என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர் ஒருவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
    தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். 

    சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். 

    கீர்த்தி சுரேஷ்

    இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸிங் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும். ஒரு தடவை நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். 

    அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பமும் என்னை காதலிக்கிறேன் என்று எழுதிய ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.”

    இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.
    ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இதுவரை மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

    எச்.வினோத்

    இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எச்.வினோத்தின் கதை, திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.   
    கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் தற்போது குழந்தைகளுக்கு நடன வகுப்பு நடத்தி வருகிறார்.
    கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் என வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையான லட்சுமி மேனன் சிலகாலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌ஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுத்துக்கிட்டிருக்கேன்.

    லட்சுமி மேனன்

    என்னோட மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். நிறைய கதைகள் வந்தன. ஆனா, எந்தக் கதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் பண்ணலாம்னு நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை. சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான். கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இந்த பிரேக் நல்லாயிருக்கு. இப்போ தேவைப்படுற ஒண்ணாவும் இருக்கு. சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
    அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிஷன் மங்கல்' படத்தின் முன்னோட்டம்.
    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னணி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கியுள்ளார். 

    மேலும் இப்படத்தில் டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். 
    சந்தன் அரோரா எடிட்டிங்கை கவனிக்கிறார்.

    மிஷன் மங்கல் படக்குழு

    படம் குறித்து இயக்குனர் ஜெகன் சக்தி கூறுகையில், நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த மிஷன் மங்கல் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது, இந்த பணி ஒரு கூட்டு வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவரது வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாற்றவில்லை என கூறினார்.
    அறிமுக இயக்குனர் முனுசாமி இயக்கத்தில் உதய் ராஜ், அவந்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரீல் படத்தின் விமர்சனம்.
    நாயகன் உதய் ராஜ் தாய்-தந்தை இல்லாதவர், தன் நண்பர்களோடு வாழ்ந்து வருகிறார். அப்பகுதி காவல் ஆய்வாளர் உதவியுடன் இவர் நண்பருடன் சேர்ந்து சிறு சிறு திருடி வாழ்ந்து வருகிறார். நாயகனின் கனவில் ஒரு பெண் வந்து வந்து போகிறாள். இந்தப் பெண் யார் என்று நாயகன் தேடி வருகிறார். 

    இம்மாதிரியான சூழ்நிலையில் நாயகி அவந்திகா கிராமத்தில் வசித்து வருகிறார். தந்தை இறந்ததால் இவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. கடன்காரர்கள் தொல்லை அதிகரித்ததால் நாயகி வெளியூரில் வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறார். நாயகியை, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி அடைய நினைக்கிறார். இதனால் மனமுடைந்த நாயகி தற்கொலைக்கு முயல்கிறார்.

    ரீல்

    குடும்ப சூழல் காரணமாக இந்த முயற்சியை கைவிட்டு, பணக்கார முதலாளிகளுக்கு தன்னை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நாயகியை கண்ட நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்கிறார். நாயகி தனது நிலையை நாயகனுக்கு எடுத்துரைக்கிறார். இதை கேட்ட நாயகன் நாயகியை ஏற்றுக்கொண்டாரா? இருவரும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

    ரீல்

    நாயகன் உதய் ராஜ் புதுமுகம் என்றாலும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நாயகி ஒரு முக்கியமான கதாபாத்திரம், அதை உணர்ந்து ஒரு திறம்பட நடித்திருக்கிறார். நாயகனுக்கு நண்பனாக வரும் சரத், காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். சந்தோஷ் சந்திரனின் இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் சுனில் பிரேம் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இப்படத்திற்கு பிரபல எடிட்டர் சாய் சுரேஷ் மிகப்பெரிய பலம். 

    ரீல்

    குடும்ப சூழல் காரணமாக ஊரில் இருந்து நகரத்திற்கு வேலை தேடி வரும் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை, அவலங்களையும் சுட்டிக்காட்டிய இயக்குனர் முனுசாமி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் சில இடங்களில் காட்சிகள் தொய்வு இருந்தாலும், பார்க்கும்படி எடுத்திருக்கிறார். 

