என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார்.
    இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொண்ட கஜோலுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர். கஜோல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ‘அது 2001-ம் ஆண்டு. ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.

    கஜோல்

    இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள்.

    இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்’ இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
    தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமாக இருக்கும் பார்வதியின் வித்தியாசமான தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
    நடிகை பார்வதி பொதுவாகவே தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்றாலும் கடந்த ஒரு வருட காலமாகவே அவரை தங்களது படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க மலையாள திரையுலகம் தயங்கி வருகிறது. 

    மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் பார்வதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்குகின்றனர், ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி கவலைப்பட்டதாக தெரியவில்லை. தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக கால்ஷீட் தந்து ராச்சியம்மா என்கிற படத்தில் நடித்துள்ளார் பார்வதி. 

    பார்வதி

    ராச்சியம்மா என்பது ஒரு குறும்படமாக உருவாகியுள்ளது. 4 குறும்படங்களை ஒன்றிணைத்த ஆந்தாலஜி படத்தில் இதுவும் ஒரு படம்.. இது சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் உரூப்பின் ராச்சியம்மா என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ராச்சியம்மா கதாபாத்திர தோற்றத்தில் பார்வதியின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு படக்குழு கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிட்டனர். இதில் விஜய்யின் லுக் மட்டும் இடம் பெற்றிருந்தது.

    மாஸ்டர் பற்றிய அறிவிப்பு

    தற்போது இதன் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் லுக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தை கூறினார்.
    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

    இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். 

    விழாவில் பி.சுசிலா

    அதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, ‘எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து ஏவிஎம் மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது தமிழில் பேச முடிகிறது. 

    எனக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததுற்கு நன்றி என்று கூறியதோடு, "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை பாடினார். பி.சுசிலா அம்மையார் இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. வயது 85 ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருப்பதாக கூறினார் பி.சுசிலா.
    நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்தின் அவருக்கு 3 பரிசுகளை கொடுத்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய பிறந்தநாளை ஜனவரி 16ம் தேதி கொண்டாட இருக்கிறார். ஆனால், அவரின் ரசிகர்களோ இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே உடல் உறுப்பு தானம், ரத்த தானம் என்று கொண்டாடி வருகிறார்கள்.



    இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்துள்ளார். ‘நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள் 1-chess King "இன்று அன்று என்றும் King", 2-HP நிறைந்த குதிரை "ஓட்டம் தொடர..., 3-Painting of mrs mr Of  V S "பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்!’ என்று பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    சென்னையில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாதவன், தமிழ்ப் படங்களில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
    நடிகர் மாதவன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 'தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டீர்களா' என்ற கேள்விக்கு மாதவன், "தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை. 

    'விக்ரம் வேதா’ திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு. குடும்பத்தோடு வண்டியில் ஏறி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்போது அவர்களை கடுப்பு ஏற்றாமல் வீட்டுக்கு அனுப்புவது ஒரு சவால். 

    மாதவன்

    'இறுதிச்சுற்று’, ’விக்ரம் வேதா’ மாதிரியான கதைகள் எழுதுபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். மேலும், நான் இயக்கி வரும் 'ராக்கெட்ரி' படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறேன். அது இந்த ஆண்டு வெளியாகும்" என்று பதிலளித்தார். டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு 'இது அதற்கான இடமல்ல' என்று கூறி மறுத்துவிட்டார்.
    தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் சரிலேரு நீக்கவேறு. ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

    தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. அவரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே மகிழ்ந்தேன். ஆனால், படப்பிடிப்பு துவங்கியதும், எனக்குள் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. பெரிய நடிகர், என்னுடைய நடிப்பை பார்த்து என்ன நினைப்பாரோ என பதற்றம் அடைந்தேன். 

