என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா வேகமாக பரவி வருவதால் திருமுருகநாத சாமி, சுக்ரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தொல்லியல் துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருமுருகநாதசாமி கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிகளின் படி கோவிலில் பூஜைகள் தொடர்ந்து நடக்கும் என்று கோவிலின் முன்பு தொல்லியல் துறை மூலமாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கும் பக்தர்கள், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)

    பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.

    சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.

    நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.

    ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.

    சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    – சாம்சன் பால்
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலை 7.45 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சித்திரை திருவிழா கொடி ஏற்றத்திற்கு முதல் நாள் சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் கோவில் யானை பிடிமண் எடுக்கும் அரிய நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பெருங்கோட்டூர் கிராமத்திற்கு சென்று கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சிக்கு பதிலாக கோவிலில் உள்ள நடராஜர் சன்னதி அருகில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் சித்திரை திருவிழா நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இபாதத்’ வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    இஸ்லாமியப் பார்வையில் ‘இபாதத்’என்றால் என்ன?

    ‘இபாதத்’ என்பதற்கு அரபி அகராதியில் ‘வழிபடுதல்’, ‘பணிதல்’, ‘இறைவன் முன்பு தாழ்வை வெளிப்படுத்துதல்’ என்பது பொருள் ஆகும்.

    இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ‘நல்லோர்கள் பிரியப்படக்கூடிய செயல்பாடுகளும் ‘இபாதத்’ என்று சொல்லப்படும்’.

    இந்த அடிப்படையில் இன்சொல்லும், நற்செயலும், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், சதகா, உண்மை, நம்பிக்கை, பெற்றோர்களுக்கு நன்மை புரிதல், உறவுகளுடன் உறவாடுதல், வாக்குறுதியை நிறைவேற்றுதல், நன்மையை ஏவி, தீயதை தடுத்தல், உபகாரம் செய்தல், ஏழைகள், விதவைகள், அனாதைகள், வழிபோக்கர்கள், நலிந்த மக்கள் அனைவருக்கும் பாடுபடுவதும், உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும், சகித்துக் கொள்வதும், நன்றி செய்வதும், பிரார்த்திப்பதும், குர்ஆன் ஓதுவதும், இறைவனை நினைப்பதும், இறையச்சம், உள்ளச்சம் இன்னும் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.

    இவற்றை ஒரு நோன்பாளி, நோன்பு காலங்களிலும், மற்ற நேரங்களிலும் பேணி, கடைப்பிடித்து வாழ்ந்தால், அவரின் வாழ்க்கையே இறையச்சமும், இறைவழிபாடும் நிறைந்ததாக மாறிவிடும். இதற்கு தான் மனிதனை படைத்ததாக திருக்குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

    ‘இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை’. (திருக்குர்ஆன் 51:56)

    வணக்க வழிபாடுகள் செய்வதற்கு புனித ரமலான் பெயருக்கு ஏற்றாற்போல் சிறந்த மாதமாக விளங்குகிறது. ரமலானில் ஹஜ்ஜைத் தவிர மற்ற வணக்க வழிபாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. எனினும் புனித மக்கா சென்று ஹஜ் செய்யமுடியாத குறையை ‘உம்ரா’ எனும் மக்கா பயணம் நிவர்த்தி செய்கிறது. ‘எவர் ஒருவர் ரமலான் மாதத்தில் ‘உம்ரா’ செய்கிறாரோ, அவர் என்னுடன் ஹஜ் செய்தவர் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் கடமையான ஐங்காலத் தொழுகைகள் அழகாக நிறைவேற்றப்படுகின்றது; இரவு நேர சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகை கூட்டம் கூட்டமாக நிறைவேற்றப்படுகின்றது. ‘ஜகாத்’ எனும் கடமையான ஏழை வரியும், ‘சதகா’ எனும் தர்ம நிதியும், ‘ஜகாத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், ‘தஹஜ்ஜத்’ எனும் ஸஹ்ர் நேரத் தொழுகையும் பிரத்யேகமான முறையில் நிறைவேற்றப்படுகின்றது.

    புனித ரமலானில் உடல் ரீதியான கடமை தொழுகை, மன ரீதியான கடமை நோன்பு, பொருள் ரீதியான கடமை சதகா, ஸகாத், ஜகாத்துல் பித்ர் ஆகும். உடல் மற்றும் பொருள் ரீதியான கடமை ‘உம்ரா’ இவை அனைத்தும் ஒரு சேர ஒன்றாக நிறைவேற்றப்படக்கூடிய வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் தான் புனித ரமலான் மாதம். புனிதமான இந்த மாதத்தில் இதன் சிறப்புக்கள் அனைத்தையும் நாம் பெற்று சிறப்புடன் வாழ வழி காண்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.37 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
    பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலில் திருவிழாவிற்கான கொடியேற்றப்படாமல் விழா நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 15-ந் தேதி இரவு விசாலாட்சி அம்பிகா சமேத சந்திர சேகர சுவாமி உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு காப்பு கட்டப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று கொரோனா கட்டுப்பாடுகளால் திருவிழாவிற்கான கொடியேற்றப்படாமல் விழா நடந்தது. அதன்படி தினமும் கோவில் வளாகத்தில் மட்டும் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு விழா நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
    பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
    திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகும். பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், சிறந்த சிவபக்தர். இவர் தினமும் காலையில் சிவயோகநாதரை வணங்குவது வழக்கம். ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினத்தன்று, தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து பசிக்கு உணவு வேண்டி நின்றார். அவரை வாட்டமான முகத்தைக் கண்டு மனம் இரங்கிய வெங்கடேச தீட்சிதர், சிரார்த்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த உணவை, பசித்து வந்தவருக்கு வழங்கினார்.

