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விலையுயர்ந்த வைரம், முத்து ரூபி போன்ற கற்களைக் கொண்டு வந்து தங்களுடைய வீடுகளுக்கே பொற்கொல்லர்களை வரவழைத்து உறுதியான, அழகான மற்றும் பாரம்பரியமான நகைகளை வடிவமைத்து அணிந்து கொண்டவர்கள் செட்டிநாட்டு மக்கள் என்றால் அது மிகையாகது.

    அழகிய கெம்ப்புக் கற்களைக் கொண்டு செய்யப்படும் நகைகளை கைகாளலேயே டிசைன்களை வரைந்து வடிவமைத்து செய்வது தனிச்சிறப்பான விஷயமாகக் கருதப்படுகின்றது. செட்டிநாட்டு நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டு பின்புறம் மூடப்பட்டு வருபவை. உறுதியானவையாகவும், பல தலைமுறைகள் தாண்டி உழைப்பவையாகவும் இருக்கின்றன. கெம்ப்பு அட்டிகைகள், வளையல்கள், கம்மல்கள் மட்டுமல்லாது ஒட்டியாணம், வங்கி போன்றவையும் தனித்தனியாகவும், செட்டாகவும் கிடைக்கின்றன. கெம்புக் கற்களினால் செய்யப்படும் நகைகளை அனு அனுவாக ரசித்து அணிபவர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.

    வைர நகைகளை இன்றளவும் செட்டிநாட்டிற்குச் சென்று வாங்கி வருகிறார்கள் என்றால் அதன் தரமும், விலையும் அந்த நகைகளின் கட்டமைப்புமே அதற்கு காரணம் என்று சொல்லலாம். நகை செய்யக்கூடிய தங்கக் கட்டிகளை குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது அதற்கென இருக்கும் கல்லின் மேல் வைத்து அடித்து தங்கத்தை இறுக்குகிறார்கள். அதன் பின்னர் அந்த தங்கக் கட்டிகளின் மேல் டிசைன்கள் வரையப்பட்டு, துவாரங்களைப் போட்டு வைரக் கற்களானது பதிக்கப்படுகின்றது. இவ்வாறு உறுதியாக செய்யப்படும் வைரநகைகள் எத்தனை ஆண்களானாலும் ஜொலி ஜொலிப்பு குறையாமல் ஒளிர்கின்றன. ஏழு கல் வைரத்தோடு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

    கௌரிசங்கம்:- செட்டிநாட்டிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வழி வழியாக அணியக்கூடிய நகை என்று கூறப்படும் இந்த நகையானது பெரிய ஹாரம் போன்று மார்பை அலங்கரிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வயது எட்டும் ஆண்கள் குருமார்களிடம் மந்திர உபதேசம் பெற்றுக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். உருத்திராட்ச மாலையான இதில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள். பெரிய பெண்டன்ட்டுகள் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகின்றது. இந்த பெண்டன்ட்டில் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதாரராக அமர்ந்திருக்கும் ரிசபருக்கு வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    கழுத்திரு:- திருமணத்தன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யமே கழந்திருவாகும். நகரத்தார தாலி என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த நகையானது இன்றளவும் இருபது முதல் இருபத்தைந்து சவரன் தங்கத்தால் செய்யப்படுவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

    மங்களச்சரம்:- தாலி மட்டுமல்லாது தாலிச் சங்கிலி முழுவதுமே வைரக்கற்களால் பதிக்கப்பட்டு செய்யப்படும் மங்களமான கழத்தாலியாகும்.

    கண்டசரம், பூச்சரம்:- கழுத்தை ஒட்டி அணியக்கூடிய அட்டிகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டசரமாகும். பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரக்கற்களால் பதித்து செய்யப்படும் கழுத்தணியே பூச்சரம் என்று அழைக்கப்படுகின்றது.

    காப்புகள்:- வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட கை காப்பானது வைரக்காப்பென்றும், தங்கத்தினால் நெளி நெளியாக வளைந்து செய்யப்பட்ட காப்பு தங்கக்காப்பென்றும், நீலக்காப்பு, சிவப்பு கல்லு காப்பு, பச்சைக்கல்லுக்காப்பு, முத்துக்காப்பு, கருகுமணி போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பாசி பதிக்கப்பட்டு வரும் பாசிக்காப்பு என காப்புகளின் பலவகைக் காப்புகளை அந்தக் காலத்திலேயே அணிந்திருக்கிறார்கள்.

    அருப்புதடை:- வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு யானை முடி பதிக்கப்பட்டு செய்யப்படும் விரலில் அணியும் மோதிரம்.

    இவை மட்டுமல்லாமல் ஒற்றை வடசங்கிலி இரட்டை வடசங்கிலி, மாங்காய் மாலை, தலையில் குத்தும் கொண்டை ஊசி, சேலையில் குத்தக் கூடிய ஊக்குகள் என அனைத்திலும் தங்கமானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    இன்று பிரேசிலெட் என்று அழைக்கப்படும் மணிக்கட்டில் அணியப்படும் நகையானது பல நூற்றாண்களுக்கு முன்னரே குருமாத்து என்ற பெயரில் கைக்காப்பாக ெசட்டிநாட்டு மக்களால் அணியப்பட்டிருக்கின்றது.
    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    ×