என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    உங்களுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பும்போது துதிக்க ஆரம்பியுங்கள். துதிக்க முடியாத சூழ்நிலையிலும் துதியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் நடக்கும். சத்துருக்கள் ஓடிப்போவார்கள்.
    பலவிதமான போராட்டங்களை சத்துரு கொண்டு வந்து நம்மை வேதனைப்படுத்தி, சமாதானத்தைக் கெடுத்து, நிம்மதி இல்லாமல் குழப்பத்தோடு வாழும்படி செய்கிறான். ஒருநாள் இருக்கிற சமாதானம் மறுநாள் இல்லை. சில சமயங்களில் எல்லாப்பக்கத்திலும் நெருக்கப்பட்டு அலைக் கழிக்கப்படுகிறோமல்லவா?

    வேதத்தை நான் தியானித்துக் கொண்டிருக்கையில் யோசுவா 2-ம் அதிகாரத்தில் ‘யோசுவா, 31 ராஜாக்களோடு யுத்தம் பண்ணி அவர்களை முறியடித்தபின் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை பங்கிட்டு, அந்த தேசத்தில் நிம்மதியாக வாழ்ந்த சம்பவத்தை வாசித்தேன்’. அப்பொழுது எனக்குள்ளே ஒரு எண்ணம் உண்டானது.

    நாம் நிம்மதியாக வாழ முடியாதபடி பலவிதங்களில் கிரியை செய்கிற 31 விதமான சாத்தானின் கிரியைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறியடித்தால் தான் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொண்டு நிம்மதியாக வாழ முடியும். இந்த எண்ணம் என்னுள்ளத்தில் வந்தவுடன் தொடர்ந்து ஆண்டவரிடம் சத்துருவை அடையாளம் காட்டும்படி ஜெபம் பண்ணினேன். அதன் பின் ஆண்டவர் பிசாசின் தந்திரங்களை வெளிப்படுத்தி அவற்றை முறியடித்து ஜெபிக்கக் கிருபை செய்தார். நீங்களும் விசுவாசத்தோடு சத்துருவை எதிர்த்து ஜெபியுங்கள்.

    அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். சத்துருக்கள் நமக்கு முன்பாக நொறுங்கிப்போவார்கள். வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களை நாம் சுதந்தரிப்போம். சந்தோஷமான ஒரு இளைப்பாறுதலை தேவன் கட்டளையிடுவார்.

    “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” மாற்.9:29

    பிசாசின் கிரியைகளை மேற்கொள்ள மிகமிக முக்கியம் உபவாச ஜெபம். எந்த அளவுக்கு உபவாசத்தோடு ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும். ஜெபம் குறைய குறைய பிசாசின் கிரியைகள் அதிகரிக்கும். ஜெபம் அதிகரித்தால் பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும்.

    எஸ்தர் நூலில் யூத ஜனங்களுக்கு விரோதமாக குறிப்பாக மொர்தெகாய்க்கு விரோதமாக ஆமான் என்ற சத்துரு எழும்பினபோது எஸ்தரும், யூதரும் உபவாசித்து ஜெபித்தார்கள். எனவே வெற்றியடைந்தார்கள். ஆமானின் திட்டங்கள் தோல்வியடைந்தது.

    இப்படியே தாவீதுக்கு விரோதமாக அவனுடைய மகன் அப்சலோம் எழும்பினபோது அகித்தோப்பேல் தாவீதை அழிக்க தந்திரமாய் ஆலோசனை கொடுத்தான். ஆனால் தாவீதோ ஆண்டவரை நோக்கி, “அகித்தோப்பேலின் ஆலோசனைகளை பயித்தியமாக்கிப் போடுவீராக” என்று ஒரு சிறிய ஜெபம்தான் ஏறெடுத்தான். உடனே ஆண்டவர் அற்புதம் செய்து அகித்தோப்பேலின் ஆவியை முறியடித்தார்.



    குடும்பத்தில் ஒரே போராட்டமும், குழப்பமுமாயிருக்கிறதா? சோர்ந்து போகாதீர்கள். உடனே குடும்பமாக ஜெபியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது உபவாசித்து ஜெபியுங்கள். இரவு நேரங்களில் அதிகமாக ஜெபியுங்கள். நிச்சயம் பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான். எந்த இடத்தில் வேதனைப்பட்டீர்களோ, உபத்திரவப்படுத்தப்பட்டீர்களோ அதே இடத்தில் ஆண்டவர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார். “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்” மத். 26:41.

    நியாயாதிபதிகள் முதல் அதிகாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் முதலில் புறப்பட வேண்டும் என்று கேட்டபோது கர்த்தர் யூதா புறப்படக்கடவன் என்றார். (நியா.1:12)

    யூதா பிறந்தபோது அவன் தாயாகிய லேயாள் “கர்த்தரைத் துதிப்பேன்” என்று சொல்லி யூதா என்று பேரிட்டாள். (ஆதி.29:35) யூதா என்ற பெயருக்கு அர்த்தம் துதி.

    பிரச்சினைகள், போராட்டங்கள், சோதனைகளை சாத்தான் கொண்டு வரும்போது துதிக்கத் துதிக்க தேவமகிமை இறங்கி வரும். சாத்தானின் கிரியைகள் அழிக்கப்படும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.

    யோசபாத் ராஜாவுக்கு விரோதமாக எல்லாப் பக்கத்திலும் சத்துருக்கள் வந்தபோது யோசபாத் என்ன செய்தார் தெரியுமா? கர்த்தரை துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதிக்க பாடகரை யுத்த வீரருக்கு முன் நிறுத்தினார். பாடகர்கள் துதிக்கத் துதிக்க நடந்தது என்ன தெரியுமா?

