என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.
    மக்களுடைய வாழ்க்கையில் பத்து வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று போல் அன்று அத்தனை பேரும் வீட்டிற்குள் ஆளுக்கொரு செல்போனுடன் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கவில்லை. `ஆப்'பில் ஆர்டர் செய்து ஆப்பிளை வரவழைக்கவும் இல்லை. அன்று ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது தித்திப்பான மனநிலையை தந்தது. இன்று நினைத்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று புசிப்பது வழக்கமாகிவிட்டது. டவுனில் இருக்கும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதுகூட அப்போது ஒரு திருவிழா போன்றுதான் இருந்தது. இப்போது அந்த ஆர்வத்தையும் காலம் அடித்துச்சென்றுவிட்டது. இப்படி பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.

    புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்

    `தனிக்குடித்தனத்திற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். மருமகள்களுக்கு, மாமியாரை பிடிக்காது' என்றுதான் பொதுவாக பெண்களை பற்றி சொல்வார்கள். ஆனால் இன்றைய பெண்களின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்துகொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்றும் சொல்கிறார்கள்.

    இந்த சர்வேயில் பங்குபெற்ற இளந்தாய்மார்களில் ஒருவர் ‘‘எங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வளர்வது மிக நல்லது என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். என் கணவர் மும்பையில் வேலைபார்க்கிறார். நான் டெல்லியில் வேலைபார்த்தபடி இரட்டைக் குழந்தைகளுடன் வசித்தேன். எங்கள் குழந்தைகளை `டே கேர்' ஒன்றில் தினமும் விட்டுவிட்டு செல்வேன். பின்பு நான் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகரீதியான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்த நாட்களில் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் டே கேர் சென்று குழந்தைகளை அழைத்துவர என்னால் முடியவில்லை.

    இத்தகைய நெருக்கடிகளால் எங்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது. அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும், சுபாவங்களிலும் மாற்றங்கள் உருவாகின. அதனால் குழந்தைகளை டே கேருக்கு அனுப்பவில்லை. எனது பெற்றோரும், எனது கணவரின் பெற்றோரும் மாறி மாறி வந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள். மாமனார்- மாமியார் ஒரு மாதம் வந்து தங்கியிருந்துவிட்டு சென்றதும், எனது பெற்றோர் வருவார்கள். பெரியவர்கள் வந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கியதும், குழந்தைகளிடம் நல்ல மாற்றம் உருவானது. அவர்களது குணாதிசயங்களும் மாறின. கூட்டுக் குடும்பத்தின் பெருமை இப்போதுதான் எனக்கு புரிகிறது’’ என்கிறார். சர்வேயில் பங்குபெற்ற பெரும்பாலான தம்பதிகளின் கருத்து இதுபோல்தான் இருக்கிறது.
    ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சண்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த சண்டைகள் ஏன் ஏற்படுகிறது இதை எப்படி நிர்வகிப்பது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.
    குழந்தைகளை சமாளிப்பது என்பது எல்லா பெற்றோர்களுக்கும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சண்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பொருட்களுக்காக, டிரெஸ்களுக்காக என அடிக்கடி சண்டை போட்டு பெற்றோர்களையே தலையை பிய்க்க வைத்து விடுவது தான் குழந்தைகளின் சேட்டைகளாக உள்ளது. சரி வீட்டில் தான் இப்படி என்று நினைத்தால் பள்ளிக் கூடங்களிலும் இவர்களது சண்டைகள் நின்ற பாடாக இருப்பதில்லை. இந்த சண்டைகள் ஏன் ஏற்படுகிறது இதை எப்படி நிர்வகிப்பது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.

    உடன் பிறப்புகள் என்று வரும் போது சண்டை வருவது இயல்பானது தான். இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள். அவர்கள் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டு இருக்கும் பருவம் இது. இருப்பினும் அவர்களின் கருத்து வேறுபாடுகளால் ஒருவருக்கொருவர் காயப்படுத்துவதற்கு முன்பு அதை நீங்கள் உடைக்க வேண்டும்.
    ​எப்படி சமாளிப்பது

    எனவே எதற்காக சண்டை வந்தது என்பதற்கான காரணத்தை முதலில் நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

    ஒரு குழந்தையை பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்

    குறைகளோடு தங்கள் உடன்பிறப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்.

