என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ரைசா, செல்பி மோகத்தால் காயமடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 

    ரைசா வில்சன்

    தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது, போன் அவரின் வாய் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் புகைப்படம் எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ படத்தின் முன்னோட்டம்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    சிவகார்த்திகேயன்

    சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரித்துள்ளனர். 
    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் நவீன் குமார், ஸ்ருதி ரெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் மெரினா புரட்சி படத்தின் விமர்சனம்.
    ஒரு இளைஞனும் இளைஞியும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், அதன் வரலாற்றையும் 15 நாட்களுக்குள் ஆவணபடமாக எடுத்து வந்தால் வேலைக்கு சேர்த்து கொள்வதாக அந்த தொலைகாட்சி நிர்வாகி கூறுகிறார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், வரலாற்றையும் ஆவணப்படமாக எடுத்து வரும் அவர்கள், அதை தொலைக்காட்சி நிர்வாகியிடம் ஒவ்வொன்றாக விளக்குகிறார்கள். இதுதான் மெரினா புரட்சி திரைப்படம்.

    மெரினா புரட்சி

    தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிகட்டுக்காக நடைபெற்ற போராட்டம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரியமான வீர விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்து தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர். 

    ஜல்லிக்கட்டுக்காக போராடியதும், கோஷம் போட்டதும் தான் நிறைய மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அதன் நன்மைகள் என்னென்ன, பின்னால் நடந்த அரசியல் விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது இந்த மெரினா புரட்சி. 

    மெரினா புரட்சி

    உலகமே வியந்து பார்த்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கமர்சியல் அம்சங்கள் ஏதும் சேர்க்காமால் இயக்குனர் படமாக்கிய விதம் சிறப்பு. இப்படத்திற்காக நிறைய ஆய்வு செய்து, இந்த போராட்டம் பற்றி வெளிவராத பல தகவல்களை படத்தில் சொல்லி இருந்தாலும், சில விஷயங்களை சொல்ல தயங்கியுள்ளதும் திரையில் தெரிகிறது.

    படத்தில் நடித்துள்ளவர்கள் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர். உண்மை தன்மை கருதி பெரும்பாலான காட்சிகள், ஜல்லிகட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கோர்வையாக இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். 

    மெரினா புரட்சி

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி தெரியாதவர்களுக்கு மிகச் சரியான விளக்கம் கொடுக்கும் படமாக இது அமைந்துள்ளது. 

    வேல்ராஜின் ஒளிப்பதிவும், அல் ரூபியனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

    மொத்தத்தில் ’மெரினா புரட்சி’ எழுச்சி.
    தமிழில் ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், இவர் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்துள்ளார்.
    தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

    அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது. 

    ரிச்சாவின் திருமண புகைப்படம்

    அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்தபோதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.
    கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினி நடித்த பேட்ட வேலன் கெட்டப்பில் தனுஷ் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

    லீக்கான புகைப்படம்

    இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தின் பெயர் சுருளி என தெரியவந்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா ஆகிய 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தனுஷ், சஞ்சனா நடிக்கும் திருமண காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.
    லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. 

    நாசர்

    தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர். 
    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய்யுடன் ஏற்கனவே, தமிழன், ஆதி, வசீகரா, குருவி, போக்கிரி, தலைவா உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
    நடிகர் வடிவேலு இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும். 

    சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. அதன் பின்னர், விஜய்யுடன் மெர்சல் படத்தில் கலக்கினார். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

    வடிவேலு

    இந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் உருவாகும் “பேட்டரி” படத்தின் முன்னோட்டம்.
    ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

    இயக்குநர் மணிபாரதி கூறியதாவது, 'உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்" என்றார்.

    இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.

    இப்படத்தில் நாயகனாக நடிக்கும் செங்குட்டுவன் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். மேலும் “கைதி” படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
    மலேசியாவில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களை இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.
    21-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் 28 நாடுகளில் இருந்து 2117 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 85 பேர் கலந்துக் கொண்டனர். சென்னையில் இருந்து 24 பெண்கள், 15 ஆண்கள் என 39 பேர் கலந்துக் கொண்டனர்.

    சென்னையை சேர்ந்த மூத்த தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு 10 தங்கம் உள்பட மொத்தம் 38 பதக்கங்கள் கிடைத்தது. பிரமீளா (நீளம் தாண்டுதல்), சாந்தி (சங்கிலி குண்டு எறிதல்) ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.

    பதக்கம் வென்றவர்களுடன் சுசீந்திரன்

    பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைவர் சென்பகமூர்த்தி, டைரக்டர் சுசீந்திரன் உள்ளிட்டோர் பதக்கம் பெற்றவர்களை பாராட்டினர்.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 

    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நஸ்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் மறுத்து விட்ட நிலையில் யாமி கவுதம் தான் வலிமை பட நாயகி என வைரலானது. 

    இலியானா

    ஆனால் இந்தத் தகவல்கள் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இலியானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. வலிமையில் போலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

    எனவே அதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக இலியானா நடிக்கலாம் எனத் தெரிகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த இலியானா, தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தி உள்ள பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.
    தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். இது ரஜினியின் 168-வது படமாகும். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை சிவா இயக்கினார். அந்த படத்துக்காக ரஜினி அவரை அழைத்து பாராட்டினார்.

    அதை தொடர்ந்து இருவரும் இணைவது உறுதியானது. தலைவர் 168 என்று தற்காலிகமாக குறிப்பிடப்படும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.



    கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டிருக்கிறார்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மம்முட்டி, கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், அமலாபால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்தார். மேலும் இந்த சட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. சமூக ஆர்வலர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சாதி, மதம், ஆசை போன்றவற்றை கடந்து உயரும்போது தான் ஒரு தேசமாக முன்னேற முடியும். இதற்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கு மாறாக ஏதாவது நடந்தால் அது நமக்கு இடையூறை ஏற்படுத்தும் என்று நடிகர் மம்முட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மம்முட்டி - துல்கர் சல்மான்

    இதேபோல் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என டுவிட்டரில் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகத் தொடர வேண்டுமானால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கைவிடப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, மதசார்பின்மை, ஜனநாயகம் நமது பிறப்புரிமை. அதனை வீழ்த்த நினைக்கும் எதையும் எதிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    நடிகை அமலாபாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபோல நடிகர் குஞ்சாக்கோ போபன், நடிகை பார்வதி ஆகியோரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 
    ×