search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமலாபால் - கார்த்திக் சுப்புராஜ்
    X
    அமலாபால் - கார்த்திக் சுப்புராஜ்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திரை பிரபலங்கள் எதிர்ப்பு

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மம்முட்டி, கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், அமலாபால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்தார். மேலும் இந்த சட்டத்தை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. சமூக ஆர்வலர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சாதி, மதம், ஆசை போன்றவற்றை கடந்து உயரும்போது தான் ஒரு தேசமாக முன்னேற முடியும். இதற்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கு மாறாக ஏதாவது நடந்தால் அது நமக்கு இடையூறை ஏற்படுத்தும் என்று நடிகர் மம்முட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மம்முட்டி - துல்கர் சல்மான்

    இதேபோல் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என டுவிட்டரில் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகத் தொடர வேண்டுமானால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கைவிடப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, மதசார்பின்மை, ஜனநாயகம் நமது பிறப்புரிமை. அதனை வீழ்த்த நினைக்கும் எதையும் எதிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    நடிகை அமலாபாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபோல நடிகர் குஞ்சாக்கோ போபன், நடிகை பார்வதி ஆகியோரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 
    Next Story
    ×