என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
    ஒரு அருமையான தம்பதியினர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்றிருந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மண்பானை ஒன்றை வாங்கலாம் என்று எண்ணி அந்த அழகிய மண்பானையை எடுத்து எவ்வளவு விலையென்றாலும் இதை வாங்கி இதில் தண்ணீர் நிரப்பி தாகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். அப்போது அந்த மண்பானை பேச ஆரம்பித்தது.

    அன்பானவர்களே, என் மீது நீங்கள் வைத்த அன்பிற்காக நன்றி, என்னுடைய கதையை சொல்லுகிறேன் கொஞ்சம் கேளுங்கள். இன்று மிக அழகாக, கம்பீரமாக, மிடுக்காக தோற்றமளிக்கும் நான் முன்பு எப்படி இருந்தேன் தெரியுமா? மிகவும் மோசமான நிலையில் ஒருவரும் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் எல்லோராலும் மிதிபடும் நிலையில் வெறும் களிமண்ணாக இருந்தேன். அப்போது என் எஜமான் (பானை செய்கிறவர்) என்னை எடுத்தார். நான் அவரை பார்த்து, என்னை விட்டு விடுங்கள், நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என்று கதறினேன், அவரோ, அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

    என் மீது தண்ணீரை ஊற்றி கையால் அழுத்தி, கால்களால் மிதித்தார். பின்னர் எனக்குள் இருந்த வேண்டாத குப்பைகள், கற்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வீசினார். அப்போது நான் சுத்தமாகி, களிமண்ணாக இருந்த என்னை இவ்வளவு அழகான பானையாக மாற்றி உங்கள் மனம் குளிரும் விதமாக மாற்றி இருக்கிறார்.

    இப்படி களிமண்ணாக இருந்த என்னை நீங்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும், என்னை நீங்கள் உங்கள் வீட்டில் வைத்து தினமும் என்னை கவனிக்கும்படியாகவும் செய்துள்ளார் என்று கூறியது.

    எனவே தேவ பிள்ளைகளே இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நாமும் இப்படித்தான் இந்த உலகத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் அடிபட்டு, மிதிபட்டு சோர்ந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் இந்த தவக்காலத்தில் மறந்து போகக்கூடாது.

    வேதாகமத்தில் ரோமர் 8-ம் அதிகாரம் 29-ம் வசனத்தில், தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நாமும் தேவனிடத்தில் நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது, வெறும் களிமண்ணை எடுத்து பானையாக செய்து மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக செய்ததை போல, தேவன் நம்மையும் இயேசுவின் சாயலாக அழகாக மாற்ற வல்லவராய் இருக்கிறார் என்பதை நினைவு கூறுவோம் ஆமென்.

    ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
    நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வழியிலே செலவழிப்பதே புத்திசாலித்தனம்.
    காலம் பொன்போன்றது. கடமை கண் போன்றது என்றொரு பழமொழி உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு இந்த காலத்தின் அருமை தெரிவதில்லை. நமது செல்வத்தையும், பணத்தையும் ஆண்டவர் விரும்புவதில்லை. நம் நேரத்தை அவருக்காக செலவிடும் போது அவர் மனம் மகிழ்ந்து நம்மை விரும்புகிறார். தேவனின் திருப்பாதத்தில் நேரம் செலவழிக்காதவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் சோர்வடைவார்கள். வானத்திற்கு கீழே நடைபெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு. இதைத்தான் வேதாகமத்தில், பிரசங்கி 3-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், தேவன் சகலத்தையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இன்றைய உலகில் பிள்ளைகளிடம் பேசுவதற்குகூட நேரம் இருப்பதில்லை. பிள்ளைகளோ பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர், வலைத்தளங்கள், செல்போன் போன்றவற்றிலேயே மூழ்கி விடுகின்றனர். அவர்கள் எதை பார்க்கிறார்கள் என்பதைக்கூட கவனிப்பதற்கு பெற்றோருக்கு நேரமிருப்பதில்லை. ஆனால் காலம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. அது ஓடிக்கொண்டே இருக்கும். இது குறித்து எபேசியர் 5-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில், நாட்கள் பொல்லாதவைகளாயிருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே நாம் கிடைக்கின்ற நேரத்தை திட்மிட்டு, வாழ்க்கைக்கு தேவையான காரியங்களை செய்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். வெற்றிக்கு நேரத்தை திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. அவசரமாக செய்ய வேண்டிய வேலைக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரே காரியத்திற்காக நேரங்களை செலவழிக்காமல் ஒவ்வொரு வேலைக்கும் நேரத்தை திட்டமிட்டு செயலாற்றுங்கள். அப்போது காலத்தை வீணாக்க வேண்டிய நிலை ஏற்படாது.