    இதைக் கண்ட வேதியர்கள் சிலர், இப்படிச் செய்தது சாஸ்திர விரோதம் என்றும், இதற்கு பரிகாரமாக காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லையெனில் அவரை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், சிரார்த்தமும் செய்ய மாட்டோம் என்றனர்.

    வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று வெங்கடேச தீட்சிதர் வருந்தினார். மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார்.

    அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.

    அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.

    தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.

    இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்றே’ என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

    திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால் ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் திரும்பியதை நினைத்து கவலையடைந்தார். அந்த கவலையில் உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார்.

    திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது?’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

    “அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண இரவு பூஜைக்கு உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல் இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக்கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்” என்றார் அர்ச்சகர்.

    பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார்.

    பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணிவிட்டு, விடிந்ததும் விடியாததுமாக அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார். அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது.

    அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, “சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!” என்று வருத்தப்பட்டார்.

    அர்ச்ககர் திகைத்தவாறே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன். கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே” என்றார்.

    பேசியபடியே அவர் கோவில் கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.

    அப்போதுதான் அர்ச்சகருக்குத் தெரிந்தது, ‘நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்குச் சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே’ என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

    பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த மகான் ஸ்ரீதர வெங்கடேசர், திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார்.

    அமைவிடம் :

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்து உள்ளது. திருவிடைமருதூரில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் அமைந்து உள்ளது.
    தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும் என தொல்லியல்துறை உத்தரவிட்டது.

    அதன்படி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது. முன்புறம் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் இன்று வழக்கம்போல் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் சாலையில் நின்றவாறு பெரிய கோவில் அழகை ரசித்து சென்றனர்.

    இருந்தாலும் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலால் வருகிற 23-ந் தேதி நடைபெறவிருந்த சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் சில மாதங்கள் கொரோனா பரவலால் பெரிய கோவில் மூடப்பட்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அலுவலர் கனகலட்சுமி தெரிவித்துள்ளார்.
    எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால் தீராத நோய் தீரும்.

    திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும்.

    செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

    புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும்.

    வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்.

    சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்து வணங்கினால், வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

    எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. மூன்று முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைத்து, வம்சம் விருத்தியாகும். பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 144 ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாலும், தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் இந்த ஆண்டு 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடக்க இருந்த திருத்தேர், செடில் திருவிழா உள்ளிட்ட, ஆண்டுத்திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை உத்தரவுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் நேற்றிரவு மூடப்பட்டது. அதேபோல் பழைய மசூதி, சமணர் குகை கோவில், மேல்பாடி சுப்ரமணியன் சாமி கோவிலி ஆகியவையும் மூடப்பட்டதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேலூர் கோட்டையின் நூழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் காந்தி சிலை அருகே திடீரென பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை ஏராளமான பொதுமக்கள் கோட்டை கோவிலில் தரிசனம் செய்யவதற்கும், மைதானத்தில் வாக்கிங் செல்வதற்கும் சென்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
    மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை காண அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரையில் சித்திரை திருவிழா என்பது மதுரைக்கு அடுத்தபடியாக சிறப்பாக நடத்தப்படும். இந்த சித்திரை திருவிழா மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவில், வீரழகர் கோவிலில் நடக்கும். மேலும் திருவிழா நடக்கும் நாட்களில் வைகை ஆற்றில் ராட்டினம், ஆங்காங்கே மண்டகபடிதாரர்கள் சார்பில் நாடகம், கலைநிகழ்ச்சி என களைகட்டும்.

    கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டது. இந்தாண்டு திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில் கோவில் விழாக்களுக்கு தடைவிதித்துள்ளது. இதையடுத்து மானாமதுரை சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படும் எனவும், நாளை(சனிக்கிழமை) கொடியேற்றதுடன் விழா தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் திருவிழாவை நம்பி பிழைப்பு நடத்தும் ராட்டினம் தொழிலாளர்கள், நாடகம் கலைஞர்கள், கலைநிகழ்ச்சி நடத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மானாமதுரை ராட்டினம் தொழிலாளர்கள் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு முழுவதும் கோவில் விழாக்கள் நடக்காமல் இருந்ததால் நாங்கள் உணவிற்கே திண்டாடினோம். கடன்களை அடைக்கவில்லை. அதேபோல் இந்தாண்டும் தடைவிதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளுடன் திருவிழா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    பக்்தர்கள் கூறுகையில், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுகிறது. தேர்தல் சமயத்தில் கூட்டம் கூடியது. அப்போது எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்த வேண்டியது தானே. நாளை நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் சாமி வீதி உலா வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விதிகளை கடைபிடித்து விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ×