என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மம்முட்டி, கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், அமலாபால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்தார். மேலும் இந்த சட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. சமூக ஆர்வலர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சாதி, மதம், ஆசை போன்றவற்றை கடந்து உயரும்போது தான் ஒரு தேசமாக முன்னேற முடியும். இதற்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கு மாறாக ஏதாவது நடந்தால் அது நமக்கு இடையூறை ஏற்படுத்தும் என்று நடிகர் மம்முட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மம்முட்டி - துல்கர் சல்மான்

    இதேபோல் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என டுவிட்டரில் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகத் தொடர வேண்டுமானால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கைவிடப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, மதசார்பின்மை, ஜனநாயகம் நமது பிறப்புரிமை. அதனை வீழ்த்த நினைக்கும் எதையும் எதிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    நடிகை அமலாபாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபோல நடிகர் குஞ்சாக்கோ போபன், நடிகை பார்வதி ஆகியோரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 
    காளிதாஸ் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய பரத், அவர்கள் பேசியது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று கூறினார்.
    பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் காளிதாஸ். படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நன்றி அறிவிப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில் பரத் பேசியதாவது: "வெற்றி நாயகன் என்ற வார்த்தையை கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கும் போது காளிதாஸ் சக்சஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

    நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான். ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. 

    சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். இப்படம் 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்து இருக்கிறார். இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 

    பரத்

    அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்த படத்தை முதலில் பார்த்த பத்திரிகையாளர்கள் பெரிதாக  கொண்டாடினார்கள். இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியீட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார். அடுத்த வாரம் ஹீரோ, தம்பி, தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ்சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருசம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது"என்றார்.
    இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் 5 படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்.
    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 5 தமிழ் படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். 

    இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, பா.ரஞ்சித்தின் குழுவில் இருந்த சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் இந்த 5 படங்களை இயக்க இருக்கிறார்கள். 

    பா.ரஞ்சித்

    2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் படப்பிடிப்பில் தனது இரண்டாவது படத்தை முடித்த பின்னர் இது மாரி செல்வராஜின் மூன்றாவது படமாகவும், விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்குப் பிறகு லெனின் பாரதியின் இரண்டாவது படமாகவும் இருக்கும். மேலும் இந்த படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன.
    நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமைபதிக்கு சென்று சாமிதரிசனம் செய்துள்ளார்.
    நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் குமரியில் தங்கியிருந்து, அம்மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமைபதிக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். சாமிதோப்பு பதிக்கு செல்லும் பக்தர்கள் சுருள்வைத்து வழிபடுவார்கள். அதன்படி நயன்தாராவும் சுருள்வைத்து வழிபட்டார். 

    சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் சாமி கும்பிட்ட நயன்தாரா, திருஏடு வாசிப்பிலும் கலந்துகொண்டார். நயன்தாராவுக்கு சாமிதோப்பு தலைமைபதி நிர்வாகி பால ஜனாதிபதி, திருநாமமிட்டு இனிமம் வழங்கினார்.

    கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

    நயன்தாரா சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது அவரை செல்போனில் பலரும் போட்டோ எடுத்தனர். நயன்தாராவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயன்றபோது பாது காவலர்கள் பொதுமக்களை தடுத்து நயன்தாராவை அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர். அவரும் பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி அங்கிருந்து சென்றார்.
    வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படம் தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஆர்.கே.நகர் படக்குழு

    பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர். 
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார்.
    நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது டாணா, ஐ.பி.சி. 376 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    நந்திதா

    இந்நிலையில், இவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் “தபாங் 3” படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவிற்காக நந்திதா டப்பிங் பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் இவரே டப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ள டுவிட் ஒன்று வைரலாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் அவ்வப்போது பதிவிடும் டுவிட்கள் வைரலாகிவிடும். தற்போது அல்ரஹாக்கா ரகுமான் என்று தன்னுடைய முழு பெயருடன் அச்சிடப்பட்டிருக்கும் விமான டிக்கெட்டை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு சில மறைமுக காரணங்கள் இருப்பதாக கூறி அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்டர் பதிவு

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் ரகுமான் தன்னுடைய முழுப் பெயரை குறிப்பிட்டு மறைமுகமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
    சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட உள்ளது.
    சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    காஜல் அகர்வால்

    இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. இச்சிலையை நடிகை காஜல் அகர்வாலே திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் எனது மெழுகு  சிலை அமைப்பதில் பெருமை அடைகிறேன் என்று காஜல் அகர்வால் கூறி உள்ளார்.
    அசுரன் படம் மூலம் மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
    தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. இதில் நாயகியாக நடித்து பெயர் பெற்றவர் அம்மு அபிராமி. இவர் தற்போது ‘பேட்டரி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் “பேட்டரி” படத்தை மணிபாரதி இயக்குகிறார். செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் குறித்து மணிபாரதி கூறும்போது, ‘உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். 

    பேட்டரி படத்தில் அம்மு அபிராமி

    இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்’ என்றார்.

    இப்படத்தில் ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

    ஷாலு ஷம்மு

    இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதில் ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருபவர்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. பொங்கல் விடுமுறையையொட்டி வெளியாக இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.



    இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    தமிழில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்த சுனைனா, பிரபல நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
    சமீபகாலமாக நடிகைகள் தங்களை ஈர்த்த ஆண்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்சிகா, நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது ஈர்ப்பு என கூறி அதிர வைத்தார்.

    இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா ஈர்ப்பு குறித்து தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    சுனைனா

    காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா. ட்விட்டரில், ரசிகர் ஒருவர் சினிமாத்துறையில் உங்களின் முதல் ஈர்ப்பு யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதலில் ஈர்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப் படம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார்.
    ×