என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் விமர்சனம்.
    எமலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ராதாரவி. இவரது மனைவி ரேகா. ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார். சித்திரகுப்தராக இருக்கும் ரமேஷ் திலக், எமலோக பதவிக்கு ஆசைப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ராதாரவி தன்னுடைய மகனான யோகி பாபுவை அரசனாக்கி விடுகிறார். இதனால் கோபமடையும் ரமேஷ் திலக், சிவனாக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் முறையிடுகிறார். யோகி பாபு தவறு செய்தால் அவரை மாற்றிவிட்டு உன்னை அரியணையில் அமர வைக்கிறேன் என்று கூறுகிறார் மொட்டை ராஜேந்திரன். 



    யோகிபாபுவை ஏதாவது தவறு செய்ய வைத்து சிக்க வைப்பதற்காக அவரை பூலோகம் அழைத்து செல்கிறார் ரமேஷ் திலக். எதிர்பார்த்தபடி ஒரு தவறில் யோகிபாபு சிக்க, எமலோக பதவிக்கு ஆபத்து ஏற்படுகிறது. 

    இறுதியில் யோகிபாபு எமலோக பதவியை தக்க வைத்தாரா? ரமேஷ் திலக்கின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல அவரின் காமெடி கவுண்டர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். 



    படம் முழுக்க அவருடன் பயணிக்கிறார் ரமேஷ் திலக். இவர்கள் கூட்டணி செட்டாகிவிட்டது என்றே சொல்லலாம். மந்திரி சபை என்ற பெயரில் கணேஷ் செய்யும் லூட்டிகள் கலகலப்பு. ராதா ரவி, ரேகா ஆகியோருக்கு சில காட்சிகள் தான். ஆனால், வாரிசு அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர்கள் வரும் காட்சிகள் விசில் பறக்கிறது. சிவபெருமானாக வரும் மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல தன் ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.

    யோகிபாபுவை வைத்து காமெடி படம் மட்டும் கொடுக்காமல், சமூக அக்கறையுள்ள கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். இதில் விவசாயம், ஜாதி அரசியல், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, பெரியார், காந்தி, நேதாஜி உள்ளிட்ட முன்னாள் அரசியல் தலைவர்களை பற்றி பேசியிருக்கிறார்கள். தற்போதைய சமூக பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதம் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு.



    மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘தர்மபிரபு’ எமலோக கிங்.
    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன், தனது இசை பயணத்தை சுயாதீன பாடல் மூலம் தொடங்கியுள்ளார்.
    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர். அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ.டி.கே இணைந்து எழுதியுள்ளனர்.

    இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஏ.ஆர்.அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.


      
    இப்பாடலைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், “அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.  மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும்  ரசிகர்களிடையே  பெரிய எதிர்பார்ப்பினை  உண்டாக்கும்” என கூறினார்.
    தமிழில் முன்னணி காமெடியனான யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தர்மபிரபு' படத்தை தொடர்ந்து, அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி ஹீரோக்களான விஜய், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார். 

    இதற்கிடையே யோகிபாபு ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், இவர் ஹீரோவாக நடித்த கூர்கா, பன்னிக்குட்டி, ஸோம்பி போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. 



    இந்நிலையில், தான் இதன் பின்னர் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என யோகிபாபு அறிவித்துள்ளார். இனி காமெடி வேடத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் 20 வருடங்களுக்குப் பின் வெளியாகும் ‘தி லயன் கிங்’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி இணைந்துள்ளார்.
    2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த டிஸ்னி, தற்போது ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. 

    20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது  வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார். 

    இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, "20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது" என்றார்.



    'அயர்ன் மேன்' மற்றும் 'தி ஜங்கிள் புக்' புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, 'தி லயன் கிங்' சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    இம்முறை இதில் இடம்பெறும் சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த டைரக்டர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மணமகள், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர் ஆவார். இவர்கள் திருமணம் வருகிற ஜூலை மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது.
    சென்னை:

    அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை அடுத்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை விஜய் டைரக்டு செய்து இருக்கிறார்.

    இவர் டைரக்டு செய்த ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

    விவாகரத்துக்குப்பின், அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் விஜய்யும் டைரக்டு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்படி, பெற்றோர்கள் வற்புறுத்தி வந்தார்கள். அதற்கு சம்மதிக்காத டைரக்டர் விஜய், 2-வது திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.

    இப்போது பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்துக்கு அவர் சம்மதித்து இருக்கிறார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர், ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள். இவர், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர். பொதுநல மருத்துவராக இருந்து வருகிறார்.

    டைரக்டர் விஜய், டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும் செய்து வருகிறார்கள்.
    மழை வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் ஏரிகளை தூர் வார வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    நடிகர் ரஜினிகாந்த், மும்பையில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள். நடிகர் சங்க தேர்தலில் வாக்குசீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தம்தான். ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாபு தமிழ் கதையில், கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, மோனிகா, கருணாகரன், ரோகினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜீவி படத்தின் விமர்சனம்.
    ஊரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிகிறார் நாயகன் வெற்றி. இவருக்கு புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம். குடும்ப சூழல் காரணமாக வேலைக்குப்போக முடிவு செய்து ஊரில் இருந்து சென்னைக்கு வந்து டீ கடையில் வேலை செய்கிறார். இவருடன் பணிபுரியும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்க்கிறார். 

