search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் அதி தூதர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    புனித மிக்கேல் அதி தூதர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.

    165 நாட்களுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை தொடங்கியது

    அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அதில் கடந்த 1-ந் தேதி முதல் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல் மற்றும் மசூதிகளில் கூட்டுப்பிரார்த்தனை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து கோவில்கள் மற்றும் பள்ளிவாசல் மசூதிகளில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டு வந்த தளர்வில்லா முழு ஊரடங்கு ரத்து செய்தும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோவையில் நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருவது வழக்கம்.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 165 நாட்களாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் சிறப்பு கூட்டு பிரார்த்தனைகள் நடைபெறாமல் இருந்து வந்தது. ஆலயங்கள் திறந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இதையடுத்து கோவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். எனினும் பாதுகாப்பு கருதி ஒரு சில தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.
    Next Story
    ×