    அதே மாதிரி பெற்றோர்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன்பு சண்டை போடாதீர்கள். அவர்கள் உங்களை அப்படியே பின்பற்றுவார்கள்.

    உங்க குழந்தைகளின் சண்டைகள் எல்லை மீறிய ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக அது கவனிக்கப்பட வேண்டும். இந்த வகையான சண்டை குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் மற்றும் உறவுகளுடன் எதிர்கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்க குழந்தைகள் ஒத்து வரவில்லை என்றால் அவர்களை குழந்தைகள் நல நிபுணரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

    ஒப்பீடு என்பது எப்படி இருக்கக் கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
    ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு விசயங்கள் நடக்கின்றன. ஒன்று அவரைப் போல தான் இல்லையே எனும் தாழ்வு மனப்பான்மை. அடுத்து, ஒப்பீடாக இருப்பவர்மீது உருவாகும் வெறுப்பு. இவை இரண்டுமே உங்கள் பிள்ளையின் மனநிலையைச் சிதைக்கக்கூடியவைதான். தாழ்வு மனப்பான்மை தன்னை மற்றவர்களிடமிருந்து விலகச் செய்துகொண்டு தனிமையைக் கொடுத்துவிடும். வெறுப்பு என்பது அடுத்தவர்மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு மாற்றிவிடும். எனவே, ஒருவரோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தையின் பழக்கத்தை மாற்ற முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

    தவறு செய்வது என்பது தவிர்க்கவே முடியாத இயல்பு. தவறு செய்யும் குழந்தையை, மற்றவரின் செய்கையோடு இணைத்து ஒப்பிட்டுப் பேசுகிறோம். இதை நமது குழந்தையின் செயலைத் திருத்துவதற்கு எனச் செய்கிறோம். ஆனால், நாம் முன்பு சொன்னதுபோலப் தாழ்வு மனப்பான்மையும் வெறுப்பும் நமது குழந்தையின் திறமைகளை மழுங்கடித்துவிடும். அதே சமயம் ஒருவரை ரோல் மாடாக முன்னிறுத்தும்போது அது நம் குழந்தை செய்யும் தவற்றைத் திருத்தும் நோக்கில் நாம் சொல்லவில்லை. அதனால் குழந்தையும் அதேபோல யோசிக்காது.

    கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பிள்ளையிடம் சச்சினை ரோல் மாடலாகச் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் வளர்ந்த சூழல், பயிற்சியில் காட்டிய அக்கறை, தோல்வியில் துவண்டுவிடாமல் போராடியது, விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் களமிறங்கியது.... உள்ளிட்ட பல விஷயங்களைச் சொல்வோம். அப்படிச் சொல்லும்போது அவரோடு உங்கள் குழந்தையை ஆங்காங்கே ஒப்பிடத்தான் செய்வீர்கள். ஆனாலும், தான் ஆர்வத்துடன் இருக்கும் துறையில் சாதித்த ஒருவரைப் பற்றிச் சொல்லும்போதும் ஒப்பிடும்போதும் அதை நெகட்டிவ் விஷயமாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை.

    ரோல் மாடல்களைப் பற்றிக் கூறும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரை எதன் நோக்கில் பின்பற்றச் சொல்கிறோம். அதை மட்டும் கவனிக்க உங்கள் குழந்தையைப் பழக்க வேண்டும். அவரின் தனி மனித விஷயங்களில் சில முரண்பட்டவை இருக்கலாம். அவற்றைக் கழித்துவிடவும் குழந்தைகளிடம் கூற வேண்டும். இல்லையெனில் அவரை ஜெராக்ஸ் எடுக்கத் தொடங்கிவிடுவர். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒப்பீடு என்பது எப்படி இருக்கக் கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. திட்டமிட்டு முன்நகரச் செய்வது. இந்த வேறுபாட்டை பெரியவர்களை விட குழந்தைகள் மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். எனவே, நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.
    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் சென்சிடிவ்வாகவும் இருக்கும். அதனால் தான், குழந்தைகளின் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்.
    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் சென்சிடிவ்வாகவும் இருக்கும். கொசு, எறும்பு ஆகியவை கடித்தவுடன் சிகப்பான திட்டுகளும், கொப்புளங்களும் மற்றும் அலர்ஜியும் அவர்களுக்கு ஏற்படும். அதனால் தான், குழந்தைகளின் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். மிகவும் மென்மையாக இருக்கும் குழந்தைகளின் சருமம் குளிர்காலங்களில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    ஒரு குழந்தையின் தோல் வயது வந்தவரின் தோலை விட ஐந்து மடங்கு வேகமாக ஈரப்பதத்தை இழக்கிறது. எனவே சுற்றியுள்ள காற்று அவற்றின் ஈரப்பதத்தை இழக்கும்போது மிருதுவாக இருக்கும் குழந்தைகளின் சருமம் வறண்டு காணப்படும். இது குழந்தைகளின் முகம், கை, முழங்கால் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், உடலில் தடிப்பு போன்ற நிறைய சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    வறண்ட சருமம் உள்ள குழந்தைகளின் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளிக்க வைத்தால் சருமம் சீராகும்.