    “அவர்கள் பாடித்துதிசெய்யத்தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.” II .நாளா. 20:22

    உங்களுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பும்போது துதிக்க ஆரம்பியுங்கள். பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கின உடனே கட்டுகள் கழன்றது, சிறைச்சாலைக் கதவுகள் திறவுண்டது.

    துதிக்க முடியாத சூழ்நிலையிலும் துதியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் நடக்கும். சத்துருக்கள் ஓடிப்போவார்கள். துதிக்காமல் யுத்தம் பண்ணினால் சில சேதங்கள் நமக்கு வரலாம். ஆனால் துதித்தால் சேதமில்லாமல் வெற்றியை சுதந்தரிக்க முடியும். எனவே துதியுங்கள். ஜெயம் பெறுங்கள்.

    நிச்சயமாகவே ஆண்டவர் உங்களை சத்துருக்களின் முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், “இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்” சென்னை- 54.
    பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
    பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இது வீரமாமுனிவர் வழிபட்ட ஆலயமாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.

    இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஏ.கிறிஸ்து அமலதாஸ் மற்றும் வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதில் திருவையாறு பங்குத்தந்தை டோனிசாட்ச் திருத்தேரினை புனிதப்படுத்தி, வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரகாலூர் பங்குத்தந்தை அந்தோணிசாமி மற்றும் சுற்று வட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    தினமும் மாலை நடைபெற்ற திருப்பலியில், புள்ளம்பாடி சகாயமாதா ஆலய அருட்தந்தை கஸ்பார், வடுகர்பேட்டை தங்கசாமி உள்பட பல்வேறு அருட்தந்தையர்களால் கூட்டுப்பாடற் திருப்பலி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 சப்பரங்களின் பவனியை குடந்தை மறை மாவட்ட கல்வி இயக்குனர் தந்தை ஜோமிக் சாவியோ புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார்.

    நேற்று முன்தினம் மாலை ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திருவையாறு பங்குத்தந்தை டோனிசாட்ச் திருத்தேரினை புனிதப்படுத்தி, வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேரில் அலங்கரிக்கப்பட்ட அன்னாள்மேரி சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து இரவில் ஆலயம் வந்தடைந்தது.

    விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித அன்னாள் ஆலய அதிபர் ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்கு தந்தை அமலதாஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அருட் சகோதரிகள், பங்கு இளைஞர்கள் செய்திருந்தனர்.
    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு மறையுரை, திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடந்தது.

    8-ம் திருவிழாவான 22-ந் தேதி அன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நற்கருணை பவனி நடந்தது.

    9-ம் திருவிழாவான 23-ந்தேதி காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலி நடந்தது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் அருள்விழாவும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு, மாதாவை வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகளும், பங்குமக்களும் செய்து இருந்தனர்.
    இயேசு பிரான் சொன்னதைப்போல, யாரும் யாரையும் தீர்ப்பிடும் நிலையில் இல்லை என்பதை உணர்வோம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம்.
    அக்காலத்தில் இயேசு பிரான் 'ஒலிவ மலை' என்ற இடத்திற்குச் சென்றார். இரவு அங்கு தங்கி இருந்தார். பொழுது விடிந்தது. அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அவர்களோடு அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
    மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும், விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருத்தியை அவர்களோடு அழைத்து வந்தனர். அந்தப் பெண்ணை கூட்டத்தின் நடுவில் நிறுத்தினார்கள்.

    பிறகு அவர்கள் இயேசு பிரானைப் பார்த்து, போதகரே! இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது, 'மோசே' நமக்குக் கொடுத்த திருக்கட்டளை ஆகும். இது குறித்து நீர் என்ன சொல்கிறீர்? என்று கேட்டனர்.

    இயேசு பிரானின் மேல் குற்றம் சுமத்த, ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சோதித்தனர். அவர் தரையைப் பார்த்து குனிந்து கொண்டு, தனது விரலால் தரையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்கள் அவரை விட்டபாடில்லை. விடாமல் தொடர்ந்து வினாவை தொடுத்த வண்ணம் இருந்தனர்.

    அவர் அவர்களை நிமிர்ந்து பார்த்து, உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் இவள் மீது கல் எறியட்டும் என்றார். மீண்டும் தரையில் குனிந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து சென்று விட்டனர். இறுதியாக இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

    இயேசு நிமிர்ந்து பார்த்தார். அப்பெண்ணைப் பார்த்து, அம்மா! அவர்கள் எங்கே? உன்னைக் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பிடவில்லையா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், இல்லை ஐயா என்று பதில் கூறினாள். உடனே இயேசு பிரான், அவளைப் பார்த்து, நானும் தீர்ப்பிடவில்லை. நீ போகலாம். இனி பாவம் செய்யாதே என்றார்.



    இந்தச் சம்பவத்தில் இருந்து நாம் என்ன உணர்கிறோம்? குற்றமற்றவர் என்று ஒருவர் கூட இருக்க முடியாது. உலகத்தில் உதித்த எல்லோரும் பாவச்சேற்றில் உழன்று கொண்டுதான் இருக்கிறோம். பாவம் செய்தவர்களைத் திருந்தி வாழ வேண்டும் என்று கூறுவதுதான் சிறந்த அறிவுரை ஆகும். யாரும் யாரையும் தீர்ப்பிட முடியாது. காரணம் யாரும் யாரையும் தீர்ப்பிடமுடியாத அளவுக்கு, அனைவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வழியில்-ஏதோ ஒரு வகையில் பாவ வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.

