என் மலர்
சினிமா செய்திகள்
கேரளாவில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மனைவி அன்னம்மா. இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் உள்ளிட்ட அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இவர்கள் 6 பேரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். சாவில் மர்மம் இருப்பதாக கோழிக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்தார்கள். அப்போது 6 பேரின் உடல்களிலும் விஷம் கலந்து இருந்ததும் சொத்துக்காக மருமகள் ஜோலி சயனைடு கொடுத்து இந்த கொலைகளை செய்து இருப்பதும் தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். இந்த உண்மை சம்பவத்தை படமாக எடுக்கப்போவதாகவும் மோகன்லால் கதாநாயகனாக நடிப்பார் என்றும் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் அறிவித்தார். படத்துக்கு கூடத்தாயி என்று பெயர் வைத்தனர். இன்னொரு பட நிறுவனமும் ஜோலி என்ற பெயரில் இதே சம்பவத்தை படமாக்கி வந்தது.
இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரி கொலை செய்யப்பட்ட ரோய் தாமசின் சகோதரி ரெஞ்சி மற்றும் கொலையாளி ஜோலியின் மகன்கள் ரெமோ, ரோனால்ட் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ், ரஜினியின் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டியில், 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என தெரிவித்துள்ளார். ரஜினி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த நெற்றிக்கண் படத்தினை தான் ரீமேக் செய்ய தனுசுக்கு ஆசையாம். நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள், ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை அனைவரும் ரசித்தார்கள் என கூறியுள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படாதது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன், மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது: மிகுந்த சிரமப்பட்டுத்தான் ஒத்த செருப்பு படத்தை எடுத்திருக்கிறேன். அந்தப் படத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்திருக்கின்றன. பல விருதுகளையும் அந்தப் படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு, அந்தப் படம் அனுப்பப்படவில்லை.

இது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, நாடு அலங்கோலமாக உள்ளது; இதை எதிர்கொள்வதற்கும்; சமாளிப்பதற்கும் அன்பு மட்டுமே தேவை. தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது; போராடினால் மட்டுமே நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா, திரிஷாவை காப்பியடித்தால் எடுபடாது என தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்து இணையத்தில் அதிகம் வைரலானது. அதில் சமந்தாவின் நடிப்பை திரிஷாவின் நடிப்போடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

சிலர் பாராட்டினாலும், மறுபுறம் ஒருசிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இதுபற்றி டுவிட்டரில் சமந்தா பேசியுள்ளார். “திரிஷாவின் நடிப்பை அப்படியே காப்பி அடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. ஒப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை இன்னும் அதிகமான மக்களை சென்று சேரவேண்டும் என்பதால் தான் எடுத்தோம்” என்று சமந்தா டுவிட் செய்துள்ளார்.
எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலாபால், ரவிச்சந்திரன், கல்யாணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொய்யாட்டம்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் சுதீப், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அமலாபால் உள்பட 3 டாக்டர்களை காப்பாற்றுகிறார். இதனால் அமலாபால், சுதீப் மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுஜித்தின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது.
சுதீப் அண்ணனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடையும் அமலாபால், இது தற்கொலை அல்ல கொலை என சுதீப்பிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது அண்ணனை கொன்றது யார் என கண்டுபிடிக்க சுதீப் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் தனது அண்ணனை கொன்றது யார் என சுதீப் கண்டுபிடித்தாரா? அமலாபாலை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சுதீப், ராணுவ அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதேபோல் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டாக்டராக வரும் நாயகி அமலா பால், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சுதீப்-அமலாபால் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
சுதீப்பின் அண்ணனாக நடித்துள்ள ரவிச்சந்திரன் குறைந்த காட்சிகளே வந்தாலும், அவரின் கதாபாத்திரம் படத்திற்கு திருப்புமுனையாக அமைகிறது. வில்லன் கபீர் துகான் சிங் தனது வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மேலும், ரவி கிஷான், அவினாஷ், கல்யாணி, பிராச்சி ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இயக்குனர் எஸ்.கிருஷ்ணா காமெடி, ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார். திரைக்கதையை தொய்வு இல்லாமல் கையாண்டுள்ள விதம் சிறப்பு. அர்ஜுன் ஜன்யாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கருணாகரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் ‘பொய்யாட்டம்’ விறுவிறுப்பு.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நேஹா பென்ட்சே, மூன்றாவது மனைவியானது தவறா என கேட்டுள்ளார்.
மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நேஹா பென்ட்சே. மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். சில டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் சமீபத்தில், ஷர்துல் பயஸ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டார். ஷர்துல் பயசுக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த 2 திருமணம் வழியாக, அவர் 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த நிலையில், இப்படி மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டீர்களே என, நேஹாவை பலரும் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதுகுறித்து, அவர் பதில் ஏதும் சொல்லாமலேயே இருந்து வந்தார். தொடர்ந்து இதே கேள்வியே மாற்றி மாற்றி கேட்கப்பட, ஒரு கட்டத்தில், இந்த கேள்வி அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது.
சமீபத்தில், பேட்டி அளித்த நேஹா, தன்னுடைய கோபத்தைக் கொட்டியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகத்தில் எங்குமே நடக்காமல், நான் மட்டுமே, ஒருவருக்கு மூன்றாவது தாரமாக போனதாக சொல்கின்றனர். இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

