என் மலர்
சமையல்
- வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வைத்து மோதகம்.
- மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமானது.
விநாயகர் சதுர்த்தி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பூரணங்களை உள்ளே வைக்கும் வித்தியாச வித்தியாசமாக செய்து சாப்பிட்டு இருப்போம். மேல் இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவில் கூட வித்தியாசமாக செய்து சாப்பிடுவோம்.
என்றைக்காவது ஒரு நாள் காய்கறியோடு சேர்த்து இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள் தான் செய்து இருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படி மோதகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒரு மோதகம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு- 2 கப்
பீட்ரூட்- 1
வெல்லம்- கால் கிலோ
கடலைப்பருப்பு- ஒரு கப்
தேங்காய் துருவல்- 1 கப்
ஏலக்காய்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும். மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்
வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள் இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். அனைத்து மோதகமும் செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் மோதகம் தயார்.

- புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.
- ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம்.
ராஜ்மா என்ற மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்த உணவின் பெயரே, அந்த பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது.
தமிழகத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத பயறு வகை இது. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப்பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் `கிட்னி பீன்ஸ்' எனவும் அழைக்கிறார்கள்..
வடஇந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்த பயறு வகையும் பிரபலமாகி உள்ளது.

பெரிதான இந்த பயறு விதையை, நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லை என்றால் வேகாது. இந்த பயறு தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேகவைக்கும்போது இது வெளியேறிவிடும்.
சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தனியாக சாப்பிடுவதைவிட, மற்ற தானிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.
ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம். இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது. கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும். இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிக சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும். குடல் பகுதிகளில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, குடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ராஜ்மாவை முளைகட்டிப் பயன்படுத்த முடியாது. சோறு, சப்பாத்தியுடன் சேர்த்தோ அல்லது சூப்பின் சுவை, மணத்தைக் கூட்டவோ பயன்படுகிறது.
புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், ராஜ்மாவை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடுங்கள். இதை உட்கொள்வதன் மூலம், உடல் உயிரியல் கலவைகளைப் பெறுகிறது. இது புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.
பீன்சில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆற்றல் பற்றாக்குறையை அனுமதிக்காது. இது ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. உங்களை ஆற்றல் நிறைந்ததாக உணர வைக்கிறது. பீன்ஸில் உள்ள புரதம், செல்களை உருவாக்குகிறது. உடலின் வலிமையையும் ஆற்றலையும் பராமரிக்க, கிட்னி பீன்ஸ் சிறந்த தேர்வு. இது உடல் கட்டமைப்பிற்கும் உதவுகிறது.
இதனுடன், கிட்னி பீன்ஸ் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், ஏனெனில் இதில் ஆக்சிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளது.
- சாப்பிட்ட பிறகு கற்கண்டை உண்டால் ஒவ்வாமை நீங்கும்.
- கீரை சமைக்கும்போது சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் இருக்கும்.
* மட்டன் பிரியாணி செய்யும்போது ஆட்டிறைச்சி துண்டுகளை சிறிது எலுமிச்சை சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு பிரியாணி செய்தால் வாடை இருந்தாலும் நீங்கி விடும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* சாப்பிட்ட பின்பு வெள்ளை கற்கண்டை உட்கொண்டு வந்தால் ஒவ்வாமை நீங்கும். எளிதில் ஜீரணமாகும்.
* உளுந்த வடைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிது பச்சரிசி மாவை தூவினால் போதும். கெட்டித்தன்மையாகிவிடும்.
* கீரை சமைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.
* மலச்சிக்கல் பிரச்சினையை அதிகம் சந்திப்பவர்கள் அடிக்கடி உணவில் பப்பாளிக்காய் கூட்டு அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
* மோர்க்குழம்பு மீந்துவிட்டால் பருப்பு வடைகளை துண்டுகளாக வெட்டிப்போட்டு பரிமாறலாம்.
