என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நாய்கள் அன்பானவைதான். இருப்பினும் அவற்றால் ஆபத்து ஏற்படாத வகையில் கவனமாக இருங்கள். எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள்.
    பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் அவை, தனிமைக்கு ஏற்ற துணையாக திகழ்கின்றன. தற்போது கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால், பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதை போக்க நாய்கள் துணைபுரிகின்றன. நாய்களோடு பிள்ளைகள் அதிக பாசம் கொண்டு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. பொதுவாக வீட்டில் வளர்க்கும் நாய்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. என்றாலும், திடீரென்று நாய் கடித்துவிடவோ அல்லது வேறுவிதங்களில் காயம் ஏற்படுத்தி விடவோ வாய்ப்பிருக்கிறது.

    நாய் கடித்தாலோ, காயம் ஏற்படுத்தினாலோ செய்ய வேண்டிய முதலுதவி மிக முக்கியமானது. ஆழமான காயம் என்றால் சுத்தமான துணியால் லேசாக அழுத்தி, இரத்தம் வெளியேறுவதை தடுக்க வேண்டும். இரத்தப்போக்கு நின்ற பிறகு காயத்தை கழுவி சுத்தப்படுத்தவேண்டும். காயம் அடைபட்ட நிலையில் இருந்தால் அதில் கிருமிகள் பெருகி கிருமித்தொற்று ஏற்பட்டுவிடும். அதனால் காயத்தை துணியால் கட்டக்கூடாது. முதல் உதவி செய்த பின்பு அதற்குரிய டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். சிறிய காயம் என்றாலும் அந்த இடத்தில் நிறைய தண்ணீரைவிட்டு கழுவி ஆன்டிசெப்டிக் கிரீம் பூச வேண்டும்.

    நாய் கடியால் பாதிக்கப்பட்டவர், விஷ முறிவுக்கான ஊசியை போட்டுக்கொள்வது முக்கியம். பாதிக்கப்பட்டது குழந்தை என்றால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, அந்தக் குழந்தைக்கு ஏற்கனவே போடப்பட்டிருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் பற்றிய விவரத்தை எடுத்துச்செல்லவேண்டும். ஐந்து வருடத்திற்குள் டெட்டனஸ் வாக்சின் போடப்பட்டிருந்தால், மீண்டும் போடவேண்டியதில்லை.

    எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். நாய் அமைதியானதாக இருந்தாலும் அது தூங்கும்போதோ, உணவருந்தும்போதோ தன்னை தொந்தரவு செய்வதை அவை விரும்புவதில்லை. வளர்ப்பு நாய்களுக்கு எல்லாவிதமான தடுப்பூசிகளையும் அந்தந்த காலகட்டத்தில் போட்டுவிடுங்கள். நாய்கள் அன்பானவைதான். இருப்பினும் அவற்றால் ஆபத்து ஏற்படாத வகையில் கவனமாக இருங்கள்.
    குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் கண்டிப்பதையும் விட்டு விட்டு இப்படி செய்வதால் நல்ல பலனை காணலாம்.
    குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.

    குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே.

    இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.

    அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது. நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது. அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
    கொரோனாவால் சக நண்பர்களான மற்ற குழந்தைகளை பார்க்க முடியாததும், அவர்களோடு விளையாட முடியாததும் சிறுவர்-சிறுமியர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    சிறுவர்-சிறுமியர்கள் எப்போதுமே துறுதுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். பள்ளிகள் திறந்திருந்தால் அவர்களது துறுதுறுப்பிற்கு ஏற்ற சுறுசுறுப்பான பணிகள் இருந்துகொண்டிருக்கும். படிப்பார்கள்.. ஓடுவார்கள்.. விளையாடுவார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்திருந்த காலகட்டத்தில் அவர்களது சுதந்திர வாழ்க்கை இயல்பாக நடந்துகொண்டிருந்தது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு அவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடப்பது, அவர்களது இயல்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

    கொரோனாவால் சக நண்பர்களான மற்ற குழந்தைகளை பார்க்க முடியாததும், அவர்களோடு விளையாட முடியாததும் சிறுவர்-சிறுமியர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிற்குள்ளே அடைபட்டுக்கிடப்பதால் அவர்கள் அதிக கோபமும் கொள்கிறார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். குழுவாக அவர்கள் பிரிந்து வெளிவிளையாட்டுகளை விளையாடும்போது தோல்விகளை தாங்கும் பக்குவம் அவர்களிடம் ஏற்படும். இப்போது விளையாட முடியாமல் அவர்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் சிறிய தோல்வியைகூட தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

