search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    காலத்தின் அருமை

    நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வழியிலே செலவழிப்பதே புத்திசாலித்தனம்.
    காலம் பொன்போன்றது. கடமை கண் போன்றது என்றொரு பழமொழி உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு இந்த காலத்தின் அருமை தெரிவதில்லை. நமது செல்வத்தையும், பணத்தையும் ஆண்டவர் விரும்புவதில்லை. நம் நேரத்தை அவருக்காக செலவிடும் போது அவர் மனம் மகிழ்ந்து நம்மை விரும்புகிறார். தேவனின் திருப்பாதத்தில் நேரம் செலவழிக்காதவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் சோர்வடைவார்கள். வானத்திற்கு கீழே நடைபெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு. இதைத்தான் வேதாகமத்தில், பிரசங்கி 3-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், தேவன் சகலத்தையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இன்றைய உலகில் பிள்ளைகளிடம் பேசுவதற்குகூட நேரம் இருப்பதில்லை. பிள்ளைகளோ பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர், வலைத்தளங்கள், செல்போன் போன்றவற்றிலேயே மூழ்கி விடுகின்றனர். அவர்கள் எதை பார்க்கிறார்கள் என்பதைக்கூட கவனிப்பதற்கு பெற்றோருக்கு நேரமிருப்பதில்லை. ஆனால் காலம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. அது ஓடிக்கொண்டே இருக்கும். இது குறித்து எபேசியர் 5-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில், நாட்கள் பொல்லாதவைகளாயிருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே நாம் கிடைக்கின்ற நேரத்தை திட்மிட்டு, வாழ்க்கைக்கு தேவையான காரியங்களை செய்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். வெற்றிக்கு நேரத்தை திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. அவசரமாக செய்ய வேண்டிய வேலைக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரே காரியத்திற்காக நேரங்களை செலவழிக்காமல் ஒவ்வொரு வேலைக்கும் நேரத்தை திட்டமிட்டு செயலாற்றுங்கள். அப்போது காலத்தை வீணாக்க வேண்டிய நிலை ஏற்படாது.

    இப்படி பல்வேறு வேலைப்பளு காரணமாக ஜெபிக்க, வேதம் வாசிக்க நேரமில்லை என்று கூறுவதும் நம்முடைய வாழ்க்கையில் காணப்படும். அதற்கு தகுந்த நேரத்தை ஒதுக்கி தேவனை மகிமைப்படுத்த வேண்டும். இப்படியல்லாமல் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வழியிலே செலவழிப்பதே புத்திசாலித்தனம். காலமும், கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆண்டவரே, காலத்தின் அருமை கருதி செயல்பட எனக்கு கிருபை தாரும் என்று இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம் ஆமென்.

    ஜேக்கப், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
    Next Story
    ×