* தேங்காய் சட்னி மீந்து போனால் வீணாக்க வேண்டாம். அதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்திசுடலாம். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* சமையல் மேடையில் அதிகமாக கரி படிவதை தடுக்க ஆங்காங்கே பேப்பர்களை தொங்க விடலாம்.
* கை கழுவும் இடம் அல்லது பாத்திரங்களை தேய்க்கும் இடமான 'சிங்க்'கில் வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.
* குழம்பு மீன், வறுத்த மீன் அதிகம் விரும்பி சாப்பிட்டால் அதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது. சீக்கிரம் செரிமானமாக நாட்டுச்சர்க்கரை அல்லது பழம் உட்கொள்ளலாம்.
* கறிவேப்பிலை துவையல், புதினா ரசம் அல்லது துவையல், வல்லாரை கீரை துவையல் அல்லது ரசம் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும். ரத்தம் சுத்தமாகும்.
- லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கிறார்கள்.
- ஆளி விதை லட்டில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
வட இந்திய வீடுகளில் பசு நெய், பாதாம் பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல்வேறு லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கிறார்கள். உண்பதற்கு அற்புதமாக இருக்கும் லட்டுகளில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளும் உள்ளன.
தேவையான பொருள்கள்:
பாதாம்- அரை கப்
முந்திரி- அரை கப்
அரைத்த ஆளி விதை- அரை கப்
அரைத்த வெல்லம்- அரை கப்
பசு நெய்-- கால் கப்
செய்முறை:
மிக்சியிலோ, ப்ளேண்டரிலோ, பாதாமைப் போட்டு, முழுவதும் பொடியாகும் வரை அரைக்க வேண்டும். அதனைத் தனியாக பிளேட் ஒன்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக முந்திரியையும், பாதாம் போலவே அரைத்து, தனியாக ஒரு பிளேட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று ஆளிவிதையையும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில், நாம் ஏற்கனவே அரைத்த பாதாம், முந்திரி ஆகியவற்றுடன் அரைத்த ஆளி விதை, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து, அதனோடு பசு நெய்யையும் சேர்த்து, நன்கு பிசைய வேண்டும்.
தற்போது அதனை சிறிய உருண்டைகளாக கையால் பிடித்து வைக்க வேண்டும். உலர்ந்து போனால் சிறிது நெய் சேர்க்கலாம். மற்றபடி அதிகம் நெய் சேர்க்காமல், லட்டுக்குத் தேவையான அளவில் அதனை உருட்ட வேண்டும். தற்போது லட்டுகள் தயார். இவற்றை காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு வைக்கலாம். இவை உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தவை.
- புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம்.
- பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும்.
நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின். அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் உணவுகளை தவிர்க்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம்.
பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும். அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதில் இருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
நெய்- 4 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கப்
உலர் திராட்சை- 100 கிராம்
முந்திரி- 50 கிராம்
பாதம்- 50 கிராம்
பிஸ்தா- 50 கிராம்
பூசணி விதை- 50 கிராம்
ஏலக்காய்- 6
பேரிச்சம் பழம்- 150 கிராம்
செய்முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை காடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடலை வறுபட்டு பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும்.
பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.
அதன்பிறகு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள். பின்னர் மீண்டும்பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், பூசணி விதையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஏலக்காயையும் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர அனைத்து பொருட்களை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின்னர் லட்டு போன்று உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான புரோட்டின் லட்டு தயார்.

- குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
- காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது.
குழந்தைகளுக்கு காலை உணவாக அவர்களுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியமாகவும், சுவை நிறைந்ததாகவும் செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த `முட்டை சீஸ் ரோல்' தான் சரியான தேர்வு. முட்டை, சீஸ் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு `முட்டை சீஸ் ரோல்' செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 3
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
சாண்ட்விச் சீஸ் - 3
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் நான்கு பக்கங் ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் வெட்டிய பிரெட் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீசில் தடவி வைக்க வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து வெண்ணெய் தடவி சூடானதும் அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பிறகு முட்டைகளை மெதுவாக கல்லில் பரப்பி அதன் மேல் சீஸ் தூவிய ரொட்டியை வைத்து முட்டையை கொண்டு சுற்றி நன்றாக சமைக்கவும். முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து குழந்தைகளுக்கு சூடாக பரிமாறுங்கள்.
- கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
கலாகந்த் சுவீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான இனிப்பாக இருக்கும்.
கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா செய்தால் எப்படி இருக்கும். என்ன மேஜிக் மாதிரி தோணுதா, ராஜஸ்தானில் ஃபேமசான கலாகந்த் ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
பனீர்- 2 கப்
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்
பால் பவுடர்- 3 ஸ்பூன்
பாதாம் பருப்பு- 6 ( நறுக்கியது)
நெய்- தேவையான அளவு
ஏலக்காய் தூள்- சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பால் பவுடர் சேர்க்க வேண்டும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்க வேண்டும். இதனை கட்டி இல்லாமல் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன்பிறகு அதில் பனீர் துண்டுகளை கையால் மசித்து இதில் சேர்க்க வேண்டும். துருவ வேண்டாம். கையால் பிசைந்து சேர்த்தால் போதுமானது.(குறிப்பு மிதமான தீயில் வைத்து சமைக்க வேண்டும்.)
பின்னர் இதில் ஏலக்காய் பொடி மற்றும் நெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை சிறிது இறுகி வரும்போது பாதம் துண்டுகளை கலந்து இறக்கலாம். இந்த கலவையை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒருமணிநேரம் வைத்திருந்து எடுத்தால் சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் கலாகந்த் ரெடி.
- குக்கீஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- குக்கிகளை வீட்டிலேயே நாம் சுலபமாக செய்ய முடியும்.
குக்கீஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குக்கிகளை வீட்டிலேயே நாம் சுலபமாக செய்ய முடியும். வீட்டில் தான் செய்தீர்கள் என்று யாரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை- 100 கிராம்
வெண்ணெய்- 150 கிராம்
முட்டை- 1
வெண்ணிலா எசென்ஸ்- கால் டீஸ்பூன்
மைதா மாவு- ஒன்றரை கப்
சோள மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
பால்- ஒரு டம்ளர்
செய்முறை:
இந்த பட்டர் குக்கி செய்வதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரில் 100 கிராம் அளவு சர்க்கரை சேர்த்து அதனை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பவுலில் 150 கிராம் வெண்ணெய் சேர்க்கவும். இது உப்பு சேர்க்கப்படாத வெண்ணையாக இருக்க வேண்டும். அறை வெப்ப நிலையில் இதனை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். வெண்ணை மென்மையாகும் வரை அடிக்க வேண்டும்.
அதன்பிறகு பொடியாக்கி வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதன்பிறகு ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து அனைத்தையும் கிளறி விட வேண்டும். இப்பொழுது இதற்கான மாவுகளை சேர்க்கலாம்.
ஒன்றரை கப் அளவிற்கு மைதா மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலந்து விட வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தும் ஒட்டாமல் சேர்ந்து வந்ததும் இதனை ஒரு பைப்பிங் பேக்கில் சேர்த்து விருப்பமான வடிவத்திற்கு குக்கிகளை செய்து கொள்ளவும்.
ஓவனை 175 டிகிரி செல்சியசில் சில நிமிடங்கள் ஃப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் குக்கிகளை வைத்து 14 நிமிடங்கள் கழித்து எடுத்தால் குக்கி தயாராகி இருக்கும்.
ஓவன் இல்லை என்றால் ஒரு கடாயை முன்கூட்டியே சூடு செய்து மிதமான தீயில் வைத்து கடாயினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் தயார் செய்து வைத்திருக்கும் குக்கிகளை தட்டில் வைத்து மூடி வைக்க வேண்டும். குக்கிகளின் ஓரம் நன்கு சிவந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். குக்கி ஆறியதும் எடுத்து பார்த்தால் மொறுமொறுப்பான பட்டர் குக்கி தயாராகி இருக்கும்.

- பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
- பலாக்காய் வைத்து சுவையான பிரியாணி.