    எக்ஸிமா எனப்படும் சரும பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளின் முகத்தில் தான் ஏற்படும். தோல் அரிப்பு, சிவப்பு நிற திட்டுக்கள், வீக்கமடைதல், நீர் வடிதல் மற்றும் செதிலாக உரிதல் போன்ற பிரச்சனைகள் உடலில் பல்வேறு இடங்களில் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆஸ்துமா அலர்ஜி அல்லது சருமப் பிரச்சனை இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சும் போதும், அதீத வறட்சி ஏற்பட்டாலும் குழந்தைக்கு இப்படியான சரும பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில், குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது வெப்பநிலையில் திடீர் மாற்றத்திற்கு ஆளாகியிருந்தாலும் தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.

    குளிர்காலங்களில் சிவப்பு திட்டுகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதால், வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழங்களை குழந்தைகள் உண்டால் உடலுக்கு சக்தி தரும்.

    வளரும் குழந்தைகளுக்கு காலணி வாங்கும்போது காலுக்கு மென்மையான, தாராளமாக கால்களில் பொருந்தும் விதமாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.
    பொதுவாக காலணிகள் தேர்வு விஷயத்திலும் குழந்தைகளின் கவனம் சிதறும். குழந்தைகளை கவரும் விதமாக ஏராளமான டிசைன்களில் காலணிகள் அணி வகுக்கின்றன. பெரியவர்களின் காலணிகளை விட அவற்றின் விலை அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட காலம் மட்டுமே அதனை அணிய முடியும். வளரும் குழந்தைகளுக்கு காலணி வாங்கும்போது காலுக்கு மென்மையான, தாராளமாக கால்களில் பொருந்தும் விதமாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.

    பெரியவர்கள் காலணிகளை பல நாட்கள் அணிவதற்கு ஏற்ப பராமரிப்பார்கள். குழந்தைகளால் அவ்வாறு செய்ய முடியாது. சில நாட்களுக்குள்ளாகவே உடைகள், காலணிகளை உபயோகப்படுத்த முடியாமல் போக நேரிடலாம். அதனால் வளரும் குழந்தை களுக்கு அதிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    விளையாட்டு பொருட்கள்: குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு பயன்படும் விதமாக விளையாட்டு பொருட்களின் தேர்வு அமைய வேண்டும். அதனை மையமாக வைத்துத்தான் அவர்களின் கற்பனை திறன் வளரும். அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். ஆண், பெண் குழந்தைகள் இருவருக்கும் இயல்பாகவே விருப்பங்கள் வேறுபடும். அதற்கேற்ப பொருட்களை தேர்வு செய்ய அனுமதிக்கலாம்.

    கூடுமானவரை வன் முறையை தூண்டும் விளையாட்டு சாதனங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று யுனிசெப் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. விளையாட்டு சாதனங்கள் வாங்கும்போது அது எந்த பொருளில் செய்யப்பட்டது என்பதை பார்த்து வாங்குங்கள். தரமற்ற பிளாஸ்டிக், அலர்ஜி ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்த விளையாட்டு பொருட்களை தவிருங்கள்.

