என் மலர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்த படம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என தெரிகிறது. சித்தார்த் - ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை முதல் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டுள்ளன.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது. ‘பிக் பாஸ் 2’ மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையேயும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஒங்கள போடணும் சார்' படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜித்தன் ரமேஷ், நாயகி சனுஜா சோமநாத்தை காதலித்து வருகிறார். கொஞ்சம் கடனில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், அதை அடைத்து விட்டு காதலியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து வருகிறார்.
இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் மனோபாலா, வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஊரில் தனியாக இருக்கும் ஒரு பங்களாவில் பேய் இருப்பதாகவும் மக்கள் யாரும் செல்வதற்கு பயப்படுவதாகவும் அறிகிறார். இந்த வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கிறார் மனோபாலா.

இந்த போட்டியில் ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட நான்கு ஆண்களும், நான்கு பெண்களும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பின்பு ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் அந்த வீட்டில் 2 பேரும், வெளியில் ஒருவரும் இறக்கிறார்கள்.
இறுதியில் அந்த வீட்டிற்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்? உண்மையில் பேய் இருக்கிறதா? இல்லையா? ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ். முதல் பாதியில் இளமை துள்ளலுடனும் இரண்டாம் பாதியில் மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கஜேஷ் நாகேஷ், கல்லூரி வினோத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதாநாயகி உள்பட 5 பெண்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் அதிக அளவில் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியவில்லை.
பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவரது பாடல்கள், வசனம், நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடல்ட் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித். ஆனால், அடல்ட் காமெடி பெரியதாக எடுபட வில்லை என்றே சொல்லலாம். ஒரு கதையில் தொடங்கும் திரைப்படம் பின்னர் அதற்குள் நிறைய கிளை கதைகளை புகுத்தி முடித்திருக்கிறார்கள். திரைக்கதையில் தெளிவு இல்லாமல் அமைந்திருக்கிறது.
ரெஜி மோன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒங்கள போடணும் சார்’ இளைஞர்களுக்கு மட்டும்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் நண்பர் சென்று அவரை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். நேற்று வனிதாவின் குழந்தைகள், தர்ஷனின் தாய் மற்றும் தங்கை, சேரனின் தாய், தங்கை, மகள் ஆகியோர் சென்றார்கள்.

இன்று கவினின் நண்பர் ஒருவர் செல்கிறார். அவர் கவின் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கஷ்டம் தருவதாக கூறி அடிக்கிறார். தற்போது இந்த புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குப்பத்துராஜா, சிக்ஸர் படத்தில் நடித்த பல்லக் லால்வானி நடிக்க இருக்கிறார்.
ஹரிதாஸ் திரைப்படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன். இவர் அடுத்ததாக அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் இதற்கு முன் குப்பத்து ராஜா, சிக்ஸர் படத்தில் நடித்துள்ளார். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். நெஞ்சமுண்டு நேர்மயுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தமிழில் காதலில் விழுந்தேன், வம்சம், நீர்ப்பறவை படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சுனைனா, தற்போது அறிமுக நாயகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படமான ட்ரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.
சுனைனா பற்றி இயக்குநர் டென்னிஸ் கூறும்போது, ‘சுனைனாவின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவாலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹீரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது’ என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் தலக்கோணம் காட்டுப்பகுதியில் துவங்குகிறது. அங்கு தொடர்ச்சியாக 38 நாட்களும் மேலும் கொடைக்கானலில் 2 நாட்கள் என ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.
புன்னகை மன்னன், சத்யா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜி.எம்.சுந்தர், எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், கமலின் 'சத்யா' படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான். அண்மைக் காலங்களில் வந்த 'காதலும் கடந்து போகும்' படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான 'மகாமுனி' படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம்.
சினிமா வாழ்க்கை பற்றி ஜி.எம்.சுந்தர் கூறும்போது, ‘எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள்.
படித்து முடித்து திரைப்பட வாய்ப்புக்காக கவிதாலயா அலுவலகம் சென்றபோது எழுத்தாளர் அனந்து அங்கே இருந்தார். அவர் மூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் 'புன்னகை மன்னன்'. அதன் பிறகு கமல் சாரின் நட்பு கிடைக்க அவரது 'சத்யா' படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தயாரித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு 'கிழக்குக்கரை', 'பொன்னுமணி', 'அதர்மம்', 'தொட்டி ஜெயா', 'எங்க ஊரு காவல்காரன்' போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது.

கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் 'நாற்காலி மனிதர்கள்' நாடகத்தில் நான்தான் நாயகன். அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன். ஆனாலும், சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது. இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை.
ஆனால் வாய்ப்பு கேட்டுச் செல்லும் வேளைகளில் எல்லாம் நான் துவண்டு விடவில்லை. காரணம் குடும்பம் ஆதரவாக இருந்தது. 'காதலும் கடந்து போகும் 'படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. 'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது 'மகாமுனி' படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இது எனது சமீபத்திய சந்தோஷம்.
எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது. அதனால் எனக்கு வயது ஒரு தடை இல்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன். இப்போது நான் நடித்து 'மண்டேலா' என்ற ஒரு படம் வரவிருக்கிறது. அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'சைரன்' என்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படக் கல்லூரியில் 1982ல் படித்த எனக்கு 2019 -ல் வாய்ப்பு வந்திருக்கிறது என்கிறபோது எனக்கான இடம் தேவை இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது. "இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்தாக தான் நடிக்கும் படத்தை கொடைக்கானலில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
இவர் மேயாத மான், மெர்க்குரி போன்ற படங்களை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கி இருக்கிறது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக கல்லூரி மாணவனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.
ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.
இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவுடன் முத்த காட்சிக்கு 15 டேக்குகளுக்கு மேல் போனதாக நடிகர் துருவா தெரிவித்துள்ளார்.
ஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து துருவா சூப்பர் டுப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 20ந்தேதி வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.
இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவந்த இந்துஜா இந்த படத்தில் முதல் முறையாக கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறார். படம் பற்றி துருவா அளித்த பேட்டியில் கூறியதாவது:- இது கமர்சியலான படமாக இருந்தாலும் கதை வித்தியாசமாக இருக்கும். படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும்.

படத்தில் ஒரு முத்த காட்சி முக்கியமான திருப்புமுனை காட்சியாக இருக்கும். அந்த முத்த காட்சி எடுக்க மட்டுமே ஒருநாள் முழுக்க ஆனது. 15 டேக்குகளுக்கு மேல் போனது. இந்துஜா மாடர்ன் பெண்ணாக வருகிறார். ஒரு குத்து பாடலிலும் ஆடி இருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள குயின் இணைய தொடருக்கு ஜெயலலிதா உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் பணிகளில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ஈடுபட்டுள்ளனர். பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ’குயின்’ என்ற இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் என்று தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘குயின்’ வெப் சீரிசின் கதை நாம் அறிந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது” என்று ‘குயின்’ வெப் சீரிஸ் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா வின் அண்ணன் மகனான தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிசை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலி தாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.
இந்த சூழலில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித் துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ‘குயின்’ என்பதை கவுதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாக இருக்கும் டிரிப் படத்தின் முன்னோட்டம்.
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படம் டிரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.
ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார். அங்கு நடித்துவந்த டாப்சி, தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம் ஒன்றில் இணைந்துள்ளார்.
தனது காதல் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவரும் இல்லை. வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.

திருமண பந்தத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். திருமண வைபவம் ஒரேநாளில் நடக்க வேண்டும். நிறைய நாட்கள் அதை நடத்தக்கூடாது. இதற்கு மேல் திருமணத்தை பற்றி என்னால் விவரிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.