    எதிர் கடையில் வேலை பார்க்கும் மோனிகாவுடன் வெற்றிக்கு காதல் மலர்கிறது. நன்றாக காதலித்து வரும் நிலையில், பணத்தை காரணம் காட்டி வெற்றி விட்டு செல்கிறார் மோனிகா. இந்நிலையில், வெற்றி தங்கியிருக்கும் வீட்டு ஓனர் ரோகினி ஒரு விபத்தில் சிக்க, அவரது பீரோ சாவி அடங்கிய பர்ஸ் தொலைந்து போகிறது. இந்த பர்ஸ் வெற்றி கையில் கிடைக்கிறது. 

    ரோகினி தனது கண்பார்வை இல்லாத பெண்ணின் திருமணத்திற்காக நகை சேர்த்து அதை பீரோ வைத்திருப்பது வெற்றி தெரிய வருகிறது. அதை திருட முடிவு எடுக்கும் நேரத்தில், வெற்றியின் ஊரில் அக்கா வீட்டை விட்டு ஓடி போனதாகவும், அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகவும் போன் வருகிறது.

    ஒரு வழியாக நகையை திருடி விட்டு வரும் போது தந்தை இறந்ததாக போன் வருகிறது. இதனால் ஊருக்கு சென்று விடுகிறார் வெற்றி. ஆனால், போலீசுக்கு இவர் மேல் சந்தேகம் வராமல், வேறொருவர் மீது சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் ஊரில் இருந்து திரும்பி வரும் வெற்றி, ரோகினியை சந்தித்து பேசுகிறார்.



    ரோகினி வெற்றியிடம், நகை திருடுபோனதை பற்றி கூறுகிறார். மேலும், நான் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்துக் கொண்டேன். என் அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார் என்று கூறுகிறார். இவர் சொல்லுவது தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது போல் வெற்றி உணர்கிறார். அதன் பின் அவரது வாழ்க்கை என்ன ஆனது? நகையை திருப்பி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    8 தோட்டாக்கள் படத்தில் அப்பாவியாக நடித்த வெற்றி இப்படத்தில் அப்படியே வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

    அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் கருணாகரன். ஒரு சில இடங்களில் அவரது காமெடி சிரிப்பை வரவைக்கிறது. நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் நாயகி மோனிகா. 



    வீட்டு உரிமையாளராக வரும் ரோகினி, படத்தின் திருப்புமுனையாக வரும் மைம் கோபி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    தொடர்பியல் முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள், ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். புரியாத சயின்ஸ் பாடத்தை, மிகத் தெளிவாக, ஜனரஞ்சகமாக விளக்கி இருக்கிறது இப்படம். வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

    குழப்பமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை மிக தெளிவாக புரிய வைத்திருக்கிறார் எடிட்டர் பிரவீன். சுந்தரமூர்த்தியின் இசையில் 'விடைகளே கேள்விகளாய்' பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பிரவின் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘ஜீவி’ அறிவு ஜீவி.
    நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய படத்தில் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார்.
    நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வரும், இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் இப்படத்தில் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதே படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.



    இதுதொடர்பாக, சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- 'கவுதம் மேனன் அவர்களுடனும், சமுத்திரக்கனி அவர்களுடனும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
    ரஜினி, விஜய், அஜித் படங்களை விநியோகிஸ்தரும், பிரபல தயாரிப்பாளருமான பி.எஸ்.ஸ்வாமிநாதன் இன்று அதிகாலை காலமானார்.
    பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிர் நீத்தார். இவரது மனைவி பெயர் உமா ஸ்வாமிநாதன் மற்றும் இவருடைய மகள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு இன்று மாலை பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.

    இந்நிறுவனம் 2000களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று. இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார். மேலும் ஜோதிகாவின் 'மொழி' படத்தை விநியோகம் செய்துள்ளார். 



    ரஜினியின் ‘குசேலன்’, விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்', அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை விநியோகம் செய்திருக்கிறார். 
    சூர்யாவின் அடுத்த பட தலைப்பை இயக்குனர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு தலைப்பு நேற்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலா காலமானதால், தெலுங்கு தலைப்பின் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.



    இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதனை பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். காப்பான் படத்திற்கு தெலுங்கில் "பந்தோபஸ்த்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
    தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.
    தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். லவ் ஆக்சன் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். 



    இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடிக்க உள்ளார். பிரஜன் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதேபோல் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். 

    பிரஜனின் மனைவி சான்ட்ராவும்   சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. 
    விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, லிங்கா நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் விமர்சனம்.
    ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.

    தனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி. 

    விஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார். 



    இந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.

    இறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.



    விஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோ‌ஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா? சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.

    விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோ‌ஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர். 

    கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பலிடம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது. 



    மிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.

    படத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

    முதல் பாதியில் காதல், காமெடி, ஆக்‌‌ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு வி‌ஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிந்துபாத்’ சுவாரஸ்யம் குறைவு.
    ×