    மொத்தத்தில் ‘ரீல்’ சரியாக சுத்தவில்லை.
    நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள வித்யா பாலன், தமக்கு தமிழில் வாய்ப்பு மறுத்தபோது வருத்தப்பட்டதாக கூறினார்.
    தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன் கூறும்போது,

    ‘நேர்கொண்ட பார்வை படத்தில் கவுரவ வேடம் என்றாலும் நல்ல டீமுடன் பணியாற்றியது மறக்க முடியாது. அஜித், ரொம்பவும் எளிமையானவர். கபாலி வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் இந்தி படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. 

    வித்யாபாலன்

    ஆரம்பத்தில் மாதவனுடன் ரன் படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப் பட்டேன். மனசெல்லாம் படத்திலும் அதேபோல் நிராகரிக்கப் பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது. பின்னர் இந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது கேரியர் மாறியது’ என்றார்.
    ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேயலதாதா பீமண்ணா என்ற கன்னட படத்தில் முதன்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
    சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் திடீரென சினிமாவுக்கு வந்துள்ளார். நடிக்க வரவில்லை. பாடகியாக அறிமுகமாகியுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவரை பாட அழைத்தனர். அதன்பேரில் இந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார்.

    ரூபா
     
    இதுகுறித்து ரூபா கூறியதாவது:- ‘இது டூயட் பாடல் கிடையாது. இந்துஸ்தானி இசையை நான் கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே பாடினேன். இப்பாடலுக்காக ஒருவாரம் பயிற்சி எடுத்து பாடினேன். ஜானகி, லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது.’ என்றார் ரூபா.
    குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததையடுத்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார்.
    கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 23-ம்தேதி எழுதியிருந்தனர். பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பும் கையெழுத்திட்டிருந்தார்.

    இதனால், டுவிட்டரில் அவரை டேக் செய்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் கடைசியாக சில பதிவுகளை இட்ட அவர், `உங்கள் பெற்றோர்களுக்கு போன்கால்கள் மூலம் கொலைமிரட்டல் வருவது மற்றும் உங்கள் மகள் ஆன்லைன் ட்ரோல்களுக்கு இலக்காவது ஆகியவை குறித்து யாரும் பேச நினைக்க மாட்டார்கள். இதற்கு எந்த ஒரு காரணமும் இருக்கப் போவதில்லை. குண்டர்களே ஆளப்போகிறார்கள்.

    அனுராக் காஷ்யப் டுவிட்டர் பதிவு

    மற்றொரு பதிவில், `நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். டுவிட்டரை விட்டு நான் வெளியேற இருப்பதால் இதுதான், எனது கடைசி டுவீட்டாக இருக்கும். மனதில் நினைப்பதை அச்ச உணர்வின்றி பேச அனுமதிக்கப் படாதபோது, பேசாமலே இருக்கப் போகிறேன். விடை பெறுகிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
    திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
    அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர்.

    பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்

    இந்த தகவல் கேட்டு டாப் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாசும் முன்னணி ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இவர் சம்பளமாக வாங்கிக்கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் ரிலீசுக்கு முன்பாக ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். 

    மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

    நம்ம வீட்டு பிள்ளை பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
    தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். 

    அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சாக்‌ஷி ஆகிய 6 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சரவணன் கடந்த வாரம் நீக்கப்பட்டார். இதையடுத்து, வைல்ட் கார்டு மூலம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.  

    வனிதா

    இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் வைல்ட் கார்டு மூலம் சென்றுள்ளாரா? இல்லை விருந்தினராக சென்றுள்ளாரா? என்பது குறித்து இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.
    தேசிய விருதை வென்ற பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகானந்தம். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து ‘பேட்மேன்’ என்ற பெயரில் உருவானது. 

    இதில் அருணாசலம் முருகானந்தம் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். பால்கி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த சமூக படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்றது. 

    அருணாச்சலம் முருகானந்தம், அக்‌ஷய் குமார்

    இந்நிலையில், பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார். இது குறித்து பேட்டி அளித்த அவர், பேட்மேன் படம் தமிழ் மொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

    ×