என் மலர்
பொது மருத்துவம்

மன அழுத்தத்திலிருந்து வெளியேவர என்ன செய்யலாம்?
- மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும்...
- சாலையில் செல்லும் வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்!
மன சோர்வு அல்லது கவலை என்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. இந்த மன அழுத்தம் நாளடைவில் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மனசோர்வு மற்றும் கவலையிருந்து வெளியே வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கவலை தரும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது
நாம் சாலையில் சென்றுக் கொண்டிருக்குமாறு கற்பனை செய்துகொள்வோம். நமக்கு இணையாக, நம் பின்னால், நம் முன்னால் ஏராளமான வாகனங்கள் செல்லும். அவற்றை நாம் கவனிக்கமாட்டோம். சில வாகனங்கள் அதிக சத்தத்துடனும், வேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பானை அடித்துக்கொண்டும் செல்லும். உடனே அந்த வாகனத்தின்மீது நம் கவனம்செல்லும். அந்த வாகனம் இடையூறாக இருந்ததால் நாம் அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்.
சில எண்ணங்கள் அமைதியாக, கவனிக்கப்படாமல் கடந்து செல்கின்றன. ஆனால் ஒருசிலவை சத்தமாகவும், இடையூறாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதனால் நாம் கவலையை உணர்கிறோம். இந்த கவலையை எண்ணி எண்ணி மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். நமக்கு கவலையளிக்கும் விஷயங்களோ, செயல்களோ, எண்ணங்களோ மனதில் எழும்போது, அல்லது அந்த விஷயங்கள் மனதில் நுழையும்போது சாலையில் சென்ற சத்தமான கார்போல, அதற்கு கவனம் செலுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். ஒரு துன்பம் தரும் செயல் நடந்துவிட்டால் அதை பற்றிக்கொள்ளாமல், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் அல்லது அதில் அதிக கவனம் செலுத்தாமல், அதை கடந்து செல்லப் பழகுங்கள். இது கவலை அல்லது சோகத்தில் மூழ்காமல் இருக்க உதவும்.
சம்பவங்களை கடந்து செல்லப் பழகுங்கள்
நாட்குறிப்பு எழுதுங்கள்...
தாங்கமுடியாத அல்லது வெளியே சொல்லமுடியாத அளவு துயரம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. யாரிடமாவது பேசினால் உடைந்து அழுதுவிடுவேன் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசி உடைந்து அழுங்கள். அப்படி நெருக்கமானவர்களிடமும் பேசமுடியவில்லை, மனது மிகவும் பாரமாக இருக்கிறது என்றால் தனியாக வெளியே செல்லுங்கள். பிடித்த உணவை வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த சினிமாவை சென்று பாருங்கள். அப்படி இதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், டைரி எழுதுங்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ, அல்லது உங்கள் மனதில் எது ஆழமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி எழுதுங்கள். எழுதிவிட்டு, அதை படித்துவிட்டு, கிழித்தெரிந்து விடுங்கள். இது கண்டிப்பாக ஒரு ஆறுதலை தரும்.
தியானம்
வாழ்க்கை எல்லா நேரமும் ஒரேமாதிரி செல்லாது. ஒரு கட்டத்தில் அனைவரும் ஒரு மோசமான பகுதியை கடந்துசெல்வர். கடந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் கட்டம் நிறைய அனுபவங்களையும், பாடங்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். அவை அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையானவையே. இப்படி ஒரு கட்டத்தில் மனிதர்கள் இருக்கும்போது யாரிடமும் பேசத்தோன்றாது. எந்த எண்ணமும் இருக்காது. மனதில் எந்த சிந்தனையும் ஓடாவிட்டாலும், ஒரு பிடிமானம் இல்லாத, விருப்பமில்லாத, வாழ்க்கையின் போக்கில் சென்றுக்கொண்டிருப்போம். இந்தநிலையில் நாம் உணரவேண்டியது மனம் ஒருநிலையில் இல்லை என்பதுதான். மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும். இதிலிருந்து வெளியேவர மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ண ஓட்டங்களை நிறுத்தவேண்டும். அதாவது சோகம் தரும் அல்லது வெற்றிடமாக தோன்ற வைக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் உதவும். தியானத்தில் நீங்கள் விரும்பும் அளவுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். இது கவலையிலிருந்து வெளிப்படவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.