    குழந்தைகளுக்கு விளையாட்டு மிக அவசியம் என்பதால் அதை ஊக்குவிக்கும் விதத்தில் பெற்றோரே அவர்களுடன் சேர்ந்து தினமும் ஒரு மணிநேரமாவது விளையாடவேண்டும். தாத்தா, பாட்டிகளும் விளையாட்டைத் தொடரலாம். குழந்தைகளை பல நாட்கள் வீட்டிற்குள்ளே பூட்டிவைத்தால் அவர்களின் இயல்பான சுபாவத்தில் மாற்றம் உருவாகும். அளவுக்கு அதிகமாக அடம்பிடிப்பது, மூச்சுவாங்கும் அளவுக்கு தொடர்ந்து அழுவது போன்றவைகளில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, இயல்புக்கு கொண்டு வருவதுதான் இதற்கு தீர்வு.

    குழந்தைகள் கோபத்தில் கத்தும்போது பெற்றோரும் பதிலுக்கு கத்துவது அதற்கு தீர்வாகாது. ஒருவேளை அந்த நேரத்தில் பெற்றோரின் கத்தலுக்கு குழந்தை அடங்கிப்போவதுபோல் தோன்றினாலும், அடுத்து இருமடங்காக அடம்பிடிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

    குழந்தைகளை வீட்டிற்குள்ளே உட்காரவைப்பது அவர்களது உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறையை உருவாக்கும். உடலுக்கு தேவையான இந்த சத்து, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இது இன்றியமையாதது. காலை எட்டு மணிக்கு முன்போ, மாலையில் ஐந்து மணிக்கு பின்போ குழந்தைகளை சிறிது நேரம் வெயிலில் நிற்க அனுமதிக்கவேண்டும். அந்த நேரத்தில் பால்கனியில் விளையாட அனுமதிக்கலாம்.

    வழக்கமாகவே சிறுவர்-சிறுமியர்கள் உடல் பருத்து காணப்படுகிறார்கள். இப்போது கொரோனா அவர்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளுக்குள்ளே இருந்ததால் கூடுதல் எடைபோட்டிருக்கிறார்கள். வெளியே செல்லாததும், விளையாடாததும் அதற்கு காரணமாக இருந்தாலும், உணவிலும் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது கவனிக்கவேண்டிய அம்சம். குழந்தைகளின் உடல்எடை அதிகரிப்பது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். அதனால் குழந்தைகளுக்கு அளவோடு ஆரோக்கியமான உணவுகளை மட்டும் கொடுங்கள்.

    டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதும், சும்மாவே உட்கார்ந்திருக்கும் நேரங்களிலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது குழந்தைகளின் பழக்கமாக இருக்கிறது. வறுத்தது, பொரித்தது, இனிப்பு பலகார வகைகளை அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவைகளில் கலோரியும், கொழுப்பும் அதிகமிருக்கும். அவை உடலுக்கு ஏற்றதல்ல. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்துங்கள். கேரட், முட்டைக்கோஸ், கீரை வகைகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வழிகாட்டவேண்டும். இவை பசியை உடனே போக்கும். கலோரியும் மிக குறைவு. மலச்சிக்கல் போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.
    கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். இது உறவையும் வலுப்படுத்தும்.
    கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்கள் மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு விரும்புகிறார்கள். பெற்றோர் தங்களுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அவர்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும். அவர்களுடன் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகிவிடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். அவை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.

    ஹூலா ஹூப்ஸ்: இந்த விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் அல்லது நடன பயிற்சி அளிக்க விரும்பினால் இந்த பயிற்சி சிறந்தது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

    பேட்மிண்டன்: வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். கணினியிலோ, செல்போனிலோ, டி.வி.யிலோ மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மாறுதலை ஏற்படுத்திக்கொடுக்கும்.

    ஸ்கேட்டிங்: சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம். ஏனெனில் இது ஜாக்கிங் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுமோ அதைவிட அதிகமாகவே உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

    சைக்கிள் ஓட்டுதல்: எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும்.