    ஒருவரைத் தீர்ப்பிடுவதும், தீர்ப்புக்கு உள்ளாக்குவதும் அக்காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. தன் குற்றத்தைப் பார்க்காமல், பிறர் குற்றத்தையே காணும் பழக்கம் மனித சமுதாயத்தில் மலிந்து கிடக்கிறது.

    போதிக்கக் கூடியவர்களைக் கேள்வி கேட்பதும் வழக்கமாகி விட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந் திருக்கின்றன. விபசாரம் செய்யும் பெண்களுக்கு இப்படி கொடூர மான தண்டனைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    இயேசு பிரான் இந்த நிகழ்வை எப்படிக் கையாள்கிறார் பார்த்தீர்களா? 'உங்களில் குற்றமில்லாதவன்' என்ற வரிதான் வந்தவர்களைச் சிந்திக்க வைக்கிறது.
    யாரும், யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்ற கருத்தும், குற்றமில்லாதவர் யார்? என்ற வினாவும் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
    நாம் வாழும் இந்தக் காலத்திலும் இக்கருத்தைப் பற்றி சிந்திப்போம்.

    நம்மைச் சுற்றி ஓர் உலகம் இயங்குகிறது. இந்த உலகத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு சமயத்தையும் சாதிகளையும் சார்ந்தவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிகளுக்குள் சண்டை; சமயங்களுக்குள் பகைமை என்பதெல்லாம், புரையோடி இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் வேறு மனித சமுதாயத்தை அலைக்கழிக்கிறது. எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனித சமுதாயம் மாண்புடன் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆனால் வேண்டியவர்களுக்கு ஒரு நீதி; வேண்டாதவர் களுக்கு ஒரு நீதி என்பதெல்லாம் இவ்வுலகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டு செயலாக்கம் பெறுகிறது.

    தவறு செய்வது மனித சமூகத்தில் இயல்பானதுதான். அந்த இயல்பை மாற்றி அமைப்பதற்குத்தான், மதம் என்னும் மார்க்கம் இருக்க வேண்டுமே தவிர, பகைமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. விபசாரம் செய்து விட்டாள்; இவளைக் கல்லால் எறிய வேண்டும் என்று ஒரு கூட்டம் ஓடி வந்ததைக் கண்டோம். அந்தக் கூட்டத்தை ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு, சிந்திக்க வைக்கிறார், இயேசு பெருமான்.

    உங்களில் குற்றமில்லாதவன், முதல் கல்லை எறியட்டும் என்கிறார். அக்காலத்தில் பெண் தவறு செய்தால், பெரிய தவறாகச் சித்தரிப்பார்கள். இந்தக் காலத்திலும் அதே நிலைதான் நீடிக்கிறது. ஆணாதிக்க சமுதாயமாக அன்றிருந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது.

    ஆகவே சிந்திக்கத் தொடங்குவோம். இயேசு பிரான் சொன்னதைப்போல, யாரும் யாரையும் தீர்ப்பிடும் நிலையில் இல்லை என்பதை உணர்வோம். குற்றம் இல்லாமல் வாழ அனைவரும் முயற்சி எடுப்போம். சாதி, சமய பகைமையை ஒழித்து, நல்லுறவைப் பேணி வளர்ப்போம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம். இதுவே நல்வாழ்வு வாழ வழி வகுக்கும்.

    - செம்பை சேவியர்.
    தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா ஆலய திருவிழாவில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் பழமை வாய்ந்த புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 132-வது ஆண்டு திருவிழா, கடந்த 13-ந் தேதி கொடி ஊர்வலம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. 21-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது.

    இந்த திருப்பலியினை மாரம்பாடி மறைவட்ட அதிபர் சாம்சன் அடிகளார் தலைமையிலான குருக்கள் நிறைவேற்றினர். பின்னர் அன்னையின் திருஉருவ ஆடம்பர கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மறவபட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள் காணிக்கை அழைப்பினை தொடர்ந்து புனித சலேத் மாதா, புனித பெரிய அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரதங்களில் எழுந்தேற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேரடித் திருப்பலி, அனுமந்தராயன்கோட்டை மறைவட்ட அதிபர் ஏர்னஸ்ட் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மின்ரதங்களில் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் எழுந்தேற்றம் செய்யப்பட்டு மின்தேர் ஊர்வலமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.

    நேற்று மாலை 3 மணிக்கு அன்னையின் பெரிய தேர்ப்பவனி நடைபெற்றது. இறுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, முழங்காலிட்டு புனித சலேத் மாதா எழுந்தருளிய சப்பரத்தை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தனர்.
    பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு நாம் முயலுவோமேயானால், இவ்வுலகத்தில் உள்ளோரை நல்வழிப்படுத்த முடியும் என்பதை உணர்வோம்.
    இயேசு பிரான் மலை மீது ஏறி நின்று, ஒரு புதிய சட்டத்தை மக்களுக்கு அறிவிக்கிறார். அவர் போதிக்கத் தொடங்கிய காலத்தில், அவரது கருத்தை ஏற்றுக் கொள்வோர் மிகுதியாக இல்லை. ‘கல் மனம்’ கொண்டவர்களாகத் தான் இருந்தார்கள்.

    ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதைப் போல, தன் கருத்தை, அழுத்தமாகவும், அச்சமின்றியும், ஆழமாகவும்  மக்களுக்கு எடுத்துரைத்தார். நாளடைவில் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். மக்களைத் தன் போதனையால் திரட்டிய அப்பெருமகன், உயர்ந்த மலையைத் தன் போதனைக்கு இருப்பிடமாகக் கொண்டார். மக்கள் அவரைப் பார்ப்பதற்கும், அவர் மக்களைப் பார்ப்பதற்கும், மலை அவருக்கு வசதியாக இருந்தது. இதைத்தான் ‘மலைப்பொழிவு’ என்று நற்செய்தி கூறுகிறது.

