
பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பள்ளி பருவ குழந்தைகளில் மூன்று சதவீதம் பேருக்கும், இளம் பருவத்தினரில் நான்கு சதவீதம் பேருக்கும் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, டி குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ரத்தசோகை போன்றவை குழந்தைகளை தாக்கும் பொதுவான நோய்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம்.
‘‘இதற்கு முன்பு டைப்-1 நீரிழிவு மட்டுமே குழந்தைகளிடம் காணப்பட்டது. இப்போது டைப்-2 நீரிழிவும் பதிவாகி இருக்கிறது. அதுதான் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் அதுதான் நீரிழிவு நோயின் முக்கிய வகையாக மாறியுள்ளது’’ என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை ஆகியவை முக்கிய பங்குவகிப்பதாகவும், ஆரோக்கியமான உணவும், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கான நீரிழிவு நோயை கண்டறிந்துவிடலாம். எதிர்பாராத திடீர் எடையிழப்பு, அதிக பசி, சுவாசத்தில் பழங்களின் வாசனை, அதிக வியர்வை, அதிக சிறுநீர் வெளியேறுதல், மங்கலான பார்வை போன்றவை டைப்-1 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதிக தாகம், அதிக பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய்ப்பகுதி உலர்ந்து போகுதல், காயங்கள் ஆறுவதற்கு தாமதம், சோர்வு, சுவாச கோளாறு போன்றவை டைப்-2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாகும்.