    இதுபோன்ற குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். உறவையும் வலுப்படுத்தும்.
    பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    பெரியவர்களை போலவே சிறுவர்களும் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். குழந்தைகளுக்கான நோய் பாதிப்பை இளம் நீரிழிவு நோய் என்று குறிப்பிடுகிறார்கள். டைப்-1 நீரிழிவு நோய்தான் குழந்தைகளை தாக்குவதாக கண்டறியப்பட்டது. தற்போது டைப்-2 நீரிழிவு பாதிப்புக்கான அறிகுறிகளும் தென்பட தொடங்கி இருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

    பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பள்ளி பருவ குழந்தைகளில் மூன்று சதவீதம் பேருக்கும், இளம் பருவத்தினரில் நான்கு சதவீதம் பேருக்கும் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, டி குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ரத்தசோகை போன்றவை குழந்தைகளை தாக்கும் பொதுவான நோய்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம்.

    ‘‘இதற்கு முன்பு டைப்-1 நீரிழிவு மட்டுமே குழந்தைகளிடம் காணப்பட்டது. இப்போது டைப்-2 நீரிழிவும் பதிவாகி இருக்கிறது. அதுதான் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் அதுதான் நீரிழிவு நோயின் முக்கிய வகையாக மாறியுள்ளது’’ என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை ஆகியவை முக்கிய பங்குவகிப்பதாகவும், ஆரோக்கியமான உணவும், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

    ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கான நீரிழிவு நோயை கண்டறிந்துவிடலாம். எதிர்பாராத திடீர் எடையிழப்பு, அதிக பசி, சுவாசத்தில் பழங்களின் வாசனை, அதிக வியர்வை, அதிக சிறுநீர் வெளியேறுதல், மங்கலான பார்வை போன்றவை டைப்-1 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதிக தாகம், அதிக பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய்ப்பகுதி உலர்ந்து போகுதல், காயங்கள் ஆறுவதற்கு தாமதம், சோர்வு, சுவாச கோளாறு போன்றவை டைப்-2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாகும்.
    விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.
    இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்விமையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளை சொல்கின்றன.

    குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.

    குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்து விட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.

    ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்று கொள்கிறார்கள்.

    அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்று கொள்வார்கள்?. அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்?. பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன.

    பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெற போகிறார்கள்?. விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்த செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களை கற்க விடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
    குழந்தைகளுக்கு அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள் என்று கூறும் பெற்றோர்களே பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
    குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடவில்லை, சாப்பாடு என்றாலே அடம் பிடிக்கிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு “அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள்” என்பதை சொல்லக் கேட்டிருக்கிறோம்.

    குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் டயட்டீசியன்கள்.

    பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

    பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.
    பிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம். அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
    உலகில் கவலையற்ற உள்ளங்கள் என்றால் அது குழந்தையின் உள்ளம் தான் என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் அந்தப் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம் என்பதை பற்றி அறிய வரும்போது உள்ளபடியே மனம் வெதும்புகிறது.

    அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் வாய் மூடி உம்மென்று அமர்ந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களது மன வலிகளைக் கோபமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகளோ எப்போதும் சோகமாகவே காணப்படுவார்கள்.

    இதற்கு பின்னணியில் இருப்பது வழக்கம் போலவே சுற்றுப்புற சூழல்கள்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    குழந்தைகள் வளர்கின்ற வீட்டில் ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைகள் போன்றவற்றால் அவைகள் மன ரீதியாக பயத்தை சந்திக்கின்றன. பெற்றோர்களுடன் விரிசல்கள் ஏற்படுகின்றன. உறவினர்களுடனும் பேசாமல் தனித்து இருக்க விரும்புகின்றனர்.

    குழந்தைகள் பள்ளி செல்லும்போது அங்கே நட்பு மூலமாக சில மன வருத்தங்களை குழந்தைகள் சந்திக்கின்றனர்.

    குடும்பத்தில் பிரிவுகள் நிகழும்போது குழந்தைகளால் அதனைத் தாங்க முடிவதில்லை. அப்பா அம்மா ஆகிய இருவரும் விவாகரத்து மூலம் பிரிவது என்பது குழந்தைகளின் பிஞ்சு இதயத்தை நொறுங்க செய்கிறது.

    அதைப் போலவே அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிரிவும் அவர்களை பாதிக்கிறது. செல்லப்பிராணிகள் சில சமயம் இறந்து விட்டாலோ பிரிந்து விட்டாலோ அவர்கள் துயரத்தின் அளவு அதிகமாகிறது.

    குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் அவர்கள் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தொற்று நோய்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.