    ராஷ்மிகா - மகேஷ் பாபு

    படப்பிடிப்பு தளத்தில் அவ்வபோது பயத்தில் சோர்ந்து விடுவேன். இதை கவனிக்கும் நடிகர் மகேஷ் பாபு, என்னை தேடி வந்து, நடிப்பு பற்றி நிறைய விஷயங்ளை என்னிடம் பகிர்ந்து கொள்வார். நடிக்கும்போது எனக்கு இருக்கும் தயக்கங்களை உணர்ந்தவர், அதை எப்படி உடைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் சொல்வார். இத்தனை பெரிய நடிகர், இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறாரே என வியந்திருக்கிறேன். இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
    மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், தீபிகா படுகோனேவிற்கு விளம்பர வாய்ப்புகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகை தீபிகா படுகோனே பல்கலைக்கழகத்திற்கே சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டார். தீபிகா படுகோனேவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டினர். அதே நேரத்தில் பலர் தீபிகா படுகோனேவுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

    தீபிகா நடித்துள்ள ‘சப்பாக்’ படத்தின் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாக விமர்சித்தனர். அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். இதன் காரணமாக தீபிகா நடித்த சப்பாக் திரைப்படம் வட இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலை பெற்றது. 

    மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன்பு மத்திய அரசின் புதிய திட்டத்துக்காக ஒரு விளம்பரப்படத்தில் தீபிகா படுகோனே நடித்துக்கொடுத்திருந்தார். மத்திய அரசுக்கு எதிராக தீபிகா மாணவர் போராட்டத்திற்கு சென்றதால், அந்த விளம்பர படத்தைக் கைவிட்டுவிட்டு வேறு நடிகையை வைத்து விளம்பரத்தை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

    தீபிகா படுகோனே

    சப்பாக் தோல்வி தீபிகா படுகோனேவுக்கு சிறு பின்னடைவாக இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. ஆனால், அதே அளவுக்குத் திடமாக தீபிகாவை விளம்பரத்துக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இல்லை. இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு தீபிகா படுகோனே பிராண்டு அம்பாசிடராக இருந்து வருகிறார். 

    எண்ணற்ற டிவி விளம்பரங்கள், பொருட்களின் மீது அச்சடிக்கப்பட்ட படங்கள் என ஆலிவுட் சென்ற பிறகு தீபிகாவின் விளம்பர மதிப்பு உயர்ந்தது. தீபிகா நடித்த பல்வேறு விளம்பரங்கள் ஒரே நாளில் 11 மணிநேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்தன. ஆனால் தற்போது சமுகவலைதளங்களில் சிலர், ‘தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம்’ என்று ஒரு பிரசாரத்தை தொடங்கினர். 

    இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, சில விளம்பர நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு தீபிகா நடித்த எந்த விளம்பர படத்தையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, விளம்பர ஒப்பந்தங்களை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தீபிகாவின் விளம்பர மதிப்பும் குறைய தொடங்கியுள்ளது.
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முன்னோட்டம்.
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

    தனுஷ்

    இந்த படம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்.
    ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே, கட்டில் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடியுள்ளார்.
    மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.  படப்பிடிப்பின் போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    சிருஷ்டி டாங்கே

    "கட்டில்" படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு பொங்கல் கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.
    துபாயில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நடிகர் அதர்வா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் அதர்வா, கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அசர்பைஜான் நாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அதர்வா சனிக்கிழமை சென்னையில் இருந்து துபாய் வழியாக அசர்பைஜான் செல்லும் விமானத்தில் கிளம்பினார். ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டுக்கு சென்று இருக்கவேண்டும். ஆனால் துபாயில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

    அனுபமா, அதர்வா, கண்ணன்

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. துபாய் விமான நிலைய ஓடுபாதையும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் விமானங்கள் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதர்வா சென்ற விமானமும் சிக்கியதால், அவரால் ஞாயிறு அன்று அசர்பைஜான் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. துபாய் விமான நிலையத்திலேயே சிக்கி கொண்டார். ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் புறப்பட்டு சென்றார்.

    மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடிகை நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.

    ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

    நயன்தாரா, ரஜினி

    நயன்தாராவும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு அந்த படத்தில் நடித்ததுதான் என்றும் கூறியிருந்தார்.

    கஜினி படத்தில் அசினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த படத்துக்கு பிறகு இந்தியில் அசின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இப்போது மீண்டும் தர்பார் படத்தில் தனது கதாபாத்திரத்தை சிதைத்துவிட்டதாக அதிருப்தியில் இருக்கிறார். 
    ×