என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை.
    • மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி.

    இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சிறிய தலைவலி முதல் பெரிய நோய்கள் வரை, கிட்டத்தட்ட அனைவரும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் ஒரு கைப்பிடி மாத்திரைகளை எடுத்துக்கொள்றார்கள்.

    மற்றவர்கள் சிறிய நோய்களுக்குக் கூட தேவையில்லாமல் மாத்திரைகளை உட்கொண்டு, தேவையற்ற நோயை ஏற்படுத்துகிறார்கள். மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை மற்றும் எடுத்துக்கொள்ளக்கூடாதவை சில உள்ளன. எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


    தவிர்க்க வேண்டியவை:

    மது:

    மது மாத்திரைகளின் செயல்திறனில் தலையிடுகிறது மற்றும் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். எனவே மதுவை தவிர்ப்பது நல்லது. இது பல சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


    திராட்சைப்பழ ஜூஸ்:

    திராட்சைப்பழச்சாற்றில் உள்ள சில பொருட்கள் சில வகையான மாத்திரைகளின் செயல்திறனைப் பாதித்து, அவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனுள்ளதாக மாற்றும். உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


    பால்:

    பால் சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைத்து, அவற்றின் செயல்திறனைக் குறைக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைக்கும்.


    மற்ற மாத்திரைகள்:

    டாக்டர் மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, அவர்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பற்றி டாக்டரிடம் சொல்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சேர்க்கைகள் ஆபத்தானவை. மருந்துகளை எடுத்துக்கொள்வது குறித்து டாக்டரிடம் நிச்சயமாக ஆலோசனை கேட்க வேண்டும்.


    எதை எடுத்துக்கொள்ளலாம்:

    தண்ணீர்:

    மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. இது மாத்திரைகளை விழுங்குவதை எளிதாக்கி வயிற்றில் கரைய உதவுகிறது.


    உணவு:

    டாக்டர் உணவுடன் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். இது வயிற்று எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.

    பானங்கள்:

    சில வகையான மாத்திரைகளை சாறு அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் பேசிய பிறகு இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.

    சில மாத்திரைகளை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்று எரிச்சலைத் தடுக்கவும், மாத்திரையை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது.

    சில மாத்திரைகளை உணவுக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரோ எடுக்க வேண்டும். இது மாத்திரையின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    • சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும்.
    • தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.

    அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில தவறான பழக்கங்கள் 'ஸ்லோ பாய்சன்' எனப்படும் மெதுவாக கொல்லும் விஷம் போல செயல்பட்டு படிப்படியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் பற்றியும் பார்ப்போம்.


    மன அழுத்தம்

    எப்போதாவது மன அழுத்தத்திற்கு ஆளாவது பிரச்சனையில்லை. ஆனால் தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறினால் ஆபத்தானது. ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' எனப்படும் அமைதியான கொலையாளியோடு தொடர்புடையது.



    உடலையும், மனதையும் படிப்படியாக சோர்வடையச் செய்துவிடும். நாளடைவில் மன அழுத்தம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.


    நலம் விரும்பிகள் இல்லாத நிலை

    நம் நலனில் அக்கறை கொள்பவர்களும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எதிர்மறையான விஷயங்கள், கருத்துக்களை பேசுபவர்களுடன் பழகுவதோ, அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிவதோ நம்மை பலவீனமாக்கும்.

    குறிப்பாக உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள், உங்கள் சாதனைகளை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள், தேவையற்ற எண்ணங்களை உங்களிடத்தில் விதைப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.


    துரித உணவு

    துரித உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் தொடர்ந்து அதனை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய்க்கு வித்திடும்.


    வேலையில் நாட்டமின்மை

    எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். வேலையை வெறுப்பது, விருப்பமின்றி செய்வது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அதிருப்தி, தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படும். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷமாக மாறும்.


    உணர்ச்சிகளை அடக்குதல்

    நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் திடீரென்று எதிர்மறையாக நடந்து கொள்ளும்போது கடும் அதிருப்தி உண்டாகும். அந்த சமயத்தில் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.

    ஆனால் தொடர்ந்து உணர்ச்சிகளை அடக்குவது, மனதில் பதிந்திருக்கும் ஆழ் மனக்கவலைகளை வெளிக்காட்டாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலப்போக்கில் உடலையும், மனதையும் பாதிக்கும் நோயாக மாறிவிடும். எனவே உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.


    தொடர்ந்து கவலையாக இருத்தல்

    தொடர்ந்து கவலையாகவோ, பதற்றமாக இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். தொடர்ந்து கவலைப்படுவது மன அழுத்தத்தை தூண்டிவிடும். அதனால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு உயர்வதற்கு வழிவகுக்கும்.

