என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாசரை எதிர்த்து கே.பாக்யராஜ் போட்டியிட இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நாசரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் நிற்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கிறார்.
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் முன்னோட்டம்.
'சுட்டுப்பிடிக்க உத்தரவு' அதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது.
படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.
'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்யாதீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
வித்யாபாலன் தற்போது தமிழில் அஜித் நடிக்கும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். தமிழில் தான் வித்யா பாலன் முதலில் அறிமுகமாகி இருக்க வேண்டும். இங்கு இருந்த டைரக்டர்கள் நிராகரித்ததால் இந்திக்கு சென்று அங்கு பெரிய நடிகையாகி விட்டார்.
ஒருசிலர் வித்யாவின் பருமனான தோற்றத்தை கிண்டல் செய்ததை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ’யாருடைய உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்து சிரிக்காதீர்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.

எல்லோருமே ஒரு வகையில் சிறப்பானவர்கள் தான். சினிமாவில் நான் நுழைந்த கால கட்டத்தில் பலரும் என் மன வலிமையை பலவீனப்படுத்தும் வகையில் அவமரியாதை செய்தார்கள். குண்டு பெண் என்று அழைத்து கேலி பேசினார்கள். இது எனது தன்னம்பிக்கையை பாதித்தது. உடல்தோற்றம் மட்டுமே ஒருவரை சாதனையாளராக்கப் போவதில்லை என்பதை கிண்டல் பேசுபவர்கள் உணர வேண்டும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்த விஜயசாந்தி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 26-வது படத்துக்கு, சரிலேரு நீக்கெவரு என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அனில் சுங்கரா, தில் ராஜு, மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.
அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தின் மூலமாக, 13 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் விஜயசாந்தி. இது குறித்து அவர் கூறியதாவது:-

‘தெலுங்கில் கிருஷ்ணாவுடன் நடித்த ஹிலாடி கிருஷ்ணுடு எனக்கு முதல் படம். இதுவரை 180 படங்களில் நடித்துள்ளேன். தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது கிருஷ்ணா மகன் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நான் பங்கேற்பது குறித்து சந்தோஷப்படுகிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் விமர்சனம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் ஆஷிமா நர்வாலை தினமும் பார்த்து விட்டுதான் செல்வார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு கிடைக்கிறது. இதை உயர் அதிகாரியான அர்ஜூன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது. மேலும் இறந்த நபர், ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால், இந்த கொலையை ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த கொலைக்கு எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர் என்று தெரிந்துக் கொள்கிறார் அர்ஜூன்.

இறுதியில் அந்த கொலையை செய்தவர் யார் என்று அர்ஜூன் கண்டுபிடித்தாரா? ஆஷிமாவிற்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் ஆண்டனி ஆந்திரா போலீஸில் இருந்து வெளியே வந்ததற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். கடைசி வரை முகத்தில் மர்மம் இருப்பதை உணர்த்தி நடித்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அர்ஜூன். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற படங்களில் நடிக்கும் நாயகி போல் இல்லாமல் இப்படத்தில் ஆஷிமாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சீதா.
ஒரு கொலை, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவம் என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். இப்படத்தை பார்க்கும் போது, ஏற்கனவே வெளியான சத்யராஜ் நடித்த படத்தின் சாயலாகவும், கமலின் பாபநாசம் சாயலாகவும் தோன்றுகிறது.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் படத்திற்கு ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். முகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கொலைகாரன்’ சுமாரானவன்.
1980-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்த சுமன் ரங்கநாதன் தற்போது 2வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிகை சுமன் ரங்கநாதன், 1980-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமாக இருந்தார். நடிகர் சங்கர்நாக் நடித்த ‘சி.பி.ஐ. சங்கர்’ படத்தில் சுமன் ரங்கநாதன் நடித்தார். நடிகர் அம்பரீசுடன் ‘கோகிலே கோகிலே’ படத்தில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் வாலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்து 2007-ம் ஆண்டு சுமன் ரங்கநாதன் விவாகரத்து பெற்றார்.

பின்னர் 12 ஆண்டுகள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் 44 வயதாகும் நடிகை சுமன் ரங்கநாதன், குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கன்னடம் மட்டுமின்றி பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.
விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்தது.
இறுதியாக விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக உறுதியான செய்திகள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா நடிப்பதாகவும், ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. விரைவில் இப்படத்தின் முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017 ஏப்ரல் மாதம் கட்டுமான பணியை தொடங்கினர். அதன்பிறகு கோர்ட்டு தடையால் சில மாதங்கள் பணியை நிறுத்திவிட்டு பின்னர் தடையை நீக்கி மீண்டும் கட்ட தொடங்கினார்கள்.
சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் நட்சத்திர கலை விழாவும் நடத்தி கட்டிட நிதி திரட்டினார்கள். 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ஆடிட்டோரியம், 1000 பேர் அமரும் கல்யாண மண்டபம், அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை அமைத்து உள்ளனர். இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டுமான பணிக்கு மேலும் பணம் தேவைப்படுகிறது என்றும், இதற்காக நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்றும் விஷால் கூறியிருந்தார். ஆனால் தற்போது நடிகர் சங்க தேர்தலுக்கான பணிகள் தொடங்கி உள்ளதால் விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடியும், விஷால் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளனர்.
ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல் கிசுகிசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்த விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார்.
பிறகு ‘ராட்சசன்’ படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது.
இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

’நீண்ட நாள்களாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன’. இவ்வாறு கூறியுள்ளார்.
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான "மஹா" படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official 😉!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu#avppolitics#vp9@sureshkamatchi#isaimaanaadu#HappyEid my brother!!! 🤗 pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019
தற்போது இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு டகால்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு 'டகால்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடிக்கிறார். மேலும் ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்த நடிகை லாலுவை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.
பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் மீடூ.
திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் செக்ஸ் புகார்களாக கடந்த ஆண்டு மீடூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. ஆனால் இந்தி, மலையாளம் ஆகிய திரையுலகங்களைப் போல் இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம் நீளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் அதுபற்றிய பேச்சுக்களும் குறைந்தன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஷாலு தற்போது செக்ஸ் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாலு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’சினிமாவில் நீங்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளானீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ’நானும் இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதை எப்படி கையாளவேண்டும் என்று எனக்குத் தெரியும்.
ஒருவேளை நான் புகார் அளித்து இருந்தால் அதனால் என்ன பயன்? எதிர்தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தார்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