    எப்போதும் பொம்மை களையே வாங்கிக்கொடுக் காமல் விதவிதமான பொருட்களை பரிசளியுங்கள். குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கான ஷாப்பிங் விஷயத்தில் பொறுமை தேவை. அவர் களின் நலனை மனதில் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும்.
    மகிழ்ச்சியின் முதலிடத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற குடும்பத்தினரும், இரண்டாவது இடத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பெற்றவர்களும் இருக்கிறார்கள்.
    நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போன்று, எல்லா விஷயங் களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் நேர் மறையானது. இன்னொரு பக்கம் எதிர்மறையானது. சிலர் எல்லாவற்றையும் நேர்மறையாகவே பார்ப்பார்கள். சிலருக்கு எதிர்மறையாக மட்டுமே பார்க்க தெரியும். குழந்தை பிறப்பு விஷயத்திலும் அப்படிதான். திருமணமான பெண் தாய்மையடைய கூடுதலாக சில வருடங்கள் ஆகிவிட்டால், எதிர்மறையாக பேசி அந்த குடும்பத்தில் குழப்பம் நிகழச் செய்வார்கள்.

    அவள் தாய்மையடைந்துவிட்டால் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று அடுத்த சர்ச்சையை கிளப்புவார்கள். பெண் குழந்தை என்றால் அதன் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதற்கும் எதிர்மறையான சாயம் பூச முயற்சி செய்வார்கள். ஆனால் இப்போது பெண் குழந்தை பிறப்பதை பலரும் எதிர்மறையாக எடுத்துக்கொள்வதில்லை. ‘தமது குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் பெண் வடிவில் அடித்திருக்கிறது’ என்று மகிழ்கிறார்கள். அப்படி மகிழக்கூடியவர்களுக்கு கூடுதலாக ‘போனஸ்’ ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது அவர்கள் வீட்டில் கூடுதலாக இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுமாம். இதை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்கள்.

    அந்த ஆராய்ச்சி சொல்லும் சுவாரஸ்யமான தகவல்கள் என்னவென்று பார்ப்போமா!

    ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் நெருக்கமாக வளர்வார்களாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார்களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம். எல்லா பெண் குழந்தைகளுமே பெற்றோரின் பாராட்டுக்கு ஏங்குவார்கள். அதனால் பெற்றோருக்கு பிடிக்காத செயல்களில் அவர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.

    வீட்டில் பொதுவாக பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

    அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இந்த பெண் குழந்தைகளை விரும்பத் தொடங்கிவிடுவார்களாம். அந்த குழந்தைகள் மூலம் வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

    ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு குழந்தைகளை பெற்றவர்கள் ‘அஸ்திக்கு ஒன்று.. ஆசைக்கு ஒன்று’ என்று மகிழ்ந்தாலும் அவர்களுக்குள் அவ்வப்போது அடிதடி கலாட்டாக்கள் அரங்கேறவே செய்யும். ‘தான் ஆண் என்று ஒன்றும், பெண் என்றாலும் தான் பெருமையானவள்’ என்று இன்னொன்றும் அடிக்கடி சொல்லி மோதிக்கொண்டிருக்கும். இரண்டும் பெண் என்றால், ‘உன்னை மாதிரிதான் நானும்’ என்று இருவருக்குள்ளும் நன்றாக ஒத்துப்போகிறதாம். அது மட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒரே பாலினமாக இருப்பதால் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருக்கிறார்கள்.

    அதனால் மகிழ்ச்சியின் முதலிடத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற குடும்பத்தினரும், இரண்டாவது இடத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பெற்றவர்களும் இருக்கிறார்கள். இதில் மூன்றாம் இடம் யாருக்கு தெரியுமா? இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு!

    ஆய்வு இப்படி சொன்னாலும் மகிழ்ச்சி என்பது பாலினம் சார்ந்தது அல்ல. எந்த குழந்தையாக இருந்தாலும், வீட்டிற்கு ஒரே குழந்தையாக இருந்தாலும் வளர்க்கும் விதத்தில் குழந்தையை மகிழ்ச்சிகொள்ளச் செய்யலாம். மகிழ்ச்சி என்பது பெற்றோரிடம் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.
    எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.
    தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளுதல் அல்லது தைரியமாகப் போராடும் நிலை குறைந்து வருகிறது.

    இதற்கு காரணம் சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற சுயநலம்தான். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

    சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி அவர்களை தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

    இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்...

    * பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

    * ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    * ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

    * அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அனாவசியம் என்பதை சொல்லிக் கொடுங்கள்.

    * ஒரு குழந்தை வளரும் வீட்டில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

    * அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

    * ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

    * இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

    * உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

    * பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.

    * கணவன், மனைவி இடையே பிரச்சினையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

    * செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

    * போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

    * அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்
    குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள்.
    குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதற்கு விசேஷ திறமை வேண்டும். தேவையற்ற பொருளை குழந்தை கை காட்டி கேட்டால் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக்கொடுத்தாக வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே அடம் பிடித்து அழத் தொடங்கிவிடும். குழந்தைகளை சமாதானப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்போதெல்லாம் அத்தியாவசிய தேவைக்காக பொருள் வாங்குவது குறைந்துவிட்டது.

    தங்களின் மகிழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு பலரும் பழகிவிட்டார்கள். அதிலும் குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. பணம் செலவானாலும் பரவாயில்லை, குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள். விலையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதை தெரிந்து வைத்திருக்கும் பல நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் பொருட்களை கடையின் வாசலில் வைத்திருப்பார்கள்.

    ஆடைகள்:

    குழந்தைகள் எப்போதும் வண்ணங்களை விரும்பும் குணம் கொண்டவர்கள். கண்கவர் வண்ணங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். அதனால்தான் உடைகள் வாங்கும்போது அவை உடலுக்கு மென்மையாக இருக்குமா? என்பதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். ஆடையின் நிறம் பிடித்துவிட்டால் அதைத்தான் எடுத்தாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்த ஆடை குழந்தைகளின் உடல் அமைப்புக்கு சவுகரியமாக இருக்கிறதா? என்பதை பெற்றோர்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஏராளமான டிசைன்களை கொண்ட உடை அசவுகரியத்தை தரக்கூடும். கனமாக இருக்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். நிறம் மட்டும் பிடித்தால் போதாது. அணிவதற்கும் வசதியாக இருக்க வேண்டும். எந்த உடையாக இருந்தாலும் குழந்தைகள் கொஞ்ச காலமாவது அணிந்து மகிழ வேண்டும். குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதால் ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    அதிக விலை கொடுத்து ஆடையை வாங்கிவிட்டு, சில நாட்கள்கூட அணிய முடியாமலும் போகலாம். பண விரயம்தான் மிச்சம். பணத்தை செல வளிக்க தயங்கும் பெற்றோர் கூட குழந்தைகள் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள். இவர்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்டு விலை உயர்ந்த ஆடைகள் சந்தையை அலங்கரிக்கின்றன. அவ்வளவு விலை கொடுக்கும் அளவிற்கு அந்த ஆடையில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம்.
    உறவு முறைத் திருமணம் தாய் வழித் தொற்றுகளான ரூபெல்லா மேக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள், பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகள், கடும் மஞ்சள் காமாலை போன்றவை பிறந்த குழந்தையின் காது நரம்பை பாதிக்கின்றன. இதனால் பிறப்பின் போதே குழந்தை காது கேளாத் தன்மையை பெறுகிறது.

    மூளைக் காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களாலும் காதில் நீர்க் கோர்த்தல், நச்சு மருந்துகளை பயன்படுத்துதல், தலை அல்லது காதுகளில் காயம் ஏற்படுதல், அதிக ஒலி உள்ள இடங்களில் பணி செய்தல், உணர்ச்சி உயிரணுக்கள் சிதைதல், மெழுகு அல்லது அயல் பொருட்கள் காது பாதையை அடைத்தல் போன்ற காரணங்களால் எந்த வயதிலும் காது கேளாத் தன்மை ஏற்படலாம்.தற்போது அறிவியல் வளர்ச்சியால் குழந்தையின் கேட்கும் திறனை முதல் நாளிலேயே கண்டறிந்து விடலாம்.

    காது கேட்கும் திறனை இழந்தால், அது நமக்கு பெரும் இழப்பாக அமையும். பிறரோடு உரையாட இயலாமல் போவதே காது கேளாமையின் முக்கிய பாதிப்பாகும். இதனால் குழந்தைகளால் பேச்சு மொழியை வளர்க்க முடியாமல் போகிறது. காது கேளாமையும், இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாக பாதிக்கிறது. எனினும் காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புக்கான வாய்ப்பை கொடுத்தால் அவர்களும் பிறரைப் போல செயலாற்ற முடியும்.

    தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகளை உண்டாக்குகிறது. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகிறார்கள். வேலையில் இருப்போரும் பொதுவாக உழைப்பவரோடு கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம்.

    மொழி வளர்ச்சிக்கும், பேச்சு வளர்ச்சிக்கும் உகந்த கால கட்டம் இதுவே ஆகும்.இக்கால கட்டத்தில் கண்டறிந்து தகுந்த பயிற்சி அளித்தால் சாதாரண குழந்தைகள் போல் அனைத்து அறிவு சார் திறனும் பெற்று குழந்தைகள் ஒளிர்விடுவார்கள். வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும். இது அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க நன்கு உதவும்.சைகை மொழியில் அவர்களுடன் பேசுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். செவித்துணைக் கருவிகள் நன்முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்டறிய வேண்டும்.

    பெற்றோருக்கு அடுத்த பங்கு ஆசிரியர்களிடம் உள்ளது. ‘வாய் வழிக் கல்வி’ முறையே காது கேளாத குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும்போது கண்டிப்போடு இருப்பதை விட அன்போடு இருப்பது மிக முக்கியம். பிற மாணவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை இவர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்போம்.
    பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே:
    குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே:

    கேள்வி கேட்பதற்கு ஊக்குவித்தல்:

    குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பது. கேள்வி கேட்கும் முன், அது சார்ந்த விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்.

    பாடமாக இருந்தால், அந்த பாடத்தை முதலில் ஆழ்ந்து படித்து, அதில் எழும் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க வேண்டும். இந்தப் பயிற்சியால், சிக்கலான விஷயங்களில் சிந்திப்பது, அதற்கு தீர்வுக்காண முடிவுகள் எடுப்பது குறித்த திறன் இளம் வயதிலேயே மேம்படும்.

    செயல்வழி கற்றல்:

    குழந்தைகளை ஒரே இடத்தில், அமர வைத்து கற்றுத் தரும் கல்வியால் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுமே தவிர, நினைவாற்றல் மேம்படாது. எனவே, எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பைக் கொடுத்து, அதில் குழந்தைகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.

    இது பொதுவான தலைப்பாகவோ அல்லது பாடம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அதில், நீங்கள் கேள்வி கேட்டு, குழந்தைகளைப் பதிலளிக்க வைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுவது டன், எந்த பிரச்சினையாக இருந்தாலும், எளிதில் தீர்வு காணும் பக்குவமும் கிடைக்கும்.

    படமாக மாற்றுங்கள்:

    குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை வரி வடிவத்தில் சொல்லிக் கொடுக்காமல், திரையில் தோன்றும் படமாக ஓட்டிப் பார்க்கும் வகையில் பயிற்சி அளியுங்கள். இதன் வழியாக அவர்களால், நீங்கள் சொல்லும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். பாடத்தில் உள்ள வரிகள், சூத்திரங்கள் என அனைத்தையும் எளிதில் நினைவுப்படுத்த முடியும்.

    உதாரணம் கொடுங்கள்:

    நினைவாற்றலை மேம்படுத்துவதில் மற்றொரு பயிற்சி, உதாரணம் மூலம் கற்றுக்கொடுத்தல். பாடம் சார்ந்த விஷயங்களுக்கு, உங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறுங்கள். இதை குழந்தைகளால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அறிவாற்றலும் மேம்படும்.

    ஆசிரியராக மாற்றுங்கள்:

    நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது போன்று, குழந்தைகளையும் உங்களுக்கு ஆசிரியராக மாறி, சில விஷயங்களைக் கற்றுத்தர வையுங்கள். இதன் மூலம், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும். பிறருக்கு கற்பிக்கும்போது, இயல்பாகவே அறிவாற்லும் மேம்படும்.

    அறிவு வரைபடம்:

    குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த  வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் திறன் உருவாகும். இதுவே, பாடத்தைப் புரிந்து கொள்வதிலும் செயல்பட வைக்கலாம்.
    உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும்.
    குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது ஒப்பீடு செய்யாமல் இருப்பது. உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ அந்த குழந்தைகளை எதிரியாக நினைக்க தொடங்கிவிடுவார்கள்.