    நாளடைவில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பு மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் எடை அதிகரிப்புக்கும், நோய் எதிர்ப்பு தன்மை பலவீனமடைவதற்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் காரணமாகிவிடும்.


    சோர்வாக காட்சி அளித்தல்

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தொடர்ந்து சோர்வுக்கு ஆளாகுவது மனச்சோர்வு, நாள்பட்ட சோர்வு மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    இதற்கு இடம் கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியான மன நிலையை உங்கள் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    காலை உணவைத் தவிர்த்தல்

    காலை உணவுதான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    • உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது.
    • வெளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும்.

    மூலநோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.


    'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையரின் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.


    மூல நோய் 4 நிலைகள் கொண்டிருக்கும். உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது ரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி இருக்கும். ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்றவை ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


    உணவுப்பழக்கம்:

    * துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.

    * கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

    * பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.

    * முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


    * உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

    * வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.

    * கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    * இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.

    * காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.


    வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.

    • அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
    • அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.

    கண் புரை என்பது கண்களில் உள்ள லென்சில் ஏற்படும் மாற்றத்தால் ஒளியின் ஊடுருவல் தன்மை குறைவதால், விழித்திரை மீது விழும் ஒளியின் அளவு குறையக்கூடிய ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது.


    சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்.

    ரத்த சர்க்கரை அதிகமாகும் போது கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு. அக்யூஸ் ஹ்யூமரில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் லென்ஸ் புரத மூலக்கூறில் கோவலெண்ட் இணைப்பை ஏற்படுத்தி லென்சில் ஒளிபுகாநிலையை உருவாக்குகிறது.

    அக்யூஸ் ஹ்யூமர் என்பது கண்களில் உள்ள திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இது லென்சுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது.

    ரத்த சர்க்கரை அதிகமாகும்போது லென்சில் சேரும் கிளைக்கேஷன் முடிவு பொருட்கள் அதனை வீக்கமடைய செய்து பார்வையை குறைக்கிறது.


    கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை உள்ள நிலையில் லென்சில் உள்ள என்சைம் (நொதி) குளுக்கோஸை சார்பிட்டாலாக மாற்றி கண் புரைக்கு வழி வகுக்கிறது.

    ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது லென்சில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம், எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் மற்றும் ப்ரீரேடிக்கல்ஸ் கண்புரை சீக்கிரம் உருவாகச் செய்கிறது.

    கூடுதலாக உள்ள நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் மாகுலர் எடிமா போன்றவை கண் புரையின் தாக்கத்தை அதிகரிக்கலாம். உயர் ரத்த சர்க்கரை அளவு லென்சில் உள்ள மென்மையான திரவ சமநிலையை சீர்குலைத்து கண் புரை ஏற்படுவதை துரிதப்படுத்தும்.


    நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் பருமன், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நெடுநாள் ஸ்டீராய்டு மருந்து உபயோகித்தல், நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் பணிபுரிதல் ஆகிய காரணிகளும் இளம் வயதிலேயே கண் புரையை ஏற்படுத்தக்கூடும்.

    இதற்கு தீர்வாக அறுவை சிகிச்சை மூலம் கண்களில் புரை அகற்றப்பட்டு, செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.

    • கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன.
    • உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    கருவாடு என்பது குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் உணவாக மருத்துவ உலகம் கூறுகிறது. கருவாடுகளில் பல வகை இருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது, மாசி கருவாடு.

    கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. பொதுவாக, மற்ற மீன்களை கருவாடு ஆக்க அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் உலர்த்துவது வழக்கம். ஆனால், சூரை மீன்களை கருவாடாக மாற்ற அவற்றை அவித்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர். இவ்வாறு கருவாடாக மாற்றும்போது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பளிங்கு போன்ற கண்ணாடி போல மாறி விடுகிறது. கருவாட்டு மணமும் இருக்காது. இது உடல் உறுப்புகள், தசைகளை பலமாக்கும் என்று கூறுகின்றனர்.

    பொதுவாக, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் மாசி கருவாடு உணவு கொடுப்பது வழக்கமாகும். தற்போது இந்த வழக்கம் மறைந்து வருகிறது. மாசி மீன் கருவாடு உணவை சாப்பிடுவதால் பெண்களுக்கு சினைப்பை, கருப்பை பலப்படும் என்று பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை கொடுப்பதால் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் என்றும் கூறப்படுகிறது.

    • கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.
    • ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்தத்தை இழப்பதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது அவர்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படலாம். இரும்புச்சத்து குறைபாடு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எந்தவொரு பெண்ணும் தங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளை அனுபவித்தால் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    உடலில் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.


    இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்:

    * இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனத்தை அனுபவிக்கலாம்.

    * உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்.

    * இரும்புச்சத்து குறைபாட்டால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும்.

    * ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    * கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.


    * முடி உதிர்தல்.