    உடன் வளரும் குழந்தைகளின் பிடிவாதம் முரட்டுத்தனம் எல்லாமே இந்தக் குழந்தையையும் பாதிக்கிறது. அதைப்போலவே பள்ளியில் பழகும் சக குழந்தைகளின் குணங்கள் இந்தக் குழந்தையை கடுமையாக மன ரீதியாகவே பாதிப்படைய செய்கிறது.

    பள்ளி மற்றும் வெளி சூழல்களில் ஏற்படும் தோல்விகள் அதன்பின்பான எதிர்வினைகள் குழந்தைகள் மனத்தை மிகவும் பாதிக்கிறது. பெற்றோரை பாதிக்கும் எந்தவிதமான உணர்வுகளும் குழந்தைகளையும் உடனே பாதிக்கிறது.

    உடல் நோய்க்காக நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்தின் பக்க விளைவுகளால் இந்த வகையான மன பாதிப்புகள் ஏற்படலாம்.

    மிக முக்கியமாக குழந்தையை யாரேனும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமயங்களில் வெளியில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இதனைத் தாண்டி பரம்பரை ரீதியான சில விஷயங்களால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இப்படியாக பல இடங்களில் சிறு குழந்தைதானே என்று நாம் அலட்சியமாக நினைக்கும் உயிர்கள் மனரீதியான பாதிப்பை அடைகின்றன.

    இதற்கான தீர்வாக உளவியலாளர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகின்றனர். பொதுவாக இவ்வகை மனஅழுத்தத்தால் (mental depression)  பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனாலு அவர்களை பேச வைப்பதுதான் முதல் தீர்வு. அவர்களுக்கு பிடித்த உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்களை மனம் திறந்து பேசவைக்கும் சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கித் தர வேண்டும்.

    அவர்கள் மனம் திறந்து பேசும்போது அதனைக் கூர்மையாகவும் அக்கறையோடும் கவனிக்கின்ற திறன் கேட்பவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்களே நேரடியாக களமிறங்குகையில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக அவர்கள் பேசும்போது குறுக்கிட்டு எனக்கு அப்பவே தெரியும் உனக்கு எதுவுமே தெரியலை சொன்னால் கேட்டால்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்தால் குழந்தையின் இதயம் மேலும் சுருங்கி விடும்.

    பிள்ளைகள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அறிவது அவசியம். அவர்கள் சொந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொறுமையாக அவர்களின் பிரச்னையைக் கேட்க வேண்டும். அவர்களின் பேச்சின் மூலம் அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

    குழந்தைகள் பேசும்போது தேவைப்படும் இடங்களில் ஆதரவாக நம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் அவர்களைத் தொடர்ந்து பேச ஊக்கப்படுத்த வேண்டும்.

    உதாரணமாக சில நாட்களாகவே நீ கவலையோடு இருக்கிறாய் என்பதை சொல்வதன் மூலம் தன் மீது தனது பெற்றோர் அக்கறையுடன்தான் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியும்.

    இப்படியாக அவர்களுடன் பேசி அவர்களின் துயரங்களில் உங்கள் பங்கை கொடுத்து அவர்களை பாதுகாப்பாக உணரவையுங்கள். அவர்களின் மன சிக்கல்களை அறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு பின்னரும் குழந்தை மன அழுத்தத்தில் இருந்தால் யோசிக்காமல் உளவியல் மருத்துவரை நீங்கள் அணுகுவதுதான் சிறந்த வழி.

    குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன.
    பொம்மைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் சில உண்மைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

    குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன. உடன் விளையாட குழந்தைகள் இல்லாத நேரத்தில் அந்த இடத்தை ‘டெடிபியர்’ போன்ற பொம்மைகள் பூர்த்தி செய்கின்றன.

    அத்தகைய பொம்மைகள் எங்கிருந்தாலும் அவை குழந்தைகளை அப்படியே ஈர்த்துவிடும். அந்த பொம்மைகளை வாங்கித்தரும்படி கேட்பார் கள். வாங்கிக்கொடுத்துவிட்டால், அதனோடு இரண்டறக்கலந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். அவற்றோடு பேசுவார்கள். விளை யாடுவார்கள். கட்டளையிடுவார்கள்.

    மென்மையான பொம்மைகளை குழந்தைகள் தங்கள் நண்பர்களாக கருதுவது இயற்கையாகவே நடக்கும் விஷயமாகும். டெடிபியர் குட்டிக்கரடி பொம்மைகள் மனிதர்களைப் போல மென்மையாக இருப்பதால், அதை உயிருள்ள மனிதர்களாக பாவித்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். அவர்கள் மனதிலும் அது ஒரு பொம்மை என்ற எண்ணம் மாறி ஒரு சக நண்பர் என்ற உணர்வு பதிவாகிவிடும்.