    இப்படி பல்வேறு வேலைப்பளு காரணமாக ஜெபிக்க, வேதம் வாசிக்க நேரமில்லை என்று கூறுவதும் நம்முடைய வாழ்க்கையில் காணப்படும். அதற்கு தகுந்த நேரத்தை ஒதுக்கி தேவனை மகிமைப்படுத்த வேண்டும். இப்படியல்லாமல் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வழியிலே செலவழிப்பதே புத்திசாலித்தனம். காலமும், கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆண்டவரே, காலத்தின் அருமை கருதி செயல்பட எனக்கு கிருபை தாரும் என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம் ஆமென்.

    ஜேக்கப், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
    மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
    உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம் ஆகும். நம்முடைய கவனத்தை கர்த்தரை நோக்கியும், கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கமாகும். உபவாசம் என்பது இந்த தவக்காலத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட வேண்டியது அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் உபவாசம் இருந்து கடவுளோடு நம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் நாம் பல்வேறு விஷேச நாட்களில் பல்வேறு சிறப்பான உணவுகளை உண்பது போல, இந்த தவக்காலத்தில் நாம் மிகவும் உபவாசம் இருந்து தேவனை மகிமைப்படுத்தி, தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த தவக்காலத்தில் இன்னும் அதிகமாக கர்த்தரிடத்தில் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

    எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல நற்குணங்களையும் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

    மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை மாற்ற மனம் வருந்துதல், மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகிய இந்த மூன்றும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெபத்திற்கு விசுவாசம் தேவை, விசுவாசம் வளர ஜெபம் தேவை, இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.

    எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோம்.

    ஜான் பீட்டர், சுவிஷேச ஊழியம், காங்கேயம்
    பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17-ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
    ஒரு பெண் மற்றொரு பெண்ணின் கோழியை திருடி விட்டாள். இந்த திருட்டு சம்பவம் குறித்த வழக்கு நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அந்த பெண் நான் கோழியை திருடவில்லை. அந்த பெண் என் மீது வீண் பழி சுமத்துகிறாள் என்று கூறினார். உடனே நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து இன்னொரு நாள் விசாரணை நடத்துகிறேன் என்று கூறினார்.

    உடனே அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வர சில அடிகள் எடுத்து வைத்தனர். அப்போது அங்கிருந்த நீதிபதி பக்கத்தில் இருந்த ஒருவரை பார்த்து, பார்த்தீர்களா? கோழியை திருடி தின்று விட்டு அதன் இறகை தலையிலே வைத்துக் கொண்டு, கோழியை நான் திருடவில்லை என்று சாதித்து விட்டாளே என்று அந்த பெண்ணின் காதில் கேட்கும்படியாக கூறினார்.

    இதை கேட்டதும் அந்த பெண் தன் கூந்தலை மெதுவாக தடவி பார்த்தாள். அவ்வளவுதான், நீதிபதி உடனே அவளை அழைத்துவரச்செய்து அவளுடைய வாயில் இருந்தே அந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைத்தார். இதே போல தான் இயேசுவின் சீடர் யூதாஸ் என்பவரை பார்த்து நீ, என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று கூறினார். ஏன் இப்படி கூறினார் என்றால் யூதாஸ் என்பவர் இயேசுவை சிலுவையில் அறையும் படி தேடிக்கொண்டிருந்தவர்களிடம் இவர்தான் இயேசு என்று காட்டிக்கொடுத்தார்.

    ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுக்கவில்லை என்று மூன்று முறை மறுப்பு தெரிவித்தார். இதைத்தான் இயேசுவானவர் யூதாஸ் என்றும் சீடர் தன்னை காட்டிக்கொடுப்பதற்கு முன்பதாகவே அவரிடம் நீ என்னை முன்று முறை மறுதலிப்பாய் என்று கூறினார். ஆம், தேவ பிள்ளைகளே நாமும் இந்த உலகத்தில் பல்வேறு குற்றங்களை செய்து விட்டு அதை நாம் மறைத்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

    ஆனால் நாம் குற்றம் செய்யவில்லை என்று மனிதர்களை ஏமாற்றலாம், தேவனை ஏமாற்ற முடியாது. தன்னை காட்டிக்கொடுத்த சீடரை முன்கூட்டியே அறிந்தது போல, நாம் செய்யும் குற்றங்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் மறந்து போகக்கூடாது. அதனால் தான் நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே ரத்தம் சந்தி தன் உயிரையை பலியாக கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17&ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நாம் இதுவரை செய்த குற்றங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு குற்றங்களை மன்னியும் என்று இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் மன்னிப்பை பெற்று, குற்ற உணர்வு இல்லாத மகிழ்வான வாழ கற்றுக்கொள்வோம்.

    ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

    இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.
    முப்பதாவது வயதில் யோவான் தீர்க்கதரிசியிடம், யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார் இயேசு. அப்போது சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் ஆகிய நான்கு பேர், இயேசுவை ‘மெசியா’ எனக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரிடம் சீடர்களானார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவர் போதிக்க ஆரம்பித்தார். போதனையைத் தொடங்கும்முன், தனது முதல் அற்புதத்தைத் தனது தாய் மரியாளின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்த்திக் காட்டினார்.

    கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமண விருந்து நடைபெற்றது. இயேசுவின் தாய் அங்கு வந்திருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும்கூட அந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யூதத் திருமண விருந்தில், முதல் தரமான திராட்சை ரசம் பரிமாறப்படுவது விருந்தோம்பலின் முக்கிய அம்சமாக இருக்கும். விருந்தினர் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டதால், திராட்சை ரசம் தீர்ந்துபோனது. இயேசுவின் தாய் அவரைப் பார்த்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை” என்றார்.

    அதற்கு இயேசு, “தாயே, நீங்கள் எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் என் வேளை இன்னும் வரவில்லையே” என்று பதிலளித்தார். பரலோகத் தந்தையின் ஏற்பாட்டின்படி இயேசு தன்னை வெளிப்படுத்தும் காலம் அப்போது கனிந்திருக்கவில்லை. அதைத்தான் இயேசு அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு மகனாகத் தன் தாயின் சொல்லை எப்படித் தட்டுவது?

    தூய்மைச் சடங்கு செய்யத் தேவைப்படும் ஆறு தண்ணீர் ஜாடிகள், அந்தத் திருமண வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த தண்ணீரும்கூடத் தீர்ந்து போயிருந்தது. அந்த வீட்டின் பணியாளர்களை அழைத்த இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். அவர்களும் ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பினார்கள். தண்ணீர் திராட்சை ரசமாக மாறியிருந்தது. இதைக் கண்ட அவருடைய சீடர்கள், அவர் மீது மேலும் நம்பிக்கை வைத்தார்கள்.

    இயேசு செய்த முதல் அற்புதம் (கானா ஊர் திருமணம்) பற்றி, கலிலேயா முழுவதும் செய்தி பரவ ஆரம்பித்தது.

    யூதர்களின் முக்கியப் பண்டிகையான ‘பாஸ்கா’ சீக்கிரத்தில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கு ஏக இறைவனுக்காக 46 ஆண்டுகள் செலவழித்து யூதர்கள் கட்டியிருந்த பிரமாண்டமான பேராலயம் இருந்தது. அந்த ஆலய வளாகத்துக்குள் நுழைந்தபோது, அங்கே கண்ட காட்சியைப் பார்த்துக் கொதித்துப் போனார் இயேசு.

    யூத வியாபாரிகள் அந்த ஆலயத்தை, ஒரு பேரங்காடி போல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் கயிறுகளைக் கொண்டு உடனடியாக ஒரு சாட்டையைத் தன் கைப்படப் பின்னினார். ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், மேசைகளைப் போட்டு நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் ஆலயத்தில் இருந்து சாட்டையால் அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள். என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” (யோவான் 2: 16) என்றார்.

    இயேசுவின் கோபத்தைக் கண்ட யூதர்கள் அவரை நெருங்கி, “இப்படியெல்லாம் செய்ய உமக்குக் கடவுள் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றால், அதை எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்” (யோவான் 2:19) என்றார்.

    இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‘நம்மிடம் வசமாகச் சிக்கினார்’ என்று நினைத்த யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் பிடித்தன. நீரோ.. இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே?” என்றார்கள். ஆனால் இயேசு தனது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மனித உடலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்த்தினார். தனது உடலைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

    இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.
    வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேளாங்கண்ணி மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளூர் மக்களுக்கு மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 9-ந்தேதியிலிருந்து வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர் கள் வந்து மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கடலுக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய 8-ம் நாள் திருவிழாவில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டார்.
    குமரி மாவட்டம் முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய (பசிலிக்கா) திருவிழா கடந்த 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அரசு வழிகாட்டுதல்படி எளிமையாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6.15 மணி மற்றும் 10.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலியும் நடக்கிறது.