    * குழந்தை குறைந்த எடையில் பிறக்கும் நிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

    இரும்புச்சத்து குறைவதற்கான காரணங்கள்:

    * மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.


    * கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

    * பெண்களுக்கு ஏற்படும் செலியாக் நோய், கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நோய்கள் இரும்பு உறிஞ்சுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    *அதிகப்படியான ரத்தப்போக்கு, புண்கள் அல்லது புற்றுநோய் போன்றவையும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும்.


    தடுப்பதற்கான வழிமுறைகள்:

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். சிவப்பு இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள். உலர்ந்த விதைகள், ஆரஞ்சு, பேரிக்காய், தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

    மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    • தனிமையில் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் உருவாகும்.
    • மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.


    தனிமையின் அறிகுறிகள்

    * தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு

    * தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு

    * தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு

    * நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு

    * உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு

    பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

    முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

    அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசவுகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

    தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தனிமையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....



    அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்

    தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.


    நன்றி கூறுங்கள்

    வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.

    தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.


    இசையை ரசியுங்கள்

    தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.


    இயற்கையோடு இணையுங்கள்

    வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.

    இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உணர்வுகளை வழிநடத்துங்கள்

    கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.


    செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

    செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.


    உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்

    உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.

    • அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை.
    • பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    மணிக்கட்டு வலி பெரும்பாலும் சுளுக்கு அல்லது திடீர் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம், எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றாலும் ஏற்படலாம்.

    கம்ப்யூட்டர்களில் நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், தட்டச்சு பணிகளை செய்பவர்கள், நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கும் மணிக்கட்டு வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

    கார்பல் டன்னல் சிண்ட்ரோம்:

    மணிக்கட்டின் உள்ளங்கை பகுதி கார்பல் டன்னல் ஆகும். இதன் வழியாக செல்லும் மீடியன் நரம்பு மீது அழுத்தம் அதிகரிக்கும் போது வலி ஏற்படும்.

    கேங்க்லியன் நீர்க்கட்டிகள்:

    இந்த மென்மையான திசு நீர்க்கட்டிகள் பெரும்பாலும் உள்ளங்கைக்கு பின்புறம் உள்ள மணிக்கட்டின் பகுதியில் ஏற்படும்.

    கீன்பாக் நோய்:

    இந்த கோளாறு பொதுவாக இளம் வயதினரை பாதிக்கிறது. மணிக்கட்டில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்றான லூனேட் எலும்பிற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் கீன்பாக் நோய் ஏற்படுகிறது.


    ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்:

    இது கைகள், கால்கள் மற்றும் உடலின் பல மூட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்நோயில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூட்டுகள் மற்றும் சொந்த திசுக்களை தாக்குவதால் இது ஏற்படுகிறது.

    டெனோசினோவிடிஸ்:

    இது மணிக்கட்டில் உள்ள தசை நாண்களைப் பாதுகாக்கும் இணைப்பு திசுக்களின் வீக்கம் ஆகும்.


    மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் காயங்கள், சுளுக்குகள், எலும்பு முறிவுகள், எலும்பு பிறழ்தல் போன்ற பல காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது. எந்த வகையான நோய் என்பதை ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை மூலம் கண்டுபிடிக்கலாம்.

    அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. சிறு சுளுக்கு மற்றும் வலிகளுக்கு பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆனால் வலி மற்றும் வீக்கம் சில நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது மோசமாக இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    • ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.
    • குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு.

    நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.


    நல்ல குடிநீருக்கென்று ஒரு சுவை, மணம், தரம் உண்டு. அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியாக் கிருமிகள் வளரவும், நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் இருக்கும் குடிநீரில் பாசி படரவும் வாய்ப்பு அதிகம். குளிர்ச்சியான இடத்தில் வைக்கப்படும் குடிநீரில் கிருமிகள், பாசிகள் வளர வாய்ப்பு குறைவு.

    வீட்டினுள் சாதாரண இடத்தில் நாம் குடிநீரை பாத்திரத்தில் வைத்திருக்கிறோம் என்றால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலி பண்ணிவிடுவது நல்லது. வீட்டிற்குள் பிரிட்ஜில் வைக்கப்படும் வடிகட்டிய குடிநீரை சுமார் நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.

    குடிநீர் வைத்திருக்கும் பாத்திரம் நன்றாக மூடி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் பூஞ்சைக் காளான் படர வாய்ப்புண்டு.

    அதிக நாட்களுக்கு வடிகட்டிய குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்றால் நன்றாக மூடப்பட்ட, சீல் வைக்கப்பட்ட பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். அத்துடன் இந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும்.


    சூரிய ஒளி நேராக படக்கூடாது. வெப்பமும் அருகில் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் நுண்ணுயிர்க் கிருமிகள் வளரும் வாய்ப்பில்லாமல் தடுக்கப்படும்.

