என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் நடந்தது. முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
    தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை 5 மணிக்கு திருப்பலிகள் நடந்தன.

    நேற்று முக்கிய விழாவான ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா, இறைவார்த்தை சபையின் 145-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 20-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை இறைவார்த்தை சபை மாநில அதிபர் சாந்து ராஜா நடத்தி வைத்தார்.

    மேலும் ஆரோக்கிய அன்னை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரை சைக்கிளில் ஆலயத்திற்குள் வலம் வந்தார். இன்று காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குத்தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் நிர்வாகி ஏ.ஜோசப் அடிகளார், பங்குதந்தை ஓய்.ஆரோக்கியதாஸ், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர், அன்பியங்கள் பங்கு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
    சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித சவேரியார் ஆலய விழா நடந்தது.விழாவில் வேம்பார்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.
    சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித சவேரியார் ஆலய விழா நேற்று நடந்தது. விழாவில் இயேசு கிறிஸ்து, மாதா, புனித சவேரியார், புனித செபஸ்தியார், புனித சூசையப்பர் உள்ளிட்ட புனிதர்களின் சிலைகள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்குதந்தை அந்தோணி புதிய சிலைகளுக்கு பூஜை செய்தார். இதை தொடர்ந்து நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் கலந்து கொண்டு புனிதர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் வேம்பார்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.
    சாணார்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் அன்னை மரியாள் பிறந்தநாள் விழா நடந்தது. கூட்டுத்திருப்பலியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
    சாணார்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் அன்னை மரியாள் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றப்பட்டது. தினந்தோறும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    கொசவபட்டி வட்டார பங்கு தந்தை அந்தோணி, உதவி பங்கு தந்தை சைமன் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். நேற்று நடந்த கூட்டுத்திருப்பலியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். வழக்கமாக நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மரியாள் தேர்பவனி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணிக்குள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், கலெக்டர் பிரவீன் நாயர், போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் இன்று(புதன்கிழமை) முதல் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வர வெளிமாநிலம், வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேராலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    பூண்டி மாதா கோவில் திருவிழாவின் தேர்பவனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டதையடுத்து பூண்டி மாதா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருவிழாவின் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த தேர்பவனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டது.
    வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது.
    நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், திருச்சி மண்டல ஐ.ஜி.ஜெயராமன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கம் நடக்கிறது.
    தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆலய வளாகத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டு மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருப்பலிகள் நடக்கிறது.
    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு மாநில இளைஞர் பணிக்குழு செயலாளர் மார்ட்டின் ஜோசப் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    காலை 7 மணிக்கு, கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு பிராட்டியூர் புனித மான்போர்ட் மாநில தலைமையகத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஜோசப் நற்கருணை ஆசீரும் வழங்கினார். தொடர்ந்து ஆலய வளாகத்தில் குணமளிக்கும் மாதாவின் சோரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி தாளாளர் தாமஸ் ஜூலியன் ஆசீர்வதித்தல் ஆராதனை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

    ஆண்டுதோறும் குணமளிக்கும் மாதாவின் தேர் வீதி, வீதியாக பவனி சென்று திரும்புவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆலய வளாகத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டு மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு திருப்பலிகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை விமர்சையாக நடைபெறும்.

    இதில் பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

    கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவின் காரணமாகவும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்தது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.
    அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அதில் கடந்த 1-ந் தேதி முதல் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல் மற்றும் மசூதிகளில் கூட்டுப்பிரார்த்தனை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து கோவில்கள் மற்றும் பள்ளிவாசல் மசூதிகளில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டு வந்த தளர்வில்லா முழு ஊரடங்கு ரத்து செய்தும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோவையில் நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருவது வழக்கம்.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 165 நாட்களாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் சிறப்பு கூட்டு பிரார்த்தனைகள் நடைபெறாமல் இருந்து வந்தது. ஆலயங்கள் திறந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இதையடுத்து கோவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். எனினும் பாதுகாப்பு கருதி ஒரு சில தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.
    புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே நாகூர் மாதா கோவில் தெருவில் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் ஆணையின்படியும், தஞ்சை மறை மாவட்ட ஆயரின் அறிவுறுத்தல் படியும், நாகூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மக்களோடு திருப்பலி ஏதும் நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது தமிழக அரசு தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் கூடிய வழிமுறைகளை பின்பற்றியும், தஞ்சை ஆயர் ஆலோசனைப்படியும் நேற்று புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

    கிருமி நாசினி, முக கவசம், ஆலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தையோடு இணைந்து நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
    5 மாதங்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
    கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இதில் அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்தது.

    அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, அன்று முதலே பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஆனால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டத்தை காணமுடியவில்லை.

    கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபட்டனர். முன்னதாக ஆலய நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும், 8 மணிக்கும் திருப்பலி நடைபெறும். தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அறிவுறுத்தினார். அதன்படி சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு கோட்டார் மறைவட்ட வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலுஸ், பங்கு தந்தை ஸ்டேன்லி, இணை பங்குதந்தை கிஷோர், அஞ்சலோ ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது.

    இதேபோல் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கற்கோவிலில் நேற்று காலையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாடுகளை கடைபிடித்து வழிபாடு நடத்தினர். அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள பிலிப்ஸ் ஆலயம், சைமன் நகர் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் ஆராதனை நடந்தது.

    இதுபோல், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலம், மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்தரசர் ஆலயம், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    முளகுமூடு தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது.
    அழகியமண்டபம் அருகே முளகுமூட்டில் தூய மரியன்னை பேராலயம் உள்ளது. இதை பேராலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு முதல் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம் தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை டோமினிக் எம்.கே. தாஸ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

    விழா வருகிற 13-ந் தேதி வரை 10 நாட்கள் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. திருவிழா நாட்களிலும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். 9-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்தும், 12-ந் தேதி இரவு 9 மணிக்கும் தேர்பவனி நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து ஆலய வளாகத்துக்குள் தேர்பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டோமினிக் எம்.கே. தாஸ், இணைபங்கு தந்தை தாமஸ், இல்ல பணியாளர்கள் ஜெலஸ்டின், ஜெரால்ட் ஜோஸ், ராபின்சன், ஆண்டனி, பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மொன்மணி, பொருளாளர் விஜி கலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பேராலய பங்கு மக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்துள்ளனர்.
    ×