    குழந்தைகள் கையில் ஒரு பொம்மையிருந்தால், அவைகள் தனிமையை உணர்வதில்லை. தங்க ளோடு தங்களுக்கு பிடித்தமான நண்பர் இருப்பது போல் குழந்தைகள் உணர்கின்றன. குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்போதுதான் குழந்தைகள் முதல்முறையாக பெற்றோரை பிரியும். அந்த பிரிவு தெரியாமல் இருக்கவும், தைரியமாக பிரிந்திருக்கவும் அப்போது குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப் பார்கள். அந்த பயிற்சியில் முக்கிய பங்காற்றுவது பொம்மைகள்தான். அப்போது அவர்கள் முன்னால் எத்தனை விளையாட்டு பொருட்களை கொட்டி னாலும் அவைகள் பொம்மைகளைத்தான் தேர்வு செய்யும். அது தனிமையை விரட்டுவதோடு, பாதுகாப்பையும் அளிக்கின்றன. அதோடு தன் கையில் கிடைப்பதை தூக்கி எறியவும், உடைத்து பார்க்கவும் குழந்தைகள் விரும்பும். பொம்மைகள் குழந்தைகளின் வேகம், முரட்டுத்தனம் போன்ற அனைத்துக்கும் ஈடுகொடுத்து அவர்களது மனநிலையை மேம்படுத்துகின்றன.

    பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை பொம்மைகளால் இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும். ‘நீ சீக்கிரம் பால் குடிச்சிடு. நீ பால் குடித்தால் உன் பொம்மை சந்தோஷப்படும். விரைவாக குளிச்சி, டிரஸ் பண்ணிக்கோ! நீ சுத்தமாக இருந்தால்தான் உன் பொம்மைக்கு பிடிக்கும்’ என்றெல்லாம் கூறி, குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுவரலாம்.

    பாதுகாப்பான, மென்மையான பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளை அந்த பொம்மைகளோடு விளையாடவைக்க வேண்டும். அவர்கள் கற்பனைக்கேற்ப பொம்மைக்கு அண்ணன், தம்பி, பிரெண்ட் என்று பெயர் வைத்து விளை யாடுவார்கள். சில நேரம் பொம்மைகளை குழந்தைகளாகவும் அவர்களை அம்மாவாகவும் நினைத்து பொம்மைகளை மிரட்டுவார்கள். சாப்பிட வலியுறுத்துவார்கள்.

    அப்படி குழந்தைகள், பொம்மையிடம் சாப்பாடு பற்றி பேசத்தொடங்கிவிட்டால் சாப்பாட்டின் அருமை அந்த குழந்தைக்கு புரிந்துவிட்டது என்று அர்த்தம்.

    குழந்தைகளின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திடீரென்று அழும், சிடுசிடுப்பாகும், கோபப்படும். அதற்கான காரணம் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அது போன்ற நேரங் களில் குழந்தைக்கும் நமக்கும் இடையே இந்த பொம்மைகள் செயல்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிடும். தான் ஏன் கோபப்பட்டேன் என்பதை அதனோடு பேசும்விதமாக குழந்தைகள் வெளிப்படுத்துவார்கள். பொம்மைகளிடம் மனம்விட்டு பேசுவதால் குழந்தைகள் மனது லேசாகி விடும். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் விலகும்.

    குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங் களை தங்கள் வயது குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளும். தனது தோழிக்கான இடத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதனிடம் தனது மனதில் இருப்பவைகளை வெளிப்படுத்தும். பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள், பெற்றோர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை எல்லாம் பொம்மைகளிடம் பேசும். அப்போது பெற்றோர் கவனித்தால், தவறுகளை திருத்தலாம். உச்சரிப்புகளை சரிசெய்யலாம். பள்ளியில் கற்றுத்தந்த ரைம்ஸ்களை பொம்மைகளுக்கு கற்றுத்தரச் சொல்லுங்கள். குழந்தைகள் பாட முயற்சிக்கும்போது வார்த்தைகளை எடுத்துக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் பேச்சுத்திறன் வளரும். பொம்மைகளோடு பேசி, விளையாடும் குழந்தைகள் விரைவாகவே நன்றாக பேச தொடங்கிவிடும்.

    குழந்தைகளிடம் பகிர்ந்தளிக்கும் தன்மை வளர வேண்டும். அந்த நல்ல வழக்கத்தை பொம்மைகள் மூலம் ஏற்படுத்தலாம். தான் சாப்பிடும் பொருளை பொம்மைக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிடு என்று கூறி, பகிர்ந்து உண்ணும் பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும்.

    தற்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே குழந்தைதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்தான் பகிர்ந்து உண்ணும் பழக்கம் அவைகளுக்கு ஏற்படும். அந்த பண்பை பொம்மைகள் மூலம் ஏற்படுத்த லாம்.

    சாதாரணமாகவே பொம்மைகளை பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளவும் செய்யும். தவறி கீழே விழுந்து விட்டால் பதறி துடித்து அதை எடுத்து சமாதானப் படுத்தும் இயல்பும் குழந்தைகளிடம் உண்டு. இப்படி கவனிப்பு, உபசரிப்பு, பகிர்வு போன்ற பண்புகளை பொம்மைகள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
    வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.
    வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.

    பல்லாங்குழி விளையாட்டு 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் பெரும்பாலும் பெண்கள்தான் அதிகம் விளையாடுகின்றனர். பல்லாங்குழி மரப் பலகை, உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் பாறைகளிலும், தரைகளிலும் குழிகள் பறித்து பல்லாங்குழி விளையாடி உள்ளனர்.

    இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்...

    இது 2 பேர் விளையாடும் விளையாட்டு. பல்லாங்குழியில் மொத்தம் 14 குழிகள் இருக்கும். ஒருவருக்கு 7 குழிகள் என்று பிரித்து எதிரெதிரே அமர்ந்து ஆடுவார்கள். இந்த ஆட்டத்திற்கு புளியங்கொட்டை அல்லது ஏதேனும் விதைகளை காய்களாகக் கொண்டு விளையாடுவார்கள். ஒரு குழிக்கு 5 காய்கள் வீதம் நிரப்பி வைப்பார்கள்.

    முதலில் ஆட்டத்தை தொடங்குபவர் தன் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு குழியில் இருந்து காய்களை எடுத்து வலது புறமாக அடுத்தடுத்த குழிகளில் குழிக்கு ஒரு காய் வீதம் போடுவார். கையில் இருக்கும் காய்கள் முடிந்ததும், அடுத்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்து தொடர்ந்து அடுத் தடுத்த குழிகளில் போட்டுக்கொண்டே வருவார். கையில் எடுத்த காய்கள் முடிந்து, அடுத்தக் குழியில் காய்கள் எதுவும் இல்லை என்றால், அதற்கு அடுத்தக் குழியில் இருப்பதை சொத்தாக எடுத்துக் கொள்வார். காலியான குழிக்கு அடுத்தக் குழியும் காலியாகவே இருந்தால் எதுவும் கிடைக்காது. பின்னர் எதிரே இருப்பவர் ஆட்டத்தை தொடர்வார்.

    இவ்வாறு மாறிமாறி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, இடையிடையே வெற்றுக் குழியில் ஒவ்வொரு காயாக விழுந்து, 4 காய்கள் சேர்ந்தால் அந்த குழிக்குரியவர் அதனை ‘பசு’ என்று கூறி எடுத்துக் கொள்வார். சொத்து, பசு என்று எடுத்தபடியே, பல்லாங்குழியில் இருக்கும் காய்கள் காலியானதும், இருவரும் தங்களில் இருக்கும் காய்களை கொண்டு மீண்டும் குழிகளை நிரப்புவர். அப்போது ஒருவரிடம் அதிக காய்களும், இன்னொருவரிடம் குறைவான காய்களும் இருக்கும். 15 காய்கள் குறைவாக கிடைத்தது என்றால் தன்னுடைய பகுதியில் 3 குழிகளை தக்கம் என்ற பெயரில் காலியாக விட்டு விட்டு, மற்ற குழிகளில் காய்களை நிரப்பி ஆட்டத்தை தொடர்வார். தக்கம் என்ற குழியில் எதிரே விளையாடுபவர் காய்களை போட மாட்டார்.

    ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது, அவர் கையில் எஞ்சி இருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய 5 கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒரு காயை இட்டு ஆட்டம் தொடரும். அதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் நிர்கதியாகி நிற்கின்றபோது தான் ஆட்டம் முற்றுப் பெறுகிறது.

    இந்த ஆட்டத்தின் மூலம் நினைவாற்றல் பெருகும். மனதை ஒருநிலைப்படுத்த முடியும். மனதில் இருக்கும் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கும். விரல்களால் தொடர்ந்து விளையாடும் பொழுது இரத்த ஓட்டம் அதி கரித்து, உடலும் உற்சாகமாக இருக்கும். தொடர்ந்து விளையாடும்போது பொழுது போவதே தெரியாது. உறவுகளையும் மேம்படுத்தும்.
    கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தங்கள் குழந்தைகளை பற்றிய புரிதலே நிறைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருக்கிறது. உங்கள் எதிர்கால சந்ததியை நோயாளியாக உருவாக்காமல் இருக்க இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
    இந்தியாவில் 10 முதல் 13 வயதுக்கு உள்பட்ட 23 சதவீத குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, கிட்டத்தட்ட நான்கில் ஒரு குழந்தை அதிக உடல் எடை கொண்டதாக இருக்கிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தங்கள் குழந்தைகளை பற்றிய புரிதலே நிறைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள், தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென்றிருப்பது ஆரோக்கியமானது என்று கருதுகிறார்கள். சிறுவயதில் குண்டாக இருந்தாலும் இளம் வயதில் இயல்பான எடைக்கு திரும்பிவிடுவார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, அளவுக்கு அதிகமான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அதனால் உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்குகள் படி, ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐந்து கோடி பேர் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் புத்தகப்பையையும் சுமந்துகொண்டு நடந்தே பள்ளிக்கு சென்றார்கள். பள்ளிகளும் சற்று தூரத்தில் இருந்தன. அப்போது பள்ளிகளில் விளையாடினார்கள். வீட்டிற்கு வந்த பின்பும் மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே சக வயதினர்களோடு ஓடியாடி விளையாடினார்கள். பெரும் பாலும் வீட்டில் அம்மா சமைத்துக்கொடுத்த உணவுகளையே சாப்பிட்டார்கள். அந்த உணவுகளும் பூச்சி மருந்து கலப்பற்ற இயற்கை உணவுகளாக இருந்தன. அதனால் அளவான உடலோடும், ஆரோக்கியத்தோடும் வளர்ந்தார்கள்.

    இன்றைய நிலை அப்படியில்லை. குழந்தைகள் பள்ளி வாகனங்களில் செல்கிறார்கள் அல்லது பெற்றோரே சொந்த வாகனத்தில் கொண்டுபோய் விடுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட ஆர்வம் இருந்தாலும் மைதானம் இல்லாத பள்ளிகளிலே படிக்கிறார்கள். வீடுகளுக்கு வந்து விளையாடலாம் என்றால் அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் இருப்பதால், அதனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். பலர் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பதால், வீட்டின் அருகில் விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதிக உடல் எடைகொண்ட குழந்தைகளால் சரிவர சுவாசிக்க முடிவதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு நோய்கள் மற்றும் தூக்க குறைபாடு போன்றவை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

    பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே குழந்தைகளின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். காலையில் சில குழந்தைகள் உணவு சாப்பிடாமலே பளளிக்கு சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் மிக குறைந்த அளவிலே காலை உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் காலை உணவு போதுமான அளவு சாப்பிடவில்லை என்றால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் இயல்பாக நடக்காது. நடக்காவிட்டால் அவர்களது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் காலை உணவை கட்டாயம் சாப்பிடவையுங்கள். அவர்கள் நொறுக்குத்தீனிகள் கேட்கும் போதெல்லாம் அவைகளை வாங்கிக்கொடுக்காமல் காய்கறி, பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொடுங்கள்.

    குழந்தைகளிடம் உடல் உழைப்பை அதிகரியுங்கள். ஓடியாடி அவர்களை வேலைகளை செய்ய பழக்குங்கள். அதற்கு தக்கபடி உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டு வேலைகளை செய்தால் அவர்களும் செய்வார்கள். நீங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்துசென்றால், அவர்களும் அதற்கு பழகுவார்கள். நீங்கள் மணிக்கணக்கில் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்காதவர்களாக இருந்தால் அவர்களிடமும் நல்ல மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும். உங்கள் எதிர்கால சந்ததியை நோயாளியாக உருவாக்காமல் இருக்க இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வையுங்கள்.
    40 வயதுக்குப் பிறகே பலர் சேமிப்பு குறித்து அக்கறை கொள்கிறார்கள். ’ஒரு பத்தாண்டுக்கு முன் சேமிக்கும் யோசனை வந்திருந்தால், நாலைந்து லட்சமாவது கையில் இருந்திருக்குமே’ என்று புலம்பும் பலரை நாம் பார்த்திருப்போம்.

