என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஹாய் நான்னா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான 'மையல்'பாடலின் லிரிக் வீடியோ வருகிற 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • அல்போன்ஸ் புத்திரன் 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார்.
    • இப்படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளப் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "திரையரங்குகளுக்காக படங்கள் இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது, அதை நான் நேற்று கண்டுபிடித்தேன். நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள்,வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகபட்சம் ஓடிடி-க்காக இயக்குவேன்.


    அல்போன்ஸ் புத்திரன் பதிவு

    நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது அல்லது கணிக்க முடியாத வாழ்க்கை இடைவேளை பஞ்ச் போன்ற ஒரு திருப்பத்தைக் கொண்டுவருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது.
    • முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் 'தேஜஸ்' திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.


    இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விக்ரமன் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்.
    • சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை.


    விக்ரமன் - ஜெயப்பிரியா

    விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன், "என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையினால் அவரால் நடக்க முடியவில்லை. என் நிலைமையை விளக்கி ஒரு சேனலுக்கு பேட்டியளித்திருந்தேன்.


    இதனை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையை சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்தனர்.


    இந்நிலையில், 'லியோ' பத்தின் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்று தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்று இன்று மாலை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை சென்னை காவல் ஆணையகரகத்தில் போக்குவரத்து காவல் துறை, பெருநகர காவல்துறை மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பொது மக்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்? யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்பது குறித்து பேசப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தடையில்லா சான்றி வழங்கும் ஏற்பாட்டில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டும் போதுமானது.

    • திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
    • இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கே.எச்.233 படத்திற்காக என் 'ஆண்டவர்' கமல்ஹாசனுடன் இணையும் எச்.வினோத் அண்ணாவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.
    • இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    லேபில் போஸ்டர்

    இந்நிலையில், 'லேபில்' வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன்.
    • இவர் மீது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.

    பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான பெண் ஒருவர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான விக்ரமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.

    இதுபற்றி விக்ரமனிடம் கேட்டபோது என்னை சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.


    இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • இயக்குனர் விவேக் ராஜாராம் எழுதி இயக்கும் திரைப்படம் ’சிரோ’.
    • இந்த படத்தில் மலையாள நடிகர் அக்ஷய் ராதாகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் எழுதி இயக்கும் திரைப்படம் 'சிரோ'. இந்த படத்தில் மலையாள நடிகர் அக்ஷய் ராதாகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரோகிணி, லிஷா சின்னு, நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் இப்படத்திற்கு கிஷன் சி.வி. ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறியதாவது, 'சிரோ' படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம்.


    எங்களின் முதல் தயாரிப்பான 'வெப்பன்' படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரொமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோலவே, 'சிரோ' திரைப்படம் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்த படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம் என்றார்.

    • Friends தொடர் மூலம் பிரபலமானவர் மேத்யூ பெர்ரி.
    • இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

    1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்க டிவி தொடர் 'பிரெண்ட்ஸ்'(Friends). 10 சீசன்களாக வெளியான இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.இதில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மேத்யூ பெர்ரி. இவர் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். 54 வயதான மேத்யூ பெர்ரி கலிபோர்னியாவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.


    இந்நிலையில், இவர் தனது வீட்டின் குளியலறையில் உள்ள பாத் டப்பில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. மதுவுக்கு அடிமையான நடிகர் மேத்யூ பெர்ரி பல ஆண்டுகளாக வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். மேலும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேத்யூ பெர்ரி மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேத்யூ பெர்ரி மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டது.


    இந்நிலையில், தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1-ஆம் தேதி பாங்காக் செல்லவுள்ளதாகவும் அங்கு பிரமாண்ட சேஸிங் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×