    வழக்கம்போல், அவர் மலையின் மீது அமர்ந்தார். சீடர்களை நோக்கி, அவர் முதலில் கூறுகிறார். சீடர்கள் வழிகாட்டியாக இருந்தால்தான், மக்களுக்கு நற்செய்தியைப் போதிக்க முடியும். ஆகவே அவர் சீடர்களை நோக்கி, ‘‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள். உப்பு, உவர்ப்பற்றுப் போனால், எதைக் கொண்டு அதை உவர்ப்பு உள்ளதாக ஆக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு, மனிதரால் மிதிபடும். வேறு எதற்கும் உதவாது. நீங்கள், உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலை மேல் உள்ள நகர் மறைவாக இருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. மாறாக, விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான், அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி, மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’’.

    ‘உப்பு’ எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தத்தான், ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற வாசகத்தைப் பயன் படுத்துகிறோம். உப்பு, எல்லாப் பொருளையும் பாதுகாக்கக் கூடியது. அந்த உப்பானது, சாரம் இல்லாமல் போய் விட்டால், வேறு எதைக் கொண்டு அதைச் சரிசெய்ய முடியும்?

    ஆகவே, அவர் சீடர்களைப் பார்த்து, நீங்கள் உப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போதிக்கிறார். உப்பு, சாரமற்றுப் போனால் அது, வெளியில் கொட்டப்பட்டு, எப்படி மனிதர் களால் மிதிபடுகிறதோ, அந்த நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுவீர்கள். ஆகவே உப்பாக இருங்கள்; உவர்ப்பாக இருங்கள் என்கிறார்.

    இது மட்டுமா?, நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள் என்கிறார். மலை மேல் இருக்கும் நகர், மறைவாக இருக்க முடியாது என்கிறார். மலை மேல் இருக்கும் நகரை அனைவரும் பார்க்க முடியும். அதைப் போல, ஒளி கொடுக்கும் உங்களை அனைவரும் காண்பார்கள். விளக்கை ஏற்றுபவர்கள் விளக்கை ஏற்றி, மரக்காலுக்கு அடியில் வைக்க மாட்டார்கள்.

    விளக்குத் தண்டின் மீதுதான் வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி கிடைக்கும். ஆகவே உங்கள் ஒளியானது, மனிதர்களின் முன் ஒளிர வேண்டும். உங்களின் நல்ல செயல்களைப் பார்த்து விண்ணகத்தில் உள்ள தந்தையும் மகிழ்ச்சி அடைவார் என்கிறார். இயேசு பிரானின் போதனை, இவ்வுலகத்தை மட்டும் சார்ந்தது அல்ல. மறு உலகத்தையும் சார்ந்தது. ஆகவே முதலில் சீடர்களை நெறிப்படுத்துகிறார். எளிமையாக நாம் பயன்படுத்தும் ‘உப்பு’, ‘விளக்கு’ போன்றவற்றைக் காட்டி அதன் பயன்பாட்டை விளக்கி, நமக்குப் போதிக்கிறார்.



    என்னே அருமையான உவமை என்று கூறிவிட்டு, நாமும் வீணே காலம் கழிக்காமல், இப்போதனையைக் கேட்கும் ஒவ்வொருவரும், உப்பாகவும், விளக்காகவும் இருக்க வேண்டும். விண்ணகத் தந்தை மகிழ்ச்சி அடைவார் என்று, இறுதியாகத்தான் கூறுகிறார். இவ்வுலகில் பிறந்த மனித சமூகத்தை நெறிப்படுத்த வேண்டுமானால், சீடர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும், உப்பாகவும், விளக்காகவும் செயல்பட வேண்டும். இவ்விதம் செயல்பட்டால், உண்மையான அமைதியையும், மகிழ்ச்சியையும் இவ்வுலகில் கொண்டு வர முடியும். அன்பு, அமைதி, சமாதானம் இம்மூன்றும்தான், மனித சமுதாயத்தை வாழ வைக்கும் கேடயம் என்றால் மிகையாகாது.

    மீண்டும் ஒருமுறை இந்நற்செய்தியை, நினைவிற்குக் கொண்டு வருவோம். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தாலும், முதன் முதலில் சீடர்களுக்குத்தான் இவ்விதம் கூறுகிறார்.

    காரணம் என்ன? என்பதை எண்ணிப் பாருங்கள். போதிக் கிறவர்கள் முதலில் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்பதே, இயேசு பிரானின் கோட்பாடு. தன்னைப் பின்பற்றும் சீடர்கள், பிறருக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அதனால்தான் முதலில் சீடர்களுக்குப் போதிக்கிறார்.

    முதலில் ‘உப்பு’ என்ற பொருளைப் பற்றி பேசுகிறார். மிகவும் அருமையான சிந்தையாக இருப்பதை எண்ணிப்பார்ப்போம். உப்பின் தன்மை உவர்ப்பு ஆகும். உவர்ப்புத் தன்மைதான் அனைத்தையும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. ஏனைய பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு, உப்பானது உதவுகிறது. அந்த உப்பே சாரமற்றுப் போனால் அந்த உப்பை எப்படி, சாரமுள்ளதாக மாற்ற முடியும்? என்ற கேள்வியைக் கேட்கிறார்.

    ஆகவே நீங்கள்தான் ‘உப்பு’. உப்பைப் போல் பயன் தரவேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே முதன் முதலில் உப்பைப் பற்றி பேசுகிறார்.