    பிளாஸ்டிக் பாட்டில்களில் கேன்களில், வைக்கப்படும் குடிநீர் வெப்பத்திலும், சூரிய வெளிச்சத்திலும் அதிக நேரம் இருந்தால் பிளாஸ்டிக்கில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ரசாயனப் பொருட்கள் சிதைந்து குடிநீரில் கலந்துவிட வாய்ப்புண்டு. எனவே உயர்தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது நல்லது.

    நமது வீட்டு வெப்ப சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் குடிநீரை சேமித்து வைக்க முடியும். மிகப் பழைய குடிநீரை குடிப்பது நல்லதல்ல. பாட்டிலை திறந்து விட்டால் அந்தத் தண்ணீர், நமது அறையில் இருக்கும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும்.

    பாட்டிலைத் திறந்து விட்டால் ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. காரில் வைக்கப்படும் குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. தினமும் கண்ணாடி டம்ளரை உபயோகித்து தண்ணீர் குடிப்பது, குடித்த பின் அவ்வப்பொழுது கழுவி வைப்பது மிகவும் நல்லது.

    • எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது.
    • உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது.

    ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆப்பிள்களில் விதவிதமான வண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இதுவும் சிவப்பு ஆப்பிளை போல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கக்கூடியதுதான். சிவப்பு ஆப்பிளை ருசிக்க விரும்பாத குழந்தைகளுக்கு மாற்றுத்தேர்வாக பச்சை ஆப்பிளை கொடுக்கலாம். இந்த ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

    * சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் பார்வை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பச்சை ஆப்பிளில் பார்வைத்திறனை பலப்படுத்த உதவிடும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கண்களின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. சிவப்பு ஆப்பிளை போலவே இந்த ஆப்பிளின் வெளிப்புற தோல் பகுதியை தவிர்க்கக்கூடாது. நன்கு கழுவிவிட்டு உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மெருகேற்றும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.

    * எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. குறிப்பாக இந்த ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. இதனுடன் பிற ஊட்டச்சத்து உணவுகளையும் உட்கொள்வது எலும்புகளை வலிமையாக்கும்.

    * தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய் அபாயங்களை குறைக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.

    * பச்சை ஆப்பிளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பு அளவைக் குறைக்க உதவிடும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும். பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்பது அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    * உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்களுக்கும் பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.

    *பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும். செரிமான செயல்பாட்டுக்கும் துணை புரியும். வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திடவும் உதவிடும்.

    பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்படவும் வழிவகுத்துவிடும்.

    • இது தண்ணீரை சேமிப்பதற்கு மட்டுமல்ல...
    • தாவரங்களுக்கு ரசாயனங்கள் இல்லாமல் ஊட்டமளிக்கும் இயற்கையான, பயனுள்ள உரத்தை உருவாக்குகிறது.

    பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம்.

    இது தண்ணீரை சேமிப்பதற்கு மட்டுமல்ல... முட்டை வேக வைக்கும் போது தண்ணீர் கொதித்த பிறகு வரும் திரவத்தில் உள்ள சிறப்பால் நம்மை சுற்றி பசுமையாக்கலாம்.

    வேகவைத்த முட்டை நீர் உங்கள் தாவரங்களுக்கு ஒரு கனிம வளமான விருந்தாகும்! கொதிக்கும் போது, முட்டை ஓடுகள் தண்ணீரில் கால்சியத்தை வெளியிடுகின்றன, இது தாவரங்களுக்கு ரசாயனங்கள் இல்லாமல் ஊட்டமளிக்கும் இயற்கையான, பயனுள்ள உரத்தை உருவாக்குகிறது.



    முட்டை ஓடுகளிலிருந்து வரும் கால்சியம் மண்ணின் pH ஐ சமப்படுத்த உதவுகிறது. இதனால் தாவரங்கள் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சுகின்றன. தக்காளி மற்றும் மிளகு போன்ற கால்சியம் விரும்பும் தாவரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை குளிர்வித்து, உங்கள் தோட்டத்திலோ அல்லது உட்புற தாவரங்களிலோ பயன்படுத்தவும், அவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும். வேகவைத்த முட்டை நீர் தோட்டக்கலைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது யாருக்கு தெரியும்? முயற்சித்து தான் பாருங்கள்... 

    • நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
    • உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.


    வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

    வைட்டமி சி

    வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை பழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும்.

    மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்கு வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.


    கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது.

    எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது.

    இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

    வைட்டமின் ஏ

    வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


    வைட்டமின் பி

    வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.

    ஒமேகா 3

    ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.


    தயிர்

    தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.

    மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.

    புராக்கோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது.

    பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.



    வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

    தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம்.

    இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

    உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.

    உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடாது. உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை. 

    ×