    இதனால் அவர்கள் மீது இயல்பாகவே வெறுப்பு உண்டாகிவிடும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்தால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு காரணம் பெற்றோர்தான்.

    சிலர் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் பேசாமலேயே இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் வெளிப்படும் நல்ல குணங்களை, எண்ணங்களை, செயல்பாடுகளை ஊக்குவிப்பது நல்லது.

    உதாரணமாக ஒரு வீட்டில் 10 வயதில் ஒரு சிறுமியும், 5 வயதில் மற்றொரு சிறுமியும் இருந்தால் 10 வயது சிறுமியைப் போல் 5 வயது சிறுமியின் பேச்சு, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘நீ ஏன் அப்படி பேச வில்லை... இப்படி பேசுவது சரியா?’ என்று குழந்தைகளை பெரியவர்கள் போல் நினைத்து பேசக்கூடாது. குழந்தைகளை குழந்தைகளாய் அவர்களது சுபாவத்தை வெளிப்படுத்த அனுமதித்தாலே போதுமானது.

    குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை பெற்றோரிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் பேச்சை கேட்க வேண்டும். அவர்களிடத்தில் எரிச்சல்படக்கூடாது.

    ‘‘என்னை ஏன் எப்பவும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்..’ என்று கூறி அவர்களை மனம் நோகச்செய்யக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் உங்களிடம் பேச வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் உங்களை நாடுவது அன்பு, அரவணைப்பை எதிர்பார்த்துத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அப்படி அவர்கள் நெருங்கி வரும்போது எரிச்சலாக பேசுவதன் மூலம் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும். பெற்றோரிடம் முழுமையான அன்பு கிடைக்காமல், பயம் உருவாக ஆரம்பித்துவிடும். ‘நாம் எதுவும் பேசினால் திட்டிவிடுவார்களோ?’ என்ற தயக்கம் அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். பெற்றோரை பார்த்தாலே பயந்த சுபாவம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். எதிர்காலத்திலும் இந்த பயம் தொடரலாம்.

    பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்திலோ, கோபத்திலோ, டென்ஷனாகவோ இருக்கும் போது குழந்தைகள் நெருங்கி வந்தால் எரிச்சல் கொள்ளாமல் பக்குவமாக பேசுவது நல்லது. அது குழந்தைகளிடத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிக ரிக்கச்செய்யும்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை மீது ஏதாவது ஒரு அடையாளத்தை பதித்துவிடுவார்கள். ‘இவனுக்கு படிப்பு வராது. டான்ஸ் ஆடுவதற்குத்தான் லாயக்கு.. இவன் நன்றாக ஓவியம் வரைவான்' என்று தாங்களாகவே முடிவு செய்து குழந்தைகளிடத்தில் அதனை திணிக்க முயற்சிப்பார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஏதேனும் தனித்திறன்களை கொண்டிருந்தால் அவர்களை போல் தன் பிள்ளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதுவும் தவறான பழக்கம். அடுத்த வீட்டு குழந்தைகளை புகழ்ந்து பேசி தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டவும் செய்வார்கள். அப்படி பேசுவது அவர்களிடத்தில் வெளிப்படும் தனித்திறன்களை மூழ்கடிக்க செய்துவிடும்.

    உங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்கள், திறமைகளை புகழ்ந்து பேசி அவர்களை மேலும் மேம்படுத்தலாம். அவர்களிடத்தில் சின்ன குறைகள் இருக்கலாம். சில குழந்தைகள் ரொம்ப நேரம் தூங்கலாம். சிலர் அலட்சியமாக இருக்கலாம். இதை மற்றவர்களிடம் குறையாக சொல்லக் கூடாது. குழந்தைகளிடம் சின்னச்சின்ன குறும்புகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் என்றாலே அப்படித்தான். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் குழந்தைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களின் மனம் நோகும்படி பேசக் கூடாது.

    குழந்தைகளிடம் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கூடாது. அவர்கள் எதாவது தவறு செய்யும்போது. ‘உன்னோட வயசில... உங்கப்பாவும் இப்படித்தான் நடந்துகொண்டாராம்’ என்று பேசுவது அபத்தமான விஷயம். அது குழந்தைகள் செய்யும் தவறு களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். அதுபோன்ற தவறுகளை செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட தொடங்கிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களுக்கு பெரியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
    ×