    உண்மையில் சேமிப்பைத் தொடங்க சரியான வயதுதான் என்ன?

    சட்டென்று உங்களின் பதில்… சம்பாதிக்க ஆரம்பித்ததுமே சேமிக்கத் தொடங்கிவிட வேண்டும் என்பதுதான்.

    ஆனால், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் செலவு செய்யத் தொடங்குகிறோமா… என்ன?

    இல்லைத்தானே… நாம் செலவு செய்ய எப்போது தொடங்குகிறமோ…. அப்போதே நாம் சேமிக்கவும் தொடங்குவதே சரியானது.

    ஆம். பாக்கெட் மணியாக வரும் காலத்திலிருந்தே சேமிக்கக் கற்றுக்கொடுப்பது அவசியம். சேமிப்பு என்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. அந்த மனநிலையைக் குழந்தை பருவத்திலிருந்து கற்றுத்தர வேண்டும்.

    அதற்காக குழந்தைகள் விரும்பி வாங்கித் தின்பதைத் தவிர்க்கச் சொல்லி காசு சேமிக்க சொல்ல வேண்டுமா? என்று கேட்காதீர்கள்.

    பத்து ரூபாய் பாக்கெட் மணியில் ஒரு ரூபாயை மிச்சம் பிடிக்கச் சொல்வதே சேமிப்பின் தொடக்கம்.

    குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் நிறைய திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். அது உங்களுக்குக் கூடுதல் போனஸ். அதன்வழியே நீங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

    எது எப்படியானாலும் சேமிப்பின் வழியே உங்கள் குடும்பத்திற்கு பலன் கிடைக்கப்போவது என்பது நிச்சயமான ஒன்று.

    சரி… குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைத் தூண்டும் ஐந்து யோசனைகள்.

    முதலில் நீங்கள் சேமிக்கத் தொடங்குங்கள். எப்படிச் சேமிக்கிறீர்கள்… அதை எவ்வாறு முதலீடு செய்கிறீர்கள் என்பதை குடும்பத்துடன் உங்கள் குழந்தையைச் சேர்த்துக்கொண்டு உரையாடுங்கள். அதற்கான ஆவணங்கள் இருந்தால் அதை எளிமையாகச் சொல்லி எல்லோருக்கும் புரிய வைய்யுங்கள்.

    இது ஒருவகையில் குழந்தைகளின் மனதைத் தூண்டி விடுவதற்கான முயற்சி அல்லது சேமிப்பதால் பலன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

    அவர்களுக்குத் தரும் பாக்கெட் மணியில் பத்து சதவிகிதம் சேமிக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால் பாராட்டுங்கள். வீட்டுக்கு வரும் உங்கள் நண்பர்களிடம் கூறி பாராட்டச் சொல்லுங்கள்.

    ஒருவேளை பாக்கெட் மணியில் சேமிக்க மறுக்கிற குழந்தை எனில், நீங்கள் கூடுதலாக பத்து சதவிகித பணம் தந்து அதைச் சேமிக்கச் சொல்லுங்கள். ஒரு மாத முடிவில் எவ்வளவு சேமித்திருக்கிறார்களோ அதன் இன்னொரு மடங்கை நீங்கள் தந்து அதை வங்கி அல்லது உண்டியலில் போடச் சொல்லலாம்.
      
    உங்கள் குழந்தையின் சேமிப்பில் ஒரு பொருள் வாங்குங்கள். அதை எல்லோரும் பார்க்கும் இடத்தில் வைத்து, அதன்மீது ‘இந்தப் பொருள் எங்கள் குழந்தையின் சேமிப்பில் வாங்கியது’ என்று எழுதி ஒட்டுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் சேமிக்க ஆசை ஏற்படும்.

    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வைய்யுங்கள்.

    சிறுவர் சேமிப்பு திட்டம் குறித்து எங்கேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் அவசியம் அழைத்துச் செல்லுங்கள்.

    இவையெல்லாம் உங்கள் குழந்தையின் மனநிலையில் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும். பிறகு, சேமித்த பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதையும் கற்றுக்கொடுங்கள். அதுவும் மிகவும் முக்கியமானது.
    ×