    அடுத்ததாக, ‘ஒளி’யைப்பற்றிப் பேசுகிறார். நீங்கள், உலகிற்கு ‘ஒளி’ என்கிறார். அதற்கு மலையை எடுத்துக் காட்டி விளக்குகிறார். ஒரு ‘நகர்’ மலை மேல் இருக்குமானால், மறைவாக இருக்க முடியாது. எல்லோருக்கும் தெரிய வரும் அல்லவா? அதைப்போல, உங்களை அனைவரும் பார்க்க வேண்டுமானால், நீங்கள் ஒளி தர வேண்டும்.

    இப்படிப்பட்ட நல்ல செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வானகத்தில் உள்ள என் தந்தை மகிழ்வுறுவார் என்கிறார்.

    பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு நாம் முயலுவோமேயானால், இவ்வுலகத்தில் உள்ளோரை நல்வழிப்படுத்த முடியும் என்பதை உணர்வோம். முதலில் நாம் நடந்து காட்டுவோம். பிறரையும் நல்வழிபடுத்த முயலுவோம்.

    - செம்பை சேவியர்.
    இலந்தவிளை தூய திருக்குடும்ப ஆலயம் தனிப்பங்காக உதயமாகும் விழா நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    திங்கள்நகர் அருகே இலந்தவிளையில் தூய திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முரசங்கோடு பங்கின் கிளை பங்காக 53 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஆலயம் தனிப்பங்காக உதயமாகும் விழா நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் திருப்பலியை நிறைவேற்றி தனிப்பங்காக தரம் உயர்த்துகிறார். அதைத்தொடர்ந்து அன்பு விருந்து நடைபெறுகிறது.

    மேலும் ஆயர், இந்த பங்கின் முதல் பங்குத்தந்தையாக ஜார்ஜ்ஜை நியமிக்கிறார். முன்னதாக ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பெனிட்டோ, இணை பங்குத்தந்தை ஜெயசீலன், பங்குபேரவை துணைத்தலைவர் ஹெர்மஸ் கிரகோரி, செயலாளர் ஸ்டெல்லா ராணி, துணை செயலாளர் பீட்டர் ஜெரோம், பொருளாளர் அலன் ஜாய் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற வேறுபாடுகள் களையப்பட, ஏழை- எளிய, பாமரர்களை அன்பு செய்வோம். அதன்வழி புத்தெழுச்சி பெற்ற மக்களினமாக உருமாறுவோம்.
    வேறுபாடுகளும், பிளவுகளும் நிறைந்த சமூகமாகவே நமது சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தவக்காலத்தின் புனிதத்தை அனுபவிப்பதற்கு இணைந்து வந்திருக்கின்ற நாம், நம்மையே மிக ஆழமாக கேள்வி கேட்க அழைக்கப்பட்டுள்ளோம். இனம், சாதி, மொழி, பாலின பாகுபாடுகள் கடந்து என்னால் சிந்திக்க முடிகின்றதா? செயல்பட முடிகின்றதா? என்பதனை அலசுவோம்.

    இயேசுவின் வாழ்வு, பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கியது. அதில் ஒரு முக்கியமான கூறு “அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதாகும். நான் தான் எல்லாம் என்ற யூத எண்ணத்தை உடைத்தெறிவதாகவே அவரின் பணி அமைந்திருந்தது. அவரின் போதனைகளில் உயர்ந்த ஒன்றாக கருதப்படுகின்ற நல்ல சமாரியன் உவமை அதற்கொரு சான்றாகும் (லூக்கா 10:29-37). இறைவனின் இரக்கத்தை யார் பிரதிபலிக்கின்றார்களோ? அவர்கள் இறைவனுக்கு அருகில் வாழ்கின்றனர்.

    மேலும் மாற்கு 7:24-30 வரை உள்ள உவமையில் கானானியப் பெண்ணின் நம்பிக்கையை அங்கீகரித்து, அக்குலம் மாண்புடன் வாழ உறுதுணை செய்கிறார். இதேபோன்று யோவான் 4:1-4 வரையுள்ள நிகழ்வில் சமாரியப் பெண்ணுக்கு அங்கீகாரம் அளித்து, அவ்வினத்தை மாண்புக்குரிய இனமாக உருமாற்றுகிறார்.



    இத்தகைய மனநிலையே உண்மையான கிறிஸ்தவ மனநிலையாகும். இதனை பிரதிபலிக்கவும், வாழ்ந்து காட்டவும் நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது சமுதாயத்தில் இயல்பாகவே மனிதர்களை வெறுத்து ஒதுக்குகின்ற செயல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. வேறுபாடுகளை தக்க வைப்பதில் பலர் முனைந்து செயலாற்றுகின்றனர். பதவிக்காக, அதிகாரத்துக்காக எதையும் செய்கின்ற கீழ்த்தரமான அரசியல் உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையை மாற்றுவது என்பது எளிதான செயல் அல்ல.

    ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிடவும் முடியாது. நாம்தான் முனைப்போடு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். வேறுபாடுகளை களைவதிலும், சாதாரண மக்களை மையத்திற்கு கொண்டு வருவதிலும் திருத்தந்தை பிரான்சிஸ் சிறப்பானவராக கருதப்படுகின்றார். ஏழைகளிடம் அவர் காட்டும் கருணையும், எளியவர்களின் ஏற்றத்துக்காகக் கொண்டுள்ள ஈடுபாடும் உலக அளவில் ஒரு தனியிடத்தை அவருக்கு அளித்துள்ளது.

    சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதங்களைக் கழுவுதல், மாற்றுத்திறனாளிகளையும், நோயுற்றோரையும் அரவணைத்தல், துன்பத்தில் உழல்வோரைச் சந்தித்து பேசுதல் போன்ற பல நல்ல முயற்சிகளை முன்னெடுக்கின்றார். சொல்வதைச் செய்வதாலும், செய்வதையே சொல்வதாலும் புதிய முத்திரை பதிக்கின்றார். இவரின் வாழ்வு இன்று மாபெரும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகின்றது. ஆதலால் நாமும் இத்தவக்காலத்தில் நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற வேறுபாடுகள் களையப்பட, ஏழை- எளிய, பாமரர்களை அன்பு செய்வோம். அதன்வழி புத்தெழுச்சி பெற்ற மக்களினமாக உருமாறுவோம்.

    இணை பங்குத்தந்தை, தூய சவோரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    நமக்கு அவர் சுகம் தருவார் என்ற விசுவாசம் இருந்தால் போதும். அவருடைய சிலுவையின் தழும்புகளால் குணமாவீர்கள். ஆமென்.
    “இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு, ‘ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்’ என்று கூப்பிட்டார்கள்” (மத்.20:30).

    வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அந்த வழியிலே வருகிறதை அறிந்து ‘ஆண்டவரே, தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்’ என்று அதிக சத்தமாய் கூப்பிட்டார்கள்.

    குருடர்கள் பேசாதபடி ஜனங்கள் அதட்டினார்கள். இயேசு நின்று அவர்களை தம்மிடத்தில் அழைத்து, ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

    ‘இறைவனே எங்கள் கண்களைத் திறக்க வேண்டும்’ என்றார்கள். இயேசு அவர்கள் மேல் மனதுருகி அவர்கள் கண் களைத் தொட்டார். உடனே பார்வையடைந்தார்கள். சகல ஜனங்களும் அவரை பார்த்து ‘இது என்ன அற்புதமான செயல்’ என்றார்கள்.

    “அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து ‘ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்’ என்றான்”(மத்.8:2).

    மிகவும் அருவருப்பான மனிதர்களைப் பார்த்தால் தேசத்து ஜனங்கள் ஒதுங்கி சென்றுவிடுவார்கள். அவர்களிடம் எந்த தொடர்பும் வைக்கமாட்டார்கள். ஆனால் குஷ்டரோகி ‘ஆண்டவரே’ என அழைத்தான். அவரை பணிந்து கொண்டான். இயேசுவால் தன்னை முற்றிலும் குணமாக்க முடியும் என்று விசுவாசித்தான். என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

    பாரபட்சம் பார்க்காத இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு ‘எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு’ என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

    மிகவும் பரிசுத்தமான கரம், மிகவும் தீட்டான உடலைத் தொட்டது. தீட்டான உடல் பரிசுத்தமாக மாறியது. சகல ஜனங்களும் ஆச்சரியப்பட்டு ‘இது என்ன அதிசயமான காரியம்’ என்றார்கள்.

    “அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக் காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்” (மத்.9:2).

    இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை பார்த்து ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்றார். பின்பு, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ’ என்றார். உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப் போனான். ஜனங்கள் அதைக் கண்டு ‘வல்லமையான அதிகாரம் உடையவர்’ என்று அவரை மகிமைப்படுத்தினார்கள்.



    “அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்” (லூக்.7:2).

    நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து, ‘எனக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு கொடிய வேதனைப்படுகிறான்’ என்றான். இயேசு, ‘நான் வந்து அவனை குணமாக்குவேன்’ என்றார். நூற்றுக்கு அதிபதி, ‘ஆண்டவரே நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் விடுதலையாவான்’ என்றான்.

    இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்கு பின் செல்லுகிறவர்களை பார்த்து, ‘மெய்யாகவே இஸ்ரவேலில் இப்படி ஒரு விசுவாசத்தை நான் பார்க்கவில்லை’ என்று சொன்னார். பின்பு நூற்றுக்கு அதிபதியை பார்த்து, ‘நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக் கடவது’ என்றார்.

    கப்பர்நகூமில் ஒரு வார்த்தை சொல்ல, கானாவூரில் அந்த நேரத்திலே வேலைக்காரன் குணமானான். இதை கேள்விப்பட்ட ஜனங்கள் எல்லோரும் அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.

    ‘அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரை யும் குணமாக்கின படியினாலே ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள்’ (லூக்.6:19).

    ஜெப ஆலயத்தலைவன் யவீரு என்ற மனிதன், இயேசுவின் பாதத்தில் விழுந்து ‘பன்னிரண்டு வயதுள்ள தன் ஒரே மகள் மரண அவஸ்தையாயிருக்கிறாள்’ என்று சொல்லி இயேசுவை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான். அவர் புறப்பட்டு போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருங்கி வந்தார்கள்.

    பன்னிரண்டு வருடமாக பெரும் பாடுள்ள ஒரு ஸ்திரீ ‘தன் சொத்துகளையெல்லாம் விற்று வைத்தியத்திற்கு செலவழித்தும் ஒருவராலும் குணமாக்க முடியாதிருந்த ஸ்திரீ’ இயேசுவின் பின்னால் வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய பெரும்பாடு நின்று போயிற்று.

    அப்பொழுது இயேசு, ‘என்னைத்தொட்டது யார்? என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது’ என்றார். அந்த ஸ்திரீ நடுங்கி வந்து அவர் முன்பாக விழுந்து தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே தான் குண மானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.

    அவர், ‘மகளே திடன்கொள். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ’ என்றார். அவரை தொட்ட யாவரும் எல்லா வியாதியிலிருந்தும் குணமானார்கள்.

    ஜனங்களுக்கு உண்டாகியிருந்த சகல வியாதிகளையும் நீக்கி விடுதலையாக்கினார். படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற மனிதர்களை இறைவன் தாங்குவார். ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’ என்றார். எப்படிப்பட்ட வியாதியிலிருந்தும் அவரால் விடுதலை தரமுடியும். நமக்கு அவர் சுகம் தருவார் என்ற விசுவாசம் இருந்தால் போதும். அவருடைய சிலுவையின் தழும்புகளால் குணமாவீர்கள். ஆமென்.

    அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சென்னை-50.
    அன்பு, இரக்க செயல்கள், இறைவனுக்கு நேரம் கொடுத்தல், பிறருக்காக ஜெபித்தல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, மாற்றம் பெற்ற மனிதர்களாய் வாழ்வை அழகுப்படுத்துவோம்.
    கி.பி. 354-வது ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தகாஸ்கா என்னுமிடத்தில் பிறந்தவரே புனித அகுஸ்தீனார். தனது தொடக்க கால வாழ்வில் சோம்பேறியாகவும், ஊர் சுற்றுபவராகவும் இருந்தார். மனம்போன போக்கிலே வழிநடந்து, ஒழுக்கமற்ற வாழ்வால் தன் ஆன்மாவை கறைப்படுத்தினார். தனது 19-வது வயதில் சிசரோ எழுதிய ஹேர்டென்சியஸ் என்னும் நூலை வாசிக்கிறார்.

    அதில் ஈர்க்கப்பட்டவராய் உண்மையான ஞானத்தை தேடி ஓடினார். ஒரு நாள் தனிமையிலே தனது இல்லத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுவன் காட்சியில் தோன்றி, எடுத்துப்படி என்று மூன்றுமுறை சொல்லிவிட்டு மறைந்தான். அருகிலிருந்தது திருவிவிலியம். அதனை எடுத்து, உரோமையர் 12:12-ஐ வாசித்தார். அதில் “இரவு முடியப்போகிறது. பகல் அண்மையில் உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக” எனக் கூறப்பட்டு இருந்தது.

    இதன் அர்த்தம் புரியாமல் தூய அம்புரோசியாரிடம் கலந்துரையாடல் செய்தார், அகுஸ்தீனார். இறுதியாக குருவாக மாறி, எழை- எளிய, பாமர மக்களுக்கு இயேசுவை எடுத்து சொல்ல வேண்டும் என்ற மனப்பாங்கோடு செயல்பட்டார். “உன் வாழ்க்கையில் நீ புரியும் செயல்களுக்கு நீயே பொறுப்பு. நீ புரியும் செயல்களுக்கு அழகையோ, அடுத்தவரோ பொறுப்பல்ல” என்கிறார். இவ்வாறாக இவரின் செயல்வடிவ மாற்றம், ஏராளமான மனிதர்களை இறைவனிடம் கொண்டு வந்தது.

    தவக்காலத்தின் இடைப்பட்ட நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், உண்மையான மாற்றம் பெற்றவர்களாக வாழ இன்றைய நாள் அழைக்கிறது. மாற்றம் என்பது வெறுமனே வார்த்தையில் இல்லை. மாறாக செயலில் வெளிப்பட வேண்டும். இதனைத்தான் மத்தேயு 7:21-ல் “ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.



    மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” எனப்பார்க்கிறோம். நமது வாழ்வு, செயல்பாடு, மிக்க வாழ்வாக திகழ வேண்டும். இயற்கையின் நியதியே காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப தன்னை வடிவமைத்து கொள்வதிலே அர்த்தம் பெறுகிறது.

    இத்தவக்காலம் மனம் மாறிட ஒரு சிறப்பு அழைப்பாகும். அதாவது செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும், இனியும் இதுபோன்ற தவறுகள் செய்யாமல் உறுதி கொள்ளவும் அழைக்கிறது. நேர்மையாளர்களுக்காக இயேசு பாடுபடவில்லை; துன்பப்படவில்லை. மாறாக பாவியாகிய எனக்காகவே பாடுபட்டார்; துன்பப்பட்டார் என்பதனை உணருவோம். நமது உள்ளத்தை கிழித்து கொள்வோம்.

    நமது உள்ளத்து கெட்ட நடத்தைகளான பரத்தமை, காமவெறி, பில்லி சூனியம், பகை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம், பொய்சாட்சி, பிறருக்குரியதை கவர்தல், களவு, தாய்-தந்தையரை மதியாமை போன்ற செயல்களை முழுமையாக விட்டுவிட முயற்சி எடுப்போம். நமது ஆன்மாவை ஆய்வுக்கு உட்படுத்தி, இயேசுவின் ஒப்புரவு அருளடையாளத்தாலும், அவரது இரக்கத்தாலும் கழுவி தூய்மைப்படுத்துவோம்.

    பிறர் அன்பு, இரக்க செயல்கள், தேவையை உணர்ந்து கொடுத்தல், இறைவனுக்கு நேரம் கொடுத்தல், பிறருக்காக ஜெபித்தல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, மாற்றம் பெற்ற மனிதர்களாய் வாழ்வை அழகுப்படுத்துவோம். நமது செயல்வடிவ மாற்றமே உண்மையான, நிரந்தரமான மாற்றம் என்பதனை உணர்ந்து வாழ்வோம்.

    அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    அமைதியை யார் நிலைநாட்டமுடியும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், நீதிக்காகப் போராடி வெற்றி காண்பவர்களே, அமைதிக்காகப் போராட முடியும்.
    அந்தக்காலத்தில் இயேசு பிரான் இவ்வுலகில் தொடர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருநாள் அவர் மலையின் மீது ஏறினார். அங்கே அவர் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரருகே வந்தனர்.

    அவர், திருவாய் மலர்ந்து இவ்வாறு கூறினார்:

    “ஏழையின் உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயரப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக ஆக்கிக் கொள்வர்”.

    “நீதியை நிலை நாட்டும் விருப்பம் கொண்டவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுபவர். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர் களுக்கு உரியது”.

