என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமுதாய வேறுபாடுகளை களைவோம்
    X

    சமுதாய வேறுபாடுகளை களைவோம்

    நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற வேறுபாடுகள் களையப்பட, ஏழை- எளிய, பாமரர்களை அன்பு செய்வோம். அதன்வழி புத்தெழுச்சி பெற்ற மக்களினமாக உருமாறுவோம்.
    வேறுபாடுகளும், பிளவுகளும் நிறைந்த சமூகமாகவே நமது சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தவக்காலத்தின் புனிதத்தை அனுபவிப்பதற்கு இணைந்து வந்திருக்கின்ற நாம், நம்மையே மிக ஆழமாக கேள்வி கேட்க அழைக்கப்பட்டுள்ளோம். இனம், சாதி, மொழி, பாலின பாகுபாடுகள் கடந்து என்னால் சிந்திக்க முடிகின்றதா? செயல்பட முடிகின்றதா? என்பதனை அலசுவோம்.

    இயேசுவின் வாழ்வு, பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கியது. அதில் ஒரு முக்கியமான கூறு “அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதாகும். நான் தான் எல்லாம் என்ற யூத எண்ணத்தை உடைத்தெறிவதாகவே அவரின் பணி அமைந்திருந்தது. அவரின் போதனைகளில் உயர்ந்த ஒன்றாக கருதப்படுகின்ற நல்ல சமாரியன் உவமை அதற்கொரு சான்றாகும் (லூக்கா 10:29-37). இறைவனின் இரக்கத்தை யார் பிரதிபலிக்கின்றார்களோ? அவர்கள் இறைவனுக்கு அருகில் வாழ்கின்றனர்.

    மேலும் மாற்கு 7:24-30 வரை உள்ள உவமையில் கானானியப் பெண்ணின் நம்பிக்கையை அங்கீகரித்து, அக்குலம் மாண்புடன் வாழ உறுதுணை செய்கிறார். இதேபோன்று யோவான் 4:1-4 வரையுள்ள நிகழ்வில் சமாரியப் பெண்ணுக்கு அங்கீகாரம் அளித்து, அவ்வினத்தை மாண்புக்குரிய இனமாக உருமாற்றுகிறார்.



    இத்தகைய மனநிலையே உண்மையான கிறிஸ்தவ மனநிலையாகும். இதனை பிரதிபலிக்கவும், வாழ்ந்து காட்டவும் நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது சமுதாயத்தில் இயல்பாகவே மனிதர்களை வெறுத்து ஒதுக்குகின்ற செயல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. வேறுபாடுகளை தக்க வைப்பதில் பலர் முனைந்து செயலாற்றுகின்றனர். பதவிக்காக, அதிகாரத்துக்காக எதையும் செய்கின்ற கீழ்த்தரமான அரசியல் உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையை மாற்றுவது என்பது எளிதான செயல் அல்ல.

    ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிடவும் முடியாது. நாம்தான் முனைப்போடு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். வேறுபாடுகளை களைவதிலும், சாதாரண மக்களை மையத்திற்கு கொண்டு வருவதிலும் திருத்தந்தை பிரான்சிஸ் சிறப்பானவராக கருதப்படுகின்றார். ஏழைகளிடம் அவர் காட்டும் கருணையும், எளியவர்களின் ஏற்றத்துக்காகக் கொண்டுள்ள ஈடுபாடும் உலக அளவில் ஒரு தனியிடத்தை அவருக்கு அளித்துள்ளது.

    சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதங்களைக் கழுவுதல், மாற்றுத்திறனாளிகளையும், நோயுற்றோரையும் அரவணைத்தல், துன்பத்தில் உழல்வோரைச் சந்தித்து பேசுதல் போன்ற பல நல்ல முயற்சிகளை முன்னெடுக்கின்றார். சொல்வதைச் செய்வதாலும், செய்வதையே சொல்வதாலும் புதிய முத்திரை பதிக்கின்றார். இவரின் வாழ்வு இன்று மாபெரும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகின்றது. ஆதலால் நாமும் இத்தவக்காலத்தில் நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற வேறுபாடுகள் களையப்பட, ஏழை- எளிய, பாமரர்களை அன்பு செய்வோம். அதன்வழி புத்தெழுச்சி பெற்ற மக்களினமாக உருமாறுவோம்.

    இணை பங்குத்தந்தை, தூய சவோரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    Next Story
    ×