தங்களுடைய வாழ்க்கைக்காகத்தான் எல்லோரும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து, அதன் வழியில் பயணிக்கிறார்கள் என்பது மிக நன்றாக தெரிந்தும், இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்ணோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, யாரும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. திருமணத்துக்கு முன்பே கூட, எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர்.
இவ்வாறு நேஹா கூறி இருக்கிறார்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி நட்சத்திர டைரக்டர் ஆனார்.

இப்போது அவர், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்' படத்தை இயக்கியுள்ளார். அவரிடம், ‘‘மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘தொடர்ந்து சில படங்களை இயக்கியதால் எனக்கும், அஜித்துக்கும் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. நான், அஜித்துடன் நல்ல தொடர்பில் தான் இருக்கிறேன். மீண்டும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் இணைவோம்’’ என்றார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.
`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். கமர்சியல் கலந்து உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது, "இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்" என்றார்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ராசி கன்னா, உடல் எடையை குறைத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகினார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் ராசி கன்னா, தற்போது தன் உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைத்தது குறித்து அவர் கூறுகையில், ''உயரத்துக்கேற்ற பருமன் இருந்தால் தான், நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இதனால் கடுமையான உடற்பயிற்சி செய்து பருமனை குறைத்தேன்,'' என்றார்.
இந்த படம் ஓடலனா, இனிமே இங்க நடிக்க மாட்டேன் என்று நடிகை ஒருவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த வந்த நடிகை, தமிழில் கபடி இயக்குனர் அழைத்து வந்து ஒரு படத்தில் நடிக்க வைத்தாராம். அந்த படம் சரியாக ஓடவில்லையாம். மேலும் படம் வெளியான பிறகு நடிகையின் கதாபாத்திரம் படத்திற்கு தேவை இல்லை என்று பலரும் சொன்னதால், நடிகையின் காட்சிகளை இயக்குனர் தூக்கி விட்டு மீண்டும் ரிலீஸ் செய்தாராம்.
இதனால் கோபமடைந்த நடிகை, தமிழ் படத்தில் நடிக்காமல் இருந்தாராம். தற்போது ஒல்லி நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்த படமாவது வெற்றி பெற்றால் தமிழில் தொடர்ந்து நடிக்கலாம். இல்லை என்றால் தெலுங்கு பக்கமே சென்று விடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், விந்து தானம் மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்தது மட்டும் அல்லாமல் 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்குக்கு போட்டி நிலவியது. இறுதியாக ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர்கள் கிரிஷ், விஜய் ஆகியோரிடம் இணை இயக்குனராக இருந்த கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனிருத் வெளியிட்டுள்ளார். இதில் தாமரை மலரில் நின்று 5 குழந்தைகளுடன் காட்சியளிக்கும் ஹரிஷ் கல்யாண் குழந்தைகளை தானமாக வழங்குவது போல் அமைந்துள்ளது.
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கங்கனா ரணாவத், இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இந்தி திவஸ் (இந்தி தினம்) தினத்துக்காக கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இந்தி நம் தேசிய மொழி. ஆனால் அதை பேச நாடு மிகவும் யோசிக்கிறது. நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை.
தங்கள் பிள்ளைகள் அற்புதமாக ஆங்கிலத்தில் பேசுவதாகப் பெருமையுடன் கூறுகிறார்கள் பெற்றோர்கள். தங்களுடைய ஆங்கிலம் பலவீனமாக இருந்தால் அதற்காக அவமானப்படுகிறார்கள். ஆனால் அதே நிலை இந்தியில் இருந்தால் துளி வருத்தம் ஏற்படுவதில்லை.

திரையுலகம் என்னுடைய ஆங்கிலத்தை கண்டு கேலி செய்துள்ளது. விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்திக்குத்தான் நான் முன்னுரிமை அளிக்கிறேன். இதன்மூலம் என்னால் பெரிய உயரத்தை அடைந்து வெற்றியை அடைய முடியும். பெற்றோர்களே, இந்தியை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். நாட்டு நெய் மூலம் உருவாக்கப்படும் பரோட்டாவில் உள்ள ருசி பீட்சா, பர்க்கரில் கிடைக்காது. மா (அம்மா)-வில் உள்ள அன்பு, மாம்-மில் கிடையாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