    “என் பொருட்டு மக்கள், உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ச்சியோடு பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்பு இருந்த இறைவாக்கினர்களையும், அவர்கள் துன்புறுத்தினார்கள்”.

    ‘மத்தேயு’ என்ற நற்செய்தியாளர் எழுதிய, இவ்வாசகத்தை ஆழ்ந்து படிப்போம். இப்பகுதியில் சொல்லப்படும் ஒவ்வொரு சொற்றொடரும் மிகவும் பொருள் கொண்டதாக இருக்கிறது. சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால், இவ்வுலகில் துன்பப்படுவோர் பேறு பெற்றவர்கள் என்கிறார். இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

    ஏழையரின் உள்ளத்தை உடையவர்கள், பேறு பெற்றவர்கள் என்கிறார். உன் உள்ளத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதே என்பதுதான் இதன் அடிப்படைக் கருத்தாக அமைகிறது. இவர்களுக்குத்தான் விண்ணரசு கிடைக்கிறது என்கிறார்.

    ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். செல்வந்தன் விண்ணரசை அடைய முடியாது என்ற நற்செய்தி கருத்தையும் இவ்விடத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

    கவலை வேண்டாம்; துன்பப்படுவோர்கள், நிச்சயம் ஆறுதல் அடைவார்கள் என்கிறார். நீதியை நிலை நாட்டுவதற்காகவே, இயேசு பிரான் இவ்வுலகில் அவதரித்தார். ஆகவே அவர், நீதியை நிலைநாட்டும் விருப்பம் உடையவர்கள் பேறு பெற்றவர்கள் என்கிறார். ஏனென்றால் அவர்கள் நிறைவைப் பெறுவார்கள் என்கிறார். நிறைவு என்றால் என்ன? அதுதான் ‘மன நிறைவு’ என்பதாகும்.

    இறைவனை எல்லோரும் காண முடியாது. இறைவனைக் காண வேண்டும் என்றால், தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர்களாக நாம் இருப்போமானால் நாம் பேறு பெற்றவர்கள் என்று கூறுகிறார்.



    எல்லோரும் கடவுளின் மக்கள் என்று நாம் எண்ணுகிறோம். இயேசு பெருமான் போதிக்கும்பொழுது, கடவுளின் மக்கள் யார்? என்பதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

    “இவ்வுலகில் அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். ஏனெனில் இவர்கள்தான் இறைமக்கள்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

    நீதியின் பொருட்டு யார் போராடினாலும், நிச்சயம் இவ்வுலகில் துன்புறுத்தப்படுவார்கள். அப்படிப் போராடுபவர்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கே உரியது என்கிறார்.

    இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இறுதியாக ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார். ‘என் பொருட்டு, மக்கள் உங்களைத் துன் புறுத்தி, இகழ்வாகப் பேசி, இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லும்போது, நீங்கள் பேறு பெற்றவர்கள். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகில் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களும் இப்படித்தான் துன்புறுத்தப்பட்டார்கள்’ என்கிறார்.

    இந்நற்செய்தி வாசகத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். பேறு பெற்றவர்கள் யார்? என்ற பட்டியலையே நமக்கு அளிக்கிறார். துன்பப்படுவோர், துயரப்படுவோர் யாராக இருந்தாலும் என்று எண்ணுவதை விட, நீதியின் பொருட்டு, யார் துன்பப்பட்டாலும், துயரப்பட்டாலும் என்ற கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வுலகில் நீதியை நிலை நிறுத்துவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. நீதியை நிலை நாட்டவும், இறையரசை இவ்வுலகில் நிறுவவுமே, இயேசு பிரான், இம்மண்ணுலகில் அவதரித்தார் என்பது திருமறைக் கோட்பாடாகும். இன்றைய உலகில் நாமும் கண்கூடாக எத்தனையோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம். நீதி, அநீதி என்று பிரித்துப் பார்க்கும்பொழுது, அநீதியே இவ்வுலகில் அதிகமாக ஆட்சி புரிகிறது. நீதியை வலியுறுத்துவோர் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். நீதிக்காக போராடக்கூடியவர்கள், யாராக இருந்தாலும் எச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், துன்பப்படுவதும், துயரப்படுவதும் ஏன்? கொல்லப்படுவதும்கூட சர்வ சாதாரணமாக இருப்பதைக் காண்கிறோம்.

    இயேசு பெருமானும், நீதியைக் காத்து, அநீதியை அழிக்கவே, இம்மண்ணுலகில் மனித உருவாகப் பிறப்பெடுத்தார். இப்படிப்பட்டவர் களைப் பற்றி இந்த நற்செய்தியில் பேசும்பொழுது, யார் பேறு பெற்றவர்கள் என்ற வரிசையில், ‘இவ்வுலகில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ, அவர்களே பேறு பெற்றவர்கள்; ஏனென்றால், இவர்கள்தான் இறைமக்கள்’ என்று அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறார்.

    அமைதியை யார் நிலைநாட்டமுடியும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், நீதிக்காகப் போராடி வெற்றி காண்பவர்களே, அமைதிக்காகப் போராட முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படிப்பட்ட மக்கள் தோன்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, இயேசு பிரான் இம்மண்ணுலகில், எளிமையாகப் பிறந்து, இன்னல்களை ஏற்று, ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்து, மனித சமூகம் மாண்புற தன் அன்பை வழங்குகிறார். அன்பிற்குச் சான்றாக தன் உயிரையே தியாகம் செய்கிறார். இயேசு பெருமானின் வாழ்க்கை, நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்பதைத்தான், இந்த நற்செய்தி போதிக்கிறது.

    - செம்பை சேவியர்.
    ×