    விழாவை ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் கொடி ஏற்றி திருப்பலியில் மறையுரையாற்றினார்். அப்போது பல்சமய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கடந்த 9-ந் தேதி தூய சகாய அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் பக்தர்கள் இறை வேண்டுதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். இன்று (சனிக்கிழமை) காலை 6.15 மணி, 10.30 மணிக்கு திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் 9-ந் திருவிழா திருப்பலியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆன்டனிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், காலை 11 மணிக்கு மலையாள திருப்பலியும், மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.

    இன்றும், நாளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆலய வளாகத்தில் பக்தர்கள் இறை வேண்டுதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

    விழா ஏற்பாடுகளை முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய பங்கு தந்தை டோமினிக் எம் கடாட்சதாஸ் தலைமையில் இணை பங்குதந்தை தாமஸ், ஆன்மிக தந்தை ஆன்டனி, இல்ல அருட்பணியாளர்கள், பங்கு அருட்சகோதரிகள், பசிலிக்கா பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, துணை செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜிகலா, பங்கு மக்கள் இணைந்து பசிலிக்கா பங்கு அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.

    முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய பங்கு தந்தை டோமினிக் எம் கடாட்சதாஸ் கூறுகையில், தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக (திருத்தலமாக) கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி போப் பிரான்ஸிசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேராலயம், வேளாங்கண்ணி பேராலயம், பூண்டி மாதா பேராலயம், திருச்சி உலக மீட்பர் பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயத்தை தொடர்ந்து முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 7-வது பேராலயமாக (பசிலிக்கா) திகழ்கிறது. பசிலிக்கா அறிவிப்பு மற்றும் பெருவிழா கொரோனா தொற்றுக்கு தீர்வு எட்டியவுடன் சிறப்பாக நடைபெற உள்ளது என்றார்.
    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பேராலயத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் மாதாவை தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள்ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29 -ந் தேதி தொடங்கி இந்த மாதம் 8-ந் தேதி வரை நடந்தது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு விழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வேளாங்கண்ணிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பேராலய விழாவில் கலந்து கொண்டனர். கடந்த 8-ந் தேதி கொடி இறக்கத்துடன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழா நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து வழிபட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.

    கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே வெளியூர் பக்தர்கள் பேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பேராலயத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பேராலய நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    கடவுள் அளித்த தண்டனை காரணமாக, இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
    கடவுள் அளித்த தண்டனை காரணமாக, இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இத்தனை ஆண்டுகளாகத் தம் மக்களுக்கு, பனியைப் போன்ற மன்னா உணவைப் பொழியச் செய்து அவர்களைப் பட்டினியிலிருந்து காத்திருந்தார் கடவுள்.

    தன்னுடன் பேசவும், வழிகாட்டுதல் பெறவும், ஆசாரிப்புக் கூடாரம் அமைத்து புனிதம் பேணவும் கடவுளே கற்றுக்கொடுத்திருந்தார். அந்தக் கூடாரத்தின் மீது பகலில் வெள்ளை மேகமாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் இறங்கிவந்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். பாலைவனத்தின் கடும்வெப்பம், கடுங்குளிர், கல், முள் ஆகிய எதனாலும் அவர்கள் பாதிக்காத வண்ணம் காத்து வந்த கடவுள், இஸ்ரவேலர்களின் ஆடைகள் இத்தனை ஆண்டுகளில், பழுதாகிக் கிழிந்துவிடாத அற்புதத்தையும் செய் தார்.

    கடவுள் அளித்த தண்டனை முடியவிருக்கும் 40-வது ஆண்டின் தொடக்கத்தில் பாலைவனத்தில் காதேஸ் என்ற இடத்துக்கு மீண்டும் வந்து முகாமிட்டுத் தங்கினார்கள். சுமார் 39 ஆண்டுகளுக்கு முன், கானான் நாட்டைக் குறித்து உளவறிந்து வர பன்னிரண்டு வேவுக்காரர்களை அனுப்பி வைத்தபோது இஸ்ரவேலர்கள் தங்கியிருந்தது இதே காதேஸில்தான். இம்முறை காதேஸில் முகாமிட்டபோது மோசேயின் அக்காவான மிரியாம் இறந்து போனார். மிரியாமின் இறப்பு அவர்களை வாடச் செய்தது.