பொதுவாகவே அனைவருக்கும் பிரியாணி என்றாலே மிகவும் பிடிக்கும். பலரும் பல விதமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் அனைவரது வீட்டில் பொதுவாகவே இருக்கக்கூடிய பலாக்காய் வைத்து எப்படி சுவையான பிரியாணி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பேபி பலாக்காய்
தண்ணீர்
நெய்
பிரிஞ்சி இலை
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா
உப்பு
தயிர்
கொத்தமல்லி
புதினா
பாஸ்மதி அரிசி
உப்பு
செய்முறை:
பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையானளவு உப்பு சேர்க்கவும். அடுத்து அதில் தயிர் மற்றும் பலாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பிறகு புதினா மற்றும் கொத்தமல்லியை பிரியாணி மசாலாவில் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அது சற்று சூடான பிறகு 350 கிராம் பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். அடுத்து அதை வடிக்கட்டி பலாக்காய் வேக வைத்ததுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக மற்ற பிரியாணி செய்வது போன்று செய்ய வேண்டும். சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.
- ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
- ஒரு புதுமையான ஸ்நாக்ஸ் ரெசிப்பி
பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். அதிலும் அந்த ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கின்ற வகையிலும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.
நாவில் கரையும் பால் ரப்பிடியுடன், மொறுமொறுவென்று நெய்யில் வறுத்த ரொட்டியின் சுவையும், ஏலக்காயின் மணமும் சேர்ந்து இனிப்புப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட்- 6
மில்க்மெய்டு- ஒரு கப்
ஏலக்காய் தூள்- தேவையான அளவு
தேங்காய் தூள்- ஒரு கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவைக்கேற்ப
எண்ணெய்- பொறிப்பதற்கு
செய்முறை:
முதலில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அரை லிட்டர் பால் நன்றாக வற்றி வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் தேங்காய் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா கலவை மற்றும் மில்க்மெய்டு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டிவிட்டு அதனை சப்பாத்தியை திரட்டுவது போல ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரெட் துண்டுகளின் நடுவில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த உருளைகளை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஷாகி துக்கடாக்களை ஒரு பிளேட்டில் வரிசையாக வைத்து அதில் நன்றாக காய்ச்சி ஆர வைத்த பால் அல்லது மில்க் மெய்டு கலவையை ஊற்றி பரிமாறினால் டேஸ்டியான, ரிச்சான ஷாகி துக்கடா தயார். பண்டிகை தினங்கள் மட்டுமின்றி பார்ட்டி நாட்களிலும் உங்களது வீடுகளில் செய்து அசத்துங்கள்.
- வயிற்றுப்புண்ணிற்கு மிகவும் நல்லது.
- புளிச்ச கீரை உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு, துவையல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கிறது. அடிக்கடிக்கு புளிச்சக்கீரை பருப்பு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் வல்லமை புளிச்சக்கீரைக்கு உண்டு.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை- ஒரு கட்டு
துவரம் பருப்பு- கால் கப்
சீரகம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
பச்சை மிளகாய்- 5
வெங்காயம்- 2 (நறுக்கியது)
பூண்டு- 10 (நறுக்கியது)
தக்காளி- 1 (நறுக்கியது)
புளி- சிறிதளவு
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை- தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரில் துவரம்பருப்பு, புளிச்ச கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள புளிச்ச கீரை பருப்பு கடையலை இதில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா பப்பு தயார்.

இதனை சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த கோங்குரா பப்புவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு மிகவும் நல்லது.
- பாக்கு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி சீக்கிரம் வெந்துவிடும்.
- புளிக்குழம்பிற்கு மிளகு, சீரகப்பொடி சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா தயார். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு இது எளிய வழியாக இருக்கும்.
* சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள பழைய தாள்களை கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
* காபி டிகாஷன் போடுவதற்கு முன்பு சுடுதண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
* அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
* வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேனைக்கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
* புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
* இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
* சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் கொஞ்சம் புளியை வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.