    இப்போது காதேஸில் அவர்களுக்குப் புதிய பிரச்சினை தோன்றியது. யாருக்கும் குடிக்கத் தண்ணீர் இல்லை. எனவே மக்கள் மோசேவிடம் கூட்ட மாகச் சென்று முறையிட்டார்கள்.

    “நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். தண்ணீர் இல்லாத இந்தப் பாலைக்கு ஏன் எங்களை நடத்திக்கொண்டு வந்தீர்? இங்கு தானியமோ, திராட்சையோ, மாதுளையோ, ஏன் அத்திப் பழங்களோ கூட இல்லை” என்று கண்ணீர் ததும்பக் கூறினார்கள்.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுளின் கருணையை எதிர்பார்த்து ஆசரிப்புக் கூடாரத்துக்குச் சென்று மோசேவும், ஆரோனும் முழந்தாளிட்டனர். அப்போது இறங்கிவந்த கடவுள், “இந்த மக்களைக் கூட்டமாக அழைத்துச் சென்று இங்கேயிருக்கும் கற்பாறையின் முன் நிறுத்து. பின்னர் கற்பாறையைப் பார்த்துப் பேசு. அப்போது மக்களுக்கும், அவர்களுடைய எல்லா விலங்குகளுக்கும் போதுமான தண்ணீர் அதிலிருந்து பீறிட்டு வரும்” என்று மோசேயிடம் கூறினார்.

    இதைக் கேட்டு நிம்மதியுடன் வெளியே வந்தபோது மோசேயின் முகத்தை மக்கள் ஆவலுடன் நோக்கினார்கள்.

    மக்களைக் கற்பாறைக்கு அழைத்துச்சென்ற மோசே “நானும் ஆரோனும் இந்தக் கற்பாறையில் இருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைத்துக் காட்டட்டுமா?” என்று கேட்டார். பின் னர் மக்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் மோசே ஒரு கோலினால் அந்தக் கற்பாறையை இருமுறை அடித்தார்.

    இப்போது அந்தக் கற்பாறையிலிருந்து மலையருவி ஒன்றின் ஊற்றுக்கண்போல தண்ணீர் பீய்ச்சி அடித்து ஓடத்தொடங்கியது. கடவுளின் கருணை தண்ணீராய் ஊற்றெடுத்து வருவதைக் கண்ட மக்கள் அனைவரும் அள்ளிப்பருகி நிம்மதியடைந் தனர். தங்களின் விலங்குகளுக்கு வேண்டியமட்டும் தண்ணீர் காட்டினர்.
    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர். பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பகுதியில் உள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பேராலய விழாவில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

    இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர். கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாதாவை தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இதில் ஓட்டல்கள், பேன்சி ஸ்டோர்ஸ், முடி இறக்கி காணிக்கை செலுத்தும் சலூன்கள் போன்றவை அடங்கும். இதில் பாதி அளவு கடைகள் திறந்து இருந்தன. ஓட்டல்களில் விற்பனை குறைவாக இருந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி உள்ள தங்கும் விடுதிகளில் ஒரு சில விடுதிகள் திறக்கப்பட்டு இருந்தன.
    காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.
    காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.

    10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தூத்துக்குடி கத்தோலிக்க பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை, ஆடம்பர திருப்பலி நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு ஆரோக்கியராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு தலைவர் மரியமிக்கேல், செயலாளர் மனோகர், பொருளாளர் மில்டன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னிமரியாள் பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் குறைந்த அளவில் சமூக இடைவெளி விட்டு பங்கேற்றனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டிமாதா பேராலயம். இந்த பேராலயம் கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவிப்பின்படி மூடப்பட்டு இருந்தது. மத வழிபாட்டு தலங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டன.

    பூண்டி மாதா பேராலயத்திலும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. புனித கன்னிமரியாள் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று வழக்கமாக சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெறும். தேர்பவனிக்கு 144 தடை உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதிக்கவில்லை.

    இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டதாக பேராலய நிர்வாகம் அறிவிப்பு செய்தது. அதேசமயம் நேற்று மாலை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் புனித கன்னிமரியாள் பிறப்பு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய துணைஅதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மிகதந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் குறைந்த